Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | முன்னோடி | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
ரெ.கார்த்திகேசு (மலேசியா)
- ஜெயந்தி சங்கர்|ஜனவரி 2009|
Share:
Click Here Enlarge1952 முதல் எழுதி வருகிறார் மலேசியாவின் முன்னணி எழுத்தாளரான ரெ.கார்த்திகேசு என்ற ரெ.கா. தோட்டங்களைப் பற்றியும் அங்கு வாழும் மக்களையும் சித்தரிக்கும் படைப்புகளே மலாயா எனப்பட்ட மலேசியாவில் நிறைய வெளிவந்த காலகட்டத்தில், நகரம்/பெருநகரம் சார் வாழ்வைப் பதிவு செய்த சிலருள் முக்கியமானவர். மலேசிய இதழ்களிