கானல் நட்பு
|
|
|
|
உஷா மகனைப் பள்ளியிலிருந்து அழைத்துவரக் கிளம்பினாள். ஏழாவது படிக்கும் சரண், சித்தார்த்-உஷா தம்பதியின் அருமைப் புதல்வன். செல்லப்பிள்ளை. படிப்பில் வெகு சுட்டி. அவனைக் கலிஃபோர்னியாவில் ஒரு தனியார் பள்ளியில் சேர்த்திருந்தனர். உஷா காரை வேகமாகச் செலுத்தினாள். மூன்றிலிருந்து 3:20க்குள் போய்விட்டால், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் உட்படக் குழந்தைகளைக் காருக்கு அழைத்து வந்து, கதவைத் திறந்து அவர்கள் அமர்ந்ததும், புத்தக பையை உள்ளே வைத்து வாழ்த்துக்கள் கூறி அனுப்புவார்கள். காலையிலும் இதே ராஜ மரியாதைதான்.
3:15க்கு பள்ளியை எட்டினாள். கூட்டம் இல்லை. இரண்டு வரிசையில், ஐந்து ஐந்து காராக, ஒரு சமயத்தில் பத்து குழந்தைகளை அனுப்புவர். இவள் முதல் வரிசையில் நான்காவது கார். சரண் காரில் ஏறியவுடன் காரைக் கிளப்பினாள்.
அன்று வெள்ளிக்கிழமை என்பதால் நண்பன் ராகவ் வீட்டில் ஸ்லீப்-ஓவருக்குப் போவதாகச் சரண் அறிவித்தான். சித்தார்த் அலுவலக வேலையாக இந்தியா சென்றவர் ஞாயிறுதான் திரும்புவார். “சரண்! அப்பாவும் ஊர்ல இல்லை. நான் மட்டும் தனியா இருக்கணுமே! நீ உன் ஸ்லீப்-ஓவரை அடுத்த வாரம் வச்சுக்கோயேன்” என்று உஷா சொன்னாள்.
| குழந்தை பிறந்தவுடன், உஷா வேலையை விட்டு விட்டாள். தன் பத்துவருட கம்ப்யூட்டர் அனுபவத்தையும் கை நிறைய வாங்கிய சம்பாத்தியத்தையும் மூட்டை கட்டிவிட்டுக் குழந்தையுடன் ஐக்கியமானாள். | |
அம்மா, ராகவ் வீட்டீல் வீ (wii) விளையாடும் ப்ளானில் மண்ணைத் தூவப் பார்க்கிறாள் என்ற எண்ணம் சரணுக்கு சுறுசுறு எனக் கோபம் உண்டாக்கியது. கோபத்தில் வார்த்தை சிதறியது. "You just want to contorl all my actions. அப்பாவோட நீயும் இந்தியா போயிருக்கலாம். நான் நிம்மதியா இருந்திருப்பேன். I just hate you. I wish you were not here."
உஷாவை இந்த வார்த்தைகள் ஈட்டியாகத் தாக்கின. மனம் கனத்தது. ஒன்றும் பேசாமல், இரவுச் சாப்பாட்டை முடித்து, சரணை ராகவ் வீட்டிற்கு அனுப்பினாள். ஐந்து நிமிட நடையில் அவர்கள் வீட்டிற்குச் சென்றுவிடலாம் என்பதால் உஷா உடன் செல்லவில்லை. அவளால் இன்னமும் சரணின் வார்த்தைகளை ஜீரணிக்க முடியவில்லை. ‘இந்த குழந்தைக்காக எவ்வளவு தியாகங்கள்! இப்படித் தூக்கியெறிஞ்சு பேசிட்டானே'--மனம் கேவியது.
தவமிருந்து பெற்ற பிள்ளைதான் சரண். எட்டு வருடங்களுக்குப் பிறகு, ஒரு கடவுள் விடாமல் எல்லாருக்கும் பிரார்த்தனை, வாரத்துல ஏழு நாள் விரதம், ஏரி, குளம், கடல்னு எல்லாத்துலயும் குளியல், இன்னும் யார் யார் என்னென்ன சொன்னார்களோ அத்தனையும் செய்து, ஒருவழியாக வந்து பிறந்தான் சரண். "பிறந்தா சித்தார்த்துக்குப் பிள்ளையா பிறக்கணும்” என்று சொந்தக்காரர்கள் பொறாமைப்படுகின்ற மாதிரி மகனுக்கு விளையாட்டுப் பொருள்களையும், புத்தகத்தையும் வாங்கிக் குவித்தான் சித்தார்த். குழந்தை பிறந்தவுடன், உஷா வேலையை விட்டு விட்டாள். தன் பத்துவருட கம்ப்யூட்டர் அனுபவத்தையும் கை நிறைய வாங்கிய சம்பாத்தியத்தையும் மூட்டை கட்டிவிட்டுக் குழந்தையுடன் ஐக்கியமானாள். அப்படித் தியாகம் செய்து வளர்த்த அந்த மகன் இன்று வார்த்தைகளால் தாக்கிவிட்டான்.
