|
தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 14) |
|
- கதிரவன் எழில்மன்னன்|பிப்ரவரி 2011| |
|
|
|
|
|
இதுவரை: பொருளாதாரச் சூழ்நிலை முன்னேறி வருகிற இந்த நிலையில் எந்தத் துறைகளச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்பநிலை மூலதனம் கிடைக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். சென்ற பகுதிகளில், வலைமேகக் கணினி (cloud computing), வலைமேக ஊடகங்கள் (cloud media), கம்பி நீக்கம் (clearing out wires), சுத்த நுட்பம் (clean tech) என்ற CL துறைகளில் மிகுந்த மூலதன ஆர்வமிருப்பதைக் கண்டோம். வலைமேகக் கணினியின் முக்கிய உபதுறையான சேவை மென்பொருள் துறையைப் பற்றியும், அதைவிட அடிப்படையான, கணினிகளை வேண்டும்போது மட்டும் உபயோகிக்கும் PaaS, மற்றும் IaaS பற்றியும் விவரித்தோம். நிறுவனத் தகவல் மையங்களை வலைமேகங்களுடன் இணைக்கும் பாலம் என்ற நுட்பத்தை அறிமுகம் செய்து அதன் சில உபதுறைகளைப் பற்றிய மேல் விவரங்களைக் கண்டோம். பிறகு கம்பிநீக்க நுட்பங்களில், அண்மைத் தொடர்பைப் பற்றியும் தொலைத்தொடர்பின் இடக்குறிப்பு சேவைகள் போன்ற அம்சங்களையும் கண்டோம். இப்போது மற்ற கம்பியற்ற நுட்பங்களைப்பற்றித் தொடர்ந்து காணலாம்.
*****
கம்பியற்ற நுட்பங்களில் அண்மை வலை மற்றும் தொலைத்தொடர்பு பற்றி அலசியாயிற்றே? இத்துறையில் வேறு வாய்ப்புக்களும் உள்ளனவா?
நிச்சயமாக. முன்பே கம்பியற்ற துறையை நான்கு உபதுறைகளாகப் பிரித்துக் கூறியிருந்தேன்: நீங்கள் குறிப்பிட்ட படி அண்மை வலையும் மற்றும் தொலைத்தொடர்பும் இரு உபதுறைகள். சாதன அண்மை வலை (device area networks), மற்றும் கம்பியற்ற மின்சக்தி (wireless power) மற்ற இரு உபதுறைகள். இப்போது அத்துறைகளில் உள்ள நுட்பங்கள் மற்றும் வாய்ப்புக்களைப் பற்றிக் காண்போம்.
கம்பியற்ற சாதன வலையில் நமக்கு மிகமிகத் தெரிந்த நுட்பம் ப்ளூடூத் நுட்பம். இத்துறை முதலில் உள்சிகப்பு வலையரிசையில் (infrared wavelength) இரு கணினிகள் அல்லது பாம்-5 (Palm-5) போன்ற தன் தகவல் உதவிக் கருவிகள் (personal digital assistants) தங்களுக்குள் தகவல் பரிமாறிக்கொள்ளப் பயன் படுத்துவதில் பிரபலமடைந்தன. அத்தகைய கைக்கருவிகள் வைத்திருந்தவர்கள் கருவிகளை நேரெதிரில் வைத்து தங்கள் தொடர்பு விவரங்களைப் பரிமாறிக்கொள்வதில் திருப்தியும் பெருமிதமும் கொண்டனர்.
உள்சிகப்புத் தொடர்பு நுட்பத்தில் ஒரு பெரிய சங்கடம் என்னவென்றால், தகவல் பரிமாற வேண்டிய சாதனங்கள், ஒளி நேருக்கு நேர் செல்லும்படியாக சரியாக அருகில் வைக்க வேண்டும். அதனால், அடுத்தபடி ப்ளூடூத் நுட்பம் வந்தது. ப்ளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது என்பதே ஒரு சுவாரசியமான விஷயம். உள்சிகப்பு அலை வரிசையிலிருந்து நீல அலை வரிசைக்கு மாற்றியதனால் அல்ல. ப்ளூடூத் ஒளி அலைவரிசையே அல்ல. நேருக்கு நேர் வைக்கும் தேவையற்ற ரேடியோ அலைவரிசைதான். ப்ளூடூத் என்பது டென்மார்க் நாட்டு மன்னர் ஒருவரின் பட்டப்பெயரை ஆங்கில உச்சரிப்பில் மாற்றியதில் மருவி வந்தது. அவர் தனது நாட்டை ஒருங்கிணைத்ததால் அவருக்கு அளிக்கப்பட்ட பட்டம் அது. ப்ளூடூத் பலதரப்பட்ட சாதன வலை நுட்பங்களைச் சீராக்கி ஒருங்கினைத்ததால் அதே பட்டப்பெயரை அதற்கும் சூட்டினார்கள். ப்ளூடூத் சின்னமும் அந்த மன்னரின் பெயரின் முதல் எழுத்துக்களை இணைத்து வைக்கப்பட்டது. (மூலம்: விக்கிப்பீடியா).
ப்ளூடூத் நுட்பம் முதலில் மிக மெதுவாகத்தான் பயனுக்கு வந்தது. ஆனால், பல அமெரிக்க மாநிலங்களில் கையில் தொலைபேசி வைத்துக் கொண்டு வாகனங்களை ஓட்டக்கூடாது என்ற சட்டம் கொண்டுவந்தவுடன், வாகனங்களில் பொருத்தப்பட்ட தொடர்பின் மூலம் பேசுவதற்காக ப்ளூடூத் படுவேகமாக வளர்ந்துவிட்டது. இப்போது பல கணினி மற்றும் ஆடியோ போன்ற சாதனங்களை ப்ளூடூத் பிணைக்கிறது. HD வீடியோ அனுப்பும் அளவதிக அலைபரப்பு (bandwidth) கொண்ட அடுத்த தலைமுறை நுட்பத்தை நடைமுறைக்குக் கொணரும் முயற்சிகள் ஆரம்பித்துள்ளன.
சாதனங்கள் தங்களுக்குள் கம்பியின்றித் தொடர்பு கொள்ள இப்போது WiFi, ப்ளூடூத், RFID போன்ற பல்வேறு நுட்பங்கள் வந்து அது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனாலும், பல பில்லியன் கணக்கான சாதனங்களை மின்வலையோடு இணைக்கும் வசதி வந்துள்ளதால் சாதன வலையில் இன்னும் பல சக்தி வாய்ந்த நுட்பங்களையும், அதற்கான ஆரம்பநிலை நிறுவனங்களையும் உருவாக்கும் வாய்ப்புக்கள் பெருகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
கம்பியற்ற துறையின் அடுத்த உபதுறைக்கு வருவோமா? அதுதான் கம்பியன்றி மின்சக்தி செலுத்தல்.
இது கம்பியற்ற துறையின் கடைசி எல்லை என்றே சொல்லலாம்! கம்பியின்றி எங்கும் மின்சக்தி அனுப்ப முடியுமானால், கம்பித்தொல்லை ஒட்டு மொத்தமாக ஒழியக் கூடும் என்று எனக்கு ஒரு நப்பாசை. ஆனால் பெருமளவு ஆம்பியர்கள் (ampere) ஓடும் பெரும் மின்சக்தியைக் கம்பியின்றி செலுத்துவது எப்போது இயலும், ஏன் இயலுமா என்றே கூட தெரியவில்லை. என்றாலும், அவ்வாறு ஒட்டு மொத்தமாகக் கம்பிகள் காணாமல் போகாவிட்டாலும், பொதுவாக வீட்டுக்குள் பயன்படுத்தும் பலதரப்பட்ட மின்னணு (எலக்ட்ரானிக்) சாதனங்களுக்காவது கம்பியின்றி மின்சக்தி அனுப்ப முடிந்தால் பெரும் முன்னேற்றந்தானே! ஒருவழியாக சமீப காலமாக இத்துறையில் புது நுட்பங்கள் வர ஆரம்பித்துள்ளதால், நம்பிக்கை துளிர் விடுகிறது! (கவியரசு கண்ணதாசனின் "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது" என்ற பாடலின் வரிகள் கவனம் வருகிறதல்லவா!) |
|
அன்றாட வாழ்க்கையில் கம்பியின்றி மின்சக்தி அனுப்பு நுட்பங்கள் ஓரளவு பயனுக்கும் வந்துள்ளன. கைபேசி போன்ற பேட்டரியுள்ள மின்னணுச் சாதனங்களுக்கு மின்சக்தி சேமிக்க சக்திப்பாய் (power mat) எனப்படும் சாதனத்தை கம்பியால் சுவற்றிலுள்ள மின்பிணைப்போடு பொருத்திவிட்டால் போதும். அதன்மேல் கைபேசிகள் போன்ற பல சாதனங்களை, பிணைப்பின்றி சும்மா அப்படியே போட்டு வைத்து விட்டால், அவற்றின் பேட்டரிகளுக்குள் மின்சக்தியை அனுப்பி சேமித்துவிடுகிறது!
