Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிந்திக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
பம்பாய் சகோதரிகள் சி. சரோஜா - சி. லலிதா
தயா லக்ஷ்மிநாராயணன் (www.dhayacomedy.com)
- ஜனனி நாராயணன், மதுரபாரதி|பிப்ரவரி 2011||(1 Comment)
Share:
MITயில் சிவில் எஞ்சினியரிங் மற்றும் நகர்ப்புறத் திட்டமிடல் படித்த ஒருவர் ஸ்டேண்ட் அப் காமெடியனாக வர ஆசைப்படுவாரா? வெற்றிகரமான வென்ச்சர் கேபிடலிஸ்ட், நிர்வாகவியல் ஆலோசகர் என்று பலவற்றிலும் இருந்த பின்னும் அப்படி ஒரு ஆசை வருமா? வந்திருக்கிறதே! மேடைக் காமெடியிலும் வெற்றியைக் கண்டிருக்கிறார் தயா என்கிற தயா லக்ஷ்மிநாராயணன். அரசியலிலும் நுழைந்து பணியாற்றி வருகிறார். 'எல்லோரும் ரசிக்க வேண்டும் என்பதற்காக ஆபாச ஜோக் சொல்லமாட்டேன்' என்று தனது கலாசாரப் பின்னணியைப் பெருமிதத்தோடு உறுதி செய்கிறார். கலைகள் தழைப்பதற்கு நிதியைப் பற்றிய அறிவும் கல்வியும் வேண்டும் என்கிறார் இவர். தயாவைத் தென்றலுக்காகப் பேட்டி கண்டுள்ள ஜனனி நாராயணன் 'நிருத்யகலா டான்ஸ் அகடெமி'யின் நிறுவனர். நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கற்பனைவளம் மிகுந்த பல படைப்புகளை வழங்கியுள்ளவர். தயாவின் காமெடி நிகழ்ச்சி ஒன்றைக் குடும்பத்தோடு நேரில் போய்ப் பார்த்த பின்னரே பேட்டி கண்டார். அந்த நேர்காணலில் இருந்து....

*****


ஜனனி: காமெடியன் ஆகப் பிரபலமா இருக்கீங்க. இதற்கான உந்துதல் எங்கேயிருந்து வந்தது?
தயா: எங்கம்மாகிட்டேயிருந்து. அவங்க எல்லாரையும் போல அப்படியே பேசிக் காட்டுவாங்க. எல்லாரையும் சூப்பரா நக்கலடிப்பாங்க. அதிலேருந்துதான் எனக்குக் காமெடியன் ஆகிற எண்ணம் வந்தது. இன்னொரு காரணமும் உண்டு. முன்பெல்லாம் இங்கே காமெடின்னு எதை நெனச்சாங்களோ அதிலிருந்து இப்போ தரம் தாழ்ந்து போய்ட்டதுதான். உதாரணமா, சன்னிவேல்ல என் சித்தி இருக்காங்க. அவங்க என் காமெடி ஷோ பார்க்க ஆசைப்படறாங்க. "நீங்க என் காமெடியைப் பார்க்க வரலாம். ஆனால் அங்கே மத்த காமெடியன்கள் சொல்ற ஜோக்ஸ் உனக்குப் பிடிக்காமல் இருக்கலாம்" அப்படின்னு சொல்வேன். என்னோட லட்சியம் என்னன்னா, மக்களைச் சிரிக்கவும் வைக்கணும் ஆனா நாம சில கொள்கைகளிலே இருந்து விலகவும் கூடாது. அதாவது, காமெடியைக் குடும்பத்தோட பாக்க முடியணும். இன்னைக்கு அப்படி இல்லை. என்னோட மற்றொரு லட்சியம் டெலிவிஷன். ஏன்னா தெற்காசியர்கள் அதில் அதிகம் இல்லை. எங்கப்பா ஒரு ஃபிசிஸிஸ்ட். தம்பியும் விஞ்ஞானிதான். வீட்டில என்னைச் சுத்தி விஞ்ஞானம் இருந்தது. இதையெல்லாம் என் காமெடியில கொண்டுவரணும்.

ஜனனி: Big Bang தியரி போன்றவற்றையா?
தயா: இல்லை. டிஸ்கவரி சேனல் பாத்தீங்கன்னா, அதுல Myth Busters-னு ஒண்ணு வருது. அதில வர்றவங்க பேசறது எவ்வளவு டல்லா இருக்குதுன்னா, நாம விஞ்ஞானின்னு சொன்னாலே போரடிக்கறவங்கன்னு நெனக்கிறோம். எங்கம்மா அப்படித்தான் எங்கப்பாவைச் சொல்வாங்க. அதைப்பற்றிக் கிண்டலடிக்க நிறைய இடமிருக்கு.ஜனனி: உங்களுக்கு அரசியல்ல கொஞ்சம் ஆர்வம் உண்டு போல இருக்குதே?
தயா: ஆமாம். இங்கே வந்து முதலில் எங்கம்மாதான் குடியுரிமை வாங்கினாங்க. ஒஹையோவில் ஒரு காங்கிரஸ்மேன் உதவினதால அவங்கம்மாவை அமெரிக்காவுக்குக் கூட்டிவர முடிஞ்சது. இப்படி குடும்பத்துல ஒவ்வொருத்தரா அமெரிக்காவுக்கு வந்துட்டாங்க. "அமெரிக்கா நமக்கு நிறையத் தந்திருக்கு. நாம இதன் ஒரு அங்கமாக இருக்கணும்" அப்படீன்னு அம்மா சொல்வதோடு, தவறாமல் வோட்டுப் போடுவார். அரசியல்னாலே அழுக்கு, லஞ்சம்னு நினைக்க வேண்டியதில்லை.

