Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நலம்வாழ | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதை பந்தல் | பொது | சினிமா சினிமா | முன்னோட்டம் | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சாதனையாளர் | நினைவலைகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
பரிசு
நடந்தாய் வாழி!
- அனுஷா|ஜூலை 2010||(1 Comment)
Share:
மதியத்திலிருந்து முணுமுணுவென்று ஆரம்பித்த தலைவலி கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்து விட்டது. வீட்டிற்குப் போய்க் கொஞ்சநேரம் கண்மூடிப்படுத்துக் கொண்டால் தேவலை என்றிருந்தது. மணி வேறு ஐந்தாகி விட்டது என்று நினைத்துக் கொண்டே இருக்கையிலிருந்து எழுந்தாள் சௌம்யா.

இவள் கிளம்புவதை பாலாஜியும், கீதாவும் ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருப்பது நன்றாகவே புரிந்தது. சட்டென்று ஏற்பட்டச் சலிப்பைச் சமாளித்துக் கொண்டே வெளியே வந்தாள். என்ன மனிதர்கள் இவர்கள், எத்தனைதான் மாங்கு மாங்கென்று உழைத்துக் கொட்டினாலும் ‘இன்னும் இன்னும்’ என்று எதிர்பார்த்து உறிஞ்சும் அதிகாரிகளோடு பணிசெய்வது எவ்வளவு கொடுமை.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



அவள் வீட்டைத் திறந்து உள்ளே நுழைகையில் சப்தம் கேட்டு அம்மா திரும்பி முகம் மலர்ந்தாள்.

“என்ன... இன்னிக்குச் சீக்கிரமெ வர முடிஞ்சதா... பரவாயில்லயே!” என்றவள், “மத்யான்னம் சாப்பிட்டயா, போன் பண்ணிக் கேட்கணும்னு இருந்தேன்” என்றாள்.

அம்மாவுக்கு ’ம்’ என்ற பதிலைச் சொல்லிவிட்டு அடுத்த அறைக்குச் சென்றாள் சௌம்யா.

“காபி தரட்டுமா சௌம்யா” என்று கேட்ட அம்மாவுக்குத் திரும்பவும் ‘ம்’ என்று சொல்லிவிட்டு உடையை மாற்றிக் கொண்டாள்.

அம்மா, இனிக்கு வாக்கிங் வேணாம்மா. எனக்குக் கொஞ்சம் டயர்டா இருக்கு. நாளைக்குக் கண்டிப்பா போகலாம். என்ன சரியா, ஒரு ரவுண்ட் எக்ஸ்ட்ராவாகவே போகலாம்.
அம்மா நீட்டிய காபியைக் குடிக்கையில்தான் அம்மா கான்வாஷ் ஷூவெல்லாம் போட்டுக் கொண்டு வாக்கிங் செல்லத் தயாராய் இருப்பது புரிந்தது. சென்ற சில நாட்களாய் அம்மாவைத் தினமும் சாயங்கால வேலைகளில் வாக்கிங் கூட்டிச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். சென்னையில் அம்மா தினசரி நடைப்பயிற்சி செய்யாமல் இருக்க மாட்டாள். அந்தப் பழக்கம் இங்கு வந்ததால் தடைப்பட வேண்டாம் என சௌம்யாவும் தினசரி மாலை வேலைகளில் அவர்களது காம்ப்ளெக்ஸைச் சுற்றியுள்ள நடைபாதையில் நடைபழகுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள்.

ஆனால் இன்றைக்கிருக்கும் தலைவலியில் அது முடியாது போலிருந்தது. ஆனால் தலைவலி என்று சொன்னாள் அம்மா அநாவசியமாகக் கவலைப்படுவாள்.

“அம்மா, இனிக்கு வாக்கிங் வேணாம்மா. எனக்குக் கொஞ்சம் டயர்டா இருக்கு. நாளைக்குக் கண்டிப்பா போகலாம். என்ன சரியா, ஒரு ரவுண்ட் எக்ஸ்ட்ராவாகவே போகலாம்”

“டயர்டா இருக்கா... ஏன்?... அப்பவே நெனச்சேன். முகமே சரியில்லையேன்னு... உடம்புக்கு ஏதாவது... “

“அம்மா உடம்புக்கு ஒண்ணும் இல்லே. ஜஸ்ட் டயர்டா இருக்கு. அவளோதான். ஆபிசில கொஞ்சம் ஒர்க் ஜாஸ்தி அதான்.”

