Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
கேட்டவரம் (நாவலிலிருந்து ஒரு பகுதி)
- அநுத்தமா|அக்டோபர் 2010|
Share:
கண்களிலே ஆனந்தம் மிளிர்ந்தது ருக்மிணிக்கு. அவள் மேல்மாடியிலிருந்து உலர்ந்த துணிகளை எடுக்கச் சென்றாள். அன்றெல்லாம் அவள் கனவு கண்டுகொண்டிருந்த சந்தர்ப்பம் அப்பொழுது வாய்த்தது. மொட்டைமாடியில் உலர்ந்த துணிகளை எடுத்து வைத்துவிட்டு, மூன்றாவது வீடாகிய ராமபத்திர ஐயங்காரின் வீட்டின் பக்கம் தன் பார்வையைச் செலுத்தலானாள்.

அவர்கள் வீட்டு மாடி ஜன்னலில் வாசுதேவனின் தலைமட்டும் தெரிந்து கொண்டே இருந்தது. அதாவது, அவன் ஜன்னலில் உட்கார்ந்து உட்புறம் பார்த்தவாறு யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான். அவனுடன் பேசிக் கொண்டிருந்தவர் யார் என்று அவளுக்குத் தெரியவில்லை. ஒரு கணமேனும் அவன் திரும்பிப் பார்க்க மாட்டானா என்று ஆவலுடன் எதிர்பார்த்தவளாய், அவள் தன் கால் கொதிப்பதைக் கூடப் பாராட்டாது, தலை வெடிப்பதைப் பொருட்படுத்தாது தவம் கிடந்தாள்.

வாசுதேவன் சிரித்தான். தலையை ஆட்டினான். கையை விரித்தான். ருக்மிணி அவனது ஒவ்வொரு சைகையையும் விடாது கண்கொட்டாமல் பார்த்து வந்தாள்.

"ருக்கு! அடீஇ, ருக்கூ!" என்று யாரோ தன்னை அழைப்பதைக் கேட்டு, அவள் போக மனமில்லாமல், "இதோ வருகிறேன்" என்று கூவிக் கொண்டே கீழே சென்றாள்.

"எதற்கடி அப்படி இரைந்தாய்? என்ன வந்து விட்டது உனக்கு?" என்று அவளுடைய தாய் கேட்டாள்.

ருக்மிணி, தான் வழக்கத்தை விட இரைந்துதான் பதில் சொல்லி விட்டாள் என்பதை அறிவாள். எதற்காக அவ்வாறு செய்தாள் என்பது அவள் மனத்திற்கு அல்லவோ தெரியும்? இருந்தாலும் தன்னுடைய தாய் கேட்கும்போது அவளால் நிர்மலமாக இருக்க முடியவில்லை. முகம் கோவைப்பழம் போல் மாறிவிட்டது.

"இல்லை, அம்மா. ஒரு துணி அந்தண்டை ஓட்டின் மேல் விழுந்து விட்டது. அதை எடுக்கப் பிரயாசைப் பட்டேனா? நீ கூப்பிட்டதும் காதை அடைத்துக் கொண்டது. சற்றுப் பலமாகவே கத்தி விட்டேன் போலிருக்கிறது" என்று பதில் அளித்தாள்.

"போலிருக்கிறதாமே, போலிருக்கு! காக்காய் ’கர்ர்’ என்றதாம், அகமுடையானை அப்பாடா என்று கட்டிக் கொண்டாளாம்! அதிசயந்தான் போ!"

ருக்மிணி சிரித்துக் கொண்டு பேசாமல் இருந்து விட்டாள். அவளுடைய தாய் மிக அடக்கமான பெண்மணி. உரத்த குரலில் பேச மாட்டாள். பண்டை நாகரீகத்தில் ஊறினவள். முப்பது வருஷம் போல கராச்சியில் இருந்தவள். நம் நாட்டுப் பழக்கவழக்கமும், தான் யுவதியாக வடக்கே சென்றபோது இருந்த கட்டுத் திட்டங்களும் மனத்தை விட்டு அகலாத பேர்வழி. அவற்றில் விடாத பற்றுக் கொண்டவள். இந்நாட்களில் தன் தாயகமாகிய தமிழ்நாட்டில் எவ்வளவோ சுதந்தரமும் கட்டுத்தளர்வும் ஏற்பட்டிருப்பது அம் மாதின் உள்ளத்தில் பதியவே இல்லை. யாரேனும் தன்னை, ஊரை விட்டுப் போனவள், நம் பழக்க வழக்கம் தெரியாமல் பெண்ணை வளர்த்திருக்கிறாள் என்று கூறி விடுவார்களோ என்ற பயம் அவள் மனத்தில் சதா உறுத்திக் கொண்டே இருக்கும். தன் பெண் வடநாட்டில் பிறந்தவள். சுயேச்சையாக நடக்கிறாள், அடக்கமற்றவள் என்று பெயர் எடுக்கக்கூடாது என்ற எண்ணத்தில் அவளை ஓயாமல் கண்டித்துக்கொண்டே இருப்பாள்.