இந்திய-அமெரிக்கர்கள், யூத அமெரிக்கர்களைவிட அதிகச் செல்வம் கொண்டவர்கள் அப்படீன்னு ஒரு புள்ளிவிவரம் சொல்லுது. ஆனால் நமக்கு ஏன் இங்கே அரசியலில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை? கலாசாரப் பாதுகாப்பு, சமுதாயப் பாதுகாப்பு, உடல்நலப் பாதுகாப்பு, மதசுதந்திரம் போன்ற எல்லாமே, மைனாரிடி இனத்தவர் என்ற முறையில் ஒரு வகையில் அரசியல் செல்வாக்கைச் சார்ந்ததுதானே! அதனாலதான் எனக்கு அரசியல் மிகவும் முக்கியமாப் படுது.

அரசியல் செயலூக்கம் ரொம்ப அவசியம். மற்ற இந்திய அமெரிக்கர்களும் ஈடுபடணும். சில அரசியல் நிகழ்வுகளும், அரிசோனா வன்முறையும் ஒருவகைக் கசப்புணர்வை ஏற்படுத்தியிருக்கலாம். அதுக்காக அரசியலை ஒதுக்கிடக் கூடாது. மத்தவங்க நம்பிக்கைகளைப் புண்படுத்தற மாதிரி நான் ஜோக்கடிக்கறதில்ல. ஆனாலும், அமெரிக்கர்களின் சில நம்பிக்கைகள், அரசியல், அரசியல்வாதிகள் இதில இருக்கற அபத்தத்தைச் சுட்டிக்காட்டத்தான் செய்வேன்.

ஜனனி: நீங்க MIT-யில படிச்சீங்க, இல்லையா?
தயா: ஆமாம்

ஜனனி: உங்கள் மேஜர் என்ன?
தயா: சிவில் எஞ்சினியரிங், நகர்ப்புறத் திட்டமிடல் இரண்டும் சேர்த்து படிச்சேன். "ஹேமா, படிக்க உன் பொண்ணை அவ்வளவு தூரம் அனுப்பறியே, உனக்குக் கவலையா இல்லையா?" அப்படீன்னு சிலர் கேட்டாங்க.

ஜனனி: அப்ப நீங்க எங்க இருந்தீங்க?
தயா: அலபாமாவுல.

ஜனனி: அலபாமாவிலே இருந்து போஸ்டனுக்குப் படிக்கப் போனீங்க?
தயா: இந்தியாவிலே இருந்து என் பெற்றோர் அமெரிக்கா வந்திருக்காங்க. இங்கே அலபாமாவிலே இருந்து போஸ்டன் போறது பெரிய தூரமா? இதில முக்கியம் என்னன்னா, என் பெற்றோரிடம் அதிகப் பணம் கிடையாது. ஆனாலும், "இங்க பாரு தயா, எங்களால முடிஞ்சது உன்னை நல்லா படிக்க வைக்கறதுதான்" அப்படீன்னு சொல்லி அனுப்பி வச்சாங்க. நிறையப் பணமும் செல்வாக்கும் இருக்கறவங்க MIT-க்குப் போறது வேற. ஆனால், என் விஷயம் அப்படியல்ல. மிகக் கடினமாக உழைக்க வேண்டி இருந்தது.

ஜனனி: இப்ப என்ன செய்யறீங்க?
தயா: Strategy, communications, marketing, branding இதுக்கெல்லாம் நான் ஆலோசகர்.

ஜனனி: MITல படிச்சதோட தொடர்புடைய வேலைதான், இல்லையா?
தயா: ம்ம்ம்... அவ்வளவா இல்லை. இதுக்கு முன்னாடி நிதித் துறையில இருந்தேன், அதுக்கு முன்னால மேனேஜ்மெண்ட் கன்சல்டிங். பிரச்சனைகளைத் தீர்க்கவும், தர்க்கரீதியா சிந்திக்கவும் MIT பயிற்சி தருது. அதை நாம எந்தத் துறையில வேணுமானா பயன்படுத்தலாம்.

ஜனனி: சிவில் எஞ்சினியரிங் படிச்சீங்க. அது சம்பந்தமான துறையில வேலை செய்யணும்னு நெனக்கலையா?
தயா: நான் செய்யும் தொழில் சமூகத்தில ஒரு தாக்கம் உண்டாக்கணும்னு நெனச்சேன். eBay-யின் நிறுவனருக்காக வேலை செய்தேன். அவருடைய நிதி ஒரு பக்கம் தர்ம காரியம் செய்தது, அதே சமயத்துல உலகத்துக்குப் பயனுள்ளதை உருவாக்குகிற கம்பெனிகளில முதலீடு செய்தது. ஒரு சமுதாயப் பொறுப்புள்ள நிதி நிறுவனம்னு சொல்லலாம்.

