விமரிசனம் அன்பாகக் கொடுத்த புடவை
|
|
|
|
|
நாளை காலையில் ரயில் பிடிக்க வேண்டும். அடுக்கி வைத்த பெட்டிக்குள் இருந்தவற்றைத் திரும்ப ஒருமுறை சரிபார்த்தார் ராஜன். சாக்லேட் இருக்கிறதா, பிஸ்கட் இருக்கிறதா, அந்த அழகிய புது மாடல் கார் இருக்கிறதா என்று சரிபார்த்தபடி வந்த அவர் மனதில் இனம்புரியாத ஒரு பயம் கலந்த மகிழ்ச்சி. நாளை இந்நேரம் என் வீட்டின் உள்ளே விளையாடிக்கொண்டு இருப்பான் குழந்தை. என்னிடம் விளையாடுவானா? இல்லை பாட்டி, அம்மா என்று போய்விடுவானா? அவருடைய முகத்தில் ஏக்கம்.
ராஜன் 60 வயதைக் கடந்தாயிற்று. மனைவி மீரா. அவர்களுக்கு ஒரு பெண் கௌரி. மகளை அமெரிக்காவுக்குத் திருமணம் செய்து அனுப்பிவிட்டு இந்தியாவில் தனியாக வாழ்கிறார்கள். கௌரி நல்லவள். தன்னுடைய உறவுகள் அனைத்தையும் அணைத்துச் செல்பவள். கௌரியின் குழந்தை ஹரி அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவன். பேரனுக்கு வயது இன்னும் இரண்டு பூர்த்தியாகவில்லை. ராஜனும் மீராவும் இன்னும் அவனைப் பார்த்ததில்லை. முதன்முதலாக இந்தியாவுக்கு ஹரியும் கௌரியும் வந்திருக்கிறார்கள். பெங்களூரில் மாமனார் மாமியார் வீட்டில் நாலு நாட்கள் தங்கிய பின்னர் நாளை கௌரி சென்னை வருகிறாள். அவளை பெங்களூருக்குப் போய் அழைத்து வர ராஜன் தயாராகிக் கொண்டிருக்கிறார். பேரனைப் பார்த்திராத தாத்தா மனதில் அத்தனை ஆசைகள்! அவனை நேரில் கண்டு அவனோடு விளையாடி மகிழ வேண்டும் என்ற ஆசை. ஆனால் தன்னிடம் ஹரி வருவானா? தன்னைத் தாத்தா என்று அழைத்து அணைப்பானா? பயங்கள்! மீராவுக்கு இதுபற்றித் துளிக்கூட கவலையில்லை என்று எண்ணினார் ராஜன்.
| பேரனை நேரில் கண்டு அவனோடு விளையாடி மகிழ வேண்டும் என்ற ஆசை. ஆனால் தன்னிடம் ஹரி வருவானா? தன்னைத் தாத்தா என்று அழைத்து அணைப்பானா? | |
"குழந்தைகள் செய்யறதைப் பெரிசுபடுத்தக் கூடாது. நாளைக்கு உங்களை பார்த்தவுடனே உங்ககிட்ட வரலைன்னா என்ன, ரெண்டுநாள் பழகினதுக்கு அப்புறம் வரப்போறான். இது ஒரு பெரிய டென்ஷனா உங்களுக்கு?" என்றாள் மீரா. "அவளுக்கு என்ன தெரியும் என் கவலை?". ஒவ்வொரு முறையும் கௌரி போன் பேசும்பொழுது குழந்தை போனைப் பிடுங்கி "பாத்தி என்ன பண்றே?" என்று பேசுகிறான். தாத்தா என்று அழைத்துப் பேசுவது கிடையாது. ஒருவேளை கௌரி குழந்தையிடம், அம்மாவைப்பற்றி மட்டும் சொல்லி வைத்திருப்பாளோ? இப்படியெல்லாம் நினைத்துக் குழம்பியது ராஜன் மனம். அதே சமயம் முதன்முதலில் சாக்லேட் உண்ணும் குழந்தைபோல அவர் மனம் குதூகலம் அடைந்திருந்தது. |
|
மறுநாள் காலை பெங்களூரில் பெண் வீட்டை அடைந்ததும் அவரது மனம் உணர்ச்சியால் பொங்கியது. சென்றடைந்த நேரம் விடியற்காலை. குழந்தை தூங்குகிறான் என்று அறிவித்துவிட்டு கௌரி மற்ற விஷயங்கள் பேசினாள். ராஜனின் தவிப்பு எல்லை மீற ஆரம்பித்தது. பேரனுடனான முதல் சந்திப்பு தூங்கும் போது இருக்க வேண்டாம் என்று, பொறுமையின்றிக் காத்திருந்தார். உணவோ காபியோ ருசிக்கவில்லை. ஆனால் மீரா சகஜமாக இருந்தாள். 'இவளால் எப்படி முடிகிறது? என்று வியந்த பொழுது 'தாத்தா என்று அழைத்தபடி பூந்தளிராய் நடந்து வந்தது ஹரி. ராஜன் மனதில் சந்தோஷம் பீறிட்டது. எழுந்து வந்த குழந்தை எல்லோரையும் ஒரு நிமிடம் பாத்துவிட்டு நேராக கௌரியின் மாமனாரிடம் சென்றது.
| பேரனின் கை பிடித்த ராஜனைப் பார்த்த ஹரி "அயாதே தாத்தா, நான் சாகி (சாக்லேட்) வாங்கி தரேன்" என்றான். | |
ராஜன் மனம் கதறியது. நாலு நாளில் குழந்தை அவரிடம் நன்கு பழகி விட்டான் போலும். குழந்தையை முதன்முதலில் கண்ணால் பார்க்கிற சந்தோஷம் மறைந்து ராஜனின் மனது ஒரு சிறு குழந்தையைப் போல அழுதது. மீரா எந்தவிதச் சலனமும் இல்லாமல் எழுந்து சென்று குழந்தையை அணைத்து வாரிக் கொஞ்சிப் பேசத் தொடங்கினாள். ஏமாற்றத்தை மறைத்தபடி ராஜன் அவள் அருகே நின்று கொண்டார். மதியம் கிளம்பி பெங்களூரில் இருந்து சென்னை வரும் வழியில் ஹரி பாட்டியுடனும் அம்மாவுடனும் பேசிப்பேசி விளையாடியபடி வந்தான். பக்கத்தில் அமர்ந்து ரசித்த ராஜன் மனதில் இருந்த தவிப்பை யாரும் உணரவில்லை.
சென்னை சென்ட்ரலில் வந்து நின்ற வண்டியில் இருந்து ஒவ்வொருத்தராய் இறங்கிய பொழுது குழந்தை ஹரி பின்னால் நடந்து வந்த ராஜனை நோக்கி "தாத்தா கை பிதி" என்றான். பெருமிதம் பொங்கப் பேரனின் கை பிடித்த ராஜனைப் பார்த்த ஹரி "அயாதே தாத்தா, நான் சாகி (சாக்லேட்) வாங்கி தரேன்" என்றான்.
லக்ஷ்மி சுப்ரமணியன் |
|
|
More
விமரிசனம் அன்பாகக் கொடுத்த புடவை
|
|
|
|
|
|
|