Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
தடுமாறும் உலகப் பொருளாதாரச் சூழலில் ஆரம்ப நிலை நிறுவனங்கள் பிழைப்பதும் தழைப்பதும் எவ்வாறு?: பாகம்-3
- கதிரவன் எழில்மன்னன்|ஏப்ரல் 2009|
Share:
சென்ற பகுதியில்: மூலதனம் கிடைக்கும்வரை பிழைத்திருப்பதென்பது ஆரம்பநிலை நிறுவனங்களின் முதல், அடிப்படை விதி; ஆனால், வெறுமனே பிழைத்திருப்பதில் ஒரு பயனுமில்லை, மீண்டும் பொருளாதாரநிலை அனுகூலமாக ஆரம்பிக்கும் போது, மூலதனத்துக் கவர்ச்சியுடன் மீண்டும் தழைத்து வளர்வதற்குத் தயாராக இருப்பதற்கு ஆயத்தமாகும் முறையில் செயல்படவேண்டும் என்று பார்த்தோம். அதற்கான செயல்முறைப் பட்டியல் ஒன்றும் அளிக்கப்பட்டது. இனி, அப்பட்டியலில் காணப்பட்ட குறிப்புக்களை ஒவ்வொன்றாக விவரிப்போம்.

பட்டியலில் முதலாவதாக ஒரு காசுக் கேள்வி என்றீர்கள். ஒரு காசு எதற்கும் உதவாதே? கொஞ்சம் விளக்குங்களேன்.

சரி இதோ விளக்குகிறேன். ஒரு காசு என்றால் அப்பட்டமாக ஒரே ஒரு காசு என்று அர்த்தமல்ல. எவ்வளவு சிறிய செலவானாலும் யோசித்துப் பார்க்க வேண்டும், எவ்வளவு சிறிய வரவானாலும் உடனே உதாசீனப் படுத்திவிடக் கூடாது என்றுதான் அர்த்தம்.

பல ஆரம்பநிலை நிறுவனங்கள் தங்கள் செலவுகள் என்னென்ன என்றுகூடச் சரியாகத் தெரிந்து கொள்வதில்லை. திடீரெனத் தெரிய வரும் பெரும் செலவு கப்பலைக் கூடக் கவிழ்த்துவிடக் கூடும். அது மட்டுமல்ல, சிறு துளி பெரு வெள்ளமல்லவா? பனிச்சறுக்கு விளையாட்டில் கூடச் சில சமயம் ஒரு சிறு சறுக்கல், பல சிறுசிறு சறுக்கல்களை விளைவித்துப் பெரும் சறுக்கலாக்கி கவிழ்த்துவிடக் கூடும்!

எவ்வளவு சிறிய செலவானாலும் யோசித்துப் பார்க்க வேண்டும், எவ்வளவு சிறிய வரவானாலும் உடனே உதாசீனப் படுத்திவிடக் கூடாது.
அதனால், முதல் காரியமாகச் செய்ய வேண்டியது உயர்நிலை பட்ஜெட், மற்றும் சென்ற மூன்று மாதங்களின் செலவுப் பட்டியல். அதன் மூலம் மாதத்துக்குக் குத்துமதிப்பாக எவ்வளவு செலவாகியுள்ளது என்றும், பெரும் செலவுகள் என்னென்ன என்றும் தெரியவரும். மேலும், பெரு வெள்ளமாகத் திரளும் சிறு துளிகள் என்னென்ன என்றும் தெரிந்து கொள்ள முடியும்.

அடுத்துத் துல்லியமாக ஆராய வேண்டியது, செலவுகளில் எது முக்கியம், எதைத் தவிர்க்க முடியும் அல்லது குறைக்க முடியும் அல்லது தள்ளிப் போட முடியும் என்று பார்ப்பது. செய்தாக வேண்டும் என்று பொருளாதார நிலை நன்றாக இருந்தவேளையில் எண்ணிய செலவுகள் போதை தெளிந்த இந்நாளில் அவசியமில்லை என்று தோன்றக் கூடும். மீண்டும் மீண்டும் பல கோணங்களில், பாரத்துக்கும் பலனுக்கும் சமமா என்று யோசித்து, தவிர்க்க முயலுங்கள்.

விற்பொருள் ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் (product research and development) விஷயத்தில் எப்போதும் ஒரு பெரும் பட்டியல் இருக்கும். அவற்றில் எவை மிகக் குறுகிய காலத்தில் பலனளிக்கும், எவை உங்கள் நிதி முழுவதும் கரைவதற்குள் வருமானம் அளிக்கக்கூடும், எவை மீண்டும் பொருளாதார நிலை சரியாகும்போது நிறுவனம் மீண்டும் தழைத்து வளர மிக அதிகமான வாய்ப்பளிக்கக் கூடும் என்று யோசித்து, மற்றவற்றைத் தள்ளிப் போடுங்கள். அந்த விதமான தெளிவு கிடைக்கும் முன் நிறைய ஆராய்ச்சிச் செலவு செய்ய வேண்டாம். ஒரு பணயமாக முயற்சிப்பதானாலும் எது எவ்வளவு எப்போது பலனளிக்கலாம், வருங்காலத்தில் தழைக்கும் வாய்ப்பென்ன என்ற ஒரு தெளிவிருக்க வேண்டும். 20-ஓவர் கிரிக்கெட்டில் கூட எப்போது சிக்ஸர்களாக அடித்துத் தள்ள முயலவேண்டும் என்று கணித்துத்தான் செயல்படுகிறார்கள்.

அப்படி முழுவதுமாகத் தவிர்க்க முடியாவிட்டாலும், எவ்வளவுக்கெவ்வளவு குறைக்கலாம் என்று பாருங்கள். உங்களுக்கே ஆச்சரியமளிக்கும் வகையில், குறைப்பதற்குப் பல வாய்ப்புக்கள் இருக்கும். செலவின் கருவில் முக்கியமானதை மட்டுமே செய்து, அதைச் சுற்றி உள்ள பல சாதாரணச் செலவுகளைக் குறைக்கலாம். உதாரணமாக, வணிகரீதிக்காக கருத்தரங்கப் பொருட் காட்சியில் (commercial trade expo and conference) பங்கேற்றுத்தான் ஆக வேண்டும் என்றாலும் கூட வழக்கமாக அனுப்பும் படைக்குப் பதிலாக முக்கியமான சிலரை மட்டும் அனுப்ப முடியுமா என்று யோசிக்கலாம். கணினிகளை வாங்கும்போது, ஒவ்வொருவருக்கும் வாங்காமல், சில சற்றே பெரியவற்றை வாங்கி மெய்ப்பொருளாக்க நுட்பத்தைப் (server and desktop virtualization) பயன்படுத்தித் தனித்தனிக் கணினிகளாக மாற்றிப் பயன்படுத்தலாம். இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம்; நீங்களே கற்பனையைப் பறக்க விட்டு, செலவுக் குறைப்புக்கான புது வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சியுங்கள்.

எனக்குப் பரிச்சயமான ஒருவர், கணினி விற்றவர்களிடம் மீதி கொடுக்க வேண்டிய தொகையைக் குறைத்துக் கொள்ளாவிட்டால், திவாலாகிவிடுவதாக பயமுறுத்தவே அவர்கள் ரூபாய்க்கு சில பைசாக்கள் விதத்தில் வாங்கிக் கொண்டார்கள். அவர் பிறகு தன் நிறுவனத்தை மீண்டும் மெல்ல வளர்த்து நூறு மில்லியன் டாலர்களுக்கும் மேலாக விற்றார்!
கஷ்டமான முடிவெடுக்கத் திணறி, வழவழாவென்று ஜவ்வாக இழுத்து, பாதி செயல்பாடு என்பதெல்லாம் கூடாது.அப்புறம் இதுவுமில்லை, அதுவுமில்லை என்பதாக வெற்றி வாய்ப்பும் குறைந்து, செலவும் குறையாமல் ரெண்டும் கெட்டானாக முடிந்துவிடும்.
உங்கள் நிறுவனத்தில் உள்ள அனைவரையும் கூட செலவு தவிர்க்கும், குறைக்கும் முயற்சியில் பங்கேற்க அழையுங்கள். அனைவரும் தங்கள் சொந்தக் காசை செலவழிப்பதாக நினைத்துப் பார்க்க வேண்டும். நிறுவனம் பிழைத்து, பின்னர் தழைப்பதில் அவர்களுக்கும் பங்குண்டல்லவா? நீங்களே பிரமிக்கும்படியான யுத்திகள் உதிக்கும்.

தவிர்க்க அல்லது குறைக்க முடியாவிட்டாலும், பல செலவுகளை அடுத்த மாதமோ, மூன்று/ஆறு மாதங்களுக்கு அப்புறமோ, அடுத்த வருடமோ கூட செய்யக் கூடும். பல சேவையாளர்கள் (உதாரணமாகச் சட்ட நிறுவனங்கள்) தாமதமாகவோ, தவணை முறையிலோ வாங்கிக்கொள்ள ஒப்புவார்கள்.

மேற்கூறிய வழிமுறைகளில் எதுவானாலும், நன்கு யோசித்து விட்டு, துரிதமாக, கறாராகச் செயல்பட வேண்டும்.

கஷ்டமான முடிவெடுக்கத் திணறி, வழவழாவென்று ஜவ்வாக இழுத்து, பாதி செயல்பாடு என்பதெல்லாம் கூடாது. அப்புறம் இதுவுமில்லை, அதுவுமில்லை என்பதாக வெற்றி வாய்ப்பும் குறைந்து, செலவும் குறையாமல் ரெண்டும் கெட்டானாக முடிந்துவிடும்.

சிறு துளி பெருவெள்ளம் என்பது செலவுக்கு மட்டுமல்ல வரவுக்கும் தான்! அதனால், சிறிய ஆர்டர் தரும் வாடிக்கையாளர்களை காரணமில்லாமல் அசட்டை செய்யாதீர்கள். பெரிய வாடிக்கையாளர்களின் மேல் அதிக கவனம் செலுத்துவது சரிதான். வேலையாளர்கள் ஒரு சிலரே இருப்பதால் ஒவ்வொருவரும் அதிக அளவு வரவு கொண்டு வருவதிலும், தக்க வைத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், கூடுமானால், எந்தச் சிறிய வாடிக்கையாளர்கள் வளர்ந்து பெரும் வாடிக்கையாளராகக் கூடும் என்று யோசித்து அவர்களுடன் சேர்ந்து வளர்வதும் முக்கியம்தான்.

அதனால் சிறிய வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு விற்பனை மற்றும் சேவைப் பளு உள்ளது என்று கணித்து, அப்படிப்பட்ட எத்தனை வாடிக்கையாளர்களை சேர்த்துக் கொள்வது என்று யோசித்துச் செயல் படுங்கள்.

2009-ஆம் ஆண்டில் புதுநிறுவனங்கள் பிழைக்கவும் தழைக்கவும் என்ன செய்ய வேண்டும், எத்தகைய வாய்ப்புக்கள் உள்ளன என்ற விவரங்களை இனி வரும் பகுதிகளில் மேற்கொண்டு காண்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline