ஷேக் சின்ன காசிம், ஷேக் சின்ன பாபு சகோதரர்கள்
|
|
'சேவைத்திலகம்' சாம் கண்ணப்பன் |
|
- உமையாள் முத்து, கரு. மாணிக்கவாசகம்|டிசம்பர் 2009| |
|
|
|
|
'சாம் கண்ணப்பன்' என்றகிற சொ. கண்ணப்பன் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் பிறந்தவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் ஆனர்ஸ் முடித்தபிறகு பி.எஸ்.ஜி. கல்லூரியில் மூன்றாண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பின் டெக்சஸ் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்றார். 1968லிருந்து அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலம் ஹூஸ்டன் மாநகரில் வாழ்ந்து வருகிறார். அவருடைய வரலாறு "அமெரிக்க அருட்செல்வர்" என்ற பெயரில் புத்தகமாக வந்துள்ளது. நூலாசிரியர், சிறந்த நிர்வாகி, தொண்டர், இங்கே குடியேறிய முன்னோடி என்று பல பெருமைகளுக்குரிய கண்ணப்பன் அவர்களைத் தென்றல் வாசகர்களுக்காகச் சந்தித்தபோது....
கே: 41 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவை வாழ்விடமாகத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?
ப: அமெரிக்கா சாதாரண மனிதனின் வாழ்க்கையை மிக எளிதாக்குகிறது. திறமை உள்ள யாரும் இங்கே முன்னேறலாம். ஊழல் குறைவு. அவரவர் வேலையைத் தக்க சமயத்தில் முடித்துத் தருகிறார்கள். நான் வருவதற்கு மூன்று ஆண்டுகள் முன்புதான் குடிவரவுச் சட்டம் அன்றைய அமெரிக்க அதிபர் ஜான்சனால் எல்லிஸ் தீவில் கையெழுத்திடப்பட்டது. முதன்முதலாக 1965ல் ஐரோப்பியரல்லாதவருக்கும் கிரீன் கார்டு வழங்கும் சட்டம் கையெழுத்தானது. அதற்குப் பிறகு வந்த முன்னோடிகளில் நானும் ஒருவன்.
கே: உங்களின் எண்ணற்ற பொதுப்பணிகளில் சிலவற்றை கூறமுடியுமா..?
| எம்.ஜி.ஆர்.நியூயார்க் மருத்துவமனையில் பேசமுடியாத நிலையில் இருந்தபோது தமிழில் அவர் நினைக்கின்ற வார்த்தைகளை கணினி மூலம் சொல்ல ஏற்பாடு செய்தேன்.அந்தக் கணினி நிரல் முன்மாதிரி இன்றும் மூளைவளர்ச்சி அடையாத குழந்தைகள், பேசமுடியாதவர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளப் பயன்பாட்டில் உள்ளது. | |
ப: முன்பெல்லாம் இருதய நோயாளிகள் பலரும் சிகிச்சைக்காக அமெரிக்கா வருவார்கள். மிக வசதியானவர்களை விடுதிகளில் தங்க வைத்தும், வசதி குறைந்தவர்களை என் இல்லத்தில் தங்கவைத்தும், அவர்கள் சிகிச்சை பெற உதவுவேன். அந்தக் காலத்தில் இறுதிச்சடங்கு செய்ய அந்தணர்கள் இந்தப்பகுதியில் இல்லை. இங்கு வந்தவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தால் இறுதிச் சடங்குகளை நானே கீதை வரிகளைக் கூறிச் செய்து முடிப்பேன். அஸ்தியை இந்தியாவிலுள்ள உறவினர்களுக்கு அனுப்பி வைப்பேன். அஸ்தியை விமானத்தில் அனுப்பச் சட்டச்சிக்கல்கள் வந்தபோது வாஷிங்டன் தூதரகத்தில் பேசி அனுமதி பெற்றேன். ஹூஸ்டன் நகரசபையிலும் பேசி இந்துச் சடலங்களை எரிக்க அனுமதி பெற்றதோடு, அதற்காக மின்சார தகனப்பொறி அமைய ஏற்பாடு செய்தேன். நோயாளிகள் மரணமடைந்தால் அவர்களை தகனம் செய்ய உறவினர்கள்தாம் கையெழுத்திடவேண்டும் என்பது சட்டம். உறவினர் இல்லாத நிலையில் நானே தகனம் செய்வதற்கு, உறவினர் சான்றிதழ் பெறவேண்டும் என்ற ஷரத்து தடையாக இருந்தது. நான் வாஷிங்டன் இந்தியத் தூதரகத்தில் பேசி உறவினர் சான்றிதழுக்கு மாற்றாக தகனம் செய்ய இந்திய தூதரக ஒப்புதல் கடிதம் தொலைநகல் மூலம் கிடைக்க உதவி செய்தேன்.