ஜனனி: கிரேட். நீங்க சின்ன வயசிலயே தமாஷான பேர்வழியா?
தயா: ஆமாம். சூப்பர் விஷமக்காரி. "தயா வந்துட்டா, கவனமா இரு" அப்படீன்னு எல்லாரும் சொல்வாங்க. படிப்புல சுமார்தான். நான்தான் ஜோக் சொல்றதுல பிசியா இருந்தனே! எப்பவும் ஏதாவது வம்புல மாட்டிக்குவேன். இந்தியாவுல 3 வயசுலயே கொழந்தைங்க படிக்கும். எனக்கு 5 வயசாகியும் வாசிக்கவே தெரியாது. எங்கம்மா எல்லா சாமியையும் வேண்டிக்கிட்டாங்க. "அமெரிக்கா ரொம்ப மோசம். படிப்பே சரியா சொல்லிக் குடுக்க மாட்டாங்க" அப்படீன்னு எங்க மாமாவெல்லாம் வேறே தூபம் போட்டாங்க.

எனக்கு கிரியேடிவிடி அதிகம். மூணாவது கிரேடு வந்தபோதே கவிதை, சிரிப்புக் கட்டுரை எல்லாம் எழுதுவேன். ஸ்கூல் நாடகத்துல பங்கேற்பேன். காலேஜுக்குப் போனதும் சீரியஸாய்ட்டேன். அப்புறம் மேனேஜ்மெண்ட் கன்சல்டன்ஸி, ஃபினான்ஸ் துறை வேலை எல்லாம் ஆச்சு. எப்பவுமே நான் எல்லாரையும் சிரிக்க வைப்பேன். 'நீ ஒரு கிரியேடிவ் பெர்சன்' அப்படீன்னு எனக்குள்ள குரல் கேட்டுகிட்டே இருந்தது. நாளைக்குக் கிழவியாகி பேரன் பேத்தி எடுத்தப்புறம், 'ஐயோ இதைச் செய்திருக்கலாமே'ன்னு தன்னிரக்கப்பட விரும்பலை.
ஜனனி: எப்போ ஸ்டேண்ட் அப் காமெடி செய்யத் தொடங்கினீங்க?
தயா: நாலு வருஷம் இருக்கலாம்.

ஜனனி: அதுக்காக வேலையை விட்டப்போ வீட்டில என்ன சொன்னாங்க?
தயா: காமெடி பண்றதுக்காக நான் ஒண்ணும் ஸ்கூல் டிராப்பவுட் ஆகலயே. அவங்களுக்கு அதில பெருமைதான். நல்லாப் படிச்சு வேலையெல்லாம் பார்த்தேன். காமெடி செய்ய ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கப் போறேன்னு நெனச்சாங்க. எனக்கு நல்ல ஆதரவா இருந்தாங்க.

நான் கொஞ்சம் பணம் சேர்த்து வச்சிருந்தேன். முதல் வருஷம் காமெடியில ஒண்ணும் வருமானம் இருக்காது. கத்துக்கற காலம் அது. தவிர, நான் கன்சல்டிங்கை விடலை. இந்தியப் பெண் காமெடியன் வேற யாரும் கிடையாதே. மெல்ல மெல்ல முன்னேறினேன். எங்கம்மாவோட ஜோக்ஸ், நான் பார்த்தவர்கள், நம்பமுடியாத நடவடிக்கைகள்னு எல்லாத்தையும் எத்தனை வருஷமா சேர்த்து வச்சிருந்தேன். அதை எடுத்து விட்டேன். மக்கள் அது நல்லா இருக்குன்னு சொன்னாங்க.

ஜனனி: உங்க முதல் ஷோ எங்கே நடந்தது?
தயா: சான் பிரான்சிஸ்கோவுல. 4 வருஷம் முன்னால மார்ச் மாசம். 75 பேருக்குள்ளதான். சின்ன கேதரிங். என் ஃப்ரண்ட்ஸையெல்லாம் அழைச்சிருந்தேன். ரொம்ப நெர்வஸா இருந்தேன். வயித்துக்குள்ள பட்டாம்பூச்சி பறந்தது! ஆனால் மேடையேறினதுமே மடமடன்னு பேச வந்தது. 8 நிமிஷம்தான். நல்லபடிப் போச்சு. எல்லாரும் பாராட்டினாங்க. அப்ப தொத்திக்கிட சிரிப்பு வியாதி, விடுமா என்ன!

ஜனனி: அங்கே இருந்த எல்லாருமே இந்தியர்களா?
தயா: இல்லை. சீனர்கள், யூதர்கள், வெள்ளையர்கள்னு கலவையான கூட்டம்.

ஜனனி: முழுக்கவே இண்டியன் காமெடியா?
தயா: இல்லை, அது ஒரு nerd-ஆக இருக்கறதைப் பத்தி. பொதுவா காமெடியில யாரும் அதைப்பத்திப் பேசறதில்லை. எங்க வீட்டுக் கதைகள் ஒண்ணு ரெண்டு சொன்னேன். வேற விஷயமும் இருந்தது.

