|
|
|
இன்றைக்குத்தான் அந்த நாள் என்று முடிவெடுத்து நான்கு வாரங்கள் ஆகி விட்டன. அதாவது நாள் குறித்ததுதான் நான்கு வாரங்களுக்கு முன். முடிவு பல மாதங்களுக்கு முன்பே எடுத்தது. மஹேஸ்வரியின் மூத்த அக்காளின் மகனுக்குக் கல்யாணம் குறித்து கார்டு வந்தது. "உங்கள் மேலான வருகையை எதிர்பார்க்கும்..." என்ற தலைப்பின் கீழ் அவள் பெயரும் அவள் கணவனாக என் பெயரும் கூடப் போட்டிருந்தார்கள்.
"நான் தூக்கி வளர்ந்த பையங்க...!" என மஹேஸ் பெருமூச்சு விட்டாள்.
அந்தப் பெருமூச்சுக்கு விளக்கம் "எப்படிப் போறது?" என்பது. இப்படி எத்தனையோ திருமணங்கள் வந்து போயிருந்தன. அந்தத் தருணத்தில்தான் எனக்குள் அந்த முடிவு உருவாயிற்று.
"போயிட்டு வா மஹேஸ்" என்றேன்.
என்னை உறுத்துப் பார்த்தாள். "என்ன விளையாடறிங்களா?" என்றாள்.
"இல்ல மஹேஸ்! போயிட்டு வா. ஒருநாள் போய் மறுநாள் வந்திடலாம். சங்கரிய கூட அழச்சிக்கிட்டுப் போ. நான் ரெண்டு நாள் லீவு போட்டுட்டு வீட்டில இருந்து பாத்துக்கிறேன்!"
"முடியுமா உங்களால? அள்ளிப்போட, கழுவ, குளிப்பாட்ட?"
"முடியும்" என்றேன். இதெல்லாம் சின்ன விஷயம். இதற்கு மேலும் முடியும்.
அன்று அவள் சரியென்று சொல்லவில்லை. ஒரு நாள் முழுதும் யோசித்திருந்தாள். மறுநாள் மாலையில்தான் சொன்னாள்: "நீங்க நிச்சயமா முடியும்னு சொன்னிங்கன்னா நான் போகலான்னு தான் இருக்கேங்க. நானும் எங்க ஜனத்தையெல்லாம் பாத்து எத்தனை நாளாச்சி?" என்றாள்.
"முடியும் மஹேஸ்! நீ போய்ட்டு வா!" என்றேன். அப்போதே அந்த முடிவு என்னுள் உறுதிப்பட்டது.
| சத்தம் கேட்டால் பார்க்க வேண்டும். இளைப்பது போல் தெரிந்தால் ஆக்ஸிஜன் குப்பியின் மூக்கு மூடியை தலையைச் சுற்றி மாட்டி வால்வைத் திறந்து சுவாசிக்கச் செய்ய வேண்டும். | |
அவள் சொல்லச் சொல்ல அந்த உடலைத் தூக்கி அருகில் இருந்த வாங்கில் கிடத்தினேன். கழுத்துக்குக் கீழும் பிருஷ்டத்துக்குக் கீழும் அப்படித் தாங்கலாகத் தூக்கி மாற்ற வேண்டும் என்றுச் சொல்லிக் கொடுத்தாள். அப்போதுதான் எலும்புகளுக்குச் சேதமில்லாமல் இருக்குமாம். ஒன்றும் சிரமம் இல்லை காற்றுப் போலத்தான் இருந்தான்.
"இந்த பக்கெட்டில சுடுதண்ணி பிடிச்சிக்க வேண்டியது. கைச்சூடா வெதுவெதுன்னு இருந்தா போதும். இந்த பேம்பர்ஸ்ஸ கழட்டி வீசிட்டு உடம்பு முடுக்க துடைச்சி விட்டுடுங்க. கீழெல்லாம், முதுகெல்லாம் கழுவணும். சின்னச் சின்ன புண்ணு இருக்கும் பாருங்க. இந்தக் கிரீமத் தடவணும். அப்புறம் கொஞ்சம் பவுடர் பூசிட்டு புது பேம்பர்ஸ் போட்டு, மேல சட்ட போட்டுடுங்க. அப்புறம் அப்படியே தூக்கிப் படுக்க வைக்கணும்."
