|
மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகாதமி |
|
- |ஜனவரி 2009| |
|
|
|
|
பிரபல எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளருமான மேலாண்மை. பொன்னுசாமி, இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் இலக்கியப் படைப்புகளுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான இது, இவர் எழுதிய 'மின்சாரப் பூ' என்ற சிறுகதைத் தொகுப்புக்குக் கிடைத்துள்ளது.
58 வயதாகும் பொன்னுசாமி, விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்தவர். வறுமையின் காரணமாக ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பயின்றவர். பத்து வயதானபோது தந்தை மறைந்ததால் குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தனது கிராமத்தில் சிறிய மளிகைக் கடை ஒன்றை நடத்தி வரும் இவர், தற்போதும் சகோதரருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். இவருக்கு மனைவி, 2 மகள்கள், 1 மகன் உள்ளனர்.
ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாவிட்டாலும் தனது தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக பல்வேறு நூல்களை தொடர்ந்து படித்தார். குறிப்பாக இலக்கிய நூல்களை அதிகம் படித்தார். இடதுசாரி இலக்கிய அமைப்புகளுடன் ஏற்பட்ட தொடர்பால் எழுதத் தொடங்கிய இவர், இதுவரை 6 நாவல்கள், 6 குறுநாவல் தொகுப்புகள், 22 சிறுகதைத் தொகுப்புகள், ஒரு கட்டுரைத் தொகுப்பை எழுதியுள்ளார். சமூக அவலங்களும், வாழ்க்கைச் சிக்கல்களுமே இவரது கதைகளின் முக்கிய அம்சம் ஆகும். |
|
இவர் இந்த விருது பற்றிக் கூறும்போது, 'சாகித்ய அகாதமி விருதைத் தேர்வு செய்யும் குழுவுக்கு எனது நூல்கள் எதையும் நான் அனுப்பவில்லை. யார் அனுப்பியது என்றும் எனக்குத் தெரியாது. விருதுக் குழுவினர் தொலைபேசி மூலம் தெரிவித்தபோது தான் இதைப்பற்றி அறிந்து கொண்டேன். இந்த விருதை கிராமத்து எழுத்தாளர்களுக்கு கிடைத்த அங்கீகரமாக நான் கருதுகிறேன்' என்றார்.
பொன்னுசாமி தவிர மேலும் 20 எழுத்தாளர்கள் சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிப்ரவரி 17ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள விழாவில் இவர்களுக்கு விருது வழங்கப்படும். விருதில் ரூ. 50 அயிரம் ரொக்கமும், தாமிரப் பட்டயமும் அடங்கும்.
எழுத்தாளரைத் தென்றல் வாழ்த்துகிறது.
பா.சு.ரமணன் |
|
|
|
|
|
|
|