Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | அஞ்சலி
Tamil Unicode / English Search
சிறுகதை
அப்பாவின் சொத்து
ஐ.டி. மாப்பிள்ளை
புதிய வேர்கள்
- உமா|பிப்ரவரி 2009||(1 Comment)
Share:
Click Here Enlargeசாப்பாட்டு மேஜையை ஒருமுறை சரி பார்த்தாள் கெளசி. எல்லாம் தயார், விசேஷ நாளான இன்று காலை சிற்றுண்டிக்காக ரவா இட்லியும் சட்னியும் செய்திருந்தாள். கூட சுடச் சுட சொஜ்ஜியும். ஆரஞ்சுச் சாறு எடுத்துவர பிரிட்ஜ் திறக்கும்போது செல்போன் பாட்டுப்பாடி அழைக்க, விரைந்து எடுத்தாள். மூத்த மகன் பாலாஜிதான்.

'ஹலோ அம்மா, அப்பா இல்லையா?'

'இதோ வராரே' என்றவள் உள்ளே நுழைந்த கணவர் சுந்தரேசனிடம் தொலைபேசியை நீட்டினாள்.

'ஹலோ அப்பா, ஹேப்பி ரிடையர்மெண்ட். இருங்க ரமேஷூம் லைனில் இருக்கிறான்' என்று சொல்ல அவனும் அப்பாவுக்கு வாழ்த்துக் கூறினான்.

'என்னப்பா. தினசரி இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுதலை. அம்மாவும் நீங்களும் எப்படிக் கொண்டாடப் போறீங்க?'

சுந்தரேசன் சிரித்தார். 'கொண்டாட்டம் ஆரம்பமாயிட்டுதே. காலையில் பெட் காபி, இதோ டேபிளில் ரவா இட்லி. சட்னி, சொஜ்ஜி.'

'அதிர்ஷ்டக்காரர் அப்பா நீங்கள்' என்றவன் தொடர்ந்து, 'அப்பா சிற்றுண்டிக்குப் பிறகு உங்கள் ஈமெயிலில் பாருங்க, ஒரு ஆச்சரியம் காத்திருக்கு, ரிடையர்மெண்டுக்காக.'

'என்னடா, பெரிய எழுத்து ராமாயணமா?' என்றவரிடம், ’அதெல்லாம் சொல்ல மாட்டோம். பார்த்துத் தெரிஞ்சுக்கங்க. சரி, எங்களுக்கு ஆபிசுக்கு நேரமாச்சு, கிளம்பறோம். என்ஜாய்,' போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

சுந்தரேசன் நிறைந்த மனதுடன் அறையைச் சுற்றிப் பார்வையைச் சுழலவிட்டார். மிக விசாலமான அறை. ஒரு பக்கம் சமையல் அறை. மறு பக்கம் வாழும் அறை. அழகான, அடக்கமான அலங்காரம். ஒவ்வொரு பொருளிலும் கெளசியின் கலைநயம் தென்பட்டது. ஓய்வுபெற்ற வாழ்க்கைக்கு ஏற்ற அமைதியான அறை.

கணவனும், மனைவியும் சாப்பிடத் துவங்கினர். வாஷிங்டனில் இது வசந்த காலம். பனிக்காலத்தில் உறங்கியிருந்த இயற்கை மறுபடியும் உயிர்த்தெழுந்து பார்த்த இடமெல்லாம் பூக்களை வாரி இறைத்திருந்தது. ஜன்னல் வழியாக அவற்றை ரசித்த வண்ணம் இருவரும் சாவகாசமாக உணவருந்தினார்கள்.

அவர்கள் ஆரம்ப கால வாழ்க்கைக்கும், இன்றைய வாழ்க்கைக்கும்தான் எத்தனை வித்தியாசம். எத்தனை மாற்றங்கள்!

