வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் புத்தாண்டு விழா TAGDVயின் சித்திரைத் திருவிழா லேக் கவுன்டித் தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டு விழா டல்லாஸ் ஹிந்து ஆலயம் தமிழ்க் கலை விழா உதவும் கரங்கள் கலாட்டா'2009 தென் கலிபோர்னியா தமிழ் மன்றம் தமிழ் புத்தாண்டு விழா வாஷிங்டன் சிவாஜி கணேசன் கலைமன்ற 15ம் ஆண்டு விழா ஸ்ரீ லலித கான வித்யாலயா மும்மூர்த்திகள் விழா சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சான் டியேகோவில் இந்திய இசை நடன விழா இதயம் நனைத்த இறைவனின் திருமணம். வித்யா சுப்ரமணியம் கர்நாடக இசை செயல்முறை விளக்கம் மிச்சிகன் தமிழ்ச் சங்கம் குழந்தைகளுக்கான போட்டிகள் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் பொம்மலாட்டம் நூறாவது நாள் விழா புறநானூறு சிறப்பு இலக்கியக் கூட்டம்
|
|
இரண்டாவது அமெரிக்கத் தமிழ் நாடக விழா |
|
- பாரதி|மே 2009| |
|
|
|
|
2009 மார்ச் 21, 22 தேதிகளில் ஹூஸ்டன் பாரதி கலை மன்றம், தமிழ் நாடகக் கூட்டமைப்பினரோடு ஏற்பாடு செய்திருந்த இரண்டாவது அமெரிக்கத் தமிழ் நாடக விழா மிகச் சிறந்த முயற்சி. பாரதிதாசனின் “தமிழுக்கும் அமுதென்று பேர்” பாடலுடன் வெகு அழகாகத் தொடங்கியது. இனி நாடகங்களைப் பற்றிப் பார்க்கலாம்:
ஹூஸ்டன் மீனாட்சி தியேட்டர்ஸ் வழங்கிய ‘தனிக்குடித்தனம்' எழுபதுகளில் மயிலாப்பூரிலும், திருவல்லிக்கேணியிலும் சக்கைப் போடுபோட்ட மெரினாவின் நாடகம்; அமரர். பூர்ணம் விஸ்வநாதன் குழுவின் நடிப்பால் மேலும் பிரபலமடைந்த நாடகம். நாடகத்தின் மையக்கருத்து தற்காலத்தில் செலாவணியாகத ஒன்று. என்றாலும், ஒரு பழைய நாடகத்தை இன்றைய தலைமுறைக்கு அளிப்பது மற்றும் அமரர் பூர்ணம் விஸ்வநாதனுக்கு அஞ்சலி செலுத்துவது போன்ற சிறந்த நோக்கங்களுக்காக இந்நாடகத்தை நாம் ஏற்கலாம். ஆனால் இதே காரணங்களுக்காக இந்நாடகத்தை வழங்குவது பெரும் சவால் என்பதை மீனாட்சி தியேட்டர்ஸ் உணர்ந்திருக்க வேண்டும்.
மிகச்சில பாத்திரங்கள், எளிய நகைச்சுவை கலந்த வசனங்கள், பெரும்பாலும் பாத்திரத்தை உணர்ந்து நடித்த நடிகர்கள், காட்சி மாற்றங்களினூடே ஒலித்த அக்காலப்பாடல்கள் ஆகியவை நிறைகள். சாரநாதன், விஸ்வநாதன், துப்பில் நரசிம்மன், லலிதா, விஜயா, ப்ரியா ஆகியோர் பாத்திரத்தை உணர்ந்து, சிறப்பாக நடித்தனர்.
