Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | அமெரிக்க அனுபவம் | அஞ்சலி
Tamil Unicode / English Search
அமெரிக்க அனுபவம்
நானும் முடி வெட்டிக்கப் போனேன்
அந்தப் பொட்டலத்தில் இருந்தது என்ன?
- டாக்டர் ஆர்.எம்.ஆர்.சாந்திலால்|மார்ச் 2011|
Share:
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளியைப் பார்த்து ஆறுதல் சொல்ல வருவோர் 'பார்த்தோமா, பழம் பிஸ்கட் கொடுத்தோமா, போனோமா... என்றில்லாமல் இதே நோயால் யார், யார் எப்படியெல்லாம் ஆனார்கள் என்று பயமுறுத்திவிடுவதைப் போல, நான் அமெரிக்க விசா நேர்காணல் போகிறேன் என்றவுடன் யார், யார் எப்படியெல்லாம் ரிஜெக்ட் செய்யப்பட்டார்கள் என்று சொல்லி பயமுறுத்தினார்கள்.

"உங்களைப் போன்ற ரிடயர்ட் ஆட்கள் அங்கேயே தங்கிடுவாங்களோன்னு நினைத்து விசா தர மாட்டான்" என்றும் கவலையுடன் சொன்னார்கள்.

விசாவுக்குத் தேவையான 'இன்விடேஷன்' கடிதம் முதல் மூன்று வருட வருமான வரிக்கணக்குத் தாக்கீது வரை 18 டாகுமெண்ட்களையும் திரட்டி முடித்தேன். நேர்காணலில் என்னென்ன கேள்விகள் கேட்பார்கள், எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று இணைய தளத்தில் வந்திருந்த மாதிரி வினா-விடையை தினமும் மூன்று வேளை (மருந்து சாப்பிடுவது போல) படித்து வந்தேன்.

பிறப்புச் சான்றிதழ் தேவையாம். 58 வருடங்களுக்கு முன்னால் பிறப்புச் சான்றிதழ் யாருக்குமே வழங்கப்பட்டதில்லை. பிறந்த தேதி எஸ்.எஸ்.எல்.சி. புத்தகத்தில் இருக்கும் என்பதால் மூன்று இரவு இடைவிடாமல் தேடி எடுத்துக் கொண்டேன். எல்லா 'டாகுமெண்ட்ஸ்'களும் ஒரிஜினல்தான் தேவை. என் வீட்டுப் பத்திரம் எடுத்துப் பார்த்தேன். மிகவும் இற்றுப் போயிருந்தது. அடிப் பத்திரங்களை கரையான் அரித்திருந்தது. 25 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய பத்திரத் தாள்கள். ஒருவேளை முத்திரைத் தாள் மோசடியின் போது தெரியாத்தனமாக வாங்கியதாக இருக்குமோ என்று பயந்து விட்டேன். 'அவை உண்மையான முத்திரைத் தாள்களா, போலியா என்று கண்டுபிடிப்பது எப்படி? போலி முத்திரைத் தாள் என்றால் என் வீடு என்ன ஆகும்? அந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் என்ன ஆனார்கள் என்று சிந்தனை எங்கெங்கோ தாவியது. முக்கியமான இந்நேரத்தில் இதெல்லாம் தேவையா? முதலில் விசா பிரச்னை முடியட்டும் என்று தெளிவாக்கிக் கொண்டேன்.

நேர்காணலின் போது அமெரிக்க ஆங்கில உச்சரிப்புப் புரியாமல் நான் பாட்டுக்கு ஏதாவது தவறான பதில் கூறி விடுவேனோ என்பதால் 'உரையாடல் மொழி : தமிழ்' என்று பதிவு செய்தேன்.

நேர்காணலுக்கு முதல்நாள் இரவு தூக்கம் வரவில்லை. எம்.பி.பி.எஸ் கடைசி ஆண்டு தேர்வுக்குப் போவதைப் போல பயமாக இருந்தது. விசா கிடைக்கவில்லை என்றால் மறுபடி முயற்சிக்கலாம் என்று எனக்கு நானே தைரியம் கூறிக்கொண்டு ஒரு வழியாக உறங்கி விட்டேன்.

அமெரிக்கத் தூதரக அலுவலகத்தில் என்னையும் என் டாகுமெண்ட்களையும் சோதனையிட்ட பின், மூன்று இடம் மாறிமாறி உள்ளே சென்று நேர்காணல் அரங்கில் அமர வைக்கப்பட்டேன். ஹெச்1 விசா நேர்காணலுக்கு வந்த கோட்சூட் அணிந்த இளைஞர்கள் தைரியமாகச் சத்தம் போட்டு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சிலர் இருக்கையில் உட்காராமல் அங்குமிங்கும் பதற்றமாக பிரசவ அறைக்கு முன் நடப்பதைப் போல நடந்து கொண்டிருந்தார்கள்.