எல்லாம் அவள் திருப்திக்குச் செய்து காட்டினேன். திரவம் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை கொடுக்க வேண்டும். மருந்துகளுக்கும் மணிக்கணக்கு இருந்தது. இரவில் மூச்சடைத்து இளைக்கலாம். சத்தம் கேட்டால் பார்க்க வேண்டும். இளைப்பது போல் தெரிந்தால் ஆக்ஸிஜன் குப்பியின் மூக்கு மூடியை தலையைச் சுற்றி மாட்டி வால்வைத் திறந்து சுவாசிக்கச் செய்ய வேண்டும். இரவில் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுவதுபோல் அலாரம் வைத்துக் கொண்டுதான் படுக்க வேண்டும். திரும்பத் திரும்பச் சொன்னாள்.
எதற்காக இத்தனையும் செய்வது என்று நான் கேட்கவில்லை. என்ன நலனைக் கருதி, என்ன எதிர்காலத்தைக் கருதி? கேட்கவில்லை. "சரி சரி" என்றேன். அனைத்துக்கும் துல்லியமாக நேரம் குறித்து விவரங்கள் எழுதி ஓர் அட்டவணைத் தயார் பண்ணினாள். அதை நான் சுலபமாக எடுத்துப் படிக்கும் வகையில் ஃப்ரிட்ஜின் மேல் காந்தக் கற்கள் வைத்து ஒட்டினாள். அவள் பட்டம் பெற்ற ஆசிரியை. வேலையை விட்டு நான்கு ஆண்டுகள் ஆனாலும் 'மெத்தடாலஜி' இன்னும் மறக்கவில்லை.
வீட்டுக்கு டாக்சியைக் கூப்பிட்டு அவர்களை அனுப்பி வைத்தேன். சங்கரி அழகான பேன்ட் சூட் போட்டிருந்தாள். இரட்டைச் சடை போட்டிருந்தாள். கல்யாணத்தன்று போட்டுகொள்ள அவளுக்குப் பட்டிலான பாவாடையும் இடுப்பின் பாதியைக் காட்டும் சட்டையும் வைத்திருக்கிறாள். அவளுக்கென்று வாங்கிய இரட்டை லொக்கெட் சங்கிலியும் அவள் பெட்டியில் இருந்தது. நாளை எல்லாம் அணிந்து அழகாக இருப்பாள்.
"தம்பியப் பாத்துக்குங்க அப்பா!' என்று பெரிய மனுஷத்தனத்தோடு எனக்குக் கட்டளை போட்டாள். இவள் இறைவன் எனக்குக் கொடுத்த வரம்.
கடைசியாக அவனைப் படுக்கையில் குனிந்து முத்தமிட்டு "பாத்துக்குங்க. நாளைக்கு ராத்திரிக்குள்ள வந்திட்றேன்" என்று சொல்லிப் போனாள் மஹேஸ். கண்களில் நீர் இருந்திருக்கலாம். நான் கவனிக்கவில்லை. என் கவனம் வேறு திசையில் இருந்தது. கருவில் குழந்தை சரியாகப் புரளவில்லை என்னும் போதே எங்கள் கவலை ஆரம்பித்திருந்தது. சங்கரி பிறந்து நான்கு ஆண்டுகள் கழித்து தரித்த கரு அது. எங்கள் உற்பத்திச் செழுமையில் குறை ஏதும் இல்லை. ஆனால் சங்கரியை வளர்த்து பாலர் பள்ளிக்கு அனுப்ப ஆரம்பிக்கும்வரை இன்னொரு குழந்தை வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை. அப்படி எங்கள் மனதை அவள் ஆக்கிரமித்திருந்தாள். எங்களுக்கு வாழ்வில் முன்னேறும் வெறி இருந்தது. எங்கள் வேலைத் தகுதியை உயர்த்திக் கொள்ள நேரமும் உழைப்பும் தேவையாக இருந்தது.