கே: எம்.ஜி.ஆருடன் உங்கள் தொடர்பு குறித்து கூறுங்கள்.
ப: அந்த நல்லவருக்கு உதவ ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அவர் நியூயார்க் மருத்துவமனையில் பேசமுடியாத நிலையில் இருந்தபோது தமிழில் அவர் நினைக்கின்ற வார்த்தைகளை கணினி மூலம் சொல்ல ஏற்பாடு செய்தேன். 1978-ல் எம்.ஜி.ஆர். ஹூஸ்டன் வந்தபோது நானும் என் மனைவியும் டாக்டர் டென்டன் கூலேயிடம் (Dr. Denton Cooley) அழைத்துச்சென்றோம். எம்.ஜி.ஆரின் தனித் தொலைபேசி எண்ணில் எப்போது வேண்டுமானாலும் காலை 6 மணிக்கு அவரைக் கூப்பிடப் பணித்திருந்தார். அதனால் அடிக்கடி அவருடன் தொடர்பு கொண்டு அவருடைய சில தேவைகளை நிறைவேற்ற எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. தமிழ் எழுத்துக்களை கம்யூட்டருக்காக உருவாக்கி, அவைகளை மானிட்டரில் ஒலிக்கும் வித்தையைக் கண்டுபிடித்தேன். புரூக்லின் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர். படுக்கை அருகே கம்ப்யூட்டரை அமைத்தேன். எம்.ஜி.ஆர். அதைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டார். Voice synthesizer போன்ற நவீன உத்திகளை 1978-லேயே புகுத்தினேன். ஒரு கம்ப்யூட்டரில் எம்.ஜி.ஆர். அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளை ஒரு பட்டனைத் தட்டுவதன் மூலம் மானிட்டரில் தெரிவிக்கும் முறையை அறிமுகப்படுத்தினேன். கணினித் துறை 1978-ல் அவ்வளவு வளர்ச்சி அடையவில்லை. MS-Word எல்லாம் கிடையாது. டெலிவிஷன் பெட்டியை மானிட்டராகப் பயன்படுத்தினோம். ஒவ்வொரு தமிழ்ச் சொல்லுக்கும் ஓர் ஒலி வரும்படிச் செய்த இந்த ஆராய்ச்சியில் என் மகன் ரமேஷ் மனைவி மீனாட்சி இருவருமே மிகவும் உதவியாக இருந்தனர். இப்படி எம்.ஜி.ஆருக்காகத் தயாரிக்கப்பட்ட கணினி நிரல் முன்மாதிரி இன்றும் மூளைவளர்ச்சி அடையாத குழந்தைகள், பேசமுடியாதவர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளப் பயன்பாட்டில் உள்ளது.
கே:எதனைப் பயன்படுத்தி அந்த மென்பொருளைச் செய்தீர்கள்?
ப: மிகவும் எளிதான Basic-ல் தான் நாங்கள் தொடங்கினோம். எனக்கு ஏற்கனவே மிகவும் நன்றாக தெரிந்த மொழி ForTran-2, ForTran-4, ForTran-76. 76 என்பது 1976-ஆம் ஆண்டைக் குறிக்கும். அதனையும் பயன்படுத்திக்கொண்டோம். அதற்குப்பிறகு அதை எந்திரக் குறியீடாக (Machine Code) மாற்றவேண்டும். அதற்கு Fortran compiler, Basic Compiler ஆகியவற்றைப் பயன்படுத்தினோம்.
கே: ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் ஆலயம் அமைந்ததில் தங்கள் பங்கு பற்றி கூறுங்கள்.
ப: நானும் என் மனைவியும் பியர்லேண்டில் மீனாட்சி அம்மன் ஆலயம் அமைவதற்கு ஆயிரம் டாலர் வழங்கிப் பிள்ளையார் சுழி போட்டோம். முதன்முதலில் கோயிலுக்காக, 4.9 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரரான வெள்ளைகாரர் எல்.ஜி. டுனானகனை நானும் இன்னொரு அறங்காவலரான கே.ஆர். தியாகராஜனும் சந்தித்து முதல் தவணையைக் கொடுத்தோம். நான் டுனாகனிடம் இந்தக் காசோலையை உடனடியாக பணமாக்க வேண்டாம். கோயில் கமிட்டி முடிவு செய்யவேண்டும் என்றேன். டுனாகன் அன்றே வங்கியில் காசோலையைச் செலுத்துவேன். இல்லையென்றால் அந்த இடத்தை நாய் வளர்க்கும் கென்னல் கொட்டகை கட்ட விற்றுவிடப்போகிறேன் என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார். என் மனைவி அந்த இடத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளியிருப்பதுபோல் கனவுகண்டதாகக் கூறியது நினைவுக்கு வந்தது. அந்த நிலம் வாங்குவதற்கு கமிட்டி ஒப்புக்கொள்ளவில்லை யென்றால் நானே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்து காசோலையை மாற்றிக்கொள்ளச் சொன்னேன். பின் மீனாட்சி அம்மன் ஆலயம் அமைந்தது. அந்த காலகட்டத்தில் ஆலயத்துக்கு என் தலைமையில் நான்கு லட்சம் டாலர் நிதி திரட்டினோம். வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம், மருத்துவ முகாம் போன்றவற்றை அறிமுகப்படுத்தி ஆலயத்தை மக்கள் சேவை மையமாகவும் செயல்படச் செய்தோம்.
நான் இந்து சமய வழிபாட்டு மன்றம் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தேன். இதற்கு நிதி திரட்ட எம்.எஸ். சுப்புலட்சுமி, நடிகை பத்மினி ஆகியோரை அழைத்து நிதி திரட்டினேன். இதுவே பிற்பாடு ஆலயம் அமைய காரணமாக அமைந்தது. மீனாட்சி அம்மன் ஆலயத்தை டெக்சஸ் மாநில நிர்வாகம் சுற்றுலா மையங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.
கே: புத்தாயிரம் ஆண்டுக் குடியரசு தினவிழா 2001-ல் நடைபெற்றபோது அதன் இணைத்தலைவராகப் பணியாற்றியதன் அனுபவம் பற்றிக் கூறுங்கள்.
ப: இது தமிழர்களை மட்டும் கொண்ட அமைப்பல்ல. அனைத்து இந்திய மாநிலங்களிலிருந்து அமெரிக்காவில் குடிபுகுந்தோரைக் கொண்ட குழு. இதற்காக 180,000 டாலர் நிதி திரட்டிக்கொடுத்தோம். இவ்விழாவில் 20 ஆயிரம் பேர் கலந்துகொண்டார்கள். இந்தியாவின் கலை, கலாசாரம், பண்பாடு, இறைவழிபாடு போன்றவற்றை அமெரிக்கர்களுக்கு இவ்விழா உணர்த்தியது. டெக்சஸ் மாநிலத்தின் சில நூறு இந்தியச் சங்கங்கள் இணைந்து நடத்திய மாபெரும் விழா இது. இதற்காக மாநில ஆளுநர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மேயர் ஆகியோர் என்னைப் பெரிதும் பாராட்டினார்கள். ஹூஸ்டனில் உள்ள இந்தியாவிற்கான அப்போதைய துணைத்தூதர் ரின்சிங் வாங்டி என்னை 'மனித டைனமோ' என்று பாராட்டினார். |
|
கே: தாய்நாட்டுக்குத் தாங்கள் செய்த பணிகள்...
ப: 2001-ல் குஜராத்தில் மிகக்கொடிய பூகம்பம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த செய்தி கிடைத்ததும் நான் உடனடியாக இங்குள்ள இந்தியர்களை அழைத்துப் பேசி சுமார் 150,000 டாலர் நிதி திரட்டினேன். குஜராத்தின் கட்ச் பகுதியில் கிருஷ்ணா நகர் என்னும் கிராமத்தை தத்து எடுத்து அங்கே சுமார் 200 வீடுகளைப் புதுப்பித்தோம். ஏதோ நிதி திரட்டினோம், அதை இந்திய அரசுக்கு அனுப்பிக் கடமையை முடித்துக்கொண்டோம் என்றில்லாமல், ஒரு கிராமத்தையே தத்தெடுத்து மக்களை கைதூக்கி விட்ட முயற்சி குறித்து அமெரிக்கப் பத்திரிக்கைகள் பாராட்டி எழுதின. இதோடல்லாமல் வாஷிங்டன் சென்று அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் மூலம் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் பேசச் செய்ததன் விளைவாக அமெரிக்க அரசு கூடுதலாக பத்து மில்லியன் டாலர்களை குஜராத் பூகம்பத்திற்கு நிவாரண நிதியாக வழங்கியதையும் நான் தாய்நாட்டுக்குச் செய்த பணியாகவே கருதுகிறேன்.