என்னை நேர்காண இருந்த அமெரிக்கர் மிகவும் நல்லவர் போலத் தெரிந்தார். அவர் நம் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டால் விசா கிடைத்து விட்டது என்றும் திருப்பிக் கொடுத்து விட்டால் விசா இல்லை என்றும் அர்த்தம்.

எனக்கு முன் ஒரு நடுத்தரவய்துப் பெண்மணி தனியாக வந்திருந்தார். நீரா ராடியாவிடம் சி.பி.ஐ. கேட்பது போல பல கேள்விகளை துருவி துருவிக் கேட்டார். "பத்து ஏக்கரா இருக்கு. என் புருஷன் விவசாயம் பாக்குறாரு" என்று பதில் சொன்னது என் காதிலும் தெளிவாகக் கேட்டது. முடிவில், "உங்களுக்கு விசா வழங்க முடியாது" என்று தமிழில் மென்மையாகச் சொல்லிப் பாஸ்போர்ட்டை அவரிடம் திருப்பிக் கொடுத்தார். அடுத்தது என்முறை. என் அப்பாவித் தோற்றம் பார்த்தோ என்னவோ, "அமெரிக்காவில் யார் இருக்கிறார்கள், ஏன் செல்கிறீர்கள்?" என்ற இரண்டு கேள்விகளை மட்டும் கேட்டார். நான் அதற்கு பதில் சொல்லி விட்டு, அவர் கேட்காமலேயே, "இரண்டு மாதத்தில் இந்தியா திரும்பி விடுவேன்" என்றேன். "உங்களுக்கு நான் விசா வழங்குகிறேன். உங்கள் பாஸ்போர்ட் ஒரு வாரத்தில் கொரியர் மூலம் வந்து சேரும்" என்று அன்பாகக் கூறினார். கஷ்டப்பட்டுத் திரட்டிக் கொண்டு வந்திருந்த ஏகப்பட்ட டாகுமெண்ட்ஸில் ஒன்றைக் கூடப் பார்க்காதது ஏமாற்றம் அளித்தது.

சென்னையிலிருந்து சான்பிரான்சிஸ்கோ போய்வர இந்தத் தேதியில் எந்த எந்த நாட்டு 'ஏர்வேஸ்'-ல் எவ்வளவு கட்டணம்?' என்று நான்கு வெளிநாட்டுப் பயண முகவாண்மையிடம் கொட்டேஷன் கேட்டேன். நான்கு பேரும் நான்கு விதமான கட்டணம் சொன்னார்கள். விமானக் கட்டணம், ரயில் கட்டணம் போல் நிலையானது அல்லவாம். ஆம்னி பஸ் போல் சீசனுக்கும் நெரிசலுக்கும் தகுந்தபடி எவ்வளவு வேண்டுமானாலும் நிர்ணயம் செய்வார்களாம். சென்ற தீபாவளிக்கு சென்னை-மதுரை ஆம்னி பஸ் கட்டணம் மூவாயிரம் ரூபாயாம். அப்படியும் பஸ் நிரம்பி வழிந்ததாம். துபாய் வழிச் செல்ல மிகக் குறைந்த கட்டணம் சொன்ன நிறுவனத்தின் மூலம் டிக்கட் வாங்கி விட்டேன்.

நான் அமெரிக்கா செல்வது பலருக்கு குறிப்பாக என் மூலம் குழம்புப் பொடி, ரசப்பொடி, மூக்குப் பொடி வகையறாக்களை அனுப்ப நினைத்தவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தது. என் பால்ய சிநேகிதன் நச்சு (நச்சினார்க்கினியன்) மூன்று மாதமாகப் பிரிந்திருந்த தன் மனைவிக்காக பசை போட்டு ஒட்டிய சிறு காகிதப் பொட்டலம் கொடுத்தார். பொட்டலத்தின் மீது 'என் அன்பு மனைவி பாகிரதிக்கு' என்று பல வண்ண ஸ்கெட்ச் பேனாக்களால் எழுதியிருந்தார். எடை மிகக் குறைவாக இருந்தது. 'உள்ளே என்ன?' என்று கேட்பது நாகரீகமல்ல என்பதால் கேட்கவில்லை.

