Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2006 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | பயணம் | புதுமைத்தொடர் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
பிரிவு
- சங்கர ராம்|ஏப்ரல் 2006|
Share:
Click Here Enlargeமூன்று வாரவிடுமுறையைத் தன் பெற்றோர் களுடன் கழிக்க வேண்டுமென்ற ஆசை ராதாவுக்குப் பிறந்தது. ஆனால் அவளுடைய தோழி விஜயாவுக்கு அவள் போவது விருப்பமில்லை. ஹாஸ்டலிலேயே தங்கி யிருக்கும்படி வற்புறுத்தினாள்.

''இன்னும் மூன்று மாதங்களே சேர்ந்தி ருக்கப் போகிறோம். பி.ஏ. தேறினாலும் தவறினாலும் நீ எங்கேயோ, நான் எங்கேயோ?''

ராதாவுக்கு இருபது பிராயம் இருக்கும். கட்டழகி. உருவத்தில் யெளவனத்தின் பூரிப்புப் பொங்கி வழிந்தது. விசால விழிகளில் குறும்புச் சிரிப்பும், அறிவின் கூர்மையும் தாண்டவமாடின.

''ஆட்டோ ரிக்ஷாவா, டாக்ஸியா?'' என்றாள் விஜயா.

''என்ன சாமான் இருக்கிறது? நாம் இருவரும் ஆட்டோரிக்ஷாவில் உட்கார்ந்து கொள்ளக்கூடாதா? மூன்றாவது வகுப்பில் பிரயாணம் செய்கிறவர்களுக்கு இதுவே அதிகம்'' என்றாள் ராதா புன்முறுவலுடன். இப்பொழுது, அவர்களுடைய இலக்கிய ஆசிரியையும் ஹாஸ்டல் வார்டனுமான பத்மாவதி அம்மாள் அங்கே வந்தாள்.

''என்ன ராதா, இரண்டு மணி வண்டிக்கே பிரயாணமா? உன்னை அனுப்பி வைக்க ஸ்டேஷனுக்கு விஜயா மட்டுந்தானே வருகிறாள்?''

"ஆமாம், ஆமாம்'' என்று மரியாதையுடன் எழுந்து ராதா கூறினாள்.

''அப்படியானால், உங்களை என் காரிலே கொண்டுபோய் விட்டுவிடுகிறேனே; நான் ஸ்டேஷனுக்கு ஒரு வேலையாகப் போக வேண்டியிருக்கிறது.''

''உங்களுக்கு ஏன் வீணாகக் கஷ்டம்?''

''ஆமாம், நான் சுமந்து போக வேணும். அதற்காக நீ வருத்தப்படுகிறாய் - போக்கிரி!'' என்று அந்த அம்மாள் அன்போடு தன் அருமை மாணவியின் முகத்தை வருடினாள். ''சரி, நான் பத்து நிமிஷங்களுக்குள் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்து விடுகிறேன். நீங்கள் தயாராய் இருங்கள்!'' என்று பத்மாவதி அம்மாள் அப்புறம் சென்றாள்.

ராதாவும் விஜயாவும் ஸ்டேஷனுக்கு வந்ததும், தங்களுடைய 'புரொபஸர்' அம்மாளிடம் விடை பெற்றுக்கொண்டு டிக்கெட் வாங்கம் இடத்துக்குச் சென்றார் கள். அங்கே சிறிது கும்பல் இருக்கவே அவர்கள் சற்று விலகி நின்றார்கள்.

''இன்னும் வேண்டிய நேரம் இருக்கிறது. நாம் கடைசியாகக்கூட வாங்கிக் கொள்ள லாம். இந்த வண்டி மெயில் அல்ல; ஓர் ஊர் விடாமல் நின்று கொண்டு போகும். கும்பலே இருக்காது. அதோ அந்த இரண்டு இளைஞர்களையும் பாரேன். கிராப் என்ன, புஷ்கோட் என்ன! ஐயோ, கால்சட்டைப் பையிலிருந்து சீப்பு கீழே விழுந்து விடும் போலிருக்கிறதே!'' என்று தாழ்ந்த குரலில் விஜயாவிடம் ராதா சொல்லிச் சிரித்தாள்.