ருக்மிணி ஒரே பெண். அம்மாவிடம் அபாரப் பிரேமையும் பக்தியும் கொண்டவள். தாய்க்கேற்ற அடக்கமான பெண். அவளுக்குப் பெயர் சுமுகி என்றே வைத்திருக்க வேண்டும். ஒருபொழுதும் அவள் வதனம் புன்முறுவலைத் தவிர பிறிதொன்றை அறியாது.

"நல்ல சப்பரம் போல் உட்கார்ந்து விட்டாயே! அந்தத் துணிகளை எடுத்தாயா இல்லையா? குரங்கு வந்து தூக்கிக்கொண்டு போய்விடப் போகிறது" என்று அவள் தாய் கேட்டதும் ருக்மிணி விழித்துக் கொண்டாள்.

"மறந்தே விட்டேனே! இதோ எடுத்து வருகிறேன்" என்று கூறிக்கொண்டே அவள் சிட்டுக் குருவிபோல் மாடிப்படி ஏறிப் பறந்தாள்.

மூச்சு முட்ட அவள் பழைய இடத்திற்கு வந்து, மீண்டும் வாசுதேவன் இருக்கும் வீட்டின் பக்கம் பார்வையைச் செலுத்தினாள். அவன் இப்பொழுது அந்த அறையில் எதிர்புறத்தில் இருக்கும் பெரிய பீரோவின் முன், கண்ணாடியில் பார்த்தவாறு தலையை வாரிக் கொண்டிருந்தான். சற்றுத் தூரத்தில் ஒரு நாற்காலியில் மாயா ஒரு புத்தகத்தை ‘தொப்’பென்று போட்டுவிட்டு வாசுதேவனிடம் ஏதோ சொன்னாள். பிறகு அவள் அகஸ்மாத்தாகத் திரும்பிப் பார்த்தபோது, மூன்றாவது மாடியில் ருக்மிணி வெயிலில் கடுந்தவம் புரியும் காட்சி கண்ணில் பட்டது. அவள் கண்கள் அகல விரிந்தன.

"மாமா, ஜன்னல் வழியாக அந்தப் பக்கம் பாருங்கள், சற்று" என்று அவள் கூறினாள்.

சீப்பும் கையுமாகத் திரும்பினான் வாசுதேவன். ருக்மிணி தன் அகன்ற கண்களை விரித்துத் தான் இருக்கும் திக்கை நோக்கிக் கொண்டு நிற்பது அவனுக்குத் தெரிந்தது.

அவன் சட்டென்று ஜன்னல் அருகில் வந்து ருக்மிணியைப் பார்த்து தன் முழு ஆனந்தமும் விளங்க, பெரிய புன்னகையில் பல்லெல்லாம் காட்டினான். மாயா இந்தக் காதல் நாடகத்தைப் பார்த்துக்கொண்டே நின்றாள்.

வாசுதேவன் தன்னைப் பார்த்து நேரே சிரித்ததும், ருக்மிணி திடுக்கிட்டவள் போல் மருண்டு, பிறகு அச்சமுற்றுத் திரும்பி ஒரே எட்டில் குதித்துக் கீழே ஓடி விட்டாள். அந்தச் சமயத்தில் ரோஜா இதழ்களின் நடுவே முத்துச்சரம் தோன்றி மறைந்தது போன்ற ஒரு பிரமைதான் வாசுதேவனின் நினைவிற்கு எட்டிற்று.

"மாயா, ருக்மிணியைப் பார்த்தாயா?" என்று கேட்டான் வாசுதேவன்.

"ஏன் மாமா, நான் பார்த்துத்தானே உங்களுக்குச் சொன்னேன்?"

"ஆமாம் ஆமாம். அவள் எப்படி இருக்கிறாள்?"