கே: அமெரிக்க மண்ணுக்கும் பல சேவைகள் நீங்கள் ஆற்றியுள்ளதை அறிவோம். சிலவற்றைச் சொல்ல முடியுமா?
ப: செப்டம்பர் 11-ஆம் தேதி தீவிரவாதத் தாக்குதல் நடந்ததும். நான் என் குழுவினருடன் 25 ஆயிரம் டாலர் நிதி திரட்டி நியூயார்க் தீயணைப்புப் படையினருக்கு வழங்கினேன். அத்துடன் ஹூஸ்டன் மாநகரில் உள்ள ஹில்கிராஃப்ட் பகுதியில் இந்து மற்றும் இஸ்லாமிய வணிகர்களிடம் 30 ஆயிரம் டாலர்கள் பெற்று இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியதன் மூலம் நான் வாழும் இந்நாட்டிற்கு இந்தியர்களையும் இணைத்து என் கடமையைச் செய்தேன். அதோடல்லாமல் ஹூஸ்டன் நகரில் ஃபோர்லீப் என்னும் கட்டிடம் தீப்பிடித்தபோது மக்களைக் காப்பாற்ற தன் உயிரையே பணயம் வைத்த தீயணைப்பு வீரர் ஜே. ஜான்கே மரணம் அடைந்துவிட, அவரது குடும்பத்திற்கு நிதி திரட்டிக் கொடுத்தோம்.
| நதிநீர் இணைப்புத்திட்டம் தமிழ்நாட்டுக்கு மிகவும் பயன் தரவல்ல திட்டம். ஆனால் என்னுடைய வாழ்வு நாளுக்குள் அது நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. மற்ற மாநிலத்தவர் நமக்குத் தண்ணீர் தருவதற்குத் தயாராக இல்லை.இது நிதிப் பற்றாக்குறை பிரச்சனை அல்ல. அரசியல் பிரச்சனை. | |
கே: தமிழ் அமைப்புகளோடான உங்கள் தொடர்பு என்ன?
ப: 1974-ல் ஹூஸ்டன் மாநகரில் காலஞ்சென்ற டாக்டர் அழகர்சாமி அவர்களுடன் இணைந்து பாரதி கலை மன்றம் எனும் தமிழ்ச்சங்கம் தொடங்கினேன். அது இன்று விருட்சமாக வளர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் அளிப்பதோடு நில்லாமல், இளைய தலைமுறையினருக்காகத் தமிழ்ப் பள்ளி நடத்தி வருகிறது. தமிழ்நாடு அறக்கட்டளையிலும், பால்டிமோர் தமிழ்ச் சங்கத்திலும் செயலாளராகப் பணி செய்துள்ளேன்.
கே: இந்திய நதிநீர் இணைப்புத்திட்டத்தில் ஆர்வம் காட்டி அதற்கு முயற்சி செய்தீர்கள். அது இன்று எந்த அளவில் இருக்கிறது?
ப: நதிநீர் இணைப்புத்திட்டம் தமிழ்நாட்டுக்கு மிகவும் பயன் தரவல்ல திட்டம். ஆனால் என்னுடைய வாழ்வு நாளுக்குள் அது நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. மற்ற மாநிலத்தவர் நமக்குத் தண்ணீர் தருவதற்குத் தயாராக இல்லை. ஆனால் தற்போது தமிழ்நாட்டிற்குள் தாமிரபரணி ஆறு முதலானவற்றில் தொடங்கி Water Transfer என்று சொல்கிறோமே, அதனைச் செய்ய தமிழ்நாடு அரசு தொடங்கியிருக்கிறது. இனி சிறிது சிறிதாக தமிழக அளவிலாவது இதைச் செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இப்போது பீகார் மாநிலத்திலும் இதை தொடங்கியிருக்கிறோம். இந்த இரண்டு மாநிலங்களில் அந்தந்த மாநிலத்திற்குள் நதியிணைப்பு ஏற்பட்டால்.. பிறகு ஏனைய மாநிலங்களில் இருந்து தண்ணீர் கிடைத்தால் அதனை விரிவாக்க முடியும். இது நிதிப் பற்றாக்குறை பிரச்சனை அல்ல. அரசியல் பிரச்சனை..நான் டெக்சஸ் மாநிலத்திலிருந்து இதற்காக உதவிகள் கேட்டு இந்திய அரசிற்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆனால் சரியான முன்னேற்றம் இல்லை.