“அப்படியா... அப்ப நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. நல்ல வேளையா ரசம் பண்ணி வெச்சிருக்கேன். சூடா சாப்பிட்டா இதமா இருக்கும். சீக்கிரமா சாப்பிட்டு வேணா தூங்கு”

“சரிம்மா... ஆனா இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சுச் சாப்பிடறேன்... இப்பக் கொஞ்ச நேரம் டி.வி.பார்க்கலாம் வா...”

சில நொடிகளுக்குப் பிறகு அம்மா இருப்புக் கொள்ளாமல் தவிப்பது போலத் தெரிந்தது.

“சௌமி... இஃப் யூ டோண்ட் மைண்ட்... நான் வேணா ஒரு வாக் போய்ட்டு வந்துடட்டுமா”

சௌம்யாவுக்குச் சுள்ளென்று கோபம் வந்தது.

“தனியாவா... நோ... ஒருநாள் வாக்கிங்க் போகலேன்னா ஒண்ணும் குடிமுழுகிப் போயிடாது.”

சில நொடிகளுக்குப் பிறகு அம்மாவின் ஈனஸ்வரக் குரல் திரும்பவும் கேட்டது.

“மத்தியான்னம் கொஞ்சம் லேட்டா வேற சாப்பிட்டேனா... கொஞ்சம் ஹெவியா ஃபீல் பண்றேன்... அதான் கொஞ்சம் போல நடந்துட்டு வந்தா பரவால்லன்னு இருக்கு”

“அம்மா கொஞ்சம் புரிஞ்சிக்கோயேன், ப்ளீஸ். எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. என்னாலே...”

“நீ வரணும்னு நான் சொல்லல்லே... நானே போயிட்டு வந்துடறேன்னு... நாமதான் தினசரி போய் எனக்கு நன்னா பழக்கமாயிடுத்தே.. அதான்..”

கெஞ்சுவது போலக் கேட்கும் அம்மாவைப் பார்க்கையில் பாவமாக இருந்தது. நாள் பூராவும் வீட்டில் அடைந்து கிடப்பது போலக் கிடக்கிறாள். இந்தச் சின்ன விஷயத்தைக் கூட மறுப்பது நியாயமில்லைதான். ஆனால் அவளைத் தனியாக அனுப்பவும் பயமாக இருக்கிறது.
“என்ன யோசிக்குறே சௌம்யா. நான் ஜாக்ரதையா போயிட்டு ஜாக்ரதையா வந்துருவேன். ப்ளீஸ் டோண்ட் ஒர்ரி. ஒரு மாசமா உன்கூட வந்து இந்த இடமெல்லாம் எனக்குப் பழகியாச்சு. ஸோ... நான் கம்ஃபோர்டபிளா போய்ட்டு வந்துருவேன். ஓகே...”

சௌம்யா தயக்கத்துடன் சம்மதித்தாள்.

“ஓகேம்மா.. ஆனா ஒரு கண்டிஷன். ஜஸ்ட் ஒரே ஒரு ரவுண்ட்தான் போகணும்”

“ஓகே” என்று சொன்ன அம்மா சில நொடிகளுக்குப் பிறகு, “ துவரம்பருப்பு வாங்கணும்னு சொன்னேனே. வாக்கிங் வேணா அந்தப் பக்கமா போய் ஸ்பைஸ் வாலிலே... எல்லாம் ஒரே டிஸ்டன்ஸ் தானே...”

சௌம்யா சட்டென்று கத்தினாள். “அம்மா... அந்த ஐடியால்லாம் இருக்குன்னா நீ கிளம்பவே வேணாம். இந்தக் காம்ப்ளெக்ஸைச் சுத்தி ஸைட் வாக்குல நடக்கறதுன்னா போ... இல்லாட்டி வேணாம். ரோடைக் கிராஸ் பண்றது, இன்டியன் ஸ்டோர்ஸுக்குப் போகுறதுன்னா பேச்சையே எடுக்காதே”

“ரோடைக் க்ராஸ் பண்றது மெட்ராஸை விட இங்கேதான் ஸேஃப். ஸிக்னல் பார்த்துக் கிராஸ் பண்ணினா பயமேயில்லையேன்னுதான் கேட்டேன்.”

“அம்மா... ப்ளீஸ் டோண்ட் ஆர்க்யூ.. திஸ் இஸ் சான்ஹோஸே... இந்த இடம் பத்தி உனக்குத் தெரியாது”

“ஓகே... உன்னை எதுக்குக் காபரா பண்ணனும். இந்தக் காம்ப்ளெக்ஸைச் சுத்தியே நடந்துட்டு வந்துடறேன்” என்று சொல்லி அம்மா கிளம்பினாள்.

“திரும்பவும் சொல்றேன் கேட்டுக்கோ அம்மா. ரோடைக் கிராஸ் பண்ற ஐடியாவை விட்டுரு. சீக்கிரமா காம்ப்ளெக்ஸைச் சுத்திப் போனமா வந்தமான்னு இருக்கணும்... அப்புறம் எதிர்க்க வர்ற இண்டியன்ஸை எல்லாம் பார்த்துச் சிரிச்சிண்டு நின்னு தமிழா, தெலுங்கான்னு குசலம் விசாரிச்சிட்டு இருக்கக் கூடாது. சரியா...”

அம்மா மண்டையாட்டுகையில் பாவமாகத் தான் இருந்தது. இருந்தாலும் வேறு வழியில்லை போனவாரம் அம்மாவை அந்தக் குட்டையருகே வாக்கிங் கூட்டிப் போனது நினைவுக்கு வந்தது. அங்கே அந்த வனிதாவையும் அவள் அம்மாவையும் ஒரு மரியாதைக்காக அறிமுகம் செய்யப் போக, அம்மாவால் எப்படித்தான் அவர்களோடு அட்டைப்போல ஒட்டிக் கொள்ள முடிந்ததோ தெரியவில்லை. அம்மாவைப் பிரித்து இழுத்துத்தான் வரவேண்டியிருந்தது.

வாக்கிங் செல்கையில் எதிர்ப்படும் இந்திய முகங்களைக் கண்டால் அம்மாவுக்கு முகம் மலர்ந்து விடும். பார்வையைத் தவிர்க்க அவர்கள் முயன்றால் கூட அம்மா அவர்களை வலுக்கட்டாயமாகப் பார்த்துச் சிரிப்பாள்.

அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டே இன்னமும் நின்று கொண்டிருக்கும் அம்மாவைப் பார்க்கையில் சங்கடமாக இருந்தது.

கடைக்குள் நுழைந்து அவசர அவசரமாக ஒரு சுற்றுச் சுற்றி.... அங்கும் அம்மாவைக் காணாது.. திரும்பவும் வெளியே வந்து வண்டியில் ஏறி... அவளுக்குச் சட்டென்று உடலெல்லாம் குப்பென்று வியர்ப்பது போல இருந்தது.
“சரிம்மா... நான் சொன்னதையெல்லாம் ஞாபகம் வச்சுக்க. சீக்கிரமா ஒரு ரவுண்ட் போயிட்டு வந்துரு”

“சரி... அந்த வெளிக்கதவு திறக்குற சாவி வேணுமே... அதைக் கொடுக்கறியா...”

நல்லவேளையாக அம்மா கேட்டாள் என்று நினைத்துக் கொண்டே சாவிக்கொத்திலிருந்து அந்தச் சாவியை உருவி அம்மாவிடம் கொடுத்தாள்.

”அப்புறம் உன் செல்போனையும் மறக்காம எடுத்துக்கோ” என்று சொன்னாள்.

அம்மா கிளம்பிச் சென்றதும் சோபாவை பின்னுக்குச் சாய்த்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள்.

