கிரிவலம், குருவலம் எங்கள் குடியிருப்பு
|
|
|
|
தூர்தர்ஷன் என்று சொன்னதுமே சிலருக்குச் சிரிப்பு வருவது தெரியும். பரவாயில்லை, அதுதான் முன்னோடி. மேலே படியுங்கள்.
1975-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று சென்னை தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஒரே சானல்தான். மாலையில் மட்டும்தான் தமிழில் ஒலிபரப்பு. அந்தக் காலத்தில் உ.ம. கண்ணன் என்பவர் நிகழ்ச்சிகளைப் புன்சிரிப்போடு தொகுத்து வழங்குவார். டி.வி. வாங்கினால் பையன் படிப்பு கெட்டுபோகுமென்று வீட்டில் வாங்கவில்லை, நானும் என் அண்ணனும் பக்கத்து வீட்டுக்குச் சென்று பார்ப்போம். அவர்கள் வீட்டு நாய்க்கு பயந்து பயந்து உள்ளே போவோம். மாலையில் பக்திப் பாடல்கள், தேச பக்தி பாடல்கள் ஒலிக்க நிகழ்ச்சிகள் தொடங்கும். 'வயலும் வாழ்வும்' விவசாய நிகழ்ச்சி. நகரத்தில் வாழ்பவர்களுக்கு அவ்வளவாக ரசிக்காது. அதன் ஆரம்பத்தில் அருமையான இசைத்துண்டு வரும். யாருடையதென்று பெயர் போட மாட்டார்கள், பிற்காலத்தில்தான் அது இசைஞானி இளையராஜா அமைத்த இசை என்று தெரியவந்தது. தொடர்ந்து கிராமியக் கலைகள் சுப்பு ஆறுமுகத்தின் வில்லுப்பாட்டுடன் சுவைபட இருக்கும். தமிழ் செய்திகள் மிகவும் பிரபலம். காரணம் ஹெச். ராமகிருஷ்ணன் மற்றும் ஷோபனா ரவி, நல்ல தமிழில் அற்புதமாக வாசிப்பார்கள். இதைத் தவிர ஆங்கிலச் செய்திகள் தேசிய ஒலிபரப்பாக இல்லாமல் சென்னையிலிருந்தே சசிகுமார், மற்றும் பி.சி. ராமகிருஷ்ணா போன்றோர் வாசிப்பார்கள். பி.சி. அவர்களை 'மே மாதம்', 'திருடா திருடா' மற்றும் பல தமிழ்ப் படங்களில், ஆங்கில மேடை நாடகங்களில் பார்த்திருப்பீர்கள்.
| 'எதிரொலி' நிகழ்ச்சியில் வாசகர் கடிதங்களுக்கு நிலைய இயக்குநர் பங்கேற்று பதில் அல்லது கருத்துக் கூறுவார். கடினமான கேள்விகளை அவர் சாமர்த்தியமாகக் கையாளுவது சுவாரசியமாக இருக்கும். | |
இந்தியில் சித்ரஹார் என்னும் சினிமாப் பாடல் நிகழ்ச்சி வட இந்தியாவில் மிகவும் பிரபலம். தமிழில் 'ஒளியும் ஒலியும்'. வண்ணத் தொலைக்காட்சி வந்த பிறகு மும்பை, கல்கத்தா, தில்லி நேயர்களிடையே ராமாயணம் வெகு பிரபலமானது. ஆனால் சென்னையில் மட்டும் 'ஒளியும் ஒலியும்' முதலிடம் வகிக்கும். 'எதிரொலி' நிகழ்ச்சியில் வாசகர் கடிதங்களுக்கு நிலைய இயக்குநர் பங்கேற்று பதில் அல்லது கருத்துக் கூறுவார். கடினமான கேள்விகளை அவர் சாமர்த்தியமாகக் கையாளுவது சுவாரசியமாக இருக்கும். அதேபோல் அடுத்த வார இறுதியில் என்ன தமிழ் திரைப்படம் என்று தெரிந்து கொள்ள முன்னோட்டம் நிகழ்ச்சியைப் பார்ப்போம். 'ஸ்போர்ட்ஸ் ரவுண்ட் அப்' மிகப் பிரபலமான ஒன்று. அதன் ஆரம்பத்தில் வரும் இசை துள்ளலாக இருக்கும். |
|
ஞாயிறு மாலைத் தமிழ்த் திரைப்படம் பல சமயங்களில் கேள்விப்பட்டிராத அல்லது நன்றாக ஓடாத படமாக இருக்கும். பிற்காலத்தில் ஞாயிறு பிற்பகலில் வேற்று மொழிப் படங்கள் வர ஆரம்பித்தன. சில படங்கள் மிக நன்றாக இருக்கும். சிறுவர்களுக்கான கண்மணிப் பூங்கா, வொண்டர் பலூன் போன்ற நிகழ்ச்சிகள் அற்புதமாக இருக்கும். கார்ட்டூன்கள் அதிகம் பார்த்திராத அந்த நாட்களில் அதை ஆவலுடன் எதிர்பார்த்து ரசிப்போம். புலவர் நன்னன் எளிய நடையில் அழகாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் தமிழ் கற்றுத் தருவார். நிலையத்தில் இருந்து கொண்டே ஒரு வகுப்பில் மாணவர்கள் முன் நிற்பது போல சொல்லிக் கொடுத்து கேள்வி எல்லாம் கேட்பார். சில அற்புதமான நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறார்கள். கிரேஸி மோகனின் எழுத்தில் காத்தாடி ராமமூர்த்தியின் "ஐயா அம்மா அம்மம்மா" என்னும் காமெடி நாடகம் என்னால் மறக்க முடியாத ஒன்று. பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் தகவல் நிரம்பிய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது, அழகிய தமிழில் பெயர் சூட்டப்பட்டது, நன்றாக தமிழ் பேசக் கூடியவர்கள் மட்டுமே நிகழ்ச்சிகளை வழங்குவது எனப் பல விஷயங்கள் எனக்குப் பிடிக்கும். ல, ள, ன, ண எழுத்துக்களை தப்புத்தப்பாக உச்சரிப்பதைப் போன்ற கொடுமைகள் அப்போது கிடையாது. வண்ண ஒலிபரப்பு இல்லாத காலத்தில், அடிக்கடி அவர்கள் தடங்கலுக்கு வருந்தினாலும், ஆரம்பகாலச் சென்னை தொலைக்காட்சியை என்னால் மறக்க முடியாது. சாம் வெங்கட், ஃபோல்ஸம், கலிஃபோர்னியா |
|
|
More
கிரிவலம், குருவலம் எங்கள் குடியிருப்பு
|
|
|
|
|
|
|