புதுமணமான பெண்ணின் உற்சாகத்துடன் செயல்படும் மனைவியைப் பார்க்க சுந்தரேசனுக்கு வியப்பாக இருந்தது. இந்தியாவுக்குத் திரும்ப அவளுள் இத்தனை வேகமும் ஆசையும் இருந்ததா என்று ஆச்சரியப்பட்டார்.
சுந்தரேசன் முதன்முறை அமெரிக்கா வந்தது அவர் எம்எஸ்ஸி பெளதிகத்தில் முதலிடத்தில் தேறிய பிறகுதான். ஆராய்ச்சிப் படிப்புக்காக வந்தவருக்கு இங்கேயே தங்கிவிடும் யோசனை ஏதும் இருக்கவில்லை. பி.எச்டி முத்தவுடன் நேரே கிளம்பி இந்தியாவுக்குத் திரும்பினார். அப்போது புதிதாகத் தொடங்கியிருந்த விண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் நல்ல பதவி காத்திருந்தது. கைநிறையச் சம்பளம், வசதியான வீடு. மறுவருஷமே பெற்றோர் தேர்ந்து எடுத்த கெளசல்யாவை மணக்க இல்லறம் இனிமையாகவே அமைந்தது. பாலாஜியும், ரமேஷும் பிறந்தார்கள்.

ஏறத்தாழ இந்தக் காலகட்டத்தில்தான் சுந்தரேசனுக்கு வேலையில் ஒருவித ஏமாற்றம் தோன்ற ஆரம்பித்தது. ஏதேதோ சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் வேலையில் சேர்ந்தவருக்கு ஏகத் தடைக்கற்கள். மாறிமாறிப் பதவிக்கு வரும் கட்சிகள். கட்சிக்கு ஏற்றாற்போல மாறிப்போகும் கொள்கைகள் என்று குழப்ப நிலையில் ஒரு சுத்த விஞ்ஞானிக்குத் தேவையான செயல்சுதந்திரம் கிட்டவில்லை. அமெரிக்காவில் அவருடன் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்த பேராசிரியர் ஒருவர் அவருக்கு அழைப்பு விடுத்தபோது சுந்தரேசன் அதை ஏற்கும் மனநிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார். கெளசியிடம் அதைப் பற்றிப் பேசிய போது அவள் எளிதில் ஒப்பவில்லை. ஐந்தாவதும், மூன்றாவதும் படிக்கும் குழந்தைகளை, அதிலும் படிப்பு, விளையாட்டு என்று அனைத்திலும் திறமைசாலியான குழந்தைகளை இவ்வளவு பெரிய மாற்றம் எப்படிப் பாதிக்குமோ என்று கவலைப்பட்டாள். தெரிந்த சூழலில் இருந்து வந்து முற்றிலும் மாறுபட்ட சூழலில் வாழப் பழக வேண்டுமானால் நிறைய விட்டுக் கொடுக்க வேண்டிவரும். இரு பக்கத்திலும் வயதான பெற்றோர்கள் இருந்தார்கள். அவர்களை இந்தப் பிரிவு எப்படி பாதிக்கும் என்று யோசித்துப் பார்க்க விஷயங்கள் நிறையவே இருந்தன. ஆனால் கடைசியாக சுந்தரேசனின் ஆர்வமே வென்றது. ஒரு நல்லநாளில் கிளம்பி அமெரிக்கா வந்து சேர்ந்தார்கள்.

சுந்தரேசனுக்குப் பழகிய சூழ்நிலையில் வேலை செய்வது எளிதாக இருந்தது. கெளசியும், குழந்தைகளும் மிகவும் சிரமப்பட்டார்கள். பள்ளியில் அமெரிக்க ஆங்கிலம் ஆரம்பத்தில் கைவர வில்லை. சுலபமாகப் புரியவும் இல்லை. பாடம் கற்பிக்கும் முறைகள், விளையாட்டுகள்கூட வித்தியாசமாக இருக்க, கிட்டத்தட்ட ஒரு வருஷம் திணறித்தான் போனார்கள். நாளாவட்டத்தில் பழகிவிட்டது.