அதைவிட அதிக அளவு மின்சக்தி அனுப்பும் நுட்பங்களும் தலைதூக்குகின்றன. சில மாதங்களுக்கு முன் இன்ட்டெல் நிறுவனம், ஒரு கம்பியைக்கூடப் பிணைக்காமல் ஒரு மின்விளக்குக்கு மின்சக்தியை அனுப்பி அதை எரியச் செய்து பரபரப்பூட்டியது. அது ஒரு சிறிய 60-வாட் விளக்குதான் என்றாலும் கம்பியின்றி மட்டுமல்லாமல், சக்திப்பாய் போன்ற வேறு எந்த உதவிச் சாதனம்கூட இல்லாமல் வெறும் காற்றுவெளி மூலம் மின்சக்தியை அனுப்ப முடியும் என்று வெற்றிகரமாக முதன்முறை பொதுமக்களுக்குக் காட்டியது ஒரு பெரும் புரட்சியின் சிறு ஆரம்பம் எனலாம்.
மின்காந்த அலைப் பரப்பின் (electro magnetic spectrum) பல வகுப்புகள் (divisions) சார்ந்த அலைகளைப் பயன்படுத்தி மின்சக்தி அனுப்பும் வெவ்வேறு நுட்பங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. அத்தகைய நுட்பங்களைப் பயன்படுத்தி விண்வெளியின் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சக்தி தயாரித்து பூமிக்குத் தருவதற்கும் ஆராய்ந்து வருகிறார்கள்! ரேடியோ அலைகள் மூலம் சிறிய அளவு மின்சக்தி அனுப்புவது முன்பே சாத்தியமாகியிருந்தது. ரேடியோ அலைவரிசை அடையாள (RFID) நுட்பம் வந்து பல ஆண்டுகள் ஆகி சர்வசாதாரணமாகிவிட்டது. ஆனால் இப்போது பெருமளவு சக்தி எப்படி அனுப்பவது என்பதில் முயற்சி.
இதில் சுவாரசியம் என்னவென்றால் வானொலி மற்றும் தொலைக்காட்சியை அனுப்பும் அலைகளை ஆன்ட்டென்னா பயன்படுத்தி, அதில் வரும் மின்னோட்டத்தைப் பயன்படுத்தி விளக்கு, மின்விசிறி, சக்திப்பாய் போன்ற சிறிய சாதனங்களுக்கு மின்சக்தி அளிக்கலாம் என்றும் சிலர் முயற்சி ஆரம்பித்துள்ளனர்! தொலைக்காட்சி ஒளிபரப்புகள் மூளையைக் கெடுக்காமல், விளக்கேற்றுவது நல்லது என்று எண்ணிக் கொள்ளலாமோ?!
இத்துறை மிக மிக இளைய, ஆரம்பநிலைத் துறை - குழந்தைப் பருவம் எனலாம். நூறாண்டுகளுக்கு மேலாகப் பழமை பெற்ற இந்த மின்சக்தித் துறையில் இப்போது கம்பியின்றி அனுப்பும் முயற்சி புதுமையான வாய்ப்புக்களை அளிக்க உள்ளது. இது பெரும் பரபரப்பல்லவா? இத்துறையில் திறனிருந்தால் முயற்சி செய்து பாருங்களேன்!
இத்துடன் மூன்றாவது CL துறையையும் முடித்தாயிற்று. நான்காவது CL துறைபற்றி மேற்கொண்டு பார்க்கலாம்....
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|