|
தடுமாறும் உலகப் பொருளாதாரச் சூழலில் ஆரம்பநிலை நிறுவனங்கள் பிழைப்பதும் தழைப்பதும் எவ்வாறு? (பாகம் - |
|
- கதிரவன் எழில்மன்னன்|நவம்பர் 2009| |
|
|
|
|
இதுவரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தற்போதைய பொருளாதாரப் புயலில் எப்படிப் பிழைப்பது, அதற்கும் மேலாக, தழைத்து மீண்டும் வளர்வது எப்படி என்றும், ஆரம்ப முதலீட்டார் எம்மாதிரி நிறுவனங்களில் முதலிட ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது பற்றியும் பலர் விசாரிக்கின்றனர். அந்தக் கேள்விகளும் அவற்றுக்கான என் விடைகளும் இங்கே இடம்பெறுகின்றன. இதுவரை, செலவுக் குறைப்பு, கவனக் கூர்மை, மற்றும் எண்ண மறுபரிசீலனை பற்றி விவரித்தோம். அடுத்து, மூலதனம் பெறும் மாற்று வழிகளைப் பற்றி ஆராய்ந்தோம். இப்போது பொருளாதார சூழ்நிலை தடுமாற்றத்திலிருந்து சற்று மீள ஆரம்பித்துள்ளதால் தழைப்பதற்கான செயல்முறைகளைப் பற்றித் தொடர்கிறோம்... *****
பொருளாதாரச் சூழ்நிலை தளிர் விடுகிறது என்று கூறினீர்களே? தேன் வந்து பாயுது காதினிலே! பிழைப்பதைத் தூக்கி உடைப்பில் போட்டு விட்டுத் தழைப்பதற்கு வாருங்கள். அதற்கான வழிமுறைகள் என்ன?
| புது நுட்பங்களையும் வசதிகளையும் பயன்படுத்தி, உங்கள் நிறுவனத்தையும், அதன் விற்பொருளின் பலனையும் வாடிக்கையாளர்களின் எண்ணத்துக்குச் சென்று சேர்க்க முடியும். | |
சற்றே பொருத்திரும் பிள்ளாய்! பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகள் வந்து கொண்டிருப்பது உண்மைதான். அதற்காக எச்சரிப்பைக் காற்றில் பறக்கவிட்டு தாம்தூமென்று செலவில் இறங்கி விடாதீர்கள்! வளர்ச்சி தொய்ந்து விடாமல் தொடருமா, எவ்வளவு வேகமாக வளரும், இன்னும் உள்ள அபாயங்களை (வணிகரீதி நில விற்பனை, தனியார் கடன்பளு போன்றவை) மீறி வளருமா என்று இன்னும் சரியாகப் புலப்படவில்லை என்பதால் இன்னும் சிறிது காலம் சற்று கவனமாக இருப்பது நல்லது.
மேலும், இக்கட்டுரை வரிசையின் ஆரம்பப் பகுதியொன்றில், ஒரு நிறுவனம் வெறுமனே பிழைத்திருப்பதில் பயனில்லை, தழைப்பதற்காகப் பிழைப்பதுதான் பலன் தருமென்று ஏற்கனவே கூறியிருந்தேன் அல்லவா? அதன்படி, இதுவரை பார்த்த வழிமுறைகளும் தழைப்பதற்காகத்தான் என்று வைத்துக் கொள்ள வேண்டும். சரி பரவாயில்லை. வழிமுறைப் பட்டியிலில் இருந்த மீதி விவரங்களை, தழைப்பதற்கான நோக்கத்திலேயே இனி விவரிக்கிறேன்.