சுந்தரேசன் வேலையில் வெகு மும்முரமாகிவிட, கெளசிக்கு வீட்டிலும், வெளியிலும் நிறையப் பொறுப்புகள் ஏற்றுக் கொள்ள வேண்டி வந்தது. கார் ஓட்ட உரிமம் இருந்தாலும் அதிகம் ஓட்டிப் பழக்கம் இருக்கவில்லை. அதிலும் அமெரிக்காவின் அதிவேகப் போக்குவரத்தில் ஓட்டப் பழக வேண்டி வந்தது. பள்ளியில் மற்ற குழந்தைகளின் கேலிப் பேச்சுக்கு ஆளாகி, பள்ளிச் சண்டியர்களிடம் அடிபட்டுவரும் தன் குழந்தைகளுக்கு தைரியமும், ஊக்கமும் கொடுத்துப் பாதுகாக்கும் பொறுப்பு கடினமாகவே இருந்தது. இந்தத் தற்காலிகப் பிரச்சினைகளை ஒருவாறாகச் சமாளித்து தலைநிமிர்ந்த போது அமெரிக்க வாழ்க்கையில் ஒரு பாதுகாப்பின்மையை உணர்ந்தாள் கெளசி. இந்தியாவில் இருந்தபோது, குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்கள், உடன்பிறப்புகள் என்று ஒரு பெரிய ஆதரவு வட்டம் இருந்தது. இங்கே நண்பர்கள் ஓரளவு ஆதரவாக இருந்த போதிலும், குடும்பம் அருகில் இல்லாதது பெரிய குறையாகவே இருந்தது.

புதிய தேசத்தில் காலூன்ற, தானும் சம்பாதித்தால் உதவியாக இருக்குமென்று தோன்ற ஆரம்பித்தது. குழந்தைகளும் ஓரளவு வளர்ந்துவிடவே அவளிடம் நிறைய ஓய்வு நேரம் இருந்தது. கணினித்துறை அப்போதுதான் புதிதாக முன்னேற்றம் கண்டு வந்தது. எங்கும் எதிலும் ஊடுருவி மனித வாழ்க்கையை மாற்றியமைக்கப் போகும் கணினித் துறையில் பயிற்சி பெறத் தீர்மானித்தாள் கெளசி.

எம்எஸ்ஸி படித்திருந்த அவளுக்கு இத்துறை புதிதானாலும் அதிகக் கஷ்டமாக இருக்கவில்லை. படிப்பை முடித்தபோது வேலையும் சுலபமாகவே கிடைத்தது. இருவரும் உழைக்க வசதியான வாழ்க்கை, கணிசமான சேமிப்பு என்று வாழ்க்கை ஓடியது. குழந்தைகளும் படிப்பிலும், விளையாட்டிலும் பள்ளி மெச்சும் அளவு முன்னேற்றம் கண்டார்கள்.