ஜனனி: ஏதாவது ஒண்ணு சொல்லுங்களேன்...
தயா: கொஞ்சம் பழசுதான், சொல்றேன் கேளுங்க. "நான் ஒரு நெர்ட், அதுல எனக்குப் பெருமை. இந்த உலகத்தை நெர்டுகளே நடத்தினா நல்லா இருக்கும்னு தோணுது. உதாரணமா, என்ரான் பிரச்சனையே வந்திருக்காது. ஏன் தெரியுமா? தப்பான ஒரு நம்பரைப் பாத்தப்புறம் ஒரு நெர்டால உலகத்துக்கே அறிவிக்காம இருக்க முடியாது". அப்புறம் அலபாமா அனுபவம் சொல்வேன். நாங்க வித்தியாசமா இருக்கறதைப் பாத்துட்டு அவங்க எங்ககிட்ட வந்து, "ஓ, நீங்க இந்தியாவிலே இருந்து வந்தவங்களா? ஹிந்து மொழி பேசுவீங்களா?" அப்படீன்னு கேப்பாங்கன்னு அவங்க ஆக்ஸென்ட்லயே சொல்வேன். சதர்ன் பேப்டிஸ்ட் கலாசாரத்தில் மீண்டும் பிறத்தல் (born again) என்ற ஒரு கருத்து உண்டு. "எனக்கு அது தெரியும், ஹிந்துக்கள்தான் மீண்டும் மீண்டும் மீண்டும் பிறப்பவர்கள் ஆயிற்றே" என்று சொல்வேன். இப்படி எல்லாமே என் அனுபவத்தில் கண்ட உண்மைகளைச் சொன்னதனால் எடுபட்டது.

ஜனனி: சுவாரசியமா இருக்கே, மேலே சொல்லுங்க....
தயா: சின்ன வயசுல அம்மா சொல்ற பழமொழியெல்லாம் எனக்கு புரியாது. "அரச மரத்தைச் சுத்திட்டு அடி வயத்தைத் தொட்டுப் பாத்தா...?"ன்னு ஒண்ணு சொல்லுவாங்க. பொறுமையா இருக்கணும்னு அர்த்தம். ஐயையோ, மரத்தைச் சுத்தினா கர்ப்பமாயிடுவங்க போலன்னு சின்ன வயசுல நெனச்சுக்குவேன். "இடிச்ச புளி மாதிரி உக்காந்திருக்காதே"ன்னு சொல்வாங்க. "நான் இடிக்காத புளியே பார்த்ததில்லை, என்ன சொல்ல வர்றே"ன்னு கேப்பேன். "லேட்டஸ்ட்டா என்னைப்பத்தி என்ன ஜோக் சொல்றே?" அப்படின்னு அம்மா இப்ப என்கூட பேசும்போது கேப்பாங்க.

ஜனனி: வீட்ல தமிழ்தான் பேசுவீங்களா?
தயா: ஆமாம். இங்கே நெறய சொந்தக்காரங்க இருக்காங்க. எல்லாருக்குமே குழந்தைங்க தமிழ் பேசறது ரொம்ப முக்கியம். ஆனா நான் தமிழ் எழுதும்போது பிழைகள் இருக்கும். எங்கப்பாவை 'பாபு'ன்னு கூப்பிடுவாங்க. நான் எழுதும்போது 'பப்பூ'ன்னு எழுதுவேன். தமிழ் நாட்டுக்குப் போனால் நான் பேசற தமிழ் உதவியா இருக்கு. அங்கே எல்லாருமே இங்கிலீஷ் பேசறாங்க. ஆனாலும் தமிழ்ல பேச நல்லா இருக்கு.

என் தம்பி யேல் பல்கலையில பிஎச்டி பண்றான். அங்கே தமிழ்த் துறையில மொழியியலும் படிக்கிறான். 'தென்றல்'வந்தவுடனே எங்கம்மாவும் அப்பாவும் ஆளுக்கு ஒரு காப்பியை எடுத்துக்கிட்டு குறுக்கெழுத்துப் போடத் தொடங்கிடுவாங்க. ஒருத்தருக்கொருத்தர் விடையை கம்பேர் பண்ணிக்குவாங்க. அவங்களுக்கு அது ஒரு முக்கியமான வேலை.

அம்மா, அப்பா இங்கே எழுபதுகளில வந்தாங்களா, நான் இன்னமும் ரொம்பப் பழைய வார்த்தைகள்ளாம் பேசுவேன். என் ஃபிரண்டுகிட்ட ஒருதடவை எதையோ சொல்லப்போக, அவள் "யம்மாடி, அந்தப் பாடாவதி வார்த்தையை எம்ஜிஆர் 1954தான் கடசியாப் பேசினார்" அப்படீன்னு சொல்லி கேலி பண்ணினாள்.