ஒப்பனை, மேடையமைப்பு போன்றவற்றில் அக்கறையின்மை தெரிந்தது. 70களில் நடக்கும் நாடகம் போடும்போது, அதற்குரிய உடை, பாவனையும் ஒருங்கே எடுத்தாளப்பட்டிருக்க வேண்டும். நாடகமாக்கம், மூல நாடகத்திலிருந்து மாற்றப்பட்டிருந்தது பல காட்சிகளில் தெரிந்தது. அத்திம்பேர் பாலு திடீரென்று கோபப்படும் காட்சி காரண காரியமின்றி இருந்தது. அதேபோல மூலநாடகத்தில் நண்பர் “குடை நாயுடு” பாத்திரம் மிகவும் பிரபலம். அப்பாத்திரம் இங்கே சம்பந்தம் இல்லாமல் இடைச்செருகலாகத் தெரிந்தது. அக்காலத்தில் இது திரைப்படமாக வந்தபோது இதுபோன்ற மாற்றங்களினாலேயே தோல்வியடைந்தது என்பதைக் குழுவினர் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். வரும் காலங்களில், அக்ரஹாரக் கதைகளைத் தாண்டி, விரிவான கதைக்களங்களை மீனாட்சி தியேட்டர்ஸ் எடுத்தாள வேண்டும்.
கலிஃபோர்னியா ‘க்ரியா' வழங்கிய ‘தனிமை' 2003ல் இதே குழுவினர் தயாரித்து அளித்த நாடகம், மீண்டும் அரங்கேறியது. இந்த நாடகத்தின் வெற்றிக்கு அடிப்படை அம்சம், அதன் மையக் கரு. நம் அனைவரின் வாழ்விலும் ஏதோ வகையில் சம்பந்தப்படுத்த முடிந்த ஒன்று. மேலும், இக்குழுவினர் அதை அளித்த விதம்: நாயகன் மணியின் தற்கால எண்ண ஓட்டங்கள், அதைத் தொடர்ந்து மேடையின் மறுபக்கம், மணியின் நேர்மாறான அக்கால எண்ண ஓட்டங்கள். இவற்றைத் துளியும் குழப்பமின்றி, ஒளி மாற்றங்களோடும், சிறந்த உடை அமைப்போடும் (மணியின் அம்மா அணிந்த உடை, நம் பாட்டிகளின் அக்கால உடையை நினைவுறுத்தியது) அளித்தது சபாஷ் போட வைத்தது.
எடுத்துக்கொண்ட மையக்கருத்து நகைச்சுவைக்கு இடமளிக்காத ஒன்றாக இருந்தாலும், சம்பவக் கோர்வைகளாலும், திறமையான காட்சியமைப்பாலும் நகைச்சுவையைக் கலந்து அளித்தது ரசிகர்களை நாடகத்தோடு ஒன்ற வைத்தது. நாடகத்தில் நடித்த அனைவரும் தம் பாத்திரங்களை உணர்ந்து செம்மையாக நடித்திருந்தனர். வயதான மணி மற்றும் இளவயது மணியாக நடிக்க இருவேறு நடிகர்களைப் பயன்படுத்தினாலும், அந்த வித்தியாசம் உறுத்தாதபடி அதே வடிவமைப்புள்ள இரு நடிகர்களைத் தேர்வு செய்தமை, செயல் நேர்த்தியினைக் காட்டுகிறது. பெரிய மன்னியாக நடித்த தீபா, வரது சித்தப்பாவாக திலீப் ரத்தினம், லக்ஷ்மியாக ஷோபனா போன்றோர் மிகச்சிறப்பாகவும், இயல்பாகவும் நடித்திருந்தனர்.
ஒரே குறை, நாடகத்தின் இறுதிக்காட்சிகள் தேவைக்கதிமாக வளர்ந்ததுதான். இக்குழுவினரிடமிருந்து இதே போன்ற சிறந்த நாடகங்களை எதிர்பார்க்கலாம்.