வாழ்க்கையின் நிலையின்மையை உணர்த்திக் கொண்டே இருப்பது விதியின் கடமை போலும். ஒருநாள் ஆராய்ச்சிக்கூடம் சென்ற சுந்தரேசன் தோளில் பொறுக்கமுடியாத வலியை உணர்ந்தார். சுளுக்கு என்று நினைத்தவாறு வேலை செய்யத் துவங்கினார். சற்றுநேரத்தில் நெஞ்சில் யாரோ பாறாங்கல்லை அழுத்தியது போல் வலி. மூச்சுவிட முடியவில்லை. அலுவலகத்தினரே அவரைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துவிட்டு, கெளசிக்கும் தகவல் சொன்னார்கள். அவருக்கு சீரியஸான மாரடைப்பு என்று கண்டுபிடித்து வைத்தியம் நடந்தது. பதினாலும், பதிமூன்றுமான வயதில் இருந்த மகன்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சி. மறுபடியும் கெளசிதான் அசையாத தூணாகக் குடும்பத்துக்கு அரணாக நின்றாள். சுந்தரேசன் பிழைத்தெழுந்தார். ஆனால் தினசரி வாழ்க்கையில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். எந்தக் கடுமையான வேலையிலும் ஈடுபட முடியாமை. கையாலாகாத்தனத்தினால் ஏற்பட்ட சுயபச்சாதாபம், கோப தாபங்கள். அவருடைய வியாதியைவிட அவருடைய குணத்தில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள் குடும்பத்தை அதிகம் பாதித்தன. காலப்போக்கில் தன் வியாதியையும் அதன் விளைவுகளையும் சமாளித்து அவரை ஒரு சகஜநிலைக்குக் கொண்டு வந்தாள் கெளசி. குழந்தைகளும், டாக்டரும் நிறைய ஒத்துழைத்தார்கள்.

யாருக்காகவும் நிற்காத காலம் ஓடிக்கொண்டே இருக்க, குழந்தைகள் வளர்ந்து இன்று தன் காலில் நிற்கிறார்கள். மருமகள்கள், பேரன், பேத்தி என்று நிறைவான குடும்பம். கட்டுப்பாடான வாழ்க்கை, உணவுமுறை, உடற்பயிற்சி என்று இருப்பதில் சுந்தரேசனின் உடல்நிலையும் ஓரளவு சகஜநிலையில் இருந்துவர, இன்று தனது அறுபத்தி ஐந்தாவது வயதில் ஓய்வு பெறுகிறார்.

சாப்பாட்டு மேஜை மேலேயே இருந்த லாப்-டாப்பைத் தட்டினார் சுந்தரேசன். மகன்களுடைய பரிசு --ஹவாய்த் தீவுகளுக்கு ஒரு கடற் பயணம். ஒரு வாரம் அங்கே தங்கயிருக்க ஹோட்டலில் முன்பதிவு. எல்லாம் தயாராக கணினி மூலம் வந்து சேர்ந்திருந்தது.

ஹவாய்ப் பயணம் முடிந்த கையோடு சியாட்டிலில் பாலாஜியிடமும், சான்பிரான்சிஸ்கோவில் ரமேஷிடமும் சிறிது காலம் தங்கத் தீர்மானித்தார்கள். மூன்று மாத விடுமுறைக்குப் பின் ஊர் திரும்பிய தம்பதிகளுக்கு நிறையவே ஓய்வு இருந்தது. கெளசியும் ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்பே வேலையை விட்டுவிட்டதால் இருவருக்குமே பொழுது நிறைய இருந்தது. கெளசியின் பலநாள் ஆசை மறுபடியும் மனதில் துளிர்விட, அதைச் செயலாக்கத் தீர்மானித்தாள்.

'ஊரை விட்டு, உற்றார் உறவினரைவிட்டு முழுக்க அந்நியமான இந்த ஊரிலே இத்தனை காலம் இருந்தாச்சு. இனி மறுபடியும் இந்தியாவுக்கே போனால் என்ன? பெங்களூரில் உங்கள் அக்காவும் தம்பியும் இருக்கிறார்கள். என் தங்கையும் இருக்கிறாள். ஹைதராபாதில் என் தம்பியும் வயதான அம்மாவும் இருக்கிறார்கள். பேசாமல் அங்கேயே வீடு வாங்கிக்கொண்டு செட்டில் ஆகி விடலாம் என்று தோன்றுகிறது' என்றவளைப் பார்த்துச் சிரித்தார் சுந்தரேசன்.