கே: அண்மையில் இந்தியா டுடே பத்திரிக்கை உங்களை 20 தொழில் மாமன்னர்களில் ஒருவராகத் தேர்வு செய்திருந்தது. அதைப்பற்றிச் சற்றுக் கூறுங்கள்.
ப: எங்கள் குடும்பம் பர்மாவில் தொழில் செய்து வாழ்ந்தது. அதைச் சிறுவயதிலேயே பார்த்திருந்ததனால் இங்கு வந்தபிறகு 70-களிலேயே கணினித்துறைத் தொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தேன். எந்திரப் பொறியாளரான எனது பணி Piping Analysis பற்றியது. அதற்காக அக்காலத்திலேயே மென்பொருள் நிரலி எழுதித் தொழில் செய்துவந்தேன். அதனைத்தொடர்ந்து தற்போது Piping Analysis-க்காக ஆலோசனை நிறுவனம் வைத்து நடத்தி வருகிறேன். வருமானத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், நேர்மையுடனும் நாணயத்துடனும் இருப்பதன் காரணமாக என்னைத் தேர்ந்தெடுத்திருப்பதாக 'இந்தியா டுடே' தெரிவித்தது.
கே: ஹூஸ்டனில் அமெரிக்கத் தபால்துறை தீபாவளி 'முதல்நாள் உறை' வெளியிட்டுள்ளதைப் பற்றி...
ப: பல மதத்தினருக்கும் அமெரிக்காவில் தபால்தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்து மதத்திற்குத் தபால்தலை வெளியிடப்படவில்லை. அமெரிக்க தேச அளவில் தீபாவளிக்காக ஒரு தபால்தலை வெளியிடச் செய்ய வேண்டுமென்று முயற்சித்தோம். இதுவரை கைகூடவில்லை. ஹூஸ்டன் அளவிலாவது செய்யலாம் என்பதற்காகச் செய்த முயற்சியால் தீபாவளியைக் கொண்டாடும் First Day Cover ஒன்று ஹூஸ்டன் தபால் நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கே: உங்களைக் கவர்ந்த மனிதர்கள் பற்றி..
ப: இங்கு மீனாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ள பியர்லேண்டின் மேயர் டாம் ரீட் (Tom Reid) அவர்கள். இங்கு கோயில்கட்டும் போது மேயராக இருந்தார். மீண்டும் தற்போது அவரே மேயராகப் பணியாற்றிவரும் அவர் என்னுடைய நெருங்கிய நண்பர். அவர் நாசாவில் பணியாற்றிய பொறியியல் வல்லுநர். நான் படித்த அதே டெக்சஸ் பல்கலையில் படித்தவர். ரின்ஸிங் வாங்டி (Rinzing Wangdi) ஹூஸ்டன் இந்திய தூதரக அதிகாரியாக 2001-ஆம் ஆண்டில் இருந்தார். அவரோடு இணைந்துதான் நான் 2000 ஆண்டு மிலேனியம் விழாவில் இணைத்தலைவராகப் பணி செய்தேன். அப்போது இந்தியாவிலிருந்து வந்த அரசியல்வாதிகளில் தற்போது மத்திய அமைச்சராக உள்ள கமல்நாத் எனது நண்பர். என்னை மிகவும் கவர்ந்தவர், கெட்டிக்காரர்.
கே: இறுதியாக, தென்றல் பத்திரிகையைப் பற்றி..
ப: அமெரிக்கத் தமிழர்களுக்கு தென்றல் ஒரு வரப்பிரசாதம். தென்றலில் நேர்காணல் வருவது என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது.
உமையாள் முத்து, கரு. மாணிக்கவாசகம் |
மேலும் படங்களுக்கு |
|
More
ஷேக் சின்ன காசிம், ஷேக் சின்ன பாபு சகோதரர்கள்
|
|
|
|
|
|
|