Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2006 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
விளையாட்டு விசயம்
இதுல கொஞ்சம் அதுல கொஞ்சம்
- சேசி|மே 2006|
Share:
Click Here Enlargeஒரு விளையாட்டை நன்றாக ஆட வராதென்றால் சீக்கிரமே தோற்று ஆட்டத்தை முடித்து வேதனையிலிருந்து தப்பலாம்–இந்த விளையாட்டைத் தவிர! "ஆட வரா தென்றால் இதிலிருந்து விலகி இருப்பதே நல்லது" என்று கோல்·ப் பற்றி வேடிக்கை யாகச் சொல்வார்கள். இந்த 'வேதனை'யைச் சமீபத்தில் அனுபவித்தவர் கோல்·ப் சக்கரவர்த்தியான டைகர் வுட்ஸ். மாஸ்டர்ஸ் கோப்பையை ஐந்து முறை கைப்பற்றிய பெருமையை அடைய நினைத்திருந்த அவர் நடந்து முடிந்த போட்டியில் மூன்றாம் இடத்தைத்தான் எட்ட முடிந்தது. ஆறு முறை மாஸ்டர்ஸ் கோப்பையை வென்ற ஜாக் நிகல்ஸின் சாதனைக்கு நிகராகச் செய்ய டைகர் வுட்ஸ் இன்னும் காத்திருக்க வேண்டும். ஆட்ட முடிவில் விரக்தியில் டைகர் "I putted like a spaz" என்று பேட்டியளிக்க அது ஒரு பிரச்சினையாக உருவெடுத்தது. வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் அவர் பேட்டியை வெளியிடும்போது 'spaz' என்ற வார்த்தையைத் தவிர்த்து வெளி யிட்டனர். ஆனால் அயல் நாடுகளிலிருந்தும், ஒலிம்பிக்ஸ் வீரர்கள் ஊனமுற்றோர் பிரிவிலிருந்தும் அதற்கு பலத்த எதிர்ப்பு. பின்னர் டைகர் மன்னிப்புக் கேட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

******


ஆயிற்று, பேஸ்பால் சீசன் துவங்கிவிட்டது. ஆண்டுதோறும் ஏப்ரலில் இருந்து செப்டம்பர் வரை நடக்கும் இந்த மேஜர் லீக் சீசனில் விளையாடும் 30 அணிகளும் தலா 162 ஆட்டங்கள் ஒவ்வொரு வருடமும் ஆடுகின்றன. இந்த சீசன் உலக வரிசை (world series) ஆட்டங்களுடன் அக்டோபரில் முடிவடையும். அமெரிக்காவின் பொழுதுபோக்கு (American pastime) என்று கருதப்படும் இந்த விளையாட்டு பார்பக்யூக்கள் (barbecues), பார்க்கிங் லாட் பார்ட்டிகள் (tailgate parties) என்று கேளிக்கைகளுக்குப் பெயர் போனது. ஸ்டெராய்ட் உபயோகம் பற்றி பால்கோ நிறுவனத்தின்மேல் நடக்கும் விசாரணை களால் ஒரு குழப்ப நிலை நிலவுகிறது. இதன் நடுவில் சிக்கிக் கொண்டிருக்கும் பாரி பாண்ட்ஸ் 709-வது ஹோம் ரன் அடித்துள்ளார். அதிக ஹோம் ரன்கள் அடித்த பேப் ரூத்தின் சாதனையை எட்டித் தொட இன்னும் 5 ரன்கள்தான் பாக்கி. தன்மீதுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து மீண்டு வந்து இந்தச் சாதனையைச் செய்து தன் பெயரைச் சரித்திரத்தில் தக்க வைத்துக் கொள்வாரா என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது.

******


நடந்து முடிந்த ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டுக்களில் ·பிகர் ஸ்கேட்டிங் பிரிவில் அனைவர் கவனமும் மிஷல் குவான் பக்கமும், சாஷா கோஹன் பக்கமும் இருக்க, கிம்மி மைஸ்னர் என்ற 16 வயதுப் பெண்ணைப் பற்றி யாரும் பேசவில்லை. அவர் ஜிவ்வென்று குதித்து, காற்றில் மூன்று முறை சுழன்று கீழிறங்கும் ட்ரிபில் ஆக்ஸலை யாரும் சாதிக்காத விதம் இரண்டு முறை (double triple axel) செய்தும் ஏனோ யாரும் அவரைக் கண்டுகொள்ள வில்லை. ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து நடந்த உலக ·பிகர் ஸ்கேட்டிங் போட்டிகளில் சிறப்பாக ஆடி முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார் கிம்மி. இப்போது அவரைப் பற்றி எழுதாத பத்திரிகைகள் இல்லை! போட்டி நடந்த மறுநாள் மாத்திரம் அவர் 26 பேட்டிகள் கொடுத்திருக்கிறார்.

16 வயதுக்கே உரித்தான உற்சாகத்துடன் பேசும் அவரைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது நமக்கும் அவரது உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. அமெரிக்காவின் அடுத்த நட்சத்திரமாக அவர்தான்.