ஜனனி: இந்தியாவுக்கு அடிக்கடி போவீங்களா?
தயா: போன வருஷம் போயிருந்தேன். மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் எல்லா இடத்திலயும் நெறய சொந்தக்காரங்க இருக்காங்க. எங்க வீட்டுக்கு வா, எங்க வீட்டுக்கு வான்னு ஒரே அன்புத் தொந்தரவு பண்ணிடுவாங்க. எனக்கு அந்தக் குடும்ப ஒட்டுதல் ரொம்பப் பிடிக்கும்.

ஜனனி: நல்லா சாப்பிடுன்னு சொல்லி விருந்து குடுக்கறது அவங்களுக்கு அன்பைக் காட்டற வழி, இல்லையா?
தயா: ஆமாம். போன வருஷம் ஆபீஸ் வேலையா போயிருந்தேன். நேபாளத்துக்கு போயிட்டு அப்புறம் இந்தியாவுக்குப் போனேன். அவங்க என்னை 4 நட்சத்திர, 5 நட்சத்திர ஓட்டல்ல தங்க வெச்சு உபசாரம் பண்ணிட்டாங்க. ரெண்டு வாரத்தில வகைவகையா சாப்பிட்டு வயிறு அப்செட் ஆயிடுச்சு. எங்கம்மாகூட போன் பேசும்போது, "நான் சொந்தக்காரங்க வீட்டுக்கு போவேன், ஆனா சாப்பிட முடியாது" அப்படீன்னு சொல்லி வச்சேன். எங்கம்மா சன்னிவேல்ல இருக்கற ரேவதி சித்திகிட்ட சொல்ல, அவங்க ஸ்கைப்புல ராதா அத்தைக்கு சொல்ல, என்னோட வயித்துக் கடுப்பு விஷயம் அண்ணா நகர், மயிலாப்பூர் எல்லா எடமும் பரவிடுச்சு! நான் யார் வீட்டுக்குப் போனாலும் "தொப்பை சரியில்லையா? இந்தா தயிர்சாதம், நார்த்தங்கா ஊறுகா"ன்னு போட்டு படுத்திட்டாங்க. பாருங்க டெக்னாலஜி எவ்வளவு அட்வான்ஸ் ஆனாலும் தமிழ்க்காரங்க அப்படியேதான் இருக்காங்க. (சிரிக்கிறார்).

ஜனனி: நிறையப் பிரயாணம் செய்வீங்களோ?
தயா: அமெரிக்கா முழுவதும் பயணம் போகிற அவசியம் இருக்கற வேலை என்னுடையது. கொஞ்சம் கஷ்டம்தான். ஏன்னா, ப்ளேன்லயோ ஹோட்டல்லயோ தான் எப்பவும் இருப்போம். அதுல ஒரு நன்மை என்னன்னா, நெறய சுவாரஸ்யமான நபர்களைச் சந்திக்க முடிவது. என் காமெடிக்கு விஷயம் கிடைக்குதே.

ஜனனி: காமெடி ஷோ பண்றதுக்காகப் பயணம் செய்யறதுண்டா?
தயா: ஆமாம். ரீனோ, நெவாடா, லாஸ் ஏஞ்சலஸ், தென்கலிஃபோர்னியா, சிகாகோ, நியூ யார்க், அட்லாண்டா மாதிரி இடங்கள்ள ஷோ கொடுத்திருக்கேன். கலிஃபோர்னியா பாசடேனாவுல ஒரு நிகழ்ச்சி தரப் போறேன்.

ஜனனி: இதற்கான தொடர்புகள் உங்களுக்கு எப்படி ஏற்படுது?
தயா: ஒரு ஷோவுக்குப் போனா அங்க வரவங்க பாத்துட்டு வேற எடத்துக்குக் கூப்பிடுவாங்க, அப்பிடித்தான். அட்லாண்டாஅவில என்னோட ஹைஸ்கூல் ஃபிரெண்ட்ஸ் சிலர் வந்தாங்க. நியூ யார்க் போனபோது காலேஜ் நண்பர்கள் சிலபேர் வந்திருந்தாங்க. பெற்றோர் தென்னிந்தியாவில இருந்து வந்தவங்களா இருந்தாலும், இந்த நாட்டுல எங்க போனாலும் பாக்க வரவங்களைச் சிரிக்க வைக்க முடியுதே!

ஜனனி: அதுல எங்களுக்கும் ரொம்பப் பெருமைதான். வாழ்த்துகள்.
தயா: நன்றி.

ஜனனி: உங்கள் ரோல்-மாடலா யாரைச் சொல்வீங்க?
தயா: பில் கோஸ்பி. இப்ப அவருக்கு வயசு 70, இன்னமும் அரங்கு நிறைஞ்ச காட்சிகள் செய்யறார். ஆபாசமில்லாத காமெடி. முழுக்க குடும்பத்தைப் பத்தினது. நல்ல கதைசொல்லி, மகத்தான முன்னோடி. எனக்கு ஆபாசமில்லாத, நம்பளோட அடிப்படைக் கலாசார மதிப்பீடுகளை இழக்காத காமெடி ரொம்ப முக்கியம்.

