|
|
|
அது ஒரு அழகான கிராமம். அதன் தெரு ஒன்றில் இரண்டு நாய்கள் வசித்து வந்தன. உண்டு கொழுத்துத்த அந்த நாய்களுக்கு அந்த வழியில் செல்லும் வாகனங்களைத் துரத்திக் கொண்டு ஓடுவதும், ஆடு, மாடுகள் அந்தத் தெருவுக்குள் நுழைந்தால் விரட்டி அடிப்பதும்தான் வேலை.
இவற்றின் குரைத்துக் கொண்டு துரத்தும்போது ஆடுமாடுகள் மிரண்டு ஓடும். அதைப் பார்த்து மகிழ்ந்து, தம்மைத் தாமே மிக உயர்வாக நினைத்துக் கொண்டன இந்த நாய்கள். "நம்மைக் கண்டு இந்த மிருகங்கள் மிரள்கின்றன. நாம் பெரிய வீரர்கள்" என்று அவை நினைத்தன.
ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiagarajan
ஒருநாள் நாய்கள் வசித்த தெருவுக்கு அடுத்த தெருவில் சாலைப்பணி நடந்து கொண்டிருந்தது. வழக்கமாக அந்த வழியில் செல்லும் ஜமீந்தாரின் குதிரை, நாய்கள் இருக்கும் தெரு வழியாக வந்தது. அழகாக அலங்காரம் செய்யப்பட்டு, மணிகள் ஒலிக்க கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தது குதிரை. கூடவே குதிரை ஓட்டி நடந்து வந்து கொண்டிருந்தான். குதிரையை அதுவரை அந்த நாய்கள் பார்த்ததில்லை. மேலும் அதன் பெரிய உருவத்தைக் கண்டு அவற்றுக்குச் சற்று பயமாக இருந்தது. ஆனாலும் வழக்கம்போல் குதிரையின் இருபுறமும் குரைத்தபடியே ஓடி, அதைத் துரத்தத் தொடங்கின. |
|
நாய்கள் கடித்து விடுமோ என்று பயந்த குதிரையோட்டி குதிரையை வேகமாக நடத்திச் செல்ல முற்பட்டான். அதனால் குதிரை ஓட்டமும், நடையுமாய் விரையலாயிற்று. தங்களைக் கண்டு பயந்துதான் அவர்கள் விரைவதாக நினைத்த நாய்கள், வெற்றிக் களிப்பில் இன்னமும் அதிகமாகக் குரைத்துக் கொண்டே வேகத்துடன் துரத்தத் தொடங்கின.
அவ்வளவுதான். குதிரைக்கு மிகுந்த கோபம் வந்து விட்டது. சடாரென ஓட்டத்தை நிறுத்தி, தனது இரண்டு கால்களையும் உயர்த்தி நாய்களை உதைத்தது. குதிரை வேகமாக உதைத்ததில் ஒரு நாய் மரத்தின் மீது மோதிக் கீழே விழுந்தது. மற்றொரு நாய் சாக்கடைக்குள் போய் விழுந்தது. இரண்டிற்கும் பயங்கரக் காயம். ஒன்றால் குரைக்கவே முடியாத அளவுக்குத் தொண்டை பழுது பட்டுவிட்டது. மற்றொன்றிற்கோ நடக்க முடியாத அளவு கால்களில் அடி.
இனிமேல், நம்மைவிட பலம் வாய்ந்தவர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பதுதான் நல்லது என்று நினைத்த நாய்கள், காயத்திற்கு மருந்து தேடி அருகில் உள்ள தோட்டத்தை நோக்கிச் சென்றன.
சுப்புத்தாத்தா |
|
|
|
|
|
|
|