Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | தகவல்.காம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
சிவப்பு விளக்கு
- சை. பீர்முகம்மது|மே 2009|
Share:
Click Here Enlargeகோலாம்பூர் ரயில்வே ஸ்டேசனிலிருந்து கூச்சல், சுறுசுறுப்பு, வெளிச்சம் ஆகிய அனைத்தையும் வாரிப் போட்டுக் கொண்டு அந்தக் கடைசி வண்டி போய்விட்ட பிறகு, பிச்சைக்காரன் சாப்பிட்டுவிட்டுப் போட்ட எச்சில் இலையைப் போல் ஸ்டேசன் ஹோவென்று இருந்தது. தூரத்தே கேபினுக்குப் பக்கத்தில் நின்ற கைகாட்டியின் சிவப்பு விளக்கு மாத்திரம் அந்த இரவு நேரத்தில் யாருக்காகவோ காத்திருப்பது போல் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டிருந்தது.

அந்த சிவப்பு விளக்கிலிருந்து தனது பார்வையை எடுக்காமல் கடைசியாகப் பீடித் துண்டை நன்றாக உறிஞ்சி இழுத்துப் புகையை வெளியே விடாமல் தம் பிடித்தவாறே பீடித் துண்டைத் தூக்கிச் சாலையில் வீசினான் காளிமுத்து. வீசப்பட்ட வேகத்தில் பீடித்துண்டில் இருந்த நெருப்பு, பொறிகளாகி அழகு காட்டிப் பின் அவ்வழியே சென்ற காரில் அடிப்பட்டுத் தன் கடைசி மூச்சை விட்டது. காளிமுத்து தம் பிடித்து அடக்கி வைத்திருந்த புகையை இலேசாக வெளியே விட்டான்.

வலப்புறத்தில் மடித்து வைத்திருந்த காகிதக் கட்டை அவிழ்த்து அதிலிருந்த இரண்டு முரட்டுக் காகிதங்களை ஒன்றாக இணைத்துத் தரையில் விரித்தான். பின் தனது கட்டையை அதில் கிடத்தினான். கைகள் தாமாகவே தலைக்குக் கீழ் தலையணையாகப் போய்ப் பொருந்திக் கொண்டன. மனத்தில் எந்தக் கவலையும் இன்றி-எதிர்காலம் பற்றிய இலட்சியமோ-கனவோ-கொள்கையோ இன்னும் எதை எதை இங்கே சொல்லலாமோ அவை எல்லாவற்றையுமே மறந்த நிலையில் துடைத்து வழிக்கப்பட்ட மனத்தினனாய் கால்மேல் கால் போட்டுக் கொண்டு காளிமுத்து கண்ணை இலேசாக மூடினான். ஓ...! அதுதான் எவ்வளவு சுகமான ஏகாந்த நிலை!

அவர்களிடையே அத்தரும்- பவுடரும் மணந்தால் அது ஆச்சரியப்பட வேண்டிய நிலை. நாற்றமும்-கிழிசலும்-புண்ணும்-சிரங்கும்-சீழும் தான் அவர்களுடைய வாழ்க்கை மூலதனம்.
கோலாம்பூர் ரல்யில்வே ஸ்டேசனுக்குப் பக்கத்தில் இந்நாட்டின் பொருளாதாரத்தை- அதன் வளத்தை எடுத்துக் காட்டியவாறு தலைக்கு மேல் கிழக்கு மேற்காக ஓடிய மேம்பாலத்தை உறுதியாகத் தாங்கி நின்ற சிமிண்ட் சுவருக்கடியில் தான் காளிமுத்துவின் இரவு நேர வாழ்க்கை நடந்துகொண்டு வருகின்றது. பகலில் காளிமுத்து எங்கெங்கோ போவான், எதை எதையோ செய்வான், அவன் அப்படிச் செய்துதான் ஆக வேண்டும். வயிறென்ற ஓன்றும் அதனோடு சேர்ந்தே அவதரித்த பசியென்ற ஒன்றும் இருக்கும் பொழுது எதையாவது செய்துதானே தீர வேண்டியிருக்கின்றது! ரிஷி மூலமும் நதிமூலமும் பார்க்கக் கூடாதது போல் காளிமுத்துவின் பகல்நேர வாழ்கையும் ஆராயாமல் விட்டுவிடக் கூடியது அல்ல.

