|
|
|
ஒரு அடர்ந்த காடு. மதிய நேரம். இரவு கண் விழித்து இரை தேடிய களைப்பில் ஆந்தை ஒன்று தனது கூட்டில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தது. பிற பறவைகள் எல்லாம் இரைதேடி வெளியே சென்றிருந்தன. அப்போது அங்கே மரங்கொத்திப் பறவை ஒன்று வந்தது.
சற்று நேரம் அமைதியாக இருந்த மரங்கொத்தி, தனது அலகால் ஆந்தை வசித்த பொந்து இருந்த மரத்தைக் கொத்த ஆரம்பித்தது. அவ்வப்போது உரத்த குரலில் ஒலி எழுப்பியது.
ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiagarajan
டொக் டொக்கென்று மரத்தைக் கொத்தியதும், மரங்கொத்தியின் குரலும் ஆந்தையின் தூக்கத்துக்கு மிக இடையூறாக இருந்தன. ஆந்தை மரங்கொத்தியிடம் வேறு மரத்திற்குச் செல்லும்படிக் கூறியது. மரங்கொத்தியோ அதை லட்சியம் செய்யாமல் தன் வேலையைத் தொடர்ந்ததுடன், தொடர்ந்து கூவியது.
ஆந்தைக்குக் கோபம் அதிகமானது. ஆனாலும் அதை அடக்கிக் கொண்டு மரங்கொத்தியை மீண்டும் ஒருமுறை வேறிடத்துக்குப் போய்க் கத்தும்படிக் கேட்டுக் கொண்டது. அதைக் கேட்ட மரங்கொத்தி, "நான் இங்கே அழகாகப் பாடிக் கொண்டிருப்பது, உனக்குக் கத்துவது போல இருக்கிறதா?" என்றது சீற்றத்துடன்.
உடனே ஆந்தை, "என்னது, நீ பாடிக் கொண்டிருக்கிறாயா? கேட்கச் சகிக்கவில்லையே. உன் குரலில் ஏதோ கோளாறு இருக்கிறது. உடனடியாக அதைச் சரி செய்து கொண்டு விட்டால் நல்லது. இல்லாவிட்டால் உன் குரலே போய் விடும்" என்றது தந்திரமாக.
மரங்கொத்திக்கு மிகுந்த கவலையாகி விட்டது. "அப்படியா சொல்கிறாய்? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்" என்று கேட்டது.
"என்னிடம் அதற்கு ஒரு மருந்து இருக்கிறது. அதைச் சாப்பிட்டால் உன் குரல் குயில்போல இனிமையாகி விடும்" என்றது ஆந்தை. |
|
"அப்படியானால் அதை உடனே எனக்குத் தா" என்று சொல்லி, ஆந்தையின் பொந்துக்குச் சென்றது மரங்கொத்தி.
அப்படியே அதை இறுகப் பிடித்துக் கொண்ட ஆந்தை, "மருந்தா வேண்டும் உனக்கு? நான் இங்கே அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லியும் கேட்காமல் தொந்தரவு செய்த உன்னை என்ன செய்கிறேன் பார்!" என்று மிரட்டியது.
"என்னை விட்டுவிடு. நான் இனிமேல் இவ்வாறு பிறருக்குத் தொந்தரவாக இருக்க மாட்டேன்" என்று கெஞ்சியது மரங்கொத்தி .
அதற்கு ஆந்தை, "இதோ பார், நீ சுதந்திரமாக இருப்பதில் தவறில்லை. ஆனால் அது அடுத்தவருக்குத் தொந்தரவை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது. புரிகிறதா?" என்று கூறி மரங்கொத்தியை விடுவித்தது.
ஆந்தையின் அறிவுரை நமக்கும்தான். இல்லையா, குழந்தைகளே!
சுப்புத்தாத்தா படம்: ஆதித்யா வடிவேல், வயது 13, கூப்பர்டினோ, கலி. |
|
|
|
|
|
|
|