சந்தியா சந்திரசேகரன் இசை அரங்கேற்றம் மிச்சிகன் தமிழ்ச் சங்க விழா கலிஃபோர்னியாத் தமிழ்க் கழகம் பத்தாவது ஆண்டு விழா சின்மயா மிஷன் ஆல்ஃபரட்டா தமிழ் மையம் நான்காம் ஆண்டு நிறைவு விழா மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் ‘பிரம்மரிஷி' நாடகம் நிஷா பலராமன் நாட்டிய அரங்கேற்றம் வித்யா தம்பியய்யா நடன அரங்கேற்றம் சிகாகோ ‘பரதம்' வழங்கிய நாட்டியக் காட்சி மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: ஈஸ்டர் முட்டை வேட்டை டொரொண்டோவில் திருவையாறு. ஹூஸ்டன் பாரதி கலைமன்றம் தமிழ்ப் புத்தாண்டு விழா
|
|
|
|
2009 ஏப்ரல் 25-26 நாட்களில் பெர்க்கலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் தனது ஐந்தாவது மாநாட்டை பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தியது. இருபதுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்களோடு விரிகுடாப் பகுதித் தமிழ் ஆர்வலர்களும் வந்திருந்தனர்.
‘பாண்டிநாடு' என்னும் பொதுத்தலைப்பின் கீழ் பதினொரு கட்டுரைகள் படிக்கப்பட்டன. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அன்னி மோனியஸின் கட்டுரை, இலக்கியத்தில் மதுரை பெறும் இடத்தைப் பற்றியும், அரசன்-புலவன்-சமயம் இடையேயான உறவைப் பற்றியும் அமைந்திருந்தது. கன்கார்டியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லெஸ்ஸி ஓர், பாண்டிய அரசர்கள் ஆயிரம் ஆண்டு காலமாகக் கல்வெட்டுக்களில் எந்த மாதிரிக் கட்டுமானத்தை எழுப்பியிருக்கிறார்கள் என்று காட்டி, அதில் தங்களைப் புராணச் செய்திகளுடனும் தமிழ்ப் பழமையுடனும் இணைப்பதைச் சுட்டினார். லண்டன் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்பன் ப்ரான்ஃபுட், மதுரையை தலைநகராகக் கொண்டு பிற்காலத்தில் ஆண்ட நாயக்க மன்னர்கள் பாண்டிய மன்னர்களோடு தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்வதன் மூலம் தங்கள் தமிழ்நாட்டுத் தொடர்பை நிலைப்படுத்திக் கொள்கிறார்கள் என்று காட்டினார். இங்கிலாந்திலிருந்து வந்திருந்த தமிழ் மொழிபெயர்ப்பாளர் லட்சுமி ஹோம்ஸ்ட்ரோம், தமிழ் இலக்கியத்தில் நகரம் பற்றிப் பேசும் போது சிலப்பதிகாரத்திலும் புதுமைப்பித்தனிலும் வரும் மதுரையையும், அவை முறையே புகாரிலிருந்தும் சென்னையிலிருந்தும் வேறுபட்டு இருப்பதையும் சுட்டிக் காட்டினார். நகரம் தமிழ் இலக்கியத்தில் புதிய திணைக்களமாகுமா என்ற கேள்வியை எழுப்பி, புலம்பெயர் இலக்கியத்தில் மேலை நகரங்கள் பெறும் இடத்தைக் காட்டினார்.
டேவிஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அர்ச்சனா வெங்கடேசன், திருநெல்வேலி மாவட்டத்து ஆழ்வார் திருநகரியில் அரையர் சேவை நிகழ்த்துவதில் தொடரும் பாரம்பரியக் கூறுகளையும், சென்னையில் அது தற்காலத்தில் பெறும் புதிய கூறுகளையும் காட்டினார். பெர்க்கலி கலிபோர்னியா பல்கலையைச் சேர்ந்த கீதா பை, மதுரை மீனாட்சி கோயிலில் கொண்டாடப்படும் மார்கழி நோன்பை விவரித்து திருமலை நாயக்கர் அதைத் துவக்கி வைத்து ஆண்டாளின் திருவெம்பாவைப் பாடலுக்கும் நோன்புச் சடங்குகளுக்கும் தொடர்பு ஏற்படுத்தியதைக் காட்டினார்.
வெஸ்லியன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன், ராமநாதபுரச் சீமையை ஆண்ட பாஸ்கர சேதுபதியைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட ஒரு சுர ஜதிப் பாடலை அபிநயம் பிடித்துக் காட்டினார். சேதுபதி தேவதாசி நடனத்திற்கு அரண்மனையில் ஆதரவு தரவில்லை என்பதையும் குறிப்பிட்டார்.
கனடாவிலிருந்து வந்த பிருண்டா பெக், கொங்குநாட்டுக் காவியமான அண்ணன்மார் கதையில் விஷ்ணுவுக்கு உள்ள இடத்தையும், சோழரோடு இருந்த பகைமையையும் விளக்கினார். அண்ணன்மாரின் கதை தங்கை மதுரை மீனாட்சியை நினைவுபடுத்துவது பற்றியும் குறிப்பிட்டார். இந்தக் காவியத்தை இவர் தமிழ் தோல்பாவைக் கூத்தையும் ஓவிய மரபையும் பிரதிபலிக்கும் வகையில் ஓர் உயிரோட்டப் படமாக (Animated Film) படைத்துக் கொண்டிருக்கிறார். அதன் சில காட்சிகளைக் காட்டினார். |
|
பெர்க்கலி கலிபோர்னியா பல்கலையின் லெயின் லிட்டில், பழனியோடு தொடர்புடைய சித்தர் போகரின் படைப்புகள் பற்றியும் அவை அறிவியல் கண்டுபிடிப்புகளாகக் கருதியவை பற்றியும் பேசினார். அதே பல்கலைக்கழகத்திலிருந்து ஜெனிஃபர் கிளேர், பாட்டுடைத் தலைவன் என்ற கருத்தாக்கம் சங்ககால அகப்பாடலிலிருந்து கோவைப்பாடலில் எப்படி மாற்றம் பெற்றது என்று காட்டினார்.
அதே பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியரான சுப்பராயலு பாண்டிநாட்டுக் கல்வெட்டுக்களில் மன்னர்கள் தங்களை சமஸ்கிருத மரபில் வரும் புராணக் கதைகளோடு இணைத்துக் கொள்வது பற்றியும் சமஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்துவது பற்றியும் வேதத்தில் வல்லவர்களுக்கு நிலக்கொடை கொடுத்தது பற்றியும் சான்றுகள் காட்டிப் பேசினார்.
சுவிட்சர்லாந்திலிருந்து வந்திருந்த கே. கல்யாணசுந்தரம், தமிழ் இலக்கிய நூல்களை மின்வடிவில் தொகுத்து வைக்கும் மதுரைத் திட்டத்தின் தோற்றம், செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் பற்றி விளக்கினார்.
மாநாட்டின் இறுதியில் லெஸ்ஸி ஓர், யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இ. அண்ணாமலை ஆகியோர் கட்டுரைகளைப் பற்றிக் கருத்துரை வழங்கினார்கள். ஓர், பல கட்டுரைகளில் பேசப்பட்ட அரசு-மொழி-பண்பாடு இவற்றுக்கிடையே காலந்தோறும் இருந்து வரும் தொடர்பு, தொடர்ச்சியும் மாற்றமும் தமிழ்க் கலை-பண்பாட்டில் இணைந்துவரும் தன்மை பற்றி எடுத்துரைத்தார். அண்ணாமலை மதுரை, தமிழ் இலக்கியத்தையும் பண்பாட்டையும் பார்க்க ஒரு தனிக் கோணத்தைத் தருகிறது என்று கூறி, படிக்கப்பட்ட கட்டுரைகள் எப்படி இதற்குச் சான்றுகள் தருகின்றன என்று விளக்கினார். இவை காலந்தோறும் தம்மைப் புதுப்பித்துக் கொள்கின்றன என்று சொல்வது பொருந்தும் என்றார்.
மாநாட்டின் முடிவில் கல்யாணசுந்தரம், சுப்பராயலு, அண்ணாமலை ஆகியோருக்குத் தமிழ்ச்சேவையைப் பாராட்டித் தமிழ்ப் பீட விருதுகள் வழங்கப்பட்டன.
பெர்க்கலிப் பேராசிரியர்கள் ஜார்ஜ் ஹார்ட், கௌசல்யா ஹார்ட் ஆகியோரின் கடின உழைப்பும், அவர்தம் மாணவர்களின் ஈடுபாடும் தமிழ் மாநாட்டை மனதில் நிற்கும் நிகழ்ச்சியாக ஆக்கின.
பேரா. இ. அண்ணாமலை, யேல் பல்கலைக்கழகம் |
|
|
More
சந்தியா சந்திரசேகரன் இசை அரங்கேற்றம் மிச்சிகன் தமிழ்ச் சங்க விழா கலிஃபோர்னியாத் தமிழ்க் கழகம் பத்தாவது ஆண்டு விழா சின்மயா மிஷன் ஆல்ஃபரட்டா தமிழ் மையம் நான்காம் ஆண்டு நிறைவு விழா மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் ‘பிரம்மரிஷி' நாடகம் நிஷா பலராமன் நாட்டிய அரங்கேற்றம் வித்யா தம்பியய்யா நடன அரங்கேற்றம் சிகாகோ ‘பரதம்' வழங்கிய நாட்டியக் காட்சி மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: ஈஸ்டர் முட்டை வேட்டை டொரொண்டோவில் திருவையாறு. ஹூஸ்டன் பாரதி கலைமன்றம் தமிழ்ப் புத்தாண்டு விழா
|
|
|
|
|
|
|