காலையில் பெரிய மார்க்கெட்டில் கையேந்திக் கொண்டு நிற்பான். மத்தியான வேளையில் ஏதாவதொரு கடையின் பின்புறமாக இருக்கும் குப்பைத்தொட்டியில் தலையை நுழைத்துக் கொண்டு எதையாவது பொறுக்கிக் கொண்டிருப்பான். எது எப்படி இருந்தாலும் மாலை நாலரை மணிக்கு சௌக்கிட் ரோட் வெள்ளை மாளிகையில் ஒரு ‘பாயுண்ட்' அடிக்க வந்து விடுவான். அங்கே ஏழரை மணி வரையில் பொழுது இனிமையாகக் கழியும். அதன் பிறகு நேரே மேம்பால மாளிகைக்குத் தூங்க வந்து விடுவான். மீண்டும் மறுநாள் காலையில் பெரிய மார்க்கெட், குப்பைத்தொட்டி, கள்ளுக்கடை...

காளிமுத்து கண்ணை இலேசாக மூடினான். மேம்பாலத்தினடியில் இருந்த சுற்றைச் சுற்றிக் கொண்டு ஓடிய வாகனங்கள் அவனது தூக்கத்தை எப்பொழுதுமே கெடுத்ததில்லை. ஆனால் இன்று, காளிமுத்துவால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. அதற்குக் காரணம் பக்கத்தில் தொடர்ந்து விடாமல் கேட்டுக்கொண்டிருந்த முனகல் சத்தம்தான்.

மேம்பாலத்தின் சிமிண்ட் சுவருக்கருகே காளிமுத்து மட்டுமே தூங்கவில்லை. இன்னும் சொந்தத்தில் கூரையில்லாத சிலரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள் மவுண்ட் பாட்டன் ரோட்டின் வாடிக்கைக்காரன் அமீது, முனிசிபல் கார்பார்க் ஆபெங் இன்னும் பலருக்கு தஞ்சமளித்திருந்தது இந்த மேம்பாலம்.

அமீதும் ஆபெங்கும் தான் காளிமுத்துவின் நெருங்கிய நண்பர்களாகக் கடந்த வாரம் வரையிலும் இருந்தார்கள். அமீதுக்கு அரசாங்க ஆதரவில் ஏதோ ஓர் இடத்தில் தஞ்சமடையும் பாக்கியம் கிடைத்துவிட்டதாக நேற்று தான் கள்ளுக்கடையில் அவன் கேள்விப்பட்டிருந்தான். இனி அமீது பிச்சை எடுக்க வேண்டிய நிலை இல்லை. ஆபெங்கிற்கும் காளிமுத்துவிற்கும் பழைய நிலை தான். என்றாலும் இருவரும் கடந்த ஒரு வார காலமாகப் பேசிக் கொள்வதில்லை. ஆபெங் அத்துமீறி பெரிய மார்க்கெட் எல்லையில் புகுந்து பிச்சை எடுக்க ஆரம்பித்ததால் இருவருக்கும் தகராறு. இரண்டு நாட்களாகவே ஆபெங் தொழிலுக்குப் போகவில்லை. சரியான காய்ச்சல். முக்கலும் முனங்கலுமாக புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்.

காளிமுத்துவால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. நட்பு முறிந்து நின்றாலும் அன்பும் பண்பும் இதயத்தில் பின்னி அவனை எழுந்து உட்கார வைத்தன. எப்படிப் போய் பேசுவது?

அன்புக்கு வாய்மொழி ஏது? காளிமுத்து பொசுக்கென்று எழுந்து ஆபெங்கின் அருகில் சென்று அவனைத் தொட்டுப் பார்த்தான். கை சுரீரென்று சுட்டுவிடவே கையை எடுத்துக் கொண்டான். ‘பகல் பன்னிரென்டு மணி வெயிலு போலக் காய்ச்ச அடிக்குது. இப்படிப் பொணம் போல கிடக்கிறானே. பாவி மகன்'- காளிமுத்து விறுவிறுவென்று ரயில்வே பாலத்தைத் தாண்டிப் பதினைந்தாம் கட்டை இறக்கத்தில் இருந்த சாப்பாட்டுக் கடையில் நுழைந்தான். திரும்பி வரும் பொழுது கையில் பட்டர் தடவிய ரொட்டித் துண்டுகளும் ஒரு பால் டின் குவளையில் வறக் கொப்பியும் ஆஸ்ப்ரோ மாத்திரைகளும் இருந்தன.