ஜனனி: எனக்கு ரொம்பப் பிடிச்ச பெண் காமெடியன் எல்லன் டிஜெனரஸ் (Ellen DeGeneres). அவருடைய தாக்கம் உங்களுக்கு உண்டா?
தயா: நிச்சயம். தான் யாருங்கறதுல பெருமிதம் உள்ள, அதைத் தவற விடாமலே முன்னுக்கு வந்த எல்லாப் பெண்மணிகளின் தாக்கமும் எனக்கு உண்டு. அவருடைய காமெடி எல்லா இடத்துக்கும் பொருந்தும், குடும்பத்தோட ரசிக்கலாம். மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்.

ஜனனி: மற்றொரு கருப்பினத்தவரான வாண்டா சைக்ஸ் (Wanda Sykes)?
தயா: அவரும் நல்ல காமெடியன். புகழ் பெற்று வரும் பெண் காமெடியன்கள் நிறைய இருக்கிறார்கள். சிலருடைய நகைச்சுவை எனக்கு ஒத்துவராதுன்னாலும், அவங்க பெறும் வெற்றி பெண் காமெடியன்களுக்கு நல்லதுன்னு நெனக்கிறேன்.

ஜனனி: இளையதலைமுறைக்கு ஏதாவது சொல்ல விரும்புறீங்களா?
தயா: "பெற்றோர் சொன்னதைக் காதில வாங்காதே. உனக்குப் பிடிச்சதைச் செய். நல்ல கல்லூரிக்குப் போய்ப் படின்னு அவங்க சொன்னா கேக்காதே. உன் இஷ்டப்படி செய்"னு நான் சொல்லுவேன்னு எதிர்பார்க்கலாம். நான் அதுக்கு நேரெதிரா சொல்லப் போறேன். நல்லா படிக்கறது ரொம்ப முக்கியம். கலைஞர் ஒவ்வொருத்தருக்கும் வியாபார ஞானம் இருக்கணும். எப்படி தன்னை மார்க்கெட் பண்ணிக்கிறதுன்னு தெரியணும். எனக்கு என் வணிகக் கல்வி ரொம்பப் பயனுள்ளதா இருக்கு. என் பெற்றோர்கள் ரொம்ப ஆதரவா இருந்தாங்க. 'நல்லாப் படியுங்க' என்பதுதான் இளைய தலைமுறைக்கு என் அறிவுரை.

டாக்டர், எஞ்சினியர், லாயர் ஆறதுதான் வெற்றி என்று இல்லை. கலைஞனாறதும், அரசியல்வாதி ஆறதும் கூட, கொஞ்சம் ரிஸ்க் இருந்தாலும், வெற்றிதான். இன்றைக்குக் கூட என் அப்பா அம்மாகிட்ட என் வாழ்க்கையில் எதைப்பத்தி வேணும்னாலும் சொல்ல முடியும். "நான் அப்பவே சொன்னேனே, கேட்டியா?"ன்னு உடனே புலம்ப மாட்டாங்க. "நீ கெட்டிக்காரி. உன்னை நம்பறோம். நீ செய்யறதுக்கு நாங்க துணையா இருப்போம். எப்ப வேணும்னாலும் வீட்டுக்கு வந்து ரசம் சாதம், கறமுது (பொரியல்) சாப்பிடலாம்" என்றுதான் அவங்க பேசுவாங்க.

ஜனனி: கிரேட். நம்பிக்கை என்பது ரெண்டு பக்கமும் இருக்கணும். சரி. இப்ப ஒரு சுவாரசியமான கேள்வி. தமிழ்ப் படங்கள் பாக்கறது உண்டா?
தயா: எப்பவாவது, அம்மாகூடப் போய் பாப்பேன். தமிழ் நாடகங்கள் பிடிக்கும். அதிலயும் க்ரேஸி மோகன் நாடகங்கள். சிலதை நான் சபாவில பாத்திருக்கேன். யூ-ட்யூபுல பாத்து, அதில இருக்கற நகைச்சுவையை ரசிக்கப் பிடிக்கும்.

ஜனனி: சில தமிழ்ப் படங்களில நல்ல காமெடி இருக்கே.
தயா: ஆமாமாம். அவங்களுக்கே தெரியாம அது வந்திடுது. இப்ப பாருங்க, ரஜனி படத்தில அவர் ஃபைட் பண்றாரு. ஒல்லிப்பிச்சான் மாமா ஒருத்தர் எட்டுப் பேரை அடிச்சுப் போட்டா அது தமாஷ்தானே.

ஜனனி: விவேக்?
தயா: எனக்கு சோவின் காமெடி பிடிக்கும். நல்ல நையாண்டி, குறிப்பா, அரசியல் நையாண்டி.

ஜனனி: உங்க ஷோவில தமிழ் ஜோக் சொல்வீங்க போல இருக்கே....
தயா: சின்ன பிரைவேட் ஷோவுல சொல்லுவேன். அதுல தமிழர்கள் இருப்பாங்க. அதை நான் இங்கிலீஷ்லயும் சொல்லும்போது மத்தவங்களும் ரசிப்பாங்க.