"பரவாயில்லை, கிராமத்துப் பெண்களுக்கு அழகாகத்தான் இருக்கிறாள்" என்று மாயா தன் அபிப்ராயத்தை ஒளிக்காமல் சொல்லி விட்டாள்.

"நகரத்தின் செயற்கை அழகைக் காட்டிலும், கிராமத்தின் இயற்கை அழகு விசேஷம் அல்லவா? தெள்ளத் தெளிய ஓடும் ஆற்று நீரின் ருசி, புட்டியில் அடைத்திருக்கும் சோடாத் தண்ணீருக்கு வருமா? இரவிலே வளைந்தும், நெடுகவும் பரவிச் செல்லும் காட்டுத் தீயின் சௌந்தரியம், மின்சார விளக்குத் தொடருக்கு உண்டா? எங்கள் பர்வத மலையின் கம்பீரம், இருபத்தைந்து மாடி கட்டிய அமெரிக்க வீடுகளுக்கு என்றாவது வருமா? என்று பாதி கேலியாகவே அவளுக்கு விடையளித்தான் வாசுதேவன். ஆனால் அவனுடைய இருதயத்துக் கொடியில் மாயாவின் இகழ்ச்சியான வார்த்தை ஒரு சிறு வடுவை ஏற்படுத்தி விட்டது. அது அநியாயம் என்று அவனது அந்தராத்மா கூக்குரலிட்டது.

மாயா, வாசுதேவனை நோக்கினாள். மிகவும் புத்திசாலியான அவள், தன் பேச்சு அவனை வேதனைப்படுத்தி விட்டது என்று ஒரு நொடியில் அறிந்து கொண்டாள். ஆனால் சிறு பெண்ணின் இயல்புக்கேற்ப, தான் சொன்னதில் ஒன்றும் தப்பில்லை என்றே வாதித்தது அவள் மனம்.

வாசுதேவன் சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே சென்று விட்டான். சிறிது நேரத்திற்கெல்லாம் கார் புறப்படும் ஓசை கேட்டது.
ருக்மிணி கண் மறைவாக ஓடி விட்டாளே தவிர, கீழே இறங்கி வரவும் அவள் மனம் இடங்கொடுக்கவில்லை. தன் நிலைமையையும், முகத்தையும் ஒருவாறு சமாளித்துக் கொண்டே கீழே போக நினைத்தாள். படபடப்பு அடங்கின பிறகு அவள் மெதுவாக இறங்கிச் சென்றாள்.

"எங்கேடீ? குரங்கு கொண்டுபோய் விட்டதா? என்ன அது, ரவிக்கையா, சட்டையா, துண்டா?" என்று அவளுடைய தாய் கேட்ட பிறகுதான், வெறுங்கையாகத் திரும்பிய ருக்மிணிக்குத் தான் சொல்லிவிட்டு மறுபடியும் மாடிக்குச் சென்ற காரணம் நினைவிற்கு வந்தது. அவள் திருதிருவென்று விழித்தாள்.

"என்னடி ஆடு திருடின கள்ளனைப் போல் விழிக்கிறாயே!" என்று அன்னை மறுபடியும் கண்டிக்க ஆரம்பிப்பதற்குள், வாசுதேவனின் சிறிய தாயாகிய ரங்கநாயகி அம்மாள் ருக்மிணிக்குச் சிபாரிசு செய்ய முன்வந்தாள்.

"எதற்கம்மா, குழந்தையைக் கண்டித்தபடி இருக்கிறாய்? மாடியில் அவளுடைய தாத்தா ஏதாவது புத்தகம் வைத்திருப்பார். இந்த வருஷம் வைதேகி கூட வர முடியாமல் போய்விட்டதால், அவளுக்குக் கூடமாட பேசக்கூடத் துணையில்லை."

ருக்மிணி எதற்கும் பதில் சொல்லவில்லை. அருகே இருந்த கனகாம்பரப் புஷ்பங்களைச் சரமாகத் தொடுப்பதில் முனைந்தாள் அவள்.

