|
|
|
|
அன்புள்ள சிநேகிதியே
என் நண்பனின் சார்பாக நான் எழுதுகிறேன். அவன் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவன். தென்றலில் வரும் சில சுவையான பகுதிகளை நான் அவனுக்கு மொழி பெயர்த்துச் சொல்லுவேன். மிகவும் நல்லவன். கஷ்டப்பட்டு வாழ்க்கையில் மேல் தரத்துக்கு வந்திருக்கிறான். அவன் பள்ளி இறுதிப்படிப்பை முடிக்கும் சமயத்தில் தந்தை திடீரென்று இறந்துவிட்டார். பெரிய குடும்பம். இவன் அண்ணன்மார்கள் எல்லோரும் படித்து நல்ல பதவியில் இருக்க ஆரம்பித்தனர். எல்லோரும் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள். இவன்மட்டும் முதல் வருடம் கல்லூரியில் பெயில் ஆகி விட்டான் என்பதால், படிப்புக்கு உதவி செய்து பிரயோசனம் இல்லை என்பதுபோல இருந்து விட்டார்கள் அந்த அண்ணன்மார்கள். "அப்பா இறந்தது என்னைத்தான் மிகவும் பாதித்தது. நான்தான் அவருடன் கடைசியில் வாழ்ந்து வந்தேன். அந்த துக்கத்தில் எனக்கு படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அது புரியாத ஒரு அண்ணன் என்னை மிகவும் கேவலமாகப் பேசிவிட்டார். அந்த ரோஷத்தில் நான் யாரையும் எதிர்பார்க்காமல் டிப்ளமா படித்து மெல்ல முன்னேறி வந்தேன்" என்று என்னிடம் சொல்லியிருக்கிறான். இப்போது மனைவி, குடும்பம் என்று நல்ல நிலையில் இருக்கிறான். அம்மாவுக்கு கிரீன் கார்ட் வாங்கி அவரைத் தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கிறான். மற்ற சகோதரர்களுடன் அதிகம் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை. அம்மாவைப் பார்க்கவென்று வருடத்துக்கு ஒருமுறை யாராவது வந்துவிட்டுப் போவார்கள். அவர்களே போன் செய்தால்தான் பேசுவான். அதற்காக யாரையும் இழிவாகப் பேசியும் பார்த்ததில்லை. எல்லோரும் சொந்த உறவுகளுக்கு ஏங்கும் இந்த நாட்டில் மூன்று அண்ணன்களை வைத்துக் கொண்டு, நிர்க்கதியாக இருக்கிறானே என்று நினைத்துக் கொள்வேன். என்ன விஷயம் என்றும் தெளிவாகத் தெரியாது. "வேண்டாம் அப்பா, அவரவர்கள் நன்றாக இருக்கட்டும். நீ எனக்கு ஒரு அண்ணன் போலத் தானே!" என்று நான் ஏதாவது கேட்டால் பழையதை நினைக்க விரும்பாமல் அவன் பதில் சொல்வான்.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு அண்ணனின் மனைவி இறந்து விட்டதாகச் செய்தி வந்து இவன் போய்விட்டு வந்தான். "பல வருடங்களுக்குப் பிறகு எல்லோரையும் ஒரே சமயத்தில் இந்த துக்க சமாசாரம் ஒன்றாக்கியது. பாவமாக இருந்தது அண்ணனைப் பார்த்தால். பசங்க இரண்டு பேரும் இந்த ஊர்க்காரர்களைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். வேலை, ப்ரொஃபஷன் என்று இருந்துவிட்டு பாவம் இப்ப யாருடனும் அதிக நெருக்கம் இல்லை போலிருக்கிறது. சம்சாரம் போனதுபற்றி மிகவும் கவலைப்படுகிறான். வாங்க, என் வீட்டுக்கு நிம்மதிக்குன்னு சொல்லிட்டு வந்தேன்" என்று சொன்னான்.
