|
தடுமாறும் உலகப் பொருளாதாரச் சூழலில் ஆரம்பநிலை நிறுவனங்கள் பிழைப்பதும் தழைப்பதும் எவ்வாறு? பாகம் - 5 |
|
- கதிரவன் எழில்மன்னன்|ஜூன் 2009| |
|
|
|
|
ஆரம்பநிலை நிறுவனங்கள் தற்போதைய பொருளாதாரப் புயல் சூழ்நிலையில் எப்படி பிழைப்பது என்றும், அதற்கும் மேலாக, தழைத்து மீண்டும் வளர்வது எப்படி என்றும், ஆரம்ப முதலீட்டாளர் எம்மாதிரி நிறுவனங்களில் முதலிட ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது பற்றியும் சமீப காலமாக என்னிடம் பலர் விசாரித்துள்ளார்கள். அவர்கள் எழுப்பியுள்ள பல கேள்விகளும் அவற்றைப் பற்றிய என் கருத்துக்களும் இப்பகுதியில் இடம்பெறுகின்றன. சென்ற பகுதிகளில், மூலதனம் கிடைக்கும் வரை பிழைத்திருப்பது ஆரம்பநிலை நிறுவனங்களின் முதல், அடிப்படை விதி; ஆனால், வெறுமனே பிழைத்திருப்பதில் ஒரு பயனுமில்லை, மீண்டும் பொருளாதார நிலை அனுகூலமாக ஆரம்பிக்கும் போது, மூலதனத்தை ஈர்க்கும் வகையில் மீண்டும் தழைத்து வளரத் தயாராக இருக்கும் முறையில் செயல்பட வேண்டும் என்று பார்த்தோம். அதற்கான செயல்முறைப் பட்டியலில் இதுவரை, செலவுக் குறைப்பு, கவனக்கூர்மை ஆகியவை பற்றி விவரித்துள்ளோம். இனி வரும் பகுதிகளில் மற்றக் குறிப்புக்களைப் பற்றி விவரிப்போம்.
அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த செயல்முறை என்ன?
அடுத்து மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் கருதுவது, "வணிக மறுபரிசீலனை, எண்ணங்களை மாற்றல்" (rethinking business and assmptions).
நல்ல நேரங்களில் நிறுவனங்கள் தாங்கள் போன போக்கிலேயே போவது எளிதாக உள்ளது. நாள் போகப்போக அத்தகைய நடவடிக்கை இறுகிவிடுகிறது. கடினமான முடிவுகள் தள்ளிப்போடப் படுகின்றன. கைநிறையக் காசு வந்துகொண்டே இருக்கும் போது மாற்றுக் கோணங்கள் எதற்கு?
| நிலைமை சற்றுச் சரியில்லை என்னும் போதுதான் பெரும்பாலான சிறுநிறுவனங்களும் செய்வதையே செய்து கொண்டிராமல் சற்று மூச்செடுத்துக் கொண்டு சரியாகச் செய்து கொண்டிருக்கிறோமா, என்ன மாற்றங்கள் வேண்டும் என்று நினைத்துப் பார்க்கின்றன. | |
"உடையாத ஒன்றைச் சரிப்படுத்த முயலாதே" ("if it ain't broke, don't fix it") என்பதே வேதவாக்காகி விடுகிறது. வேறு விதமான அணுகுமுறைகள் அறவே அறுத்து எறியப்பட்டு விடுகின்றன. யாராவது ஒருவர் மாற்றுக் கோணங்களைப் பற்றிக் கூறத் தலையெடுத்தால் போதும், ஆயிரம் குரல்கள் எதிராக எழுந்து அவரை அழுத்திவிடும், இல்லை துரத்தியே விடும்!
பெரிய நிறுவனங்களில் இந்த நோய் மிகத் தீவிரமாக ஆக்கிரமித்துள்ளது. முன்னொரு கட்டுரையில் நான் ‘சிறுபுதுமை, பெரும்புதுமை' பற்றி விளக்கியிருந்தேன். பெருநிறுவனங்களில் பெரும்புதுமை செய்வது மிகக் கடினமாவதற்கு இந்த இறுகிப்போன அணுகுமுறையும் ஒரு காரணம். (ஆப்பிள், 3M போன்ற ஒரு சில நிறுவனங்களைத் தவிர்த்து.)
சமீப காலத்தில் இந்த நோய்க்கு இரையான நிறுவனம் ஸன் மைக்ரோஸிஸ்டம் (Sun Micro). ஸன் முற்காலத்தில் சிலிக்கான் க்ராஃபிக்ஸையும் (SGI), டிஜிட்டல் எக்விப்மெண்ட்டையும் (DEC) இதே காரணத்தால் மூழ்கச் செய்தது வேறு விஷயம். அவர்கள் மற்றவர்களுக்குக் கற்பித்த பாடத்தை அவர்களே உணராமல், டாட்-காம் கொப்புளத்தால் வீங்கிய நிறுவனத்தை உடனே மாற்றிச் சீராக்காமல், மென்பொருளை எப்படி விற்றுச் சம்பாதிப்பது என்று புரியாமல், சேவை வரவை எப்படி அதிகரிப்பது என்று தெரியாமல், கணினிப் பெட்டிகளையே விற்றுச் சம்பாதிக்க முயன்று, இப்போது ஆரக்கிள் (Oracle) நிறுவனத்தால் வாங்கப்பட உள்ளது!