''படிப்பில்லாதவர்கள் போலிருக்கிறது; ஆடம்பரமாவது வேண்டாமா?'' என்றாள் விஜயா.

வந்த இரண்டு இளைஞர்களும் கும்பலில் கலந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் போல விலகியே நின்றனர். அவர்களுடைய சம்பாஷணையிலிருந்து, மாணிக்கம் என்பவன் ஒருவனே பிரயாணம் செய்யப் போவதாகத் தெரிந்தது. ஆனால் ராதாவைக் கண்கொட்டாமல் பார்ப்பதில் மாத்திரம் இருவரும் பங்கெடுத்துக் கொண்டார்கள். ''எங்கே போனாலும் இந்த இழவுதான்!'' என்று ராதா சலிப்புடன் முகத்தை அப்புறமாகத் திருப்பிக் கொண்டாள்.
இந்தச் சமயத்தில், அநேகமாய் எண்பது வயசுள்ள கிழவர் ஒருவர் ஒரு சிறு துணி மூட்டையுடன் டிக்கெட் வாங்க வந்தார். மூட்டையைக் கீழே வைத்துவிட்டு, அவர் பணத்தை எடுக்க, ஓயாமல் நடுங்கிக் கொண்டிருந்த கையைச் சட்டைப் பைக்குள் விட்டார். அவர் தட்டுத் தடுமாறிக் கொண்டு பணமுடிப்பை எடுக்கும் போது முடிச்சு அவிழ்ந்து, நாணயங்களும் சில நோட்டுகளும் கீழே விழுந்து சிதறின. அவ்விளைஞர்கள் இருவரும் 'லொச்சு'க் கொட்டிக் கொண்டு, ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் சேகரித்துக் கிழவரிடம் கொடுத்துப் பத்திரமாக வைத்துக் கொள்ளச் சொன்னார்கள்.

''எங்கே போறீங்க தாத்தா?'' என்று ஒருவன் கேட்டான்.

கிழவர் நடுங்கிய குரலில், ''ஈரோடு அ..ப்...பா..'' என்றார்.

''நீங்கள் கஷ்டப்படாதீங்க. நான் டிக்கெட் வாங்கித் தருகிறேன். நானும் இந்த வண்டியிலேதான் போகவேணும். சார்ஜு என்னமோ அதைக் கொடுங்க'' என்றான் மாணிக்கம்.

''நல்லது அ..ப்பா உனக்குப் புண்ணிய முண்டு'' என்று கிழவர் நன்றி ததும்பியவாறு, தேவையான பணத்தைக் கொடுத்தார்.

பிறகு கிழவர் வெகு ஜாக்கிரதையுடன் பணத்தை ஒரு துண்டில் மூடிபோட்டு அந்தத் துண்டை இடுப்பில் கெட்டியாகக் கட்டிக் கொண்டார்.

''சேலத்துக்கு எவ்வளவு சார்ஜு?'' என்று மாணிக்கத்தின் நண்பன் கேட்டான்.

''யார் கண்டாங்க? இப்போதான் நாளைக்கு ஒண்ணுமாறுதே.. பத்து ரூபாயைக் கொடுத்தா, சில்லறையைக் கொடுக்கிறான்'' என்றான் மாணிக்கம்.

இதைக் கேட்டவுடன் விஜயா, "நீயும் சேலத்தில்தானே இறங்க வேண்டும்? உனக்கும் ஒன்றை வாங்கிவிடச் சொல்லேன்'' என்றாள் ராதாவினிடம்.

''வேண்டாம், வேண்டாம், அவர்தாம் பாவம் கிழவர். நம்மால் முடியாது போனால் அல்லவா பிறரைக் கஷ்டப்படுத்த வேண்டும்?'' என்றாள் ராதா.

''என்ன அம்மா, ஒரு டிக்கெட்டோடு இன்னொன்று வாங்குவதா கஷ்டம்? நீங்க சும்மா இருங்க.. நான் வாங்கிக்கிட்டு வறேன்''

''அப்போ பணத்தைக் கொடேன், ராதா'' என்றாள் விஜயா.
''எங்கிட்ட இருக்குதுங்க, அப்புறம் கொடுங்க'' என்று மாணிக்கம் வரிசையில் நின்று கொண்டான். அதன்மேல் பிளாட் பாரம் டிக்கெட் வாங்கி வரும்படி ராதா விஜயாவை அனுப்பினாள்.