நான் கட்டிடக்கலைத் துறையில் டிராஃப்ட்ஸ்மேனாக இருந்து கொண்டு பகுதி நேரமாக கரஸ்பான்டன்சில் பட்டப்படிப்பு படித்து வந்தேன். தேர்ச்சி பெற்ற ஆர்க்கிடெக்ட் ஆவது என் இலட்சியம். மஹேஸ் பட்டதாரி ஆசிரியை. பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியையாக உயர்வதற்கு வாய்ப்பிருந்தது. ஆகவே பல பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டிருந்தாள். வீட்டில் ஒரு இந்தோனேசியப் பணிப்பெண்ணை வைத்துக் கொண்டிருந்தோம். நல்ல பணிவான பெண்.
அடுத்த குழந்தை விரைவாக வந்துவிடக் கூடாது என்பதில் எங்களுக்கு பயம் இருந்தது. சங்கரியின் அன்பைப் பங்கு போட விரும்பவில்லை. மேலும் எங்கள் வேலை உயர்வுக்கு இடையூறாகக் கருச் சுமத்தலும் கைப்பிள்ளை வளர்ப்பும் அமைந்து விடக் கூடாது என்றும் நினைத்தோம்.
மஹேஸ்வரிக்கு தடுப்பு மாத்திரைகளை நாள்தோறும் ஞாபகமாகச் சாப்பிட முடியாது. தவறிப் போகும் நாட்கள் பல. ஆணுறை எனக்கு என்றைக்கும் திருப்தியாக இருப்பதில்லை. கையில் இல்லாமல் தீர்ந்து விடும் நாட்களில் காமத்தின் வசப்பட்டால் ஆபத்தை மறந்து ஈடுபடுவதுண்டு. அதன்பின் சில வாரங்கள் பயத்தோடு இருந்து, அப்புறம் மஹேஸ் எல்லாம் சரியாக இருக்கிறது என்று செய்தி கொடுக்க நிம்மதி வரும். |
|
இந்த நிலையில்தான் மாதம் ஒருமுறை சாப்பிடும் மாத்திரை ஒன்று இருப்பதாக நண்பன் சொன்னான். அது தாய்லந்திலிருந்து வருகிறது. தன் மனைவி இரண்டு ஆண்டுகளாகப் பயன்படுத்துவதாகவும் நம்பிக்கைக்குரியது என்றும் சொன்னான். அது எளிது என அதை வாங்கி மஹேஸுக்குக் கொடுத்தேன்.
சங்கரி நர்சரிக்குப் போகிற ஆண்டில் மஹேஸுக்குப் பதவி உயர்வு கிடைத்தது. வீட்டில் சங்கரிக்கு அளிக்க வேண்டிய கவனிப்புகளைப் பணிப்பெண் மிகத் திறமையாகச் செய்தாள். எங்களுக்கு ஒரு மகன் வேண்டும் என்னும் ஆசை துளிர்த்து வளர மாத்திரையை நிறுத்தினோம்.
| கதவுகளைச் சாத்தினேன். கையுறைகளை மாட்டிக் கொண்டேன். அவனுடைய படுக்கைக்குச் சென்றேன். ஒன்றும் பெரிய வேலையில்லை. மூக்கையும் வாயையும் கெட்டியாக மூடிப் பிடித்துக் கொண்டால் போதும். | |
கருத்தரித்து ஐந்தாம் மாதம் மஹேஸுக்குக் கடுமையான வைரஸ் காய்ச்சல் கண்டது. நான்கு நாள் மருத்துவ மனையில் இருந்தாள். இதனால் கருவுக்கு ஆபத்து உண்டா என டாக்டர்களால் சொல்ல முடியவில்லை. நெருங்கிய நண்பரான ஒரு டாக்டர் மட்டும் கருக்கலைப்பு பற்றி எண்ணமிருந்தால் தான் ஏற்பாடு பண்ணுவதாகச் சொன்னார். மஹேஸ் மறுத்துவிட்டாள். நான்காம் ஐந்தாம் மாதங்களில் கருப்பையில் குழந்தையின் புரளல் அவ்வளவு திருப்திகரமாக இல்லை என மருத்துவர் கூறியபோது எங்கள் வாழ்வில் இலேசாகக் கரு மேகங்கள் சூழ்ந்தன. ஆனால் ஸ்கேனில் குழந்தை ஆண் என்று உறுதியான போது எங்கள் எதிர்பார்ப்பும் ஆசையும் அதிகமாயின.