சந்தைப்படுத்தல் துறைக்கு (marketing) முக்கியத்துவம் அளிப்பது:
ஸிஸ்கோ, இன்ட்டெல் போன்ற முன்னிலை நிறுவனங்கள், பொருளாதாரச் சூழ்நிலை தடுமாறும் போது வாணிபரீதியில் அதிக கவனம் செலுத்துகின்றன. ஏனெனில், ஒவ்வொரு காசாகப் பார்த்துப் பார்த்து செலவு செய்யும் வாடிக்கையாளர்களின் மனத்தில் அப்போது ஆழ்ந்து பதிந்தால், நிலைமை முன்னேற ஆரம்பிக்கும் போது அந்த மனப் பங்கு (mind share) அதிகரிப்பு, வணிகப் பங்கில் (market share) அதிகரிக்க உதவும். ஆனால் அதற்காக தாம்தூம் என்று செலவு செய்து பெரிய சப்தம் செய்ய வேண்டும் என்று அவசியமல்ல.
நீங்கள் அடைந்தே தீர வேண்டும் என்று எண்ணும் மிக முக்கிய வாடிக்கையாளர்கள் மனத்தில் பதிய எந்த வாணிப நுட்பங்களும், அணுகுமுறைகளும் (marketing techniques and approaches), செய்தே தீர வேண்டும் என்று ஆழ்ந்து யோசித்துச் செயல்பட வேண்டும். குவெரில்லாப் போர் வாணிப முறைகள் (கொரில்லா குரங்கு வாணிபம் அல்ல!) பல இப்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மின்னஞ்சல், வலைப்பூ (blogs), சமூக வலைமுறை (social networks), போன்ற புது நுட்பங்களையும் வசதிகளையும் பயன்படுத்தி, மிக அதிகச் செலவில்லாமலேயே உங்கள் நிறுவனத்தையும், அதன் விற்பொருளின் பலனையும் குறி வைத்த வாடிக்கையாளர்களின் எண்ணத்துக்குச் சென்று சேர்க்க முடியும். |
|
நிறுவனக் குழுவை மேம்படுத்துவது:
| வளர வேண்டுமானால் சில துணிவான, நன்னம்பிக்கையுள்ள மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கக் கூடும். | |
பொருளாதார நிலை தடுமாறும் போது, நிறுவனப் பிரச்சனை அதிகரித்தாலும், மற்ற நிறுவனங்களும் சங்கடமடைவதால், திறனுடையவர்களை உங்கள் நிறுவனத்துக்கு ஈர்த்துக் கொள்வது சற்று எளிதாகிறது. பால் திரியும் போது அதை வைத்து ரஸகுல்லா செய்துவிடுவது போல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்! நிறுவனங்கள் தடுமாற ஆரம்பிக்கும் போது அங்குள்ளவர்களில் மிகப் பிரமாதமான திறனுடையவர்கள் மாற்றிடத்தில் இன்னும் பாதுகாப்பிருக்குமா என்று சுற்றுமுற்றும் பார்க்க ஆரம்பிப்பார்கள். அப்போது அவர்களை நீங்கள் அணுகி, நல்ல வாய்ப்பளித்தால் அவர்கள் உங்களோடு சேர்ந்துகொள்ளச் சம்மதிக்கக் கூடும். (அதே காரணத்தினால், உங்கள் நிறுவனம் தடுமாற்றத்தில் இருந்தால், உங்கள் மேல்மட்ட திறனாளிகளைக் காப்பாற்றிக் கொள்வதில் வழக்கத்தை விட அதிக கவனம் செலுத்துவது அவசியமாகிறது).
சில தருணங்களில், நிறுவனங்கள் வலுக்கட்டாயத்தினால் தங்கள் திறன்வாய்ந்தவர்களையும் வெளியேற்றும் நிர்ப்பந்தமடைகிறார்கள். உதாரணமாக ஒரு நிறுவனம் தங்கள் வன்பொருள் (hardware) விற்பனையைத் தவிர்த்து மென்பொருள் மட்டும் செய்வதாகத் தீர்மானிக்கலாம். அப்போது வன்பொருள் திறனாளர்களை வெளியேற்றியே ஆக வேண்டும். உங்களுக்கு அத்தகைய வன்பொருள் திறனாளர் தேவையானால் அவர்களை ஈர்க்க முயற்சிக்கலாம். நன்றாகச் செயல்படும் ஒரு குழுவுக்குப் புதுத் தலைவர் வந்தால் அதைப் பிரமாதமாக செயல்படும் குழுவாக வளர்க்க வாய்ப்புள்ளது. குரங்கு கையில் பூமாலையா என்பது போல் குழுவைச் சிதறடித்து, நிதானமாக ஆனால் தடுமாற்றமின்றி மிதந்து செல்லும் படகை ஆட்டிக் கவிழ்க்கவும் கூடும் என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. புதுத் தலைவரை நியமிக்குமுன் அதைப்பற்றி ஆராய வேண்டும். மேலும், மாற்றத்துக்குக் காரணமில்லையென்றால் மாற்றாதீர்கள். இன்னொரு முறையில் பார்த்தால் வளர வேண்டுமானால் சில துணிவான, நன்னம்பிக்கையுள்ள (optimistic) மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கக் கூடும்.