ஆபெங்கை எழுப்பினான் காளிமுத்து. அவன் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தானேயொழிய எழுவதாகக் காணோம். கையிலிருந்த பொருட்களைக் கீழே வைத்துவிட்டு அவனைத் தூக்கித் தனது உடலோடு சாய்த்துக் கொண்டு மாத்திரைகளை வாயில் போட்டு, கொப்பியையும் ஊற்றினான். இரண்டு ‘மொனரு' குடித்த பிறகு ஆபெங் எழுந்து உட்கார்ந்து கொண்டான். ரொட்டித் துண்டையும் கொப்பிக் குவளையையும் அவன் கையில் கொடுத்துத் தின்னும்படி சொன்னான் காளிமுத்து.

ஆபெங்கின் உடல் வியர்த்தது. பக்கத்தில் ரயில்வே ஸ்டேசனில் எப்பொழுதாவது கண்ணில் படும், கரி போட்டு ஓடும் ரயில் என்ஜினின் நிறத்தில் ஒரு துணி இருந்தது. அதை எடுத்து ஆபெங்கின் வியர்வையைத் துவட்டி எடுத்தான் காளிமுத்து.

“நாளைக்கு ஆஸ்பத்திரிக்குப் போயேன்”-காளிமுத்து அந்த துண்டை தரையில் விரித்து வைத்துவிட்டு ஆபெங்கை நிமிர்ந்து பார்த்தான்.

“போகத்தான் வேண்டும். அந்த ஜெனரல் ஆஸ்பத்திரி மருந்துத் தண்ணியை வாங்கிக் குடிச்சாலாவது இந்தக் காய்ச்சல் குறையுமென்று நான் நினைச்சேன். அங்கேயும் இப்போது ‘கார்ட்' எடுக்க ஐம்பது காசு கொடுக்கணுமாம். நான் எங்கே போவேன். இந்த நாளா தொழிலுக்கு வேறே போகலே. இந்த உடம்போட நான் தனியா எப்படிப் போறது?” ஆபெங் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கப் பேசி முடித்தான். அவனுடைய குரலில் ஏக்கமும் பழைய பகை மறைந்த நிலையும் இருந்ததை காளிமுத்து உணர்ந்தான்.

சரி, நாளைக்குக் காலையிலே நான் உங்கூட வர்றேன். உன்னை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் மருந்து வாங்கிக் கொடுத்துட்டு அப்புறம் நான் ‘பெரிய மார்க்கெட்'டுக்குப் போறேன். ஆனால் அதுக்குள்ளாற என் காலை வரும்படி போயிடும். அதுக்கென்ன... காசு பெருசா-உன் உடம்பு பெருசா? சரி சரி; காலையிலே எழுந்திரிச்சு, ஆக வேண்டியதைக் கவனிப்போம். நீ படுத்துக்கோ! இந்தா? இது இன்னிக்கு மார்க்கெட் ஸ்திரீட் சந்தில் கிடைத்த போர்வை. இதை எடுத்து போர்த்திக்க. காளிமுத்து தனது படுக்கையில் சுருட்டி வைத்திருந்த கிழிசல் விழுந்த-குடலைப் பிடுங்கும் நாற்றமெடுத்த அந்த போர்வையை எடுத்து ஆபெங்கிடம் நீட்டினான். அவன் அதை வாங்கிக் கொண்டான். அந்தக் கிழிசலும் நாற்றமும் அவர்களுக்குள் பழகிப் போய்விட்டது. அவர்களிடையே அத்தரும்- பவுடரும் மணந்தால் அது ஆச்சரியப்பட வேண்டிய நிலை. நாற்றமும்-கிழிசலும்-புண்ணும்-சிரங்கும்-சீழும் தான் அவர்களுடைய வாழ்க்கை மூலதனம்.
காளிமுத்து அந்த சிவப்பு விளக்கைப் பார்த்துக் கொண்டே இருந்தான். சிங்கப்பூர் வண்டியில் ஏறியிருந்த அனைவருக்கும் பச்சை விளக்கைக் காட்டிய அந்தக் கைகாட்டி அவனுக்கு மட்டும் சிவப்புவிளக்கைக் காட்டிக் கொண்டிருந்தது
காளிமுத்து இருட்டில் எழுந்து போய் சிறிது நேரம் ‘நின்றுவிட்டு' வந்து படுத்துக் கொண் டான். ஆபெங்கும் அந்தக் கிழிசல் போர்வையைப் போர்த்திக்கொண்டு கட்டையைச் சாய்த்துக் கொண்டான்.