******
ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற இந்தியா பதக்க எண்ணிக்கையில் நான்கா வது இடத்தைப் பெற்றிருக்கிறது. மொத்தம் 71 நாடுகள் பங்கெடுத்துக் கொண்டன. இந்தியா 22 தங்கப் பதக்கங்களை வென்றிருக் கிறது. 2002 காமன்வெல்த் போட்டிகளிலும் இதே நான்காவது இடத்தைத்தான் பெற்றது. இந்தியாவைச் சேர்ந்த சமரேஷ் ஜங் இந்த வருட ஆட்ட நாயகராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். 100 மீட்டர், 50 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டிகளில் தனியாகவும், குழுவினருடன் சேர்ந்தும் மொத்தம் 5 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெங்கலப் பதக்கங் களைக் குவித்திருக்கிறார்.

அடுத்த காமன்வெல்த் விளையாட்டுகள் 2010-ல் டெல்லியில் நடக்கவிருக்கின்றன. இந்த வருட நிறைவு விழாவில், இந்தியா மெல்போர்ன் நகரையே கலக்கியிருக்கிறது. 2010 விளையாட்டுகளின் அறிமுகமாக ஒரு பெரிய பாலிவுட் நிகழ்ச்சியை ஐஸ்வர்யா ராய், லாரா தத்தா, ராணி முகர்ஜி மற்றும் பல கலைஞர்களை வைத்து நடத்திப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். பாங்க்ரா நடனம், நாட்டுப்புற இசை, நடனம் என்று மேடையேற்றியதோடு நிறுத்தாமல் இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரச் செழிப்பு, இந்தியாவின் பெருமை மிக்க பழமை தோய்ந்த கலைகள், கட்டிடங்கள் என்று பலவற்றை வீடியோ திரையில் காட்டி ஆவலைத் தூண்டி விட்டிருக்கிறார்கள்.

******


வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்று சிறுவயதில் அம்புலி மாமாவில் படித்தது ஞாபகம் வருகிறது. மான்ட்டி கார்லோவில் நடந்து முடிந்த மாஸ்டர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ர·பேயல் நடால், ராஜர் ·பெடரரை வென்று தொடர்ந்து நான்கு முறை அவரைத் தோற்கடித்த பெருமையைக் கைப்பற்றியிருக்கிறார். டென்னிஸ் களத்தில் மற்ற ஆட்டக்காரர்களைவிட 2000 புள்ளிகள் முன்னணியில் இருக்கும் ராஜரை இந்த வருடம் மட்டும் இரண்டு முறை வென்றிருக்கிறார். களிமண் தளத்தில் நடக்கும் ஆட்டங்களில் தனக்கு நிகர் யாருமில்லை என்பதை நிலைநாட்டி இருக்கிறார். அவரது ஆட்டத்தில் இருக்கும் முதிர்ச்சியைக் கவனிக்கும்போது அவருக்கு வயது 19-தான் என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி யிருக்கிறது. களிமண் தளத்தில் நடக்கும் ·பிரஞ்சு ஓப்பன் கோப்பையை எப்படி யாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று ஆர்வத்துடன் காத்திருக்கும் ராஜருடன், நடால் மீண்டும் மோதுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர் பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

******


இறுதியாக, நினைத்ததைச் சாதிக்கும் மனோதிடத்தைப் பற்றிக் கூறியாக வேண்டும். அலாஸ்காவில் ஆன்கரேஜில் (Anchorage) இருந்து நோம் (Nome) வரை 1,100 மைல் நீளப் பனிப்பாதையில் நடக்கும் 72 பேர் பங்கு கொண்ட இடிடாராட் (Iditarod) எனப்படும் பாப் ஸ்லெட் போட்டியில் ரேசல் ஸ்க்டோரிஸ் (Rachael Scdoris) என்ற பெண்மணி 56-வதாக வந்திருக்கிறார். அவருக்குச் சில அடி தொலைவு மாத்திரமே, அதுவும் மங்கலாகத் தெரியும் கண் பார்வைதான் என்பது குறிப்பிடத் தக்கது. பல வளைவுகளும், பயங்கரமான பள்ளங் களும் கொண்ட இந்தப் பாதை கண்பார்வை நன்றாகத் தெரிபவர்களுக்கே அபாயகர மானது. இந்தப் போட்டியை முடிக்க அவருக்குப் பன்னிரண்டு நாட்கள் ஆகியிருக்கின்றன. போட்டியை நடத்து பவர்களுக்கும், பங்கெடுத்தவர்களுக்கும் ரேசல் போட்டியை முடிப்பாரா என்ற சந்தேகம் இருந்திருக்கிறது.

2004-ல் இருந்து இந்தப் போட்டியில் பங்கெடுத்துக் கொள்ள முயன்றிருக்கிறார் ரேசல். 2004-ல் அவருக்கு அனுமதி மறுத்துவிட்டனர். சென்ற வருடம் அவரது நாய்கள் நோய்வாய்ப்பட்டதால் அவரே பங்கெடுக்கவில்லை. இந்த ஆண்டு விடாப் பிடியாகப் போட்டியில் கலந்து கொண்டு பன்னிரண்டு நாட்கள் நாய்களையும் பராமரித்து, கடினமான பாதையைக் கடந்து, பத்திரமாக இவர் முடிவை எட்டியது தன்னம்பிக்கையின் உச்சம்.

சேசி
Share: 
© Copyright 2020 Tamilonline