நியூ ஜெர்ஸி ஸ்டேஜ் ஃபிரண்ட்ஸ் வழங்கிய ‘ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது' 1980களில் தமிழ் நாடக அரங்கங்களில் வசூலைக் குவித்த கிரேஸி மோகன், எஸ்.வி. சேகர் கூட்டணி நகைச்சுவை நாடகம். பல நாடக ரசிகர்களுக்கு இந்நாடகத்தின் ஒவ்வொரு வசனமும் இன்றும் அத்துப்படி. மூல நாடகத்தைப் பெரிதும் மாற்றாமல் வழங்கிய வண்ணம் வரவேற்கத்தக்கது. குரு, ரமணி, ஸ்ரீனிவாசன், ராதிகா, சேகர், பாஸ்கர், சுரேஷ், ராம், கிருத்திகா போன்றோர் சிறப்பாக நடித்தனர். ஸ்ரீனிவாசன் குரலிலும், மூலநாடகத்து ஆதிகேசவனை நினைவுறுத்தினார். சில காட்சிகளே வந்தாலும் நவநீதமாக நடித்த சுரேஷ் மற்றும் சாது சங்கராக நடித்த மோகன் ஆகியோர் சிறந்த டைமிங் சென்சோடு நடித்திருந்தனர். பத்துவாக நடித்த குருவுக்கு எஸ்.வி. சேகர் நடித்த பாத்திரம் என்பது பெரும் சவால். காட்சிப் பொருள் மற்றும், மேடைப் பின்னணி மாற்றங்களில் கவனம் தேவை.
நாடகத்தின் நட்சத்திரம் சங்கரனாக நடித்த மோகன். ஒரு வெற்றிகரமான நகைச்சுவை நாடகத்தைச் சிதைக்காமல் சிறப்பாக அளித்த இக்குழுவினருக்குப் பாராட்டுதல்கள். |
|
ஹூஸ்டன் தமிழ் ஸ்டேஜ் வழங்கிய ‘நீங்காத நினைவுகள்' விழாவின் இறுதி நாடகமான நீங்காத நினைவுகள் நாடகத்தின் காட்சி விளக்கங்களையும் தனிக் கையேடாக வழங்கியது உதவியாக இருந்தது. புதிய நாடகம், சுவையான தலைப்பு, வித்தியாசமான செட்டிநாட்டுக் கதைக்களம், கதைக்கரு போன்றவை பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. ஆனால் மாற்றமில்லாக் காட்சியமைப்பு (முதல் ஆறு, ஏழு காட்சிகளில் ஆச்சி மாற்றி மாற்றி வெளியூரில் உள்ள மகன்களிடம் ஒரே மாதிரி விஷயங்களைப் பேசுவது), சத்தில்லாத வசனம், ஏகப்பட்ட பாத்திரங்கள் மற்றும் பெயர்கள் திணிப்பு போன்றவை பெருங்குறைகள். இவற்றால் நாடகத்தின் மையக்கருத்து தெளிவில்லாமல் போய்விட்டது. ஆச்சியின் பிரச்சனையோ, அவர் மகன்களின் பிரச்சனையோ தெளிவாகப் புரியவில்லை. ஆனால், ஒவ்வொரு காட்சியிலும், ஆச்சிக்கு எதோ ஒரு பெரிய பிரச்சனை இருப்பது போல, அனைவரும் கூடிக்கூடிப் பேசுவது பார்ப்பவர்களுக்குத்தான் பிரச்சனையாக இருந்தது.
பத்மா, மாலா, மீரா, பரத்வாஜ் போன்றோர் மிகத் திறம்பட நடித்திருந்தனர். ஆச்சியாக நடித்த பத்மா பழைய காலத்தைப் பேரப் பிள்ளைகளிடம் நினைவுகூரும் காட்சியிலும், தங்கமாக நடித்த மாலா, ஆச்சியைப் பிரியாதிருக்க அழும் காட்சிகளிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர். காட்சிப் பின்னணி, மேடைப்பொருட்கள், ஒப்பனை போன்றவை செம்மையாகக் கையாளப்பட்டிருந்தன. “கண்ணன் மனநிலையை” பாடலுக்கு ஆடிய குழந்தை லயாவின் திறன் சிறப்பாக இருந்தது. குத்தாட்டம் போட்ட அகிலன், வினாயக் கைதட்டல் பெற்றனர்.