பலமுறை அமெரிக்கா சென்று வந்த அனுபவசாலி நண்பர், "ஒரு ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்க. இன்னொரு ஜீன்ஸ் பேண்ட், நாலு டி-ஷர்ட் வச்சுக்க. இதுவே அதிகம்" என்றார்
விமானத்தில் 'லக்கேஜ்' எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட 46 கிலோ எடையில் பொடி வகையறக்காள் தவிர புட்டுக்குழாய், இட்லித் தட்டு, மிக்ஸி, கழுத்துப்பட்டை, இடுப்புப் பட்டை போன்றவை 30 கிலோவுக்கும் அதிகமாகச் சேர்ந்து விட்டதால் எனக்குத் தேவையான பொருட்களை மிக மிகக் குறைவாகவே எடுத்துக் கொண்டேன். சூட்கேஸ்களின் எடை அதிகரித்துக் கொண்டே போனது. எடை அதிகமானால் ஏகப்பட்ட பணம் கட்ட வேண்டுமாம். எனவே எடை பார்க்க 3000 ரூபாய் கொடுத்து ஒரு மிஷனை வாங்கினேன்.

திருமதி சுனந்தா புஷ்கரின் மூன்றாவது கணவரும், சுனந்தா புஷ்கரை தன் மூன்றாவது மனைவியாக ஆரவாரத்துடன் திருமணம் செய்து கொண்டவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தாரூர் விமானத்தின் எகானமி பிரிவு - மாட்டுக் கொட்டகை என்று கிண்டல் செய்திருந்தாலும் நடுத்தர வர்க்கத்தவரான எனக்கு பிரமாண்டமாகவே தெரிந்தது. தொடர் ஏசியால் கடுமையான மூக்கடைப்பு, தொண்டை வலி வந்து விட்டது. உணவு நன்றாக இருந்தாலும், பசி இல்லாததால் இரண்டு வேளை பட்டினி போட்டேன்.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் 'அன்பே வா' எம்.ஜி.ஆர். போல 'புதிய வானம் புதிய பூமி...' என்று பாடத் தோன்றியது. தமிழ்நாட்டில் எங்கும் ஃப்ளெக்ஸ் போர்டு விளம்பரங்களையே பார்த்துப் பழகிய எனக்கு அமெரிக்காவின் சாலை ஓரம் வெறிச்சோடிக் கிடந்தது. நான் 'மாருதி ஆல்டோ'வை ஓட்டும் போது ஆக்ஸிலேட்டரை அழுத்துவதை விட ஹாரனைத் தான் அதிகமாக அழுத்துவேன். இந்த ஊர் கார்களில் ஹாரன் இல்லையோ என்று சந்தேகம் ஏற்பட்டது.

'லிவர்மோர்' ஹிந்து ஆலயம் அழகாக இருந்தது. இந்த ஆலயத்தில் முன்னரே பேசிக் கொண்டபடி நண்பர் நச்சுவின் மனைவி பாகீரதியைச் சந்தித்தேன். பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பின் அந்த காகிதப் பொட்டலத்தை அவரிடம் கொடுத்தேன். சற்றே வெட்கத்துடன் பெற்றுக் கொண்டவர், "உள்ளே என்னன்னு அவர் சொன்னாரா?" என்று கேட்டார். 'இல்லை' என்று சொன்னேன். நன்றி கூறிவிட்டு, வீட்டுக்கு வரும்படி அழைத்துவிட்டு விடை பெற்றார்.

தமிழ் நூல்கள், வார இதழ்களை இணையத்தில் படிப்பதை விட நேரடியாக புத்தகமாகப் படிப்பதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம். அதனால் பொது நூலகத்தில் கிடைக்கலாம் என்ற எண்ணத்தில் பிளசண்டன் மைய நூலகம் சென்றேன். நூலகரிடம் தமிழ் நூல்கள் பற்றிக் கேட்டேன். முதலில் அவருக்குப் புரியவில்லை. பின்னர் அவரிடம் 'இந்திய மொழிகளில் ஒன்று தமிழ்' என்று சொல்லி விளக்கினேன். அவர் இந்தி நூல்கள் மட்டுமே அங்கு இருப்பதாகவும், வேறு நூலகங்களில் தமிழ் நூல்கள் இருக்கலாம் என்றும், இணையத்தில் தேடினால் கிடைக்கும் என்றும் சொல்லி என்னை அழைத்துச் சென்றார். தமிழ் இலக்கியம் - பட்டினத்தார் பாடல்கள் என்று தேடச் சொன்னேன், எனக்கு பட்டினத்தாரை மிகவும் பிடிக்கும் என்பதால். தேடலின் முடிவில் நூலகர், அது அருகில் உள்ள நூலகத்தில் இருப்பதாகவும், மறுமுறை வரும் போது பெற்றுக் கொள்ளலாம் என்றும், எப்போது மீண்டும் வருவீர்கள் என்றும் கேட்டார். அவரது கடமை உணர்வு மெய் சிலிர்க்க வைத்தது.