கை தன்னிச்சையாக டி.வி.யைத் தட்ட டிஸ்கவரி சேனலில் பெங்குவின் பற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். பனிக்காலத்தில் தன் கூட்டத்துக்கு திரும்பும் ஆண் பெங்குயின், தன் சென்ற வருடக் காதலியைத் தேடி இணைகிறது. பெண், முட்டை இட்டவுடன், அம்முட்டையை ஆணிடம் கொடுத்துவிட்டுக் கடல் நோக்கி இரைதேடிச் செல்கிறது. நான்கு மாதங்கள் கழித்துப் பெண் பெங்குவின் திரும்பும்வரை ஆண் பெங்குவின் உணவேதும் இன்றி முட்டையைப் பாதுகாக்கிறது. எல்லா ஆண்களும் கூடி நின்று உடல் வெப்பத்தைக் காக்கின்றன. முட்டையை பாதத்தில் தாங்கி அதனை அதற்கென்றே அமைக்கப்பட்ட தோலால் மூடிப் பனியிலிருந்து காக்கிறது. தாய் பெங்குயின் திரும்பி வந்து முட்டையை வாங்கிக்கொள்ள ஆண் பெங்குவின் கடல்நோக்கி இரைதேடிச் செல்கிறது. ஆறு வாரங்கள் கழித்து ஆண் பெங்குவின் திரும்பும்வரை தாய் பெங்குவின் உணவின்றி, தன் வயிற்றில் பாதுகாத்துள்ள உணவைக் கக்கி குஞ்சுக்கு ஊட்டுகிறது. |
|
| ஒரு பறவை தன் குஞ்சுக்காக எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி எவ்வளவு தியாகம் செய்கிறது. ஆறறிவு படைத்த எனக்கு எவ்வளவு எதிர்பார்ப்பு. | |
இதைப் பார்த்துக் கொண்டிருந்த உஷாவுக்குச் சுரீர் என்றது. "ஒரு பறவை தன் குஞ்சுக்காக எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி எவ்வளவு தியாகம் செய்கிறது. ஆறறிவு படைத்த எனக்கு எவ்வளவு எதிர்பார்ப்பு. சரண் வேலையை விடச் சொல்லவில்லையே. நானேதானே குழந்தையை சகலகலா வல்லவனாக்க வேண்டும் என்று விழுந்து விழுந்து செய்தேன். ஏதோ கோபம் சொல்லிட்டுப் போகிறான் என்று விடாமல், பத்து மாதம் சுமந்தேன் என்று கதை வசனம் எழுதிக் கொண்டு..." தன்மீதே கோபப்பட்டாள். காலை குழந்தை வந்ததும் சரியாப் பேசணும் என்று நினைத்து, வாசல் கதவு தாளிட்டிருக்கிறதா எனச் சரி பார்த்துப் படுக்க விழைந்தாள்.
வாசல் மணி ஒலிக்க, யாராயிருக்கும் என வியந்தவளாய், கண்ணாடி வழியே பார்த்தால், சரண் நின்று கொண்டிருந்தான். வியப்புடன் கதவைத் திறந்தவளை அணைத்து முத்தமிட்டு "ஐ அம் சாரி மாம்" என்றான். பெங்குவின் பற்றித் தானும் பார்த்தனாம். உடனே ராகவிடம் அடுத்த வாரம் ஸ்லீப்-ஓவர் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டுக் கிளம்பிவிட்டானாம்.
"எதுக்குடா சரண்?" என்றவளிடம், "அம்மா! அந்தப் பறவை மாதிரிதானே நீயும், அப்பாவும் என்னை பார்த்துக் கொள்கிறீர்கள். நான் கொஞ்சம்கூட நன்றி உணர்வோட இல்லேன்னா, அப்புறம் ஐந்தறிவு படைத்த அந்தக் குஞ்சுக்கும் எனக்கும் என்னம்மா வித்தியாசம்?" என்றான் தழுதழுத்தவாறே. உஷாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
சுபா சேதுராமன் |
|
|
More
கானல் நட்பு
|
|
|
|
|
|
|