Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
பாலுமணிமாறன் (சிங்கப்பூர்)
- ஜெயந்தி சங்கர்|மார்ச் 2009|
Share:
Click Here Enlarge1998 முதல் சிங்கப்பூரில் நிரந்தரவாசியாகிவிட்ட பாலுமணிமாறன் பிறந்தது தமிழகத்தின் தேனி மாவட்டத்திலுள்ள கூளையனூரில். அந்தச் சிற்றூரைத் தனது 'வேர்' என்று பெருமிதத்துடன் குறிப்பிடும் இவர், மலேசியநாடுதான் தனது இலக்கிய உணர்வை உயிர்ப்பித்தது என்பார். சிங்கப்பூரின் வசந்தம் ஒளிவழியின் 'நவரசம்' தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு எழுதியிருக்கும் இவர் ஒரு பிரெஞ்சு நிறுவனத்தில் எம்.ஆர்.டீ. ப்ராஜெக்டில் தர நிர்வாகியாகப் பணிபுரிகிறார்.

1996-97ல் பணி நிமித்தமாக மலேசியாவில் இருந்தபோது, அங்குள்ள தினசரி, வார, மாத இதழ்களில் இவர் எழுதிய கதை, கவிதைகள் மலேசியத் தமிழ் வாசகர்களின் பரவலான கவனத்தைப் பெற்றன. குறிப்பாக, 'மக்கள் ஓசை'யில் 15 வாரங்கள் தொடர்ந்து எழுதிய 'வாரம் ஒரு இளமைக் கதை' இவரை மிகுந்த கவனத்துக்கு உரியவராக்கியது. மலேசியாவில் குறுகிய காலமே வாழ்ந்திருந்தாலும் அங்கே நிலவும் தமிழிலக்கியச் சூழல் குறித்த தெளிந்த பார்வை கொண்டிருக்கிறார்.

பாலுமணிமாறன் மலேசியச் சூழலை மையமாக வைத்து எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான 'எங்கே நீ வெண்ணிலவே', மறைந்த மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் ஆதிகுமணன் தலைமையில் 1997ல் கோலாலம்பூரில் வெளியீடு கண்டது. அதன் பிறகு, இவர் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்துவிட்டார்.

10 வயதில் படித்த மாக்ஸிம் கார்க்கியின் தமிழ்மொழிபெயர்ப்பான 'தாய்' இவரில் பதித்த தடம் மிக நீண்டதும், ஆழமானதுமாக இருக்கிறது. எழுத்து என்பதைப் படிப்பின் மற்றும் வாழ்க்கை பற்றிய வாசிப்பின் நீட்சி என்று சொல்லும் இவர், "நிறையப் படிக்கிற போது கொஞ்சமாக எழுத முடிகிறது; கொஞ்சமாகப் படிக்கிற போது, எதுவுமே எழுதத் தோன்றுவதில்லை" என்கிறார்.

ஓர் எழுத்தாளன் தொடர்ந்து எழுதுவதன் மூலம், தொடர்ந்து தன்னையே செழுமைப்படுத்திக் கொள்கிறான்
சிங்கப்பூரில் 'கவிமாலை', 'கவிச்சோலை' போன்ற நிகழ்ச்சிகளில் தென்படும் இளம் கவிஞர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர், 1983 முதல் 2005 வரை தான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து 'அலையில் பார்த்த முகம்' என்ற பெயரில் சிங்கப்பூரில் வெளியிட்டதை மனநிறைவுடன் குறிப்பிடுவார்.

எழுத்து இந்த பூமியைப் புரட்டிப் போடும் நெம்புகோலாக மாறி விடுமென்ற நம்பிக்கை தனக்கில்லை என்பார். ஓர் எழுத்தாளன் தொடர்ந்து எழுதுவதன் மூலம், தொடர்ந்து தன்னையே செழுமைப்படுத்திக் கொள்கிறான் என்று நம்பும் இவரை அதிகம் ஆக்கிரமித்த எழுத்தாளர் அமரர் சுஜாதா. அவரை வியந்து ரசிக்கும் பாலுமணிமாறன் அவருடைய 'நகரம்' சிறுகதையின் தாய், தனது குழந்தையோடு எத்தனையோ வருடங்களாகத் தன் மனதுக்குள் நடந்து கொண்டிருக்கிறாள் என்பார்.

சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளேடான தமிழ் முரசிலும், மலேசியப் பத்திரிக்கைகளிலும், இணைய இதழ்களிலும், வலைப்பதிவிலும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்து எழுதி வருகிறார். சமீப காலமாக மற்ற ஊடகங்களிலும் இவரது தடங்கள் பதிகின்றன. சிங்கப்பூரின் 'வசந்தம்' தமிழ் தொலைக்காட்சியில் 'தொடுவானம்', 'கனவுகள்-கதவுகள்', 'நாம்' போன்ற நிகழ்ச்சிகளின் திரைக்கதை எழுத்தாளராக விளங்குகிறார்.
இளவயதில் இவருக்கு சாண்டில்யன், கண்ணதாசன் ஆகியோரின் எழுத்துகள், குறிப்பாக 'விளக்கு மட்டுமா சிவப்பு', 'அர்த்தமுள்ள இந்துமதம்', 'ராகமாலிகா' ஆகியவை மிகவும் பிடித்திருந்தன. மறைமலை அடிகளின் நடையும் இவரை வசீகரித்தது. ஒரு தலைமுறையையே பாதித்த எழுத்துக்குச் சொந்தக்காரர் என்று இவர் கருதும் பாலகுமாரன் இவரையும் பாதித்துள்ளார். அதே காலத்தவர்களான மாலன், சுப்ரமண்ய ராஜூ, ரவிச்சந்திரன், வாஸந்தி போன்றவர்களின் எழுத்துக்களும் கூடத்தாம். 15 வயதில் வாசித்த சுந்தர ராமசாமியின் 'புளிய மரத்தின் கதை' இவருள் பல கிளைகளோடு நீண்டது. மொழிபெயர்க்கப்பட்ட ரஷ்ய நூல்கள் பனிபடர்ந்த வெளிகளில் இவரை உலவ விட்டன. "உண்மையில் என் 15 வயதிற்குப் பிறகு நான் அதிகம் வாசிக்கவில்லை என்பதை அவ்வப்போது ஒரு சோகமாக உணர்கிறேன்" என்று சொல்லும் இவரது தாய் மாமா இராசு பவுன்துரை அவர்கள் தொடர்ந்து கொடுத்த ஊக்கத்தில் இவர் இளமையில் பல நூல்களைத் தேடிப் படித்திருக்கிறார்.

ஜே.பி.சாணக்கியாவின் சிறுகதைத் தொகுப்பு தனக்குள் சில தீக்குச்சிகளை வீசியது என்று கூறும் பாலு மணிமாறன், "பாலுணர்வு ஆடையைக் களைந்துவிட்டுப் பார்த்தாலும் நிர்வாணமற்றிருந்தன அந்தக் கதைகள்" என்கிறார்.

ஆங்கிலப் படைப்பிலக்கியங்களை இவர் படிப்பதில்லை என்றாலும், வர்த்தகம், விளையாட்டு போன்ற துறைசார்ந்த ஆங்கில நூல்களை அதிகம் படிப்பதுண்டு. இணையத்திலும் வலைப்பதிவிகளிலும் இடம் பெறுகின்ற விஷயங்கள் 'படைப்பாக்கம்' என்பதை விட, 'தகவல் தருபவை' என்ற நிலையில்தான் பெரிதும் உள்ளன என்று கருதுகிறார்.

தலைமைத்துவ குணத்தை இயல்பாகவே கொண்ட இவர் நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதிலும் வழிநடத்துவதிலும் சமர்த்தர். மலேசிய, சிங்கப்பூர் தமிழிலக்கிய உலகிற்குப் பெரும்பங்காற்றும் நோக்கில் 'தங்கமீன் பதிப்பகம்' என்ற பெயரில் பதிப்பகத்தைத் துவங்கி இதுவரை சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பான 'வேறொரு மனவெளி'யையும் முனைவர் சபா இராஜேந்திரனின் 'கலவை' சிறுகதைத் தொகுப்பையும் பதிப்பித்துள்ளார். மூன்றாவது நூலைப் பதிப்பிக்கும் வேலையில் மூழ்கியுள்ளார்.

ஜெயந்தி சங்கர்
Share: 




© Copyright 2020 Tamilonline