|
|
|
|
என்னுடன் வெங்கட்ராமன் என்று ஒரு வால் பையன் படித்தான். எப்போதும் கேலி, கிண்டல் பேச்சுத்தான். அவனை வகுப்பில் எல்லோருக்கும் பிடிக்கும். அவன் வகுப்புக்குள் நுழைந்தாலே ஆப்பிள் ஸ்டோரில் டைனோசார் புகுந்த மாதிரிதான்! அதனால் அவனை நாங்கள் ‘வெங்கட் டிராமா’ என்று கூப்பிடுவோம்.
பள்ளிக்கூட ஆண்டுவிழா வந்தது. அதில் வெங்கட், ராதை வேஷம் போட்டுக் கொண்டு பிரமாதமாக நடனம் ஆடினான். ஒரே கைதட்டல் ஆரவாரம். அடுத்து ஒரு நாடகம். அதில் வெங்கட்டுக்கு விவேகானந்தர் வேடம். திரை விலகியது. வெகு கம்பீரமாக, அமைதியாக, காவி வேஷ்டி, முண்டாசு, கையில் புத்தகம் சகிதம் மேடைக்கு வந்த வெங்கட் பேச ஆரம்பித்தான். எல்லோரும் எழுந்து ஓவென்று கூச்சல் போட்டுக் கைதட்டத் தொடங்கினார்கள். "ஏய் வெங்கட், விவேகானந்தர் எப்போ பொம்பளையா மாறினார்?" என்று ஒரு குரல் கேட்டது. ராதை வேடத்துக்காக அணிந்திருந்த வளையல், பொட்டு, தோடு இவற்றோடு வந்துவிட்டிருந்தான் வெங்கட். அதை உணர்ந்து அவன் உள்ளே ஓடும்போது தலைப்பாகை அவிழ்ந்து, உள்ளேயிருந்த பின்னல் ஜடையும் கீழே விழ, ஒரே சிரிப்பும் ரகளையும்தான் போங்கள். |
|
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ்வாட்டர், நி.ஜெ. |
|
|
|
|
|
|
|