ஏழாம் மாதம் அவளுக்குத் தன் பள்ளிக்கூட நேரத்தில் கடுமையான வலி ஏற்பட்டது. பள்ளிக்கூட ஆசிரியைகள் அவளைக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள். நான் கேள்விப்பட்டு போய்ச் சேர்வதற்குள் நாங்கள் முன்னரே ஆசையாகத் தேர்ந்தெடுத்த 'ஜெகதீசன்' என்னும் பெயரைக் கொண்டவன் பிறப்பில் சபிக்கப்பட்ட ஒரு பிண்டமாக விழுந்திருந்தான். அதன் பிறகுதான் எங்கள் உலகம் தலைகீழாகிப் போனது. என்னவெல்லாம் தேவை என மிகக் கவனமாக நான் திட்டமிட்டதில் பிளாஸ்டிக் கையுறைகள் தவிர வேறு ஒரு உபகரணமும் தேவைப்படவில்லை. அதுவும் கை ரேகைகள் படியாமல் இருக்க. மிகச் சுலபமாக முடியக் கூடிய வேலைதான். ஒரு சில நிமிடங்களில் முடிந்து விடும். கை பலம் ஒன்றும் தேவையில்லை. மனத் திடம்தான் தேவை.
அதை மிகவும் சிரமப்பட்டு ஏற்படுத்திக் கொண்டாயிற்று. தத்துவ விசாரணைகள் ஏராளமாகச் செய்துவிட்டேன். சமய நூல்கள் பலவற்றைப் புரட்டியாயிற்று. ஏதும் முடிவாகப் பிடிபடவில்லை. கொல்லாமை என்ற அறம் உள்ள சமயங்களில் கூட கொலைகளுக்கு ஏராளமான நியாயங்கள் இருந்தன. புனிதப் போர்கள், தத்துவ விவாதங்கள் செய்து தோற்கடித்துக் கழுவேற்றுதல், சாத்தான் எனக் கூறி எரித்தல், கொலை உனக்கு விதிக்கப் பட்ட கருமம் எனல் இப்படிப் பல. ஆனால் நான் எதிர்நோக்கும் இந்தக் குறிப்பிட்ட நிலைமைக்கு எங்கும் விடையில்லை. வாழ்க்கையில் எந்தக் கேள்விக்குத்தான் விடை துல்லியமாகக் கிடைக்கிறது?
இணையத்தைத் திறந்து பார்த்தபோது "கருணைக் கொலை" என்னும் தலைப்பின் கீழ் "கூகல்" தேடு செயலி 250,000 செய்திகள் இருப்பதாகக் கூறியது. முதல் 50-தான் படிக்க வேண்டியிருந்தது. "ஆம்" என்றும் "இல்லை" என்றும் நிதானமான/ உணர்ச்சிகரமான/அறிவியல் பூர்வமான/ சமயப் பூர்வமான விவாதங்கள் இருந்தன. "ஆம்" என்போரது நிதர்சன குருவாக டாக்டர் ஜாக் கெவோர்க்கியான் பெயர் இருந்தது. அவரைத் தரிசித்துக் கொண்டேன்.
ஆனால் என் மஹேஸ்வரி மனத்தாலும் உடலாலும் அலைக்கழிக்கப்பட்டு குதறப் பட்டுவிட்டாள் என்பதைத் தவிர வேறு என்ன நியாயங்கள் எனக்கு வேண்டும்?
குழந்தை ஒரு மாதம் இன்க்யுபேட்டரில் இருந்தது. சுவாசம் சீரானவுடன் சாதாரண வார்டுக்கு மாற்றினார்கள். மேலும் ஒரு மாதம் பல்வேறு சோதனைகளுக்காகவும் முதுகுத் தண்டு ஸ்கேன், மூளை ஸ்கேன் செய்வதற்கு வைத்திருந்தார்கள்.