மூன்றாம் வீட்டில், மாயா தன் மனச்சாட்சி குறுகுறுவென்று உபத்திரப்படுத்துவதை அடக்கிக் கொண்டாள். வாசுதேவ மாமா தன்னிடம் சகோதரனுக்கும் மேல் அன்பு வைத்துத் தன்னை இங்கு அழைத்து வந்திருக்க, அவர் மனம் சிறிது கிலேசமடையச் செய்து விட்டோமே என்று அவள் எண்ணினாள். ஆயினும், அதற்காக ருக்மிணியை ஓர் அழகுராணி என்று ஒப்புக் கொள்ளவும் அவள் தயாராக இல்லை. அவள் ஒருவிதத்தில் அழகுதானோ என்னவோ, ஆயினும் வாசுதேவ மாமாவைக் கண்டதும் அவள் புலியைக் கண்ட மானைப் போல் துள்ளிக் குதித்து ஓடியது வெறும் வடிகட்டின பட்டிக்காட்டுத்தனமே என்று மாயா திடமாக நம்பினாள்.

"நாளைக்கு மணந்து கொள்ளப் போகிறவர் அவர். அவருடன் குடும்பம் நடத்திப் பல விஷயங்களைப் பற்றிப் பேசி, அலசி, அபிப்பிராய பேதப்பட்டு, ஒளிவு மறைவின்றி, சகஜமாக நடக்கப் போகிறவள் இவள். இதில் வெட்கம் என்ன இருக்கிறது? அவரைப் பார்க்க வேண்டும் என்று ஒரு நாழிகையாக வெயிலில் காத்துக் கொண்டிருக்கிறாள். வெயிலில் முகமெல்லாம் சுட்ட கத்திரிக்காயைப் போல வதங்கிப் போயிருந்தது. அவர் நேராகப் பார்க்கப் போனதும் ஓடுவானேன்? இது வெளி வேஷந்தானே? இதுதான் நாகரிகமற்ற தன்மை என்கிறேன். வெளிப்பூச்சு, பண்பற்ற தன்மை!" என்று அடித்துப் பேசினாள் மாயா, மல்லிகாவைக் கண்டபோது.

"வெட்கம். அவள் சற்று சங்கோஜப்படுவாள்"

"வெட்கம் எதற்கு என்று கேட்கிறேன். கணவன் என்று வரித்துவிட்ட பிறகு, அவனுடன் பேச என்ன சங்கோஜம். இதெல்லாம் நாடகம் என்றே நான் அபிப்பிராயப்படுகிறேன்" என்று மாயா தன் பிடியைத் தளர்த்தாமலேயே பேசினாள்.

"மாயா, இப்பொழுது வாயை விடாதே. நாளைக்கு உன் கல்யாணத்தில் பார்ப்போம். நீ எப்படி தைரியமாகப் பேசுகிறாய் என்று" என்று மல்லிகா தான் பெரியவள் என்ற தோரணையில் சொன்னாள்.

"பார்ப்போமே! அதெல்லாம் நான் ஒன்றும் ஓடி ஒளிந்து கொண்டுவிட மாட்டேன். பயமா என்ன? அகமுடையானும் ஒரு மனிதன் தானே? பேய், பிசாசையா நாம் மணந்து கொள்ளப் போகிறோம்?"

மல்லிகா மெல்ல நகைத்து விட்டு, மாயாவின் முதுகில் தட்டிக் கொடுத்தாள். "பேஷ், நீ நன்றாக ஜமாய். எனக்கு மட்டும் கடிதம் எழுத மறந்துவிடாதே!"

"என்னைக் கேலி செய்கிறீர்கள் அல்லவா?"

"சே, சே. அப்படியொன்றும் இல்லை"

மாயாவுக்கு இந்த மனிதர்களில் யாருடைய மனப்பான்மையையும் புரிந்து கொள்ள முடியவில்லை. வரும்பொழுது வழியெல்லாம் வேடிக்கையாகப் பேசிக் கொண்டு வந்த ராஜாமணி, இப்பொழுது இவர்கள் இருக்கும் பக்கமே வரவில்லை. மல்லிகாவும், வாசுதேவனுடனும் மற்றவர்களுடனும் வெகு சரசமாகப் பேசி வந்தாள். இங்கே அவளும் அவர்கள் இருக்கும் பக்கமே நாடவில்லை. ஒரு வருஷமாகக் குடியில்லாத வீட்டைச் செப்பனிடுவதிலும், மெழுகிப் பெருக்குவதிலுமே அவள் தன் பொழுதைக் கழித்தாள். அவர்களும் பிரத்தியேகமாக மல்லிகாவைத் தேடிக்கொண்டு ஒரு நாளேனும் அவள் வீட்டிற்கு வரவில்லை.