சட்டென்று விழிப்பு வந்து, மணியைப் பார்க்கையில் மணி ஏழரை ஆகியிருந்தது.

“கடவுளே. ஒருமணி நேரமாகவா தூங்கி விட்டேன்... அம்மா வேறு இன்னமும் வீடு திரும்பவில்லையே... ஒரு ரவுண்ட் போய் வந்தால் மாக்ஸிமம் அரைமணி நேரம்தானே ஆக வேண்டும். இரண்டாவது ரவுண்டும் போகலாம்னு இருக்காளா?.. அப்படியெல்லாம் சொன்னதை மீறி ஒண்ணும் செய்ய மாட்டாளே... இருட்ட வேற ஆரம்பிச்சாச்சு... இதுக்கு மேல அங்க தனியா வாக் பண்றது சேஃப் இல்லையே!”

சௌம்யா சட்டென்று எழுந்தாள். உடம்பெல்லாம் சூடானது போல இருந்தது. வெளியே பார்க்கிங் ஏரியாவுக்கு வந்து காரில் ஏறி ஸ்டார்ட் செய்தாள். அம்மா நடந்திருக்கக் கூடிய அந்தப் பாதையில் கண்களை ஓடவிட்டுக் கொண்டே மெதுவாக காரைச் செலுத்தினாள்.

ஒரு சுற்று முடிந்ததும் அம்மாவின் உருவம் எதிர்ப்படாததால் அடிவயிற்றில் மெல்லப் பயம் எழுந்தது. பாதையில் ஒன்றிரண்டாக விரையும் கார்களைத் தவிர மனித வாடையே இல்லை. எங்கே போய் விட்டாள் இந்த அம்மா....?

துவரம் பருப்பு என்றெல்லாம் சொன்னாளே.. ஒருவேளை... ஸ்பைஸ் வாலி போயிருப்பாளோ... இந்த எண்ணம் எழுந்ததும் அவள் வண்டியைத் திருப்பி சாரடோகா பக்கம் வளைத்து அந்த ப்ளாசாவில் நிறுத்தி.. அந்தக் கடைக்குள் நுழைந்து அவசர அவசரமாக ஒரு சுற்றுச் சுற்றி.... அங்கும் அம்மாவைக் காணாது.. திரும்பவும் வெளியே வந்து வண்டியில் ஏறி... அவளுக்குச் சட்டென்று உடலெல்லாம் குப்பென்று வியர்ப்பது போல இருந்தது.

இருக்கும் பதட்டத்தில் அம்மாவை செல்போனில் கூப்பிடலாம் என்ற எண்ணம் கூட இல்லாது போய்விட்டதே என்று தனக்குள் கடிந்து கொண்டே செல்போனுக்காகத் துழாவுகையில்... செல்போனை வீட்டிலேயே வைத்து விட்டு வந்தது தெரிந்தது. கடவுளே... ஏன் எல்லாம் தப்பாகவே போகிறது என்று நொந்து கொண்டே வீட்டை நோக்கி விரைந்தாள். முதல்வேலையாக அம்மாவை செல்போனில் கூப்பிட வேண்டும். விபரம் தெரிந்து கொண்டு, அடுத்து என்ன ஸ்டெப் எடுப்பது என்பது பற்றி யோசிக்கலாம். எங்கே மாட்டிக் கொண்டிருக்கிறாளோ...

வீட்டுக்குச் செல்கையில்.... வாசல் அருகே அங்கே நிற்பது யார்... அம்மாவா?... சட்டென்று மனம் லேசாகிப் போனாலும் ஒரு கோபமும் எழுந்தது.

“என்னம்மா... ஒரு ரவுண்ட் வாக்கிங் போயிட்டு வர்ற அழகா இது?”

அம்மா பதில் ஒன்றும் பேசாமல் அவள் கதவைத் திறந்து உள்ளே போகும் வரை காத்திருந்தாள்.

“தலைவலின்னு சொன்னியே இப்ப எப்படி இருக்கு... அதோட வெளில போயிட்டு வந்தியா...”