அமெரிக்க மருத்துவமனை ஒன்றை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற என் ஆசை பேரனின் உடல்நலப் பரிசோதனைக்கு உடன் செல்வதன் மூலம் நிறைவேறியது. பிளசண்டன் Valley Care Hospital சென்றேன். வயது முதிர்ந்த நோயாளிகள் கூடத் துணைக்கு ஆள் இல்லாமல் தனியாகக் காரில் வந்து இறங்கிச் செல்வதைப் பார்த்து மிகவும் பரிதாபமாக இருந்தது.

அமெரிக்காவில் கழிப்பறையை ரெஸ்ட் ரூம் என்று சொல்கிறார்கள். மணிக்கணக்கில் உட்கார்ந்து ஓய்வு எடுப்பதால் அந்தப் பெயரா அல்லது ஓய்வின்றி உழைப்பவர்களுக்கு அந்த ஒரு சில நிமிடங்கள் தான் ஓய்வு என்பதால் அந்தப் பெயரா என்பது தெரியவில்லை.

இங்கே குளிர் ஒரு பெரிய சவால். குளிருக்குப் பயந்த என் உறவினர் ஒருவர் தான் இருந்த ஆறுமாதமும் அமெரிக்காவைச் சுற்றிப் பார்க்காமல் வீட்டுச் சிறையில் இருந்தது போல் வெளியே வரவே இல்லை.

சான்பிரான்சிஸ்கோ விரிகுடாவிலிருந்து 1.5 மைல் தொலைவிலுள்ள அல்காட்ராஸ் தீவிலுள்ள சிறைச் சாலைக்கு, எந்திரப் படகில் சென்றேன். வீசும் கடும் குளிர்காற்றைத் தாங்கிக் கொண்டு செல்வது பெரிய சவால். அல்காட்ராஸ் தீவுக்குச் செல்லும் வழியில் கடலுக்கு மேல் 1.7 மைல் நீளத்தில் உலகின் நவீன அதிசயங்களில் ஒன்றான கோல்டன் கேட் பாலம் தெரிகிறது. 1937ல் திறக்கப்பட்ட இது சான்பிரான்சிஸ்கோவையும் மலைப்பகுதியையும் இணைக்கிறது. இப்பாலத்திற்கு கண்ணைக் கவரும் ஆரஞ்சு நிற வர்ணம் பூசப்பட்டுள்ளது.

பர்கர், பிட்ஸா, சாண்ட்விச்தான் போன்றவற்றைச் சாப்பிடுவது ஒரு அனுபவம். நீர் யானை போல் வாயை அகலமாகத் திறந்து 'கபக்' என்று கடித்துச் சாப்பிட வேண்டும். நடுவில் உள்ள இலை, தழை, காய்கறிகள் பிதுங்கி மீசையில் ஒட்டிக் கொள்ளும். ஒவ்வொரு முறையும் கொகோ கோலா, ஸ்பிரைட் என ஏதாவது குடித்து உள்ளே தள்ள வேண்டும். கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிறைந்து விடுகிறது.

சான்ஹோஸே நகரின் மையத்தில் உள்ள டெக் மியூசியத்துக்குச் சென்றேன். அது பலவகையிலும் பொது அறிவு வளர்வதற்கு உறுதுணையாக உள்ளது. குறைந்த அளவில் (4 ரிக்டருக்குக் கீழ்) நிலநடுக்கம் ஏற்படும் போதும், அதிக அளவில் (10 ரிக்டருக்கு மேல்) ஏற்படும் போதும் நம் உடலில் நிகழும் மாற்றங்கள் குறித்து, செயற்கையாக ஒரு நிலநடுக்கத்தை மேடையில் உண்டாக்கி உணர்த்தினார்கள். பல புதிய விஷயங்களை இங்கு தெரிந்து கொள்ள முடிந்தது.

சரி, கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட திருமதி பாகீரதிக்கு அவரது கணவர் நச்சு கொடுத்தனுப்பிய காகிதப் பொட்டலத்தில் என்னதான் இருந்திருக்கும் என்று கேட்கிறீர்களா? நீண்ட நாள் கழித்து நான் தற்செயலாகத் தெரிந்து கொண்ட விஷயம், அதில் இருந்தது - சவுரி முடி.

டாக்டர் ஆர்.எம்.ஆர்.சாந்திலால்
More

நானும் முடி வெட்டிக்கப் போனேன்
Share: 




© Copyright 2020 Tamilonline