இந்த ஊருக்கு வரும்போது, இந்தப் பிரயாணம் கலாசாலையில் எல்லா மாணவ, மாணவிகளும் சேர்ந்து போகும் உல்லாச யாத்திரை போல் இருக்கும் என்று நினைத்திருந்தாள் மாயா. இங்கோ, ஸ்ரீ ராமபஜனை ஒரு கல்யாணம் போல இருந்தது. அதற்கு யாவரும் வேலை செய்வதும், ஏற்பாடு செய்வதுமாக இருந்தனர்.

காலையில் ஏதோ தமாஷாக இருந்தாலும், அவள் மனம் ஸ்ரீ ராமபஜனையில் லயிக்கவில்லை. தூரத்திலிருந்து தெரியும் மாந்தோப்பும், ஏரிக்கரையும், குன்றுகளும் அவளை ’வா, வா’ என்று அழைத்தன. வேடிக்கையாகப் பேசி ரசிக்கக் கூடிய மனிதர்களுடன், கட்டுச்சாதமும் எடுத்துக் கொண்டு போய், உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. அதனால் இங்கு யாவரும் பஜனையை முக்கியமாக வைத்துக் கொண்டிருப்பது அவளுக்குச் சற்றும் ரசிக்கவில்லை.

"பேசாமல் வாசு மாமாவுடன் கிளம்பி வேலூர் வரை போகாமல் போனேனே! அப்படியே நம் அகத்துக்கும் போய் விட்டிருந்தால் என்ன? இங்கு ஒன்றும் சுகமாக இல்லை" என்று பலவாறு யோசித்துக் கொண்டே அவள் படுத்திருந்தாள்.

வாசுதேவனின் மாமி, அவள் தனியாக இருக்கிறாளே என்று அங்கு வந்தாள். ஏதோ சிந்தித்தவளாய், கண்களைத் திறந்தவாறே படுத்திருந்த மாயாவைப் பார்த்து அவள், "மாயா வருகிறாயா, ஓர் ஆட்டம் பல்லாங்குழி ஆடுவோம்?" என்று அழைத்தாள்.

மாயாவுக்கு அப்பொழுது அவள் இருந்த நிலையில் ஆட்டத்தில் மனம் ஓடவில்லை. "லேசாகத் தலை வலிக்கிறது, மாமி" என்று காரணம் கூறிவிட்டுத் தட்டிக் கழித்தாள் அவள்.

"பாவம்! நேரங்கழித்த சாப்பாடு; இந்த இரைச்சலும் கூப்பாடும் உனக்கு வழக்கம் இல்லை. படுத்துக் கொள். காபி போட்டதும் எழுப்புகிறேன்" என்று அவளை அன்புடன் உபசரித்தாள் அந்த அம்மாள். உடனே ஏதோ நினைத்துக் கொண்டவள் போல், "தலைவலிக்குத் தைலம் கொடுக்கட்டுமா, மாயா?" என்று கேட்டுக் கொண்டே, மாமி மாயாவின் அருகில் வந்து உட்கார்ந்தாள்.

"வேண்டாம், தானே போய்விடும்" என்று சுருக்கமாகப் பதில் சொன்னாள் மாயா.

சிறிதுநேரம் மௌனமாக இருந்தார்கள் இருவரும். பிறகு மாயா, மாமியைப் பார்த்து, "ஏன் மாமி, இந்தப் பத்து நாட்கள் போய் விட்டால் அப்புறம் இந்த ஊரில் கலகலப்பே இருக்காதோ?" என்று கேட்டாள்.

"முன்பெல்லாம் அப்படித்தான். இந்தப் பத்து நாட்களும் ஊர் ’ஜே ஜே’ என்றிருக்கும். அதற்குப் பிறகு ஒரு நான்கு நாட்கள், பத்து நாட்களாக எச்சில் இலையை ருசி பார்த்த நாய்கள் தெருவில் ஓடும். அதற்கப்புறம் அவைகளும் நின்று விடும்.

"இப்பொழுது மட்டும்?"

"இப்பொழுது என்ன குறைச்சல்? முன்பெல்லாம் குச்சு வீடுகள் இருந்த இடத்தில் இப்பொழுது மாடி வீடுகள் எழும்பி விட்டன. எங்கள் ஊர்ப் பிள்ளைகள் முன்பெல்லாம் திரவியம் தேட வெளியூர் போய் விடுவார்கள். இங்கு வீடுகள் காலியாகக் கிடந்து கீலமாகிக் கொண்டிருந்தன. இப்பொழுது இரண்டு மூன்று வீட்டுப் பிள்ளையாண்டான்கள் விவசாயம் படித்து விட்டு இங்கேயே குடியிருக்கிறார்கள். அவர்களால் ஊரில் எல்லா நிலங்களுக்குமே நல்ல பயன்."

"அப்படிப்பட்டவர்கள் இங்கே யார் இருக்கிறார்கள்?"

" சில பெரியவர்கள் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு இங்கேயே வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்களில் ஒருவர் வேங்கடரமண ராவ் என்பவர். அவருடைய பிள்ளை இருக்கிறான் கிருஷ்ணா ராவ். கோடியகத்து வீரராகவையர் இருக்கிறார். அவருடைய பிள்ளை ஒருவன் இருக்கிறான்; மல்லிகார்ஜுனன் என்று பெயர் அவனுக்கு. இந்த வருஷத்திலிருந்து ராஜாமணியின் தம்பியும் ஊரோடு வந்துவிடப் போகிறான்"

"வீரராகவையர் யார்? கோவிலில் புல் பிடுங்கிக் கொண்டிருந்தாரே அவரா?" என்று கேட்டாள் மாயா, பாதி எகத்தாளமாக.

"ஆமாம். அப் பெரியவர்தான்"

மாயா மேலும் ஊராரைப் பற்றிக் கேட்டுக் கொண்டே போனாள். இப்பொழுது ஒவ்வொரு வீட்டிலும் பத்துப் பேர்களுக்கு மேல் கூடியிருந்தனர். இதில் யார் ஊர்க்காரர்கள் யார் வெளியூர்க்காரர்கள் என்று அவளுக்குக் கண்டுபிடிக்க முடியவில்லை.

"வெளியூர்களிலிருந்து நிறைய ஜனங்கள் வந்திருக்கிறார்களோ?"

"ஆமாம், நிறைய வருவார்கள். அக்கம் பக்கத்துக் கிராமங்களாகிய புதூர், வேங்கடம் பாளையம், எலத்தூர், மூலக்காடு, கடலாடி எல்லா இடங்களிலிருந்தும் வருவார்கள். இதைத் தவிர மைசூர் முதலிய சம்ஸ்தானங்களிலும், பம்பாய், டெல்லி முதலிய தூர ஊர்களிலும் இருக்கும் எங்கள் ஊர்ப் பிள்ளைகள் தங்களுக்குத் தெரிந்த படிப்பாளிகள், சங்கீத வித்வான்கள், வேறு நண்பர்கள் எல்லோரையும் அழைத்து வருவார்கள். தூரத்திலுள்ள கிராமங்கள் நகரங்களிலிருந்தும் அநேகர் வருவார்கள்."

மாயா வாய் திறவாது அம்மாள் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். இத்தனை பேர்கள் படித்தவர்கள், நாகரீக வாழ்க்கையில் ஆழ்ந்திருக்கிறவர்கள் இவர்கள் அனைவரும், பெரிய காரியமாகத் தங்கள் வேலையையெல்லாம் விட்டுவிட்டு, ரஜா வாங்கிக் கொண்டு வந்து நடத்தும்படி அப்படி என்ன இருக்கிறது இந்தப் பஜனையில் என்று அவள் நினைத்தாள். "எல்லா ஊர்களிலுந்தான் உற்சவம் செய்கிறார்கள். இந்த ஊரிலும் இருக்கிறது." இந்த எண்ணம் அவள் வாயிலிருந்து ஒரு கேள்வியை வெளிப்படுத்தியது.

"இந்த ஊரிலே காட்டீசுவரன் கோவில், பெருமாள் கோவில், விசுவநாதர் ஆலயம், மாரியம்மன் கோவில் என்று ஏகப்பட்ட கோவில்கள் இருக்கின்றனவே? இவற்றோடு நில்லாமல் பர்வத மலையில் மல்லிகார்ஜுனர், நட்சத்திரக் குன்றில் சுப்பிரமணியர், மலைக்கோவிலில் வேங்கட ரமணர், அருகே போளூரில் வேறு ஒரு மலைக்கோவில் இத்தனை இருந்தும் இங்கே ஏனோ ஒரு பஜனை மடம்?"