சௌம்யா கோபத்தில் கத்தினாள். “ஒரு ரவுண்ட் வாக் போயிட்டு வர்றேன்னுட்டு ஒன்றரை மணிநேரம் கழிச்சு வர்றே. எனக்கு டென்ஷனைக் கொடுத்திட்டு ஏம்மா இப்படி அலைக்கழிக்குறே... ஒருநாள் வாக்கிங் போகல்லேன்னா என்ன குடிமுழுகிடும்”

”சௌம்யா. நான் சொல்றதைக் கொஞ்சம் நிதானமாகக் கேளு. நான் ஒரு ரவுண்ட்தான் வாக்கிங் போனேன். முடிச்சுட்டு வந்து வெளிக்கதவைத் திறந்து பார்த்தா திறக்கவே முடியலை. எவ்வளவோ தடவை திறந்து பார்த்தேன். அப்புறமா பெரிய கேட்டுக்கிட்ட போய் நின்னுட்டே இருந்து ஒரு கார் உள்ளே போகும்போது சட்டுனு உள்ளே நுழைஞ்சேன். அப்புறம்.. இந்த அபார்ட்மென்ட் வெளிக்கதவையும் அந்தச் சாவியால திறக்க முடியலை. ரெண்டு கேட்டுக்கும் ஒரே சாவிதானே... அப்புறம்... யாரானும் உள்ளே போய் வர்றாளான்னு பார்த்துண்டு வெளிலயே காத்துக் கொண்டிருந்தேன். இனிக்குன்னு பார்த்து யாரும் உள்ளேயும் போகலே. வெளியிலயும் வரலை. உன்னைச் செல்போனில் கூப்பிட்டுப் பார்த்தேன். உன் கிட்டயிருந்தும் ரெஸ்பான்ஸ் இல்லையா... ரொம்பக் கவலையாப் போச்சு... தலைவலின்னும் சொன்னியே.. உடம்பு எப்படி இருக்கோன்னு தவிச்சிண்டே இருந்தேன். அப்புறமா ரெண்டு, மூணு பேர் வெளில வந்தப்போ கூட சட்சட்டென்னு கதவைச் சாத்திட்டாளா எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல்லே... முன்ன பின்ன தெரியாதவாள் கிட்டல்லாம் எதையாவது கெஞ்சினா உனக்குப் பிடிக்காதே... சரி, கொஞ்ச நேரம் வெயிட் பண்ணலாம்.. நான் கூப்பிட்டது பார்த்து நீயே ரெஸ்பான்ஸ் பண்ணுவேன்னு நெனைச்சு வெயிட் பண்ணினப்போ வனிதாவும் அவ அம்மாவும் வந்தா. அவ உள்ளே வந்தபோது நானும் உள்ளே வந்தேன். கதவை தட்டித் தட்டிப் பார்த்தேன். என்னடா இது... அசந்து தூங்குறாளான்னு நெனச்சிக்கிட்டிருந்தப்போ நல்ல வேளையா இந்தப் பக்கமா நீ வந்துட்டே....”

அம்மா சொல்வதைக் கேட்டுக் கொண்டே அம்மா நீட்டிய சாவியை வாங்கிப் பார்த்தாள் சௌம்யா... ஓ காட்... இது ஆபிஸ் ட்ரா சாவியில்லையா... அவசரத்தில் இதை உருவிக் கொடுத்து... இத்தனை அமளிக்கும் நான் தான் காரணமா... அம்மாவைப் போய் அநாவசியமாகக் கரித்துக் கொட்டினேனே...

“ஸாரிம்மா.. அவசரத்தில் சாவியைக் கவனிக்காம...”

“இட்ஸ் ஓகே. நீதான் தலைவலியோட அலையும்படி ஆயிடுத்து. சரி, பரவால்லை வா. ரசத்தைச் சூடு பண்றேன். கொஞ்சம் சாப்பிட்டுட்டுப் படுத்துக்கோ...” சொல்லி விட்டு கிச்சனுக்குள் புகுந்தாள் அம்மா.

அனுஷா,
சான்ஹோஸே, கலி.
More

பரிசு
Share: 




© Copyright 2020 Tamilonline