முதலில் முதுகுத் தண்டு பிறப்பிலேயே பிறழ்ந்து அமைந்திருந்தது என்று சொன்னார்கள். ஆகவே பல தசைகளின் அசைவுகள் இல்லாமல் இருந்தது. அப்புறம் மூளையின் சில பகுதிகள் சரியாக அமையவில்லை என்றார்கள். ஆகவே இந்திரியங்களின் செயல்பாடுகள் இல்லை என்றார்கள். "ஏன்" என்று கேட்டால் "எப்படிச் சொல்வது?" என்றார்கள். தாய்லந்தில் இருந்து வாங்கிய கருத்தடை மருந்து போலியானதாக இருக்கலாம். மஹேஸுக்குக் கண்ட வைரஸ் காய்ச்சல் கருவைப் பாதித்திருக்கலாம். ஒன்றும் துல்லியமாய்ச் சொல்ல முடியாது. கர்மா என்ற ஒன்றையும் பலர் ஞாபகப்படுத்தினார்கள். எங்கள் கர்மாவா, இவனுடைய கர்மாவா என்பதும் துல்லியமான பதில் இல்லாத வாழ்க்கைக் கேள்விகளில் ஒன்றாக அமைந்தது.
"சரியாக்கலாமா" என்றால் "மிகவும் பச்சைக் குழந்தை; இப்போது அறுவை சிகிச்சை செய்ய முடியாது; வளரட்டும் பார்க்கலாம்" என்றார்கள். நான்காண்டுகளுக்குப் பின்னும் எங்கள் சேமிப்பின் பெரும்பகுதி செலவழிந்த பின்னும் இன்னும் வேளை வரவில்லை என்றே சொல்லுகிறார்கள். "சரியாக்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றனவா?" என்றால் "மருத்துவம் விரைவாக வளர்ந்து வருகிறது. ஒரு தீர்வு தோன்றக் கூடும்!" என்றார்கள். "எப்போது?" என்றால் "நாங்கள் கடவுள் இல்லையே!" என்றார்கள்.
அவன் இருதயம் துடித்தது ஒன்றுதான் அசைவு. நெஞ்சு ஏறி இறங்குவதைப் பார்க்கலாம். கண்கள் பலவீனமாகத் திறந்து மூடும். வாயில் பால் ஊட்டினால் விழுங்க முடிந்தது. இப்போதும் திரவ உணவு, அளந்து ஊட்ட வேண்டும். தசைகள் மிக மெதுவாக வளர்ந்தன. தலை வீங்கி இருந்தது. தலை மயிர் வளர்ச்சி இல்லை. கபாலத்தினுள் ஒளியிழந்த வெறித்த கண்கள். அழுகையும் சிரிப்பும் இல்லை. மலஜலக் கழிவுகள் வந்தன. இந்த நான்காம் வயதிலும் பேம்பர்ஸ் போட்டுத்தான் அவிழ்த்து சுத்தம் செய்ய வேண்டும். பேம்பர்ஸ் வாங்கவே என் வருமானத்தில் பாதி போயிற்று.
மஹேஸ்வரி வேலையை விட்டாள். பணிப் பெண்ணை வைத்துக் கொள்ள பொருளாதார நிலைமை இடம் கொடுக்கவில்லை. அவளே முழுநேரப் பணிப் பெண்ணாக ஆகிவிட்டாள். உடல் மெலிந்து முகம் சிரிப்பிழந்து 20 வயது முதுமை கூடினாள். எனது ஆர்க்கிடெக்ட் ஆகும் இலட்சியம் சிதைந்திருந்தது.
உறவினர்கள் வருகை கொஞ்சம் கொஞ்சமாக நின்று போனது. அவர்கள் வந்து சோகமாக எங்களையும் பிள்ளையையும் பார்ப்பது மஹேஸுக்குப் பிடிக்கவில்லை. சங்கரி ஒருத்திதான் எங்கள் வாழ்வின் விளக்காக இருந்தாள். ஆனால் வீட்டின் இறுக்கமான சூழ்நிலை அவளையும் பாதித்து அவளுக்கும் தம்பியைப் பார்த்துக் கொள்வது முதலிய அன்றாடக் கடமைகளைக் கொடுத்து, தன் வயதுக்கு மீறிய முதிர்ச்சியில் தள்ளியிருந்தது. அவளுடைய பிள்ளைப் பருவம் வீணாகிக் கொண்டிருக்கிறது என்பது எனக்கு உறுத்திக் கொண்டே இருந்தது.
