எல்லாம் நல்லபடிதான் போறது.... ராசி அம்மான்ன இதுக்குத்தான்! மாமியாருக்குக் கடிதம்
|
|
|
|
|
சுகுணா திடுக்கிட்டு எழுந்தாள். காலை மணி ஆறேகால். ஊதுபத்தி வாசனை நாசிக்கு எட்டியது. "நேரமாயிடுச்சே" என அவசரமாக எழுந்ததவளுக்குச் சமையலறையில் தாளிக்கும் ஓசை கேட்டது.
"ஓ! அத்தை சமைக்க ஆரம்பிச்சுட்டாங்களா! இன்னிக்கு சனிக்கிழமைதானே கொஞ்சம் நேரம் கழித்து சமைத்தால்தான் என்ன! குழந்தைகள் இன்னும் எழுந்திருக்கக் கூட இல்லை.சனிக்கிழமைனாலும் இவங்களுக்காகச் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டியதாக இருக்கிறது. இதுக்குதான் தனிக்குடித்தனம் போகணும்ங்கறது" எனச் சிறிது எரிச்சலோடு மனதில் புலம்பிக்கொண்டே குளியலறைக்குள் சென்றாள்.
சுகுணா குளித்து முடித்து ஹாலுக்கு வந்தபோது மாமனார் தமிழ் பேப்பரைப் புரட்டிக் கொண்டிருந்தார். ரகு ஜாகிங் போய்விட்டு வந்து கீழே உட்கார்ந்து இங்கிலீஷ் பேப்பர் படித்துக்கொண்டிருந்தான். சுகுணாவின் காலடிச் சத்தம் கேட்டதும், ரகு "சுகுணா, கௌதம் மேனனோட 'பார்த்தேன் பரவசமானேன்' படம் தேவி தியேட்டரில் போட்டிருக்கிறான். இன்னிக்கு சாயங்காலம் போகலாம். பாக்கணும்னு சொன்னியே" என்றான். சுகுணாவின் கண்கள் சந்தோஷத்தில் ஒளிர்ந்தன.
சுகுணாவின் மாமியார் ரகுவிடம் காபியை நீட்டியபடி, "தம்பி, இன்னைக்குப் பெருமாள் கோயிலில் விசேசம். நாம எல்லோரும் கோயிலுக்கு போலாம். நாளைக்கு நீங்க சினிமாவுக்குப் போங்க" என்றார்.
சுகுணாவுக்கு நொடியில் புரிந்து போயிற்று இன்றைக்கு சினிமாவிற்கு போக முடியாதென்று. கண்களில் ஏமாற்றம் தெரிந்தது. "சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேத்திக்கவாவது தனிக்குடித்தனம் போகணும்" எனத் தோன்றியது அவளுக்கு.
"இல்லம்மா, ஜாகிங் போகும்போது ரவியைப் பாத்தேன். அவன் சாயங்காலம் குடும்பத்தோட படம் போறதுக்கு டிக்கெட்டு புக் பண்ணியிருந்தானாம். வீட்டுக்கு தீடீர்னு விருந்தாளிகள் வந்துட்டாங்களாம், அதனால போகமுடியாது. நீ வாங்கிக்கிறயான்னு கேட்டான். சரின்னு சொல்லி வாங்கிட்டு வந்துட்டேன்மா. எனக்குப் பெருமாள் கோவில் விசேசம் ஞாபகத்துல இல்ல. இருந்திருந்தா வாங்கியிருக்க மாட்டேன்" எனச் சிறிது வருத்ததுடன் சொன்னான்.
"பரவாயில்லை, தம்பி. அடுத்த வாரம் கோயிலுக்குப் போய்க்கலாம்" என்று சொன்ன மாமியார் தன் கணவனின் கண்களில் சிறிது எமாற்றம் தெரிந்து மறைந்ததைக் கவனிக்கத் தவறவில்லை. சில வருடத்துக்கு முன்வரை ரகு சொந்த வீட்டிலிருந்துதான் தினமும் ஒரு மணி நேரம் பயணித்து வேலைக்கு வந்துக்கொண்டிருந்தான். தான் வேலை செய்யும் இடத்திலேயே குவார்ட்டர்ஸில் இடம் கிடைத்தவுடன் அப்பா அம்மாவைத் தன்னுடன் வந்திருக்கக் கேட்டுக்கொண்டான். அவர்களும் ரெட்டைப் பேரக்குழந்தைகள் கைக்குழந்தைகளாக இருப்பதால் ஒத்தாசைக்காகச் சொந்த வீட்டை விட்டு இங்கு வந்துவிட்டார்கள். குவார்ட்டர்ஸிலேயே எல்லா வசதிகளும் இருந்தன. ஆனால் வெளியில் போக வேண்டுமானால் புது இடம் என்பதால் ஆரம்பத்தில் ரகுதான் அழைத்துப் போவான். நாளடைவில் அதுவே பழக்கமாகிவிட்டது. ரகுவும் வெளியில் கூட்ட நெரிசல் அதிமாகிவிட்டதால் அவர்களைத் தனியாகப் போக அனுமதிப்பதில்லை. இதோ இங்கு வந்து மூன்று வருடங்களூக்கு மேல் ஒடிவிட்டது.
பல வாரம் கழித்து ஒரு நாள் இரவு ரகு சாப்பிட்டுவிட்டுத் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் சேனலை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தான். பக்கத்தில் உட்கார்ந்திருந்த தாய்க்குத் தெரியாதா தன் மகனின் மனநிலையை பிரதிபலிக்கும் செயல்கள்.
"என்ன தம்பி, ஏதாவது ஆபீஸ்ல பிரச்சனையா?"
"இல்லம்மா, நம்ம வீட்டுல வாடகைக்கு இருக்காங்கல்ல அவங்க வேற ஊருக்கு மாற்றலாகிப் போறாங்களாம். அடுத்த மாசம் வேற ஆடி மாசம். யாரும் வீடு மாத்த மாட்டாங்க. அதான் என்ன பண்ணறதுன்னு யோசிக்கிறேன்"
"தம்பி, அம்மா சொல்லறத கோபப்படாம கேக்கிறீயா?"
"என்னம்மா?"
"நானும் அப்பாவும் அங்க போய் இருக்கிறோமே" என நிதானத்துடன் தன் மகனின் முகத்தை ஆழ்ந்து நோக்கியபடி சொன்னாள்.
தன் மனைவி அம்மாவின் மனம் புண்படும்படி எதாவது சொல்லியிருப்பாளோ என நினைத்துச் சட்டென்று கோபத்துடன் சுகுணாவைப் பார்த்தான். அவன் பதில் சொல்ல யத்தனிக்கும் முன்பு அம்மா இடைமறித்தாள். "ஏன் தம்பி அவளப் பாக்கற. நாங்க ஏதாவது சொன்னா அவதான் காரணம்னு நீயே சந்தேகிச்சு வார்த்தைகளைக் கொட்டறது நியாயமில்லை. உன் பேச்சு எங்களுக்குள்ள இருக்கிற நல்லுறவைத்தான் முறிக்கும்" எனச் சொல்லியபடி ஆறுதலாக மருமகளைப் பார்த்தாள்.
"சரிம்மா, இப்ப ஏன் தனிக் குடித்தனம்? என்ன குறை உங்களுக்கு?" ரகுவின் குரலில் கோபம் தெறித்தது.
"குறையொண்ணும் இல்ல தம்பி. ஆனா நிறைவு இல்லை. அப்பாவும் நானும் அந்த வீட்டில் இருவத்தி அஞ்சு வருசம் வாழ்ந்தோம். அக்கம்பக்கம் எல்லோரையும் தெரியும். நல்லா பழக்கமானவங்க, அப்பாவுடன் வேலை செஞ்சவங்க எல்லாம் அங்கதான் இருக்கிறாங்க. இங்க பேச்சு துணைக்குக்கூட அப்பா வயது ஒத்தவங்க அவ்வளவா யாரும் இல்லை. மகன் வீட்டுக்கோ மகள் வீட்டுக்கோ இங்கே வரவங்க சில மாசம் தங்கிட்டுப் போயிடறாங்க. படிச்ச பேப்பரையே படிச்சுகிட்டு, விட்டத்தைப் பாத்தபடி ஈஸிசேர்ல அப்பா உக்காந்திருக்கறதைப் பாக்கும்போது கஷ்டமாக இருக்கு தம்பி. பொம்பளைங்களுக்கு வயசானலும் இடமாற்றம் அவ்வளவாக பாதிக்காது. ஆனா ஆம்பிளங்களுக்குக் கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும்." |
|
"அதுக்குத்தானேம்மா வாரவாரம் எங்கவாவது கூட்டிக்கிட்டு போறேன்."