ஐந்தாறு நிமிஷங்களுக்குப் பின் அவர்கள் எல்லோரும் பிளாட்பாரத்துக்குள் நுழைந் தனர். ரெயில் பெட்டியில் அவ்வளவாக நெருக்கடி இல்லை. கிழவருக்கு மாணிக்கத்தை விட்டுப் பிரிய விருப்பம் இல்லை; பக்கத்திலேயே அவனை உட்கார வைத்துக்கொண்டார். ராதா கிழவருக்கு எதிரில் இருந்த இடத்தில் விஜயாவுடன் அமர்ந்து கொண்டாள். வண்டி கிளம்பும் வரையில் விஜயா ராதாவோடு பேசிக் கொண்டே இருந்தாள்; வண்டி நகரும் தருணத்தில் இறங்கி, ராதாவின் முகம் மறையும் வரையில் கைக்குட்டையை வீசிக் கொண்டேயிருந்தாள்.

வண்டியிலோ, கிழவர் தம் வாழ்க்கையைப் பற்றி ஓயாமல் பேசத் தொடங்கிவிட்டார். ''தறி வேலை செஞ்சு வாயைக் கட்டி வயித்தைக் கட்டி, நூத்தி எளுபத்தாறு ரூபாய் சேர்த்திருக்கிறேன்.எனக்கு இருக்கிறது ஒரு மகள். முதல் முதலாய் அவளும் ஒரு பெண்ணைக் கட்டிக் கொடுக்கிறாள். இந்தப் பணத்தை அவளண்டை சேத்திட்டால் என் வேலை முடிஞ்சது.''

''மகளண்டையே இருக்கக்கூடாதா, தாத்தா? தள்ளாத வயசிலே ஏன் கஷ்டப்படுறீங்க?'' என்றான் மாணிக்கம்.

''மெய்தான், அப்பா இன்னும் கொஞ்ச காலம் போகட்டுமின்னு பார்க்கிறேன். என்ன இருந்தாலும் பிறத்தியார் கையைப் பார்த்துக்கிட்டு இருக்கிறது எனக்குப் பிடிக்கவில்லை. ஆ...வட்டும்...ஆ...வட்டும்.''

கிழவர் எதை எதையோ பேசிக் காலத்தைக் கழித்தார்.

சேலம் நெருங்கிக் கொண்டிருந்தது. நடுவில் ஒரே ஒரு ஸ்டேஷன்தான் இருந்தது. இதற்குள் நன்றாக இருட்டி விட்டது. இப்பொழுது ராதாவினிடம் ஒரு பரபரப்பு உண்டாயிற்று. கையில் இருந்த தோல் பையைத் தேடிப் பார்த்தாள்; பிறகு பெட்டியைத் திறந்து பார்த்தாள். வேர்த்த நெற்றியைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள். அவளுடைய வேதனையை உணர்ந்த கிழவர், 'என்ன...ம்மா?'' என்று உருக்கத்தோடு கேட்டார்.

''என் டிக்கெட்டைக் காணோம்.. தாத்தா! தவறுதலாய் விஜயாகிட்டே கொடுத்து விட்டேன் போலிருக்கிறது'' என்று அவள் கையைப் பிசைந்தாள்.

''அது என் டிக்கெட்டுக்க அடுத்த நம்பருங்க'' என்று சொல்லிக் கொண்டே மாணிக்கம் தன் டிக்கெட்டை எடுத்துப் பார்த்து, ''இது 374, அது 375. போன்லே கூடக் கேட்டுத் தெரிஞ்சுக்கலாமே.. இதுக்காகப் பயப்படாதீங்க. அம்மா ரொம்ப இமிசை செய்தால் பணத்தைக் கொடுத்து விட்டால் போவுது. நமக்குக் கட்டாயம் வாபஸ் வந்திடுமிங்க'' என்றான் உறுதியாக.