அன்றும் அதற்கு முந்தைய இரண்டு நாட்களாகவும் ஆபெங்கை அந்த இடத்தில் காணவேயில்லை. ஆஸ்பத்திரிக்குப் போய் விட்டு வந்த இரண்டு நாட்களிலேயே அவன் புதிய தெம்பும் உற்சாகமும் பெற்றுவிட்டான். கடந்த மூன்று நாட்களாக அவனை மேம்பாலத்தினடியில் காணவேயில்லை. காளிமுத்து படுக்க வரும்பொழுதெல்லாம் ஆபெங்கின் இடம் ‘ஹோ'வென்று காலியாகக் கிடந்தது.

மறுநாள் காலையில் முனிசிபல் கார்பார்க் வழியாக காளிமுத்து போய்க் கொண்டிருந்தான். அங்கே கார் பார்க்கின் நடுவில் நின்ற ஒரு பெரிய காரை ஆபெங் கழுவிக் கொண்டிருந்தான். காளிமுத்துவிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இப்பொழுது அவன் கண்கூடாகப் பார்க்கும் வரை ஆபெங் ஓர் உண்மையான நொண்டி என்று தான் அவன் நினைத்திருந்தான். அவர்களுடைய தொழிலில் பல ஏமாற்று வேலைகள் உண்டு தான். ஆனால், அந்தத் ‘தொழில்' ரகசியம் வெளியாட்களுக்குத் தானேயொழிய அவர்களிடையே அல்ல! ஆபெங் இது நாள் வரையில் தன்னையே ஏமாற்றி வந்திருக்கிறானே? காளிமுத்து மெதுவாகச் சிரித்துக் கொண்டான். தனது காலை இழுத்து இழுத்து நடந்தவாறு அவன் ஆபெங்கின் அருகில் சென்றான்.

“ஆபெங்!” காளிமுத்துவின் அழைப்பைக் கேட்டு தலைநிமிர்ந்துப் பார்த்தான். “அடடே காளிமுத்துவா! வா! உன்னைத்தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இரண்டு மூன்று நாட்களாக உன்னைப்பார்க்க முடியவில்லை காளிமுத்து. நான் பிச்சை எடுக்கிறதை விட்டுட்டேன். இந்தக் காடி கழுவுற தொழில்லே நாலு அஞ்சு வரும்படி வருது. கொஞ்சம் உடலை வளைச்சு வேலை செய்யணும் அவ்வளவு தான். நான் இப்ப இங்கேதான் படுத்துக்கறன். நீயும் இந்தத் தொழிலுக்கு வந்துடேன்.” ஆபெங் படபடவென்று பேசினான்.

காளிமுத்து சிரித்துக் கொண்டான். “சேச்சே! நமக்கு இந்தத் தொழில் ஒத்து வராது. பெரிய தொழிலே பழகிப் போச்சு. நீ நல்லா இருந்தா சரி, நான் வர்றேன்!” காளிமுத்து அந்த இடத்தைவிட்டு நகர ஆரம்பித்தான்.

“காளிமுத்து, இந்தா இதை வச்சுக்கோ!” ஆபெங் ஒரு ஐம்பது காசு நாணயத்தை எடுத்து நீட்டினான். ஆனால் காளிமுத்து அதை வாங்கிக்கொள்ளவில்லை. அவனுள் ஏதோ ஓர் உணர்வு அதை வாங்கிக் கொள்ளத் தடுத்தது.

“பரவாயில்லை-நீ வச்சுக்கோ. என் கிட்ட காசு இருக்கு” காளிமுத்து காலை இழுத்து இழுத்துப் பெரிய மார்க்கெட்டை நோக்கி நடந்தான்.

அதன் பிறகு இரண்டு மூன்று மாதங்களாக இருவரும் சந்தித்துக் கொள்ளச் சந்தர்ப்பமே வாய்க்கவில்லை. அன்று மாலை மீண்டுமொருமுறை அந்த எதிர்பாராத சந்திப்பு நிகழ்ந்தது.

காளிமுத்து கள்ளுக்கடைக்கு மணியாகி விட்டது என்று வேகமாக மலாக்கா ஸ்தீரீட் பஸ்ஸ்டாண்டை நோக்கி வந்து கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்குப் பின்னே சைக்கிள்; மணி பலமாக அடிக்கும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். சைக்கிளில் ஆபெங் சிரித்துக் கொண்டு மெதுவாக அவனருகில் வந்து நின்றான்.