"எங்களுக்காக நீ மெனக்கிடும் போது கஷ்டமாக இருக்கு தம்பி. மருந்து வாங்கறதா இருந்தாலும் நீதான் செய்யற. ஆனா அந்த ஊர் அப்பாவுக்கு அத்துப்படி. எல்லா இடத்துக்கும் போய் வந்துவிடுவார். வயசான பிறகு வேலைகளை முடிந்தளவு தானே செய்துகொள்ளும் பொழுது மனம் நிறைவா இருக்கும் தம்பி." "அதுக்காக எப்படிம்மா தனியா இருக்க விடமுடியும்?"
அதற்கு மெல்லிய புன்னகையுடன், "தம்பி நீ காலேஜுக்கு பெங்களுர் போகும்போது எங்களுக்கு இருந்த கவலைதான் இப்போது உனக்கு. ஆனா அப்போதிருந்த உன் மனநிலையை யோசிச்சுப்பார். மனிதனுக்கு சிறிது சுதந்திரம் இளமைக்காலத்துல மட்டுமல்லாமல் எல்லா கால கட்டத்திலேயும் தேவை தம்பி."
"என்ன சுகந்திரம் நம்ம வீட்டில் இல்லம்மா? பெரிய வார்த்தையா சொல்லிறீங்களே!"
"பெரிய வார்த்தை இல்ல தம்பி. முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய வார்த்தை. சுதந்திரம் இல்லன்னு சொன்னா கட்டுப்பாடு விதிக்கிறாய் என்று சொல்றேன்னு அர்த்தம் எடுத்துக் கொள்ளக் கூடாது. தன் மனசு நினைத்ததை மத்தவங்களுக்கு இடையூறு இல்லாமல் செய்ய முடியாததும் சுதந்திரம் இல்லைன்னுதான் அர்த்தம். எல்லாத்துக்கும் உன்னைச் சார்ந்து இருக்க வேண்டியதாக இருக்கு. உனக்கு வேறு வேலைகள் இருப்பதால் உன்னால் எங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாதபோது நீ வருத்தப்படறே. சில சமயம் நீ வெளியே போறது எங்களால தடைப்பட்ட எங்களுக்கு வருத்தமா இருக்கு."
"என்னம்மா செய்யச் சொல்ற? அப்பா அம்மாவைத் தனியாக இருக்க வைப்பது தப்பில்லையா?"
"கடமையைச் செய்யணும் அதே நேரம் நடைமுறைக்கு ஒத்துவருமான்னு பார்க்கணும். என் மாமியார் காலத்தில் கூட்டுக்குடும்பம் நடைமுறைக்கு ஒத்துவந்தது. ஏன்னா தலைமுறை இடைவெளி அவ்வளவாக இல்லை. அவங்க எண்ணங்களும் செயல்களும் ஒரே மாதிரி இருந்தது. ஆனா இப்போ காலம் மாறிட்டுது. சின்னவங்களுக்கு நிறைய வேலை, பொறுப்புகள் அதிகமாய்ட்டுது. சமுதாயமும் மாறிட்டுது. சில மணி நேரத்துல பல விசயங்களைச் செய்யலாம். வேகத்திற்கும் நிதானத்திற்கும் உள்ள இடைவெளி இப்பொது தலைமுறைகளுக்குள் வந்துவிட்டது. யதார்த்தம் புரிஞ்சு எந்தத் தலைமுறையும் மத்தவங்களைத் தன் கட்டுக்குள் வைக்க முனையாமல் இருப்பது நல்லது. அதற்கு உறவுகளுக்குள் சிறிது இடைவெளி தேவை. அதற்குத் தனிக்குடித்தனம் உதவுமானால் நடைமுறைப் படுத்துறது நல்லதுதானே?"
தன்னை ஆச்சரியதுடன் பார்க்கும் மகனைப் பாசத்துடன் பார்த்து, "எங்கேயும் போயிடலையே. நம்ம வீட்டுக்குத்தானே போறேன் தம்பி" என்றாள். சுகுணா தன் மாமியாரை மரியாதை கலந்த ஆச்சரியத்துடன் புதிதாகப் பார்த்தாள்.
சாரதா ரமேஷ், ஆண்டோவர், மாசாசூஸட்ஸ் |
|
|
More
எல்லாம் நல்லபடிதான் போறது.... ராசி அம்மான்ன இதுக்குத்தான்! மாமியாருக்குக் கடிதம்
|
|
|
|
|
|
|