இரவுக்குக் காத்திருந்தேன். ஏன் இரவு தான் அதற்குத் தகுந்த நேரம் எனத் தோன்றுகிறதோ தெரியவில்லை. பேய்களின் காலம் என்பதாலா? கதவுகளைச் சாத்தினேன். கையுறைகளை மாட்டிக் கொண்டேன். அவனுடைய படுக்கைக்குச் சென்றேன்.
ஒன்றும் பெரிய வேலையில்லை. மூக்கையும் வாயையும் கெட்டியாக மூடிப் பிடித்துக் கொண்டால் போதும். எவ்வளவு நேரம் ஆகும்? எனக்கு அனுபவம் ஒன்றும் இல்லை. சின்னப் பூச்சிகளைக் கூட நான் அமுக்கிக் கொன்றதில்லை.
மன்னித்து விடு ஜெகதீசா! இது உன் அன்புத் தாய்க்காக! உன் தமக்கைக்காக! இது எனக்காகவும்! உனக்காகவும்தான்! நம் எல்லோருக்கும் இது விடுதலை.
கையை அவன் மூக்கின் மேல் வைத்த போது "ட்ரிங்" என்று ஃபோன் அடித்தது அலறலாக இருந்தது. ஃபோனை எடுக்கலாமா அல்லது இதை முடித்து விட்டுப் போகலாமா என்று நினைத்தேன். இதற்கு எவ்வளவு நேரம் ஆகுமோ தெரியாது. கூப்பிடுபவர்கள் யாராக இருந்தாலும் சந்தேகமுண்டாகும். இதற்கு அவசரமில்லை. நீண்ட இரவு இருக்கிறது.
கையுறைகளைக் கழற்றிப் போட்டுவிட்டு ஃபோனை எடுத்தேன். "ஹெலோ" என்றேன்.
"நாந்தாங்க!" என்றாள் மஹேஸ்.
"என்ன மஹேஸ்?" என்றேன். மனதின் படபடப்பை மறைத்து வைத்தேன்.
"ஜெகா எப்படி இருக்கான்?" என்றாள்.
"எப்படி இருக்கானா? எப்போதும் போலத்தான் இருக்கிறான்" என்றேன்.
"உடம்பு தொடைச்சிங்களா?"
"ஆமா, தொடைச்சேன்" என்றேன். பொய்.
"அவன் நெனைப்பாவே இருக்குங்க!" என்றாள்.
"உனக்கு ஏன் அவன் நினைப்பு? நீ பாட்டுக்குப் போன காரியத்தைப் பார். உன் உறவினர்களோட போய்ப் பேசு! சந்தோஷமா இரு. சங்கரி என்ன பண்ணுது?" என்றேன்.
"தோ புள்ளங்களோட ஒரே ஆட்டம்தான். ஜெகா தூங்கிட்டானா?"
"தூங்கிட்டான்!" பொய். அப்போது பார்த்தபோது கண்கள் விழித்திருந்தன.
"அவன் தூங்கும்போது உத்துப் பாத்தா அவன் சிரிக்கிறது மாதிரி தெரியுங்க! பக்கத்தில போய்ப் பாருங்களேன்!"
பேசாமல் இருந்தேன். "நாளைக்கு வந்திட்றேங்க!" ஃபோனை வைத்தாள்.
அவனைப் போய்ப் பார்த்தேன். தூங்கிக் கொண்டிருந்தான். எனக்கு சிரிப்பு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் நான் யார் அதைப் பார்க்க முடிவதற்கு? திடீரென்று இவன் என் பிள்ளை அல்ல, மஹேஸ்வரியின் பிள்ளை என்ற எண்ணம் தோன்றியது.
இன்று முழுவதும் அவனுக்கு பேம்பர்ஸ் மாற்றவில்லை என்பது ஞாபகம் வந்தது. பிள்ளை அழுக்கோடு இருப்பதை மஹேஸ்வரி விரும்ப மாட்டாள். பேம்ப்பர்சை மாற்றத் தூங்குபவனை எழுப்புவதா இல்லையா? யோசித்துக் கொண்டு நின்றேன்.
(முடிந்தது)
ரெ. ககார்த்திகேசு |
|
|
|
|
|
|
|