காளிமுத்துவால் ஆச்சரியத்தைத் தாங்க முடியவில்லை சைக்கிளின் பின்னால் கேரியரில் சேர்த்துக் கட்டப்பட்ட ஐஸ் கிரீம் பெட்டியுடன் சாம்பல் நிறச் சட்டையும் கால் சட்டையுமாக ஆளே மாறிய நிலையில் ஆபெங் காட்சியளித்தான்.

“என்ன காளிமுத்து! அப்படிப் பார்க்கிறே. நான்தான்! இப்போ காடி கழுவும் வேலையை விட்டுவிட்டு இந்த வியாபாரத்தை ஆரம்பிச்சு இருக்கிறேன். ஒரு நாளைக்குப் பத்துப் பதினைஞ்சு வருது! நாம் எப்பவும் இப்படியே இருக்க முடியுமா? வாழ்க்கையில் முன்னேறணும்-நீ எங்வே கள்ளுக் கடைக்குத் தானே போறே. சரி சரி; எனக்கு நேரமாகி விட்டது. நான் ராத்திரியில் நாலு வீட்டில் காடி கழுவுகிறேன். அதையும் போய் கவனிக்க வேண்டும். இந்தா முப்பது காசு ஐஸ் கிரீமை ஒரு கை பாரு. நான் வர்றேன். வந்த வேகத்திலேயே அவன் ஓர் ஐஸ் கிரீமை காளிமுத்துவின் கையில் திணித்து விட்டு சைக்கிளில் வேகமாகச் சென்று விட்டான். அப்பொழுது மலாக்கா ஸ்தீரீட் பஸ் ஸ்டாண்டின் பக்கத்தில் இருந்த சாலை விளக்கு பச்சை நிறத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. ஆபெங் விருட்டென்று அந்த விளக்கைத் தாண்டிச்சென்று விட்டான், கார்களும் சைக்கிள்களும் பச்சை நிறம் வருவதற்காக ‘கொடுக்குப் பிடித்து' நின்றன. காளிமுத்துவின் மனம் சரியான நிலையிலில்லை. அவன் கள்ளுக் கடைக்குச் சென்று நிறையக் குடித்தான். அவன் மேம்பாலத்தடிக்குத் திரும்பும் போது சிங்கப்பூர் வண்டி புறப்பட்டுக் கொண்டிருந்தது. காளிமுத்து தாட்களை நீட்டி விரித்து அதில் பொத்தென்று விழுந்தான்.

தூரத்தே சிங்கப்பூர் வண்டி ஓடிமறைந்தது. கைகாட்டி சிவப்பு வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது. காளிமுத்து அந்த சிவப்பு விளக்கைப் பார்த்துக் கொண்டே இருந்தான். சிங்கப்பூர் வண்டியில் ஏறியிருந்த அனைவருக்கும் பச்சை விளக்கைக் காட்டிய அந்தக் கைகாட்டி அவனுக்கு மட்டும் சிவப்புவிளக்கைக் காட்டிக் கொண்டிருந்தது. காளிமுத்து பச்சை விளக்கு எரியும் போது கவனப்பிசகாக இருந்து விடுகிறான். அதனால் ஒரு நாளாவது அவன் கண்ணில் அந்தப் பச்சை விளக்குத் தெரியவில்லை.

ஆண்டுகள் பல ஓடி மறைந்தன. அன்று ஒரு பெரிய சீன சவ ஊர்வலம் அம்பாங் சாலை வழியாகச் சென்றது. பேண்ட் வாத்திய முழக்கமும் சீன இசையும் அம்பாங் சாலை முழுவதும் நிறைந்திருந்தது. போக்குவரத்து நின்றுபோய் விட்டிருந்தது. சவ ஊர்வலத்தில் கொடிகளும் கம்பங்களும் பல வர்ணத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. பல பட்டுத் துணிகளில் பிரபல சீனவர்த்தக நிறுவனங்கள் அனுப்பி வைத்திருந்த அனுதாபச் செய்திகள் எழுதப்பட்டிருந்தன. சவ வண்டியின் முன்புறத்தில் ஆபெங்கின் படம் பெரிதாக மாட்டப்பட்டிருந்தது.

இந்த சவ ஊர்வலம் நடந்து சரியாக மூன்று மாதத்திற்குப் பிறகு மேம்பாலத்தினடியிலிருந்து ஓர் அனாதைப் பிணத்தை போலீசார் அகற்றினார்கள். அந்தப் பிணத்தின் கண்கள் தூரத்தே தெரிந்த கை காட்டியின் சிவப்பு விளக்கின் மேலே நிலைகுத்தி நின்றன.

சை. பீர்முகம்மது
Share: 


© Copyright 2020 Tamilonline