ஜனனி: உங்க ஷோவுல ஏதாவது தர்மசங்கடமான நிலைமை ஏற்பட்டதுண்டா?
தயா: பொதுவா இந்தியர்கள் வந்து நல்லா இருந்ததுன்னு சொல்லியிருக்காங்க. ஆனால் என்ன ஆகும்னா, சில பேர் என்கிட்ட நான் ஒரு ஜோக் சொல்றேன்னு தொடங்கி கடி ஜோக் சொல்லத் தொடங்கிடுவாங்க. கஷ்டப்பட்டு சிரிக்க வேண்டியிருக்கும்.

ஜனனி: மேடையில சமயோசிதமா ஏதாவது செய்வீங்களா?
தயா: எல்லா ஜோக்குமே முன்கூட்டித் தயார் செய்ததா இருக்கும். ஆனால், அப்படியே ஒப்பிக்க முடியாது. மேடையில இருக்கும்போது நடக்கும் ஏதாவது ஒரு தமாஷ் நிலைமையை உபயோகிச்சு டக்குன்னு சொல்லணும். ஒரு அரங்கத்தில பெர்ஃபார்ம் பண்ணினா, இதுதான் என் சரக்குன்னு கடைவிரிக்கணும். அதுவே ஒரு சிறு குழுவுல பண்ணினா, அங்க வந்திருக்கறவங்ககூட இன்டெராக்ட் பண்ண வேண்டியிருக்கும். அதுக்கு சமயோசிதம் வேணும்.

ஜனனி: இரண்டாம் தலைமுறை இந்திய அமெரிக்கர் நீங்க. அதைப்பத்தி என்ன நெனக்கிறீங்க?
தயா: நான் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவ. இந்தியாவுக்குப் போயிருக்கேன், ஆனால் அங்கே வசித்ததில்லை. என் அனுபவம் என்னன்னா, இந்த கலாசார சங்கமம் ரொம்ப சுவாரசியமானது. வீட்டோட வெளியே எங்கயாவது போகும்போது தேவைப்பட்டா எங்களுக்குள்ள தமிழ்ல பேசிக்குவோம், அது ஒரு ரகசியக் குறியீடு மாதிரி. வேற யாருக்கும் புரியாது.

இந்தியாவுடனான ஆன்மீகத் தொடர்பு எனக்கு உண்டு. நான் ஒரு வெஜிடேரியன். என் கலாசார வேர்கள் இந்தியாவில இருக்கு. ஆனால், நான் அமெரிக்காவில இருக்கறதனாலதானே ஸ்டேண்ட் அப் காமெடி செய்ய முடியுது? அரசியலிலும் தலை நுழைக்க முடிந்திருக்கிறது. இந்தச் சுதந்திரங்கள் எனக்கு ரொம்ப முக்கியம். அதனாலே அமெரிக்க வாழ்க்கையை நான் மிகவும் மதிக்கிறேன்.

ஜனனி: அரசியலில் என்ன செய்கிறீர்கள்?
தயா: போன வருஷம் பராக் ஒபாமாவை அதிபர் தேர்தலில் நிறுத்துவதற்கான டெமக்ரடிக் கன்வென்ஷனுக்கு எனக்கு அழைப்பு இருந்தது. ஜான் கெர்ரி, பில் கிளிண்டன், பராக் ஒபாமா இவங்களையெல்லாம் சந்திச்சிருக்கேன். பில் கிளிண்டன் கூட கல்வியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்திருக்கேன். சில உள்ளூர் அரசியல் முயற்சிகளிலயும் பங்கெடுத்துக்கறேன்.

ஜனனி: எதனால அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டது?
தயா: நான் MIT-யில படிச்சபோது எல்லாரும் சயன்ஸ், எஞ்சினியரிங் இதிலதான் கவனம் செலுத்தினாங்க. நான் மாணவர் நிர்வாகத்தில ஆர்வம் கொண்டேன். அப்புறம் கலிஃபோர்னியா வந்ததும் டெமக்ரடிக் அரசியல்ல ஈடுபட்டேன். எனக்கு வாழ்க்கையில கல்வி, குடும்பம், வாய்ப்புகள் எல்லாமே நிறைய கிடைச்சிருக்கு. அரசியல்ல ஈடுபடுவதன்மூலம் நான் சமுதாயத்துக்குக் கைம்மாறு செய்யலாம்னு என் உள்மனசு சொல்லிச்சு.

ஜனனி: ஓய்வு நேரத்தில என்ன செய்வீங்க?
தயா: வாரத்தில இரண்டு முறையாவது யோகாசனங்கள் செய்வேன். சமைக்கப் பிடிக்கும். நண்பர்களை அழைத்து விருந்து கொடுக்கப் பிடிக்கும். அரசியலுக்கு நேரம் ஒதுக்குவேன். நான் ஒரு nerd என்பதால் அறிவியல் எதாவது கற்றுக்கிட்டே இருப்பேன். எதாவது மியூசியத்துக்குப் போவேன். ஒரு புஸ்தகம் எழுதணும், இன்னும் வேளை வரலை.

ஜனனி: டிவியில என்ன செய்யறீங்க?
தயா: PBS-ல ஒரு ஷோ கொடுத்திருக்கேன். இன்னும் அதிக காமெடி ஷோ டிவியில பண்ணணும். அறிவுஜீவி விஷயங்களைச் சொல்லிச் சிரிக்க வைக்கும் டெலிவிஷன் ஷோ ஒண்ணு செய்யறது என் இலக்கு.

ஜனனி: நன்றி. வாழ்த்துக்கள்.

ஆங்கில உரையாடல்: ஜனனி நாராயணன்
தமிழ்வடிவம்: மதுரபாரதி

*****


தயா சொன்ன தமிழ் ஜோக்: ரொமாண்டிக் பாட்டி!
தயா: என் பாட்டி ஒருத்தங்க இருந்தாங்க. அம்மாவோட அம்மா. அவங்க அமெரிக்கா வந்த புதுசில, "அடியே, எனக்கு ஒரே ரோமான்டிக் பெயினா இருக்கு"ன்னு சொல்வாங்க. 'ரூமாடிக்'னு (Rheumatic) சொல்ல வராது. எங்கம்மா உடனே, "அப்படியா, உன் பாய் ஃபிரண்டைத்தான் கூப்படணும்" அப்படீன்னு கேலி பண்ணுவாங்க.

எங்க பாட்டி அம்மாவிடம் "ஏ ஹேமா! என்ன பண்றே"ன்னு கேட்டா, அம்மா, "நான் ஜிப்புலாக் பேக்ல ஜக்கினி போடறேன்" அப்படீம்பாங்க. ஏன்னா, என் பாட்டி, ஜிப்லாக்கை ஜிப்புலாக்கு, ஸுக்கினியை ஜக்கினி அப்படீன்னு சொல்வாங்க. இப்படி அம்மா ஏதாவது கிண்டலடிச்சுகிட்டே இருப்பாங்க. அது யாருக்கும் கஷ்டம் தராத காமெடி. வீட்டில இப்படி எதாவது தமாஷ் நடந்துகிட்டே இருக்கும்.

*****


தயா சொன்ன தமிழ் ஜோக்: அதைச் சாப்பிட்டா டிபனே வேண்டாம்!
ஒரு மாமி அமெரிக்காவுக்கு முதல் தடவையா வந்துட்டு போனாங்க. ஊர்ல சொந்தக்காரங்க எல்லாரும் அவங்களைப் பாக்க வந்தாங்க. "மாமி, மாமி, அமெரிக்காவில உங்க வெகேஷன் எப்படி இருந்தது"ன்னு கேட்டாங்க. அதுக்கு அந்த மாமி "ஐயோ அமெரிக்கா ரொம்ப கிரேட். அங்கே காலங்கார்த்தால 'பிரேக்ஃபாஸ்ட்'னு ஒண்ணு குடுப்பா. அதைச் சாப்பிட்டா டிஃபனே சாப்பட வேண்டியதில்லை"ன்னு சொன்னாங்களாம்.
- தயா

*****


இரண்டாம் தலைமுறையின் பார்வை
சமீபத்துல இந்தியாவிலிருந்து வந்தவங்க எங்களை 'அமெரிக்காவில் பிறந்த குழம்பிய தேசிகளாக (ABCD-American Born Confused Desi) நெனக்கறாங்க. எனக்குக் குழப்பமே கிடையாது. எனக்கு என் மதநம்பிக்கைகள், குடும்பப் பாரம்பரியம் எல்லாம் நல்லாத் தெரியும். அதையெல்லாம் தூக்கி எறிஞ்சுட்டோம்னு யாரும் நினைச்சா அது தப்பு.

இன்னொண்ணு சொல்றேன். இந்தியாவுல பலர் ஏழ்மைநிலையில இருந்தப்ப பார்த்திருக்கேன். இப்போ அவங்ககிட்ட, ஐபாட், கம்ப்யூட்டர், விடுமுறைச் சுற்றுலான்னு இங்கே நான் அனுபவிக்கற எல்லாத்தையும் அனுபவிக்கிறாங்க. அதே நேரத்துல, அங்கே சிகரெட், மது குடிக்கறது இதெல்லாம் அதிகமாயிட்டதைப் பார்க்கிறேன். இதுதான் நவீனம்னு அவங்க நெனக்கிறாங்க. இங்கே கலிஃபோர்னியாவுல நாங்க யாரும் புகைபிடிக்கறதில்லை. அமெரிக்கர்கள் யாரும் தினந்தோறும் போய்க் குடித்துக் கொண்டிருப்பதில்லை. இங்கே உடல்நலம் குறித்த விழிப்புணர்வு அதிகம். அமெரிக்காவில வெஜிடேரியனாக நான் இருக்கேன், அங்கே அவங்க ரொம்ப மாறிட்டாங்க.

மாடர்ன் இந்தியன்னா பணத்தைத் தண்ணியா இறைக்கறதுன்னு நெனக்கறாங்க. ஆனால், அமெரிக்காவில் ஒரு நவீன சிந்தனையுள்ளவன்னா மனித உரிமை, பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்க முயல்வது, கலைகளை வளர்ப்பது இதையெல்லாம் செய்யணும். அதுதான் உண்மையாவே நவீனமா இருப்பது.

- தயா

*****


www.dhayacomedy.com
More

பம்பாய் சகோதரிகள் சி. சரோஜா - சி. லலிதா
Share: 


© Copyright 2020 Tamilonline