புதுத் தலைவர் எவ்வாறு குழுவை மேம்படுத்தக் கூடும் என்று பார்ப்போம்: வெகுகாலமாக நிலையாக இருக்கும் குழுக்கள் உள்யோசனைகளிலேயே ஊறிவிடக் கூடும். மாற்றுக் கோணங்களில் எண்ணிப் பார்ப்பதற்குத் தயக்கமும், ஏன், பலத்த ஆட்சேபங்களும் கூட பாறாங்கல் சுவர்களாக எழுந்து புதுமைக்கு (innovation) தடையாகி விடக் கூடும். அந்நிலையில் ஒரு புதுத் தலைவர் பொறுப்பேற்றால், குழுவைச் சில அதிரடிகளுக்குள்ளாக்கி, அவர்களின் இறுகிவிட்ட அனுமானங்களுக்கு (ossified assumptions) எதிர்க் கேள்விகள் எழுப்பி, ஆராயப்படாமல் நிராகரிக்கப்பட்ட புது யோசனைகளுக்குப் புத்துயிரளித்து, வித்தியாசமான எண்ணங்களுக்கு உரம்போட்டு வளர்க்கக் கூடும்.
அது மட்டுமன்றி, புதுத் தலைவர்கள் புதிய திறன்கள் கொண்டவர்களாகவும் புது அணுகுமுறைகளை நிறுவனத்துக்கு அறிமுகம் செய்பவர்களாகவும் இருக்கக் கூடும். உதாரணமாக இக்கட்டுரையின் ஒரு முன்பகுதியில் கூறிய வணிகமுறையில் கவனம் செலுத்துவதை எடுத்துக் கொள்ளலாம். ஒரு சிறு நிறுவனத்தில் வணிகத் துறைக்கு புதிய உப அதிபரை (VP Marketing), அமர்த்தியவுடன், அவர் பழைய நுணுக்கங்களை உதாசீனம் செய்து, மின்வலை சார்ந்த, வலைப்பூ, தேடல் திறன் மேலாக்கம் (Blogs, Search Engine Optimization) போன்ற நவீன அணுகுமுறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கலானார். விளைவு? மாதச் செலவு பாதியாகக் குறைந்தது. அதனால் வாணிகம் பாதிக்கப்பட்டதா? அதுதான் இல்லை! மாறாக, பலவித வணிக அளவுக்குறியீடுகளும் (marketing metrics), உள்நோக்கி வரும் விற்பனை வாய்ப்புக்களும் முன்பைவிட வெகுவாக அதிகரித்தன! இந்த மாதிரியான கிட்டக் கூடிய அனுகூலங்களையும், மாறாக நடக்கக் கூடியப் பிரதிகூலங்களையும் நன்கு யோசித்துப் பார்த்து விட்டு, மாற்ற வேண்டிய குழுத் தலைவர்களை மாற்றுங்கள்.
தடுமாற்றத்திலிருந்த பொருளாதார நிலை சற்றுச் சீராகிக் கொண்டிருக்கும் இந்த மறுமலர்ச்சிக் காலத்தில் தழைப்பது எப்படி, எந்த மாதிரியான வாய்ப்புக்கள் வர ஆரம்பித்துள்ளன என்று அடுத்து மேலும் விவரிப்போம்.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|
|