'சொந்த ஊரா, எது? நாம் இங்கே குடியுரிமை பெற்று இருபது வருஷம் ஆகிறது. நினைவிருக்கா? நம்ம உறவினர்கள் குடும்பங்களிலும் அவரவர் குழந்தைகளைப் பார்க்க இங்க வந்து விடுகிறார்கள். இங்கேயே எல்லோரையும் சந்தித்து விடுகிறோம். தவிரவும், இத்தனை வருஷமாக செட்டில் ஆன ஊரை விட்டு வயது காலத்தில் இந்தியாவில் மறுபடியும் செட்டில் ஆவது அவ்வளவு சுலபமில்லை. கெளசி, வேண்டுமானால் இந்த அட்லாண்டிக் கடற்கரையை விட்டு பசிபிக் கடற்கரைப் பக்கம் போகலாம். உன் பிள்ளைகளும் அவர்கள் குடும்பங்களும் பக்கத்தில் இருக்கும். நினைத்தபோது பேரக் குழந்தைகளைப் பார்க்கலாம்' என்றார் சுந்தரேசன்.

கெளசி எதையும் கேட்டுக்கொள்கிற மனநிலையில் இல்லை. பிடிவாதமாக இந்தியா திரும்ப விரும்பினாள். பாலாஜி, ரமேஷ் சொல்லிப் பார்த்தார்கள். கடைசியில் எல்லோரும் கலந்து பேசி, பெங்களூரில் ஒரு நல்ல வீடு வாடகைக்கு எடுத்து ஒரு வருடம் அங்கே தங்கிப் பார்ப்பது என்று தீர்மானமாயிற்று.

வாஷிங்டன் வீட்டை வாடகைக்கு ஒரு வருடம் ஒப்பந்தத்தில் கொடுத்துவிட்டார்கள். கெளசி, சுந்தரேசன் பெங்களூரிலேயே தொடர்ந்து இருக்க விரும்பினால் அங்கே வீடு வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவானது. கெளசி இந்தியாவில் குடும்பம் நடத்த அவசியமான சாமான்களை பேக் செய்தாள். புதுமணமான பெண்ணின் உற்சாகத்துடன் செயல்படும் மனைவியைப் பார்க்க சுந்தரேசனுக்கு வியப்பாக இருந்தது. இந்தியாவுக்குத் திரும்ப அவளுள் இத்தனை வேகமும் ஆசையும் இருந்ததா என்று ஆச்சரியப்பட்டார்.
பிறந்த மண் மீதுள்ள பற்று என்றும் தீராதுதான். ஆனால் அதே சமயம் அவர்கள் புதிய மண்ணில் வேரூன்றித் தழைத்து வளர்ந்தவிட்ட பின்னர், மறுபடியும் பிடுங்கிப் பழைய இடத்தில் நடுவது சாத்தியமல்ல.
சுந்தரேசன் தம்பி பெங்களூரில் ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் வாடகைக்கு ஏற்பாடு செய்ய, கெளசி கணவருடன் வந்து சேர்ந்தாள். சுந்தரேசனின் அக்கா வீடு பக்கத்திலேயே இரண்டு மூன்று மைலில் இருந்தது. அவர் தம்பியும் பக்கத்தில்தான். கெளசியின் தங்கை சென்னையில் இருந்தாள். வெகுகாலத்திற்குப் பிறகு நெருங்கிய உறவினர்களுக்குப் பக்கத்தில் வந்துவிட்டது பற்றி அவளுக்குத் தாங்க முடியாத சந்தோஷம். வீட்டில் பால் காய்ச்சின அன்று எல்லோரும் வந்திருந்து அமர்க்களமாக வாழ்த்தினார்கள்.

கெளசி ஒரே வாரத்தில் வீட்டில் சாமான்களை நேர்த்தியாக அடுக்கி, எல்லா ஏற்பாடுகளும் செய்தாள். அவசியமான பர்னிச்சர் வாங்கி வந்தார்கள். கார் வாங்கினார்கள். வேலைக்கு ஆள், பால்காரர், கேபிள் டிவி எல்லாம் ஏற்பாடாக, புது வாழ்க்கை ஆரம்பமாயிற்று. உறவினர்கள் ஒவ்வொருவராகப் பார்க்க வந்தார்கள். ஹைதரபாத்திலிருந்து தம்பி குடும்பம் தாயாருடன் வந்து ஒருவாரம் தங்கிப் போனார்கள்.