''உண்மைதான், இருந்தாலும் கார்டினிடத்தில் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் நல்லது. என் மேல் சந்தேகப்பட்டால் எனக்குக் கெட்ட கோபம் வரும். இதோ ஒரு ஸ்டேஷன் வந்து விட்டது'' என்று வண்டி நின்றதும், ராதா ஓட்டமாய் ஓடி, கார்டினிடத் தில் தகவலைச் சொல்லித் திரும்பி வந்துவிட்டாள்.

வரவரக் கும்பல் குறைந்து கொண்டு வந்த அந்தப் பெட்டியில் கடைசியாகத் தங்கினவர் கள் ராதா, கிழவர், மாணிக்கம் அப்புறம் பெட்டியின் கோடியில் ஓர் ஏழைக் குடும்பம்.

''சேலம் வந்தால் நாங்களும் இறங்கி விடுவோம். பாவம்! நீங்கள் தனியாக இருக்க வேண்டும்'' என்றாள் ராதா.

''ஏன் சேலத்திலே எத்தினியோ பேர் ஏறுவாங்க.. அந்த கவலை வேண்டாம் தாத்தா'' என்று மாணிக்கம் தைரிய மூட்டினான்.

''சேலம் இன்னும் எவ்வளவு கல் இருக்குது?'' என்றார் கிழவர்.

''இரண்டு மைல்தான் தாத்தா'' என்றாள் ராதா.

கிழவர் கவலையோடு தலையைச் சொறிந்தார். பிறகு, ''நீங்க இருக்கிற போதே கை கால் களுவிக்கிட்டு வந்துடறேன்'' என்று கக்கூஸ் பக்கம் போனார்.

அதே நொடியில் ஒரு பறட்டைத் தலையன் ஜன்னல்களைப் பிடித்துக் கொண்டு வேகமாக வந்து அந்தப் பெட்டியில் நுழைந்தான். நுழைந்த வேகத்தில் கதவால் தள்ளப்பட்டு, கிழவர் கீழே விழுந்தார். அப்பொழுது அந்தப் பறட்டைத் தலையன் கிழவனாரை வெகு உருக்கத்தோடு தூக்கி நிற்க வைத்து, உடலையெல்லாம் தடவிக் கொடுத்து, ''பயப்படாதீங்க பெரியவரே.. அடி ஒண்ணும் விளல்லை.. அவசரமாய் டிக்கெட்டு இல்லாமல் வண்டி ஏறிட்டேன். ஊர் இன்னும் ரெண்டு கல்லுதானே இருக்குது; அதுக்குள்ளே, இந்த டிக்கெட்டு சோதிக்கிறவன்.'' இப்பொழுது திடீரென்று வண்டி நின்றுவிட்டது.

மறுபடியும் கிழவர் கீழே விழாதபடி அவன் அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். பிறகு, ''எங்களவங்க யாரோ சங்கிலியை இளுத்துட்டாங்க'' என்று அவன் சந்தோஷமாகச் சொல்லிக் கொண்டே குதித்தோடி விட்டான்.

''டிக்கெட் இல்லாத பிரயாணம், சங்கிலியை இழுக்கிறது. இவர்களுக்குத் தகுந்த தண்டனையைக் கொடுக்காவிட்டால், அரசாங்கம் எப்படி நடக்கும்?'' என்று ராதா கடிந்து கொண்டிருக்கும்பொழுது, கிழவனார் கக்கூசுக்குள் நுழையாமல் கைகளை விரித்து ''ஐயோ!'' என்று கதறினார். பேய் அறைந்தாற் போல் முகம் வெளுத்துவிட்டது.

''என்ன தாத்தா?'' என்று மாணிக்கம் அன்போடு விசாரித்தான்.

''என் பணமூடிச்சைக் காணோமே! ஐயையோ! நான் என்ன செய்வேன்! என் குளந்தையை எப்படிப் பார்ப்பேன்! பணம் கொண்டுவரேனின்னு எளுதினேனே! ஆண்டவனே இதுவா உன் சோதனை? ஐயோ! எப்படியோ போயிட்டுதே! என் உயிரை எடுத்துக்கிட்டு போகக்கூடாதா? இதுவா உன் கருணை? இதுவா உன் நியாயம்? நான் செத்துடறேன் போ! போ!'' என்று நடுங்கிய குரல் பின்னும் நடுங்க, கிழவர் குதிக்கத் தயாரானார். சிறுவர்கள் இருவரும் பலமாகப் பிடித்துக் கொண்டார்கள். கிழவர் கீழே விழுந்து புழுவாய்த் துடித்தார்.

''முடிஞ்சது என் சங்கதி... அட அட, அக்கிரமத்துக்கு அளவில்லையா? என்னையே சாப்பிட்டுடு! போ! போ! உனக்கு நானே பலி'' என்று கிழவர் வெறிபிடித்தவர் போல் ஆட்டம் போட்டார்.

''அடக் கடவுளே! உயிரை விட்டுவிடுவார் போலிருக்குதே'' என்று ராதா கண் கலங்கினாள்.

''மார் அடைக்குதா, தாத்தா? என்று மாணிக்கம் மனஉருக்கத்தால் பயந்து கிழவரின் மார்பை அன்போடு தடவிக் கொடுத்தான்.

''அந்தப் பறட்டைத் தலையன் எடுத்திருப் பானோ?''

''ஆமாண்டா, தம்பி. என் உடம்பெல்லாம் தடவிப் பாத்தானே...'' என்று கிழவர் இரு கைகளாலும் தலையில் அடித்துக் கொண்டார். பிறகு மயக்கம் போட்டுச் சாய்ந்து விட்டார். விழிகள், இமைகளில் செருகிவிட்டன. ராதா கூஜாவில் இருந்த நீரை முகத்தில் தெளித்தாள். சிறிதளவு வாயிலும் ஊற்றினாள். கிழவருக்கு மெல்ல நினைவு வந்தது.

அப்பொழுது மாணிக்கம், ''தாத்தா அந்தப் பறட்டைத் தலையன், வண்டி திடும்னு நின்னதுலே, ரொம்ப அவசரத்திலே ஓடிட்டான். கையிலே எதையும் கொண்டு போகவில்லை. நான் நல்லாக் கவனிச்சேன். இங்கேயேதான் அது விளுந்து கிடக்கணும். ஊம்... கையைத் திமிறாதே! நீ வண்டியிலே விளுந்து செத்தால், யாருக்கு லாபம்? உன் மகளுக்குப் பணம் கிடைச்சிடுமா? ஐயோ கடவுளே! இதேது வம்பாயிருக்குதே..''

''வம்புதான். இந்தப் இந்தப் பாழும் உலகிலே ஒருவரைக் கொன்றுதானா ஒருவர் வாழ வேண்டும்? எல்லோரும் நேர்மையோடு கூடி வாழக்கூடாதா? தாத்தா, நீங்கள் பயப்பட வேண்டாம். உயிரை விடத் தேவையில்லை. உங்களுடைய பணத்தை நான் கொடுக்கிறேன்.''

''எப்படி அம்மா!' என்று கிழவர் திணறினார்.

''நான் ஒரு கல்லுரியிலே பி.ஏக்குப் படித்துக் கொண்டிருக்கிறேன் தாத்தா, என்னோடு படிக்கிற தோழிகள் இருநூறு முந்நூறு பேர் இருக்கிறார்கள். ஆளுக்க இரண்டு மூன்று வசூல் செய்து நான் கொடுக்கிறேன். என்னால் முடியும் தாத்தா'' என்று ராதா தன் மார்பைத் தட்டிக் கொண்டாள். ''நீங்கள் இழந்தைவிட அதிகமாகவே சேர்த்துத் தருகிறேன். என்னோடு சேலத்தில் இறங்குங்கள். என் தகப்பனார் ரொம்ப நல்லவர். அவர் ஒரு வக்கீல். அவர் மூலமாகவும் வேண்டிய உதவி கிடைக்கும்.''

''அவ்வளவு கஷ்டம் வேண்டாம், அம்மா. அந்தப் பறட்டைத் தலையன் ஆத்திரத்தில் பணமுடிப்பை, வண்டியிலேயேதான் எறிந்து விட்டுப் போயிருக்க வேண்டும்'' என்றான் மாணிக்கம்.

'சரி.. தேடலாம். ஆனால், நிஜமாகச் சொல்கிறேன். ஐந்நூறு ரூபாயைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அதை எப்படியும் சேகரித்துவிடுவேன். இந்தக் கிழவர் இந்த வயசிலேயும் பிறர் கையைப் பார்க்காமல், உழைத்துப் பிழைக்க வேண்டுமென்ற கொள்கையை வைத்துக் கொண்டிருக் கிறாரே! எவ்வளவு மெச்சத்தக்கது! தாத்தா, தமிழ்நாட்டின் உண்மையான செல்வம் உங்களைப் போன்றவர்கள்தாம். உங்களை விட வயசிலே எவ்வளவோ சிறியவர்கள் வேலை செய்யாமல் உடலை ஒளித்து கொண்டு. திருடுவதே பிழைப்பாக வைத்துக் கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்கு நீங்கள் ஒரு வழிகாட்டி அல்லவா? உங்களுடைய உழைப்பைப் படம் பிடித்துக் காட்ட வேண்டும் போல் இருக்கிறது தாத்தா.''

''தாயே நான் அப்படி என்ன செஞ்சிட்டேன்? என்றார் கிழவர்.

''தாத்தா, அம்மா பணம் திரட்டித் தருவதாகச் சொல்லிட்டாங்க. அதனாலே சாகிற எண்ணத்தை விட்டுடுங்க. எதுக்கும் நீங்க கவனிச்சுக்குங்க'' என்று மாணிக்கம் கிழவரை ராதாவினிடம் ஒப்படைத்துவிட்டு, வண்டி பூராவையும் தேட ஆரம்பித்தான். இரண்டொரு நிமிஷங்களுக்குப் பிறக ''ஆ! இது என்னாது!'' என்று கத்தரிக்கப்பட்ட பணமுடிப்பை கண்டெடுத்து, அதை ஆனந்த பரவசத்தோடு கிழவரின் கையில் வைத்தான்.

கிழவர் அதை இரு கைகளாலும் பலமாகப் பிடித்துக் கொண்டார்.

''ராசா! எங்க மதுரை வீரன்தான் உன்னைக் கொண்ணாந்து விட்டார். ஒரு ஏளைக் குடும்பத்தைக் கரை ஏத்தி விட்டாயடா அப்பா!'' என்று கிழவனார் குலுங்கிக் குலுங்கி அழுதார். மாணிக்கத் தாலும் அழுகையை அடக்க முடியவில்லை. அவ்விருவரையும் கண்டு ராதாவும் கண்கலங்கிவிட்டாள்.

பிறகு, ராதா கண்களைத் துடைத்துக் கொண்டு, சமீபத்தில் வரும்படி மாணிக்கத்துக்குச் சமிக்ஞை செய்து, மெதுவாகச் சொன்னாள். ''சேலம் வந்ததும் போலீசார் உங்களை கைது செய்யத் தயாராக இருக்கிறார்கள். உங்களை அவர்கள் அறிவார்கள் போலிருக்கிறது. ஆகையினால் வண்டி புறப்படுவதற்கு முன் நீங்களும் கீழே இறங்கி மறைந்து விடுவது நலம்.''

இதைக் கேட்டதும் மாணிக்கம் பிரமித்து, ஒரு கணம் அவளை நோக்கினான். அந்தப் பார்வையில் நன்றி, வெட்கம், கோபம் எல்லாம் கலந்து கிடந்தன. மறுகணத்தில் அவன் இறங்குவதும் வண்டி நகருவதும் ஒன்றாக இருந்தன.

''மாணிக்கத்தை ஏறச் சொல்லு, அம்மா'' என்று கிழவர் கதறினார்.

பண முடிப்பைக் கத்தரித்தவன் மாணிக்கமே என்று கூறி, கிழவரின் மனத்துக்கு மற்றோர் அதிர்ச்சியை ஏன் உண்டாக்க வேண்டும்?

''மாணிக்கம் வரமாட்டான் தாத்தா. இங்கேயே இறங்கினால் அவனுக்கு வீடு கிட்டமாம்'' என்று ராதா ஒரு பொய்யைச் சொன்னாள்.

பரிவுதான் எவ்வளவு விதங்களில் பரிமளிக்கிறது!

சங்கர ராம்
Share: 
© Copyright 2020 Tamilonline