போனவாரம் "நீ கொஞ்சம் வீட்டுக்கு வரணும். அர்ஜெண்ட்" என்று கூப்பிட்டு அனுப்பினான். நானும் வேலைநாளில் கூப்பிடுகிறானே என்று நினைத்து உடனே போனேன். விஷயம் இதுதான். அவன் மனைவி தன்னுடைய நியாயத்தை எடுத்து என்னிடம் சொன்னாள். "25 வருஷத்துக்கு முன்னாடி இவரை அப்படி துச்சமா மதிச்சாரு அந்த அண்ணன். எந்த உதவிக்கும் அவர்கிட்ட நாங்க போகல. அவரு Ph.D. பெரிய வேலை. உலகமெல்லாம் சுத்திக்கிட்டு இருப்பாரு. மில்லியன் டாலர் வீடு... அது, இதுன்னு மிதப்புல இருந்தாரு. இப்ப ரிடையர் ஆயிட்டாரு. மனைவியும் போயிட்டாங்க. இப்பதான் மனுஷங்க தேவைப்படுறாங்க அவருக்கு. எங்க மாமியாரை நான் கொஞ்சநாள் கொண்டு வச்சிக்கிறேன்னு எந்த அண்ணனும் கேக்கல. இப்போ, நான் கொஞ்சநாள் உங்ககூட வந்து தங்கட்டுமான்னு இவருக்கு மெயில் அனுப்பறாரு. கொஞ்ச நாள்னா எத்தனை நாளு? இத்தனை வருஷம் இல்லாத தம்பி உறவு இப்ப ஏன் வந்து முளைச்சது? அப்படியே வந்தாலும் எங்கே நான் தங்க வைக்கிறது? என் ரெண்டு பசங்களும் தங்களுக்குத் தங்க தனி ரூம் இல்லேன்னு குறைப்பட்டுக்கிட்டு இருக்காங்க. அவருடைய அந்தஸ்துப்படி எங்களுக்கு அவரைச் சரியா கவனிக்க முடியுமான்னு உங்க ஃப்ரெண்டோட இப்பத்தான் சண்டை போட்டு முடிச்சேன்" என்று சொன்னாள்.
என் நண்பன், "அவள் சொல்வது எல்லாம் உண்மைதான். நியாயம்தான். ஆனா பாவம் தனியா இருக்காரு. தங்கறேங்கறாரு. நான் எப்படி முடியாதுன்னு சொல்ல முடியும்? அவர் ஏதோ கோபத்திலே அந்தக் காலத்திலே விளாசிட்டார்னா நான் அதுக்குப் பழிவாங்க முடியுமா? பேஸ்மென்ட்ல பசங்களைத் தங்கிக்கச் சொல்லி நாமதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்னு இவகிட்ட சொல்லிக்கிட்டு இருக்கேன்" என்றான். எனக்கு இரண்டு பக்கமும் நியாயம் இருக்கும் போல் தோன்றியது. ஆனால் அவன் மனைவி மேல்தான் பரிவு ஏற்பட்டது. தன் குடும்பத்தை மதிக்காத மைத்துனரை உபசரித்துக் கொண்டு, ஏற்கனவே தனி ரூமுக்குச் சண்டை போடும் குழந்தைகளை சமாதானப்படுத்திக் கொண்டு, வயதான மாமியாரைப் பார்த்துக்கொண்டு என்று எத்தனை தொந்தரவுகள்... இவன்பாட்டுக்குப் பரிதாபப்பட்டு அழைத்து விடுகிறான். ஆனால் வயதானவர், வாழ்க்கைத் துணைவி போய்விட்ட தனிமை, வேறு யாருமில்லை அரவணைத்துக் கொள்ள (மற்ற சகோதரர்களின் மனைவிகளும் கை விட்டிருப்பார்களோ?) என்று அந்த அண்ணனை நினைத்தால் ஒரு பக்கம் பாவமாகத்தான் இருக்கிறது. நான் ஏதோ அறிவுரை வழங்கிவிட்டு வந்தேன். என் நிலையில் நீங்கள் இருந்தால் என்ன சொல்லியிருப்பீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆசை. தயவு செய்து பதில் எழுதுங்கள்.
இப்படிக்கு உங்கள் நண்பன்
------------ |
|
அன்புள்ள சிநேகிதரே
எனக்கும் உங்களைப் போல நீங்கள் என்ன கருத்துக்களைத் தெரிவித்தீர்கள் என்று தெரிந்துகொள்ள ஆசை. உங்களைப் போலவே நானும் சிந்த்திக்கிறேனே என்ற ஒரு நினைப்பு. முடிந்தால் நீங்களும் பதில் எழுதுங்கள்.
நண்பர் எழுதியது போன்ற விவகாரங்களில் அவற்றில் சம்பந்தப்பட்டவர் முடிவெடுப்பது, யார் நியாயமான கருத்துக்களைத் தெரிவிக்கிறார் என்பதை வைத்து இல்லை. யார் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். ஒரு செய்தியை உண்மையா, இல்லையா என்று பிறர் கணிப்பது, அது எங்கிருந்து, யாரால் வருகிறதோ அந்த இடத்தின்மேல் உள்ள நம்பிக்கையைப் பொறுத்துத்தான். எது நியாயமான கருத்து, எது நியாயமில்லாதது என்று சீர்தூக்கி அலசிப் பார்ப்பதைவிட, யாரிடம் நம்பிக்கை அதிகம் என்று பார்ப்பது நல்லது. என்னுடைய கருத்துக்களைவிட உங்கள் கருத்துக்களுக்குத்தான் இப்போது எடை அதிகம். இருந்தாலும் என்னுடைய அபிப்பிராயத்தையும் நான் தெரிவித்து விடுகிறேன்.
உறவுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ரத்த சம்பந்தப்பட்டவை. சம்பந்தப்படாதவை. முதல் வகையைப் பெரும்பாலோர், they take it for granted. "தடியால் அடித்துத் தண்ணீர் விலகுமா?" என்று சொந்த பந்தங்களைப் பற்றிக் கவலைப்படாமல், தங்கள் மனைவி/கணவன், குழந்தைகள் என்று இருப்பவர்கள் பல பேரைச் சந்தித்து இருக்கிறேன். வேறு சில குடும்பங்களில் எல்லோரும் பாச மலர்களாக இருப்பார்கள்.
பணம், கௌரவம் சேர்ப்பதில் உள்ள தீவிரம், மனிதர்களைச் சேர்ப்பதில் இல்லை, நம்மில் சிலருக்கு. தனிமைப்படுத்தப் படும்போதுதான் பிறருக்கு ஏங்க ஆரம்பிக்கின்றது மனித மனம். வயதான காலத்தில், நாம் சேமித்து வைத்திருக்கும் பணம் எவ்வளவு நமக்கு உதவி செய்யுமோ அதில் ஒரு சிறிதளவாவது உதவி செய்யும், நாம் கொஞ்சம் உறவுகளையும் பலப்படுத்திக் கொண்டால். ஆனால், இதெல்லாம் யாருக்கும், யாரும் உபதேசம் செய்து வரப்போவதில்லை. காரணம், உறவுகளை பலப்படுத்திக் கொள்ளும்போது, அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் இருந்தால் அங்கேயே அந்த உறவு பொய்த்து விடுகிறது. நமக்குள் மக்கள் துணை இருக்க வேண்டும் என்று ஒரு ஆர்வமும், ஆதங்கமும் உண்மையாக இருக்கும்போது, நாம் அவர்களுக்குத் துணையாக, தூண்டுகோலாக இருப்பதே முக்கியம். இதற்கு உள்ளுணர்வு வேண்டும். சொல்லிக்கொடுத்துச் செயல்படுத்துவது இல்லை.
உங்கள் நண்பரின் சகோதரர், நான் சொன்ன taking it for granted வகையைச் சேர்ந்தவராக இருக்கலாம். உங்களுடைய நண்பருக்கு இருக்கும் ஆதங்கம் அந்த அண்ணனுக்கு இல்லை. இனியும் இருக்கும் என்று சொல்ல முடியாது. "அம்மா பசிக்கிறது" என்று கேட்பது போல, "தனிமை என்னை வாட்டுகிறது" என்று சொல்லாமல் சொல்லும் யாசகம். உங்கள் நண்பர் அதைப் புரிந்து கொண்டிருக்கிறார்.
உயர்ந்த வாழ்க்கைத் தரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அந்தச் சகோதரரும், ஒரு சில நாளுக்கு மேல், உங்கள் நண்பரது விருந்தாளியாக இருக்க மாட்டார் என்பது என்னுடைய கணிப்பு. உங்களுடைய நண்பரது மனைவியும் மாமியாரைக் கரிசனத்துடன் கவனித்துக் கொள்ளும்போது, ஏதோ அடிபட்ட, புண்பட்ட வேகத்தில் நியாயத்தை எடுத்துச் சொன்னாரே தவிர, ஒரு வயதான மைத்துனரை வைத்துக் கொள்ள முடிவில் இசைந்து விடுவார் என்பது என்னுடைய இன்னொரு கணிப்பு. வந்து தங்கும் சகோதரரும் உங்கள் நண்பரைப் புரிந்து கொண்டு கொஞ்சம் அன்னியோன்னியம் வளரும். ஆனால் சினிமாக்களில் பார்ப்பது போல, மறுபடியும் இணைந்து பாசம் சொட்டச் சொட்ட இணைபிரியாது இருப்பார்கள் என்பது இருக்காது. தனிமை பழகிவிடும்போது அந்தச் சகோதரர்களுக்குள் நெருக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்று தெரியாது. ஆனால் உங்கள் நண்பர் அதை எதிர்பார்ப்பவர் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
ஆக மொத்தம் அந்தச் சகோதரர் வருவார். சிறிது நாளுக்கு மேல் அவருக்கு வசதி சரிப்படாது. கிளம்பி விடுவார். விட்டுப்போன தொடர்பு சேரும். ஆனால் கட்டுக்குள் இருக்கும். யாருக்கும் இங்கே அதிகம் எதிர்பார்ப்புக்களும் இருக்காது. ஏமாற்றமும் இருக்காது. நண்பரே, என்ன நடந்தது என்று முடிந்தால் தெரிவிக்கிறீர்களா?
இப்படிக்கு சித்ரா வைத்தீஸ்வரன் |
|
|
|
|
|
|
|