ஸன் மட்டுமல்ல. மைக்ரோஸாஃப்ட்டையும் (Microsoft) கூட இதற்கு உதாரணமாகக் கூறலாம். கூகிள் (Google) என்னும் பெரும்புயலை எப்படிச் சமாளிப்பது என்று அந்நிறுவனம் தத்தளிக்கிறது. தன் வரலாற்றிலேயே முதன்முறையாக வரவு முந்தைய வருடத்தைவிடக் குறைந்த நிலையில் உள்ளது. மைக்ரோஸாஃப்ட் தன் வழிமுறைகளைத் தேவையான அளவு துரிதமாக மாற்றிக் கொள்ள முடியுமா? பார்க்கலாம்.
இந்த அபாயம் பெருநிறுவனங்களுக்கு மட்டுமல்ல. துரிதமாகச் செயல்படும் என்று நம்பப்படும் ஆரம்பநிலை நிறுவனங்களுக்குந்தான். நானே இதை முன்னிலையில் நின்று கவனித்துள்ளேன், அந்தப் பாடத்தையும் உணர்ந்துள்ளேன்.
நிலைமை சற்றுச் சரியில்லை என்னும் போதுதான் பெரும்பாலான சிறுநிறுவனங்களும் செய்வதையே செய்து கொண்டிராமல் சற்று மூச்செடுத்துக் கொண்டு சரியாகச் செய்து கொண்டிருக்கிறோமா, என்ன மாற்றங்கள் வேண்டும் என்று நினைத்துப் பார்க்கின்றன. முன்னொரு முறை நான் குறிப்பிட்டிருந்தது போல், ஷேக்ஸ்பியர் கூட "துன்பநிலையின் பலன்கள் இனிமையானவை" (Sweet are the uses of adversity) என்று கூறியுள்ளார் அல்லவா? அது இந்தத் தருணத்துக்கும் மிகப் பொருத்தமானது. |
|
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் கூட "வித்தியாசமாக நினை" (think different) என்ற கோஷத்தை எழுப்பினார். அந்த வழியில் சென்ற ஆப்பிள், தன்னைக் கணினி நிறுவனமாகவே எண்ணிக்கொண்டு வீண் போய்விடாமல், நுகர்வோர் மின்சாதன (consumer electronic devices) நிறுவனமாகப் புதுப்பித்துக் கொண்டுவிட்டது! சமீபத்தில், மிகக் கடினமான பொருளாதார நிலையிலும் கூட வருமானத்தை அதிகரித்துக் காட்டி "சும்மா அதிருதில்ல!" என்று ரஜினி ஸ்டைலில் காட்டி நிதித்துறை நிபுணர்களை அதி ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆரம்பநிலை நிறுவனங்களும் அப்படியே தங்கள் எண்ணங்களையும் வணிகப் போக்கையும் பரிசீலித்து மாற்றிக்கொள்ள முடியும், மாற்றிக்கொள்ள வேண்டும். இந்தக் கடினத் தருணத்தை, மாற்றத்தால் வரும் முன்னேற்றத்துக்கு வாய்ப்பாக ஆக்கிக்கொள்ள வேண்டும். நல்ல நேரத்தில் எடுக்க முடியாத கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
கையில் (அதாவது வங்கியில்) ஒரு வருடத்துக்காவது காசு இருந்தால் மாற்றங்களை அமுலாக்குவது எளிதாகிறது. இல்லாவிட்டாலும், மாற்றங்கள் நிறுவனம் பிழைத்திருப்பதற்கே அத்தியாவசியமாகிவிடுவதும் சகஜந்தான். இத்தகைய பல மாற்றங்கள் மீண்டும் வளர ஆரம்பிக்கும்போது உதவக்கூடும். உதாரணமாக, சில நிறுவனங்கள் வேகத்துக்காக அமெரிக்காவில் மட்டுமே ஆராய்ச்சி மற்றும் பொறியியல் குழு வைத்திருப்பார்கள். பணக்கஷ்டம் வரும்போதுதான் செலவு குறைந்த இடங்களில் பொறியியல் கிளை ஆரம்பிக்கிறார்கள். ஆனால், அத்தகைய கிளை நிறுவனம் மீண்டும் தழைத்து வளர ஆரம்பிக்கும்போது பொறியியலுக்கும், வாடிக்கையாளர் சேவைக்கும் அடித்தளமாக அமைந்து பெரும் பக்கபலமாக உதவும்.
அடுத்த பகுதியில் சில வணிகரீதி மாற்றங்களுக்கான உதாரணங்களைக் காண்போம்.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|