"ஐம்பது வருஷமாக நடந்து வருகிறது. யாரும் இதுவரை அதைப் பற்றி இப்படிக் கேட்கவில்லை." என்று அந்த அம்மாள் சொல்லும் போது, அவள் குரலில் ஒரு சிறு கோபம் தொனித்ததுபோல் பட்டது மாயாவுக்கு. விருந்தாளியாக வந்து இறங்கியிருக்கும் வீட்டில் தான் அவர்கள் மனம் நோக நடப்பது அழகல்லவென்று நினைத்தவளாய் அப்பேச்சை அத்துடன் நிறுத்திக் கொண்டாள் மாயா.

"மாமி, பொழுது போவதற்கு என்ன செய்வீர்கள்? தினமும் ஒரே மாதிரித் தனிமையில், மலைகளுக்கு நடுவே காலந்தள்ளுவது கஷ்டமாக இல்லையா?"

"வழக்கந்தான் காரணம், அம்மா. எங்களுக்குப் பட்டணங்களுக்குப் போனால் ஓயாத ஓசையும் நான்கு சுவர்களுக்கு நடுவே நாள்பூராவும் அடைபட்டுக் கிடப்பதும் கஷ்டமாக இருக்கின்றன. உங்களுக்கு இங்கே குடிகொண்டிருக்கும் நிசப்தம் தொந்தரவாக இருக்கிறது."

"அங்கேயெல்லாம் மனத்தைக் கவரப் பலவித விஷயங்கள் இருக்கின்றன. உடல் வேண்டுமானால் ஒரே நிலையில் இருக்கும். மனசு ஒரு நிமிஷம் சலனமற்று இருக்காது, பெரிய ஊர்களிலே!"

"இருக்கலாம். ஆனால் அது லாகிரி வஸ்துவை உண்பது போன்றது. இது பசும்பால் குடிப்பது போன்றது. கறந்த பசும்பாலும் ஆற்று நீரும் எருமைத் தயிரும் புத்துருக்கு நெய்யுமாக உண்டு பழகிய எங்கள் நாக்கு, பிரபுக்களைப் போன்றது. நகரங்களில் கலப்படமான போலி உணவைத் தொட அது ஒருநாளும் ஒவ்வாது. இயற்கை அழகிலும் வாழ்க்கையிலும் பழகிய எங்கள் மனம் அச்செயற்கை வாழ்வில் ஒரு சுகமும் காணாது" என்று அந்த அம்மாள் பெருமையாகக் கூறினாள்.

மாயா கேட்க நினைத்தது வேறு. அந்த அம்மாள் கிராம வாழ்க்கையின் மேன்மையைப் பற்றியும் நகர வாழ்க்கையின் தாழ்வைப் பற்றியும் தாங்கியும், தாக்கியும் பேச ஆரம்பித்தவுடன் மாயா மறுபடியும் பேச்சை மாற்றினாள்.

"படிக்கப் புத்தகங்கள் கிடைக்குமா? நிறையப் படித்தவர்கள் இருக்கிறார்களே" என்று கேட்டாள் மாயா.

"படிப்பு பலவிதத்தைச் சேர்ந்தது. எது வாஸ்தவமான படிப்பு என்பதை நீ சொல்லுகிறாயோ, அதை ஒட்டித்தான் அதற்குப் பதில் சொல்ல முடியும்" என்று பதில் வந்தது.

தான் எங்கே இழை தப்பிவிட்டோம் என்று மாயாவுக்குத் தெரியவில்லை. அந்த அம்மாளுக்குச் சிறிது அதிருப்தியை அளித்து விட்டோம் என்று மட்டும் அவள் அறிந்தாள்.

வாசுதேவ மாமாவுடன் போகாமல் போய்விட்டோமே என்று மறுபடியும் அவள் மனம் வருந்தினாள். போயிருந்தால் இந்தச் சிறு மனத்தாங்கல்கள் உண்டாகியிருக்காதல்லவா? பொழுதும் போகவில்லை. மாமா இருந்தாலாவது எங்கேயாவது அழைத்துப் போகச் சொல்லலாம்.

அவளது பலத்த யோசனையில் மாமி எழுந்து சென்றதைக் கூட அவள் கவனிக்கவில்லை. நேரத்தைப் பிடித்து தள்ளினவளாய் அவள் வாசுதேவனின் வரவுக்காக ஆவலுடன் காத்திருந்தாள்.

அநுத்தமா
Share: 




© Copyright 2020 Tamilonline