பெரும்பாலான மற்ற நடிகர்கள் பேசும்போதும், நடிக்கும்போதும், நம்பிக்கை குறைந்து காணப்பட்டனர். மேடை ஓரத்தில் அனந்தா ‘prompt' செய்வது தெளிவாகத் தெரிந்தது. காட்சி மாற்றங்களின் போது நீண்ட மயான அமைதி கொஞ்சம் நெளிய வைத்தது. இந்நாடகத்தின் நட்சத்திரம், பத்மா அனந்தா.
அரங்கம் - அரங்கம் மிகச்சிறப்பான ஒன்று. முதல்நாள், பின் வரிசையில் அமர்ந்திருந்தோர்க்கு ஒலி சரியாகக் கேட்கவில்லை. இது, இரண்டாம் நாள் சரி செய்யப்பட்டிருந்தது. இரு நாட்களும் சிற்றுண்டி மற்றும் இரவு உணவு கேட்டு வாங்கி உண்ணும்படிச் சுவையாக இருந்தன. “கேட்டு வாங்க வேண்டியது” சுவையினால் மட்டுமல்ல, அளிக்கப்பட்ட அளவினாலும் தான்.
விழா மலர் - விழா மலர் ஒரு 'தமிங்கிலீஷ்' கதம்பம். வருங்காலத்தில் முழுதும் தமிழிலும், சுருக்கத்தை ஆங்கிலத்திலும் தரலாம். மலரில் இன்றைய தமிழ் நாடகக்கலைக்கு வித்திட்டோர் எனும் தலைப்பில் ஒரு பக்கம் சிறந்த சுவையான தகவல்கள் தரப்பட்டிருந்தன. நல்ல முயற்சி. இன்னும் ஒரு பக்கம் ஒதுக்கி தகவலை முழுமையாக அளித்திருக்கலாம்.
ஹூஸ்டன் நாடக ரசிகர்கள் சிறந்த காட்சிகளை நல்ல முறையில் கைதட்டி ஆரவாரித்து கலைஞர்களுக்கு உற்சாகம் தந்தனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு இன்னும் பெருமளவில் மக்கள் வந்து ஊக்குவிக்க வேண்டும். அதேபோல, அரங்கினுள் செல்போனில் பேசுவது, குழந்தைகளை ஓட விடுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். நாடகம் முடிந்தபின், கலைஞர்களை கெளரவிக்கும் நேரத்தில், மேலும் பதினைந்து நிமிடங்கள் பொறுமை காத்துப் பெருமை செய்ய வேண்டும்.
பாரதி |
|
|
More
வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் புத்தாண்டு விழா TAGDVயின் சித்திரைத் திருவிழா லேக் கவுன்டித் தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டு விழா டல்லாஸ் ஹிந்து ஆலயம் தமிழ்க் கலை விழா உதவும் கரங்கள் கலாட்டா'2009 தென் கலிபோர்னியா தமிழ் மன்றம் தமிழ் புத்தாண்டு விழா வாஷிங்டன் சிவாஜி கணேசன் கலைமன்ற 15ம் ஆண்டு விழா ஸ்ரீ லலித கான வித்யாலயா மும்மூர்த்திகள் விழா சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சான் டியேகோவில் இந்திய இசை நடன விழா இதயம் நனைத்த இறைவனின் திருமணம். வித்யா சுப்ரமணியம் கர்நாடக இசை செயல்முறை விளக்கம் மிச்சிகன் தமிழ்ச் சங்கம் குழந்தைகளுக்கான போட்டிகள் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் பொம்மலாட்டம் நூறாவது நாள் விழா புறநானூறு சிறப்பு இலக்கியக் கூட்டம்
|
|
|
|
|
|
|
|