சுந்தரேசனுக்கும் இந்திய வாழ்க்கை மிகுந்த நிறைவைக் கொடுத்தது. ஓய்வு பெற்ற வாழ்க்கையாதலால் பொழுது நிறையவே இருந்தது. ஆசை தீர கலைநிகழ்ச்சிகள், சுற்று வட்டாரத்துக் கோவில்கள் என்று நிறையச் சென்று வந்தார்கள்.

நாட்கள் வெகுவேகமாகப் பறந்தன. இரண்டு மாதங்கள் கழிந்து விட்டன. கெளசியின் மனதில் அவ்வப்போது ஒரு அதிருப்தி தலைகாட்டத் துவங்கியது. ஆரம்பத்தில் வாரம் தப்பாமல் சொந்த பந்தங்களைச் சந்தித்ததுபோல் தொடர்ந்து நடக்கவில்லை. சுந்ததேசன் தம்பிக்கு அடிக்கடி டூர் போகும் உத்தியோகம். ஊரில் இருக்கும் நாட்களில் காலை எட்டு மணிக்கு அலுவலகம் சென்றால் ஓய்ந்துபோய் வீட்டுக்கு வரும்போது மணி ஒன்பது ஆகிவிடும். கல்லூரியில் படிக்கும் குழந்தைகள். தம்பியின் மனைவியும், வீட்டுப் பொறுப்புகள், எஞ்சிய நேரத்தில் யோகா வகுப்பு, லேடீஸ் கிளப் என்று படு பிசி. தொலைபேசியில்கூட அவளுடன் நிதானமாக அரட்டை அடிக்க முடியாது.

சுந்தரேசனின் அக்கா வீட்டில் அவள் மகன், மருமகள் இருவரும் வேலைக்குப் போய் விடுவார்கள். அக்காவுக்கு வீட்டுப் பொறுப்பு, நிர்வாகம் சரியாக இருக்கும். கல்லூரி, உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பேரக் குழந்தைகள் நினைத்தபோது வெளியில் போவதும் வருவதும் அவர்களைத் தேடி வரும் நண்பர்கள் குழாத்துக்கு பதில் சொல்லவும் அக்காவுக்கும், அவள் கணவருக்கும் பொழுது சரியாக இருக்கும்.

சுந்தரேசனின் தம்பியும், அவர் மனைவியும் அமெரிக்காவில் இருக்கும் இளையமகளின் பிரசவத்துக்குக் கிளம்பிப் போய்விட கெளசியும் சுந்தரேசனும் ரொம்பத் தனிமையாக உணர்ந்தார்கள். யார் மீதும் குற்றம் இல்லை. அவரவர்களுக்கு வாழ்க்கையில் கடமைகளும், குறிக்கோள்களும் உள்ளன என்பது நன்கு புரிந்த போதிலும் சற்றே ஏமாற்றத்தைத் தவிர்க்க முடியவில்லை.

சுந்தரேசனுக்கு மிகவும் பெருமையளித்த விஷயம் இந்தியாவின் திறமை. கணினித்துறையிலும் மேலாண்மைத் துறையிலும் உலகம் மெச்சும் முன்னேற்றம், வளர்ந்துவரும் பொருளாதாரம் திருப்தியாக இருந்தது. மருத்துவத் துறையில் பிரமிக்க வைக்கும் முன்னேற்றம். வெளிநாட்டினர் பலர் சிகிச்சைக்கு பாரத தேசத்தை நாடிவந்தார்கள்.

ஆனாலும் இந்த சந்தோஷம் கலப்பிடமின்றி ஏற்கும்படியாக இல்லை. மிக வேகமாகப் பரவி வரும் மேற்கத்திய கலாசாரம் வருத்தத்தை அளித்தது. இளைய தலைமுறையினர் பலரும் நம்மை இத்தனை ஆண்டுகளகாகப் பின்தங்க வைத்ததே இந்தியப் பண்பாடுதான் என்பதாகச் சிந்தித்தார்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, பல தலைமுறைகளாக வந்த உணவுப் பழக்கங்கள் மாறி ஆரோக்கியத்திற்கும், சீதோஷ்ணத்திற்கும் பொருந்தாத உணவுகளைத் தேர்ந்து சாப்பிட்டார்கள். திருமண பந்தத்தைப் புனிதமாக நினைத்த மண்ணில், அற்பக் காரணங்களுக்காக விவாகரத்துக் கோருவது சகஜமாக ஏற்றுக் கொள்ளப்படுவது மனதை மிகவுமே உறுத்தியது. அவசர யுகத்தில் வளர்ந்துவரும் இளைய தலைமுறையினர் எதற்கும் காத்திருக்கத் தயாராக இருக்கவில்லை. எல்லாம், இன்றே, இப்போதே கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பெற்றோர், குழந்தைகள் உறவுகளில் நிறையவே பாதிப்பு ஏற்படுத்தியது கண்டு வருத்தப்பட்டார்கள்.

பாலாஜியும், ரமேஷும் அடிக்கடி போன் செய்து பேசினார்கள்.

'அங்கே தனியே என்ன செய்கிறீர்கள்? இங்கே குழந்தைகள் உங்களைப் பார்க்க, உங்களுடன் இருக்க, எத்தனை ஆவலாகக் காத்திருக்கிறார்கள் தெரியுமா?' என்று கேட்டபோது குழந்தைகள் 'தாத்தா, பாட்டி எப்போ வரப் போகிறீர்கள்?' என்று நச்சரித்தபோது இருவருக்கும் ஏக்கம் தோன்ற ஆரம்பித்தது.

கெளசி ஆழ்ந்து யோசிக்கலானாள்.

பிறந்து வளர்ந்து மண்ணோ, பல வருடங்களாக வேரூன்றி விட்ட மண்ணோ, உலகமே குறுகிவிட்ட இந்தக் காலத்தில் வாழ்க்கை முறையில் பெரிய வேறுபாடுகள் ஏதும் தெரியவில்லை. சொல்லப்போனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்கள் கலாசாரத்தை பண்பாடுகளை வாழ்க்கை முறையை முழுமையாக விடாமல் இருக்க அதிக முயற்சி எடுத்துக் கொண்டார்கள். வெளிநாட்டாருடன் ஒத்து வாழ்ந்து, அதே சமயம் தங்கள் தனித்தன்மையும் விட்டுக் கொடுக்காமல் இருக்கப் பாடுபட்டார்கள். கலைகள், மொழி, பண்பாடு எல்லாவற்றையும் முடிந்தவரை கட்டிக்காக்க விழைந்தார்கள்.

கெளசி புரிந்து கொண்டாள். பிறந்த மண் மீதுள்ள பற்று என்றும் தீராதுதான். ஆனால் அதே சமயம் அவர்கள் புதிய மண்ணில் வேரூன்றித் தழைத்து வளர்ந்தவிட்ட பின்னர், மறுபடியும் பிடுங்கிப் பழைய இடத்தில் நடுவது சாத்தியமல்ல. சுந்தரேசன் அவள் சொல்வதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்டார்.

'அப்போ இந்த டிசம்பர் கச்சேரி சீசன் முடிந்தவுடன் கிளம்பு. டிக்கட் புக் பண்ணிவிடவா?' என்று கேட்க கெளசி சரியென்று தலையசைத்தாள்.

உமா,
சைப்ரஸ், கலி.,
More

அப்பாவின் சொத்து
ஐ.டி. மாப்பிள்ளை
Share: 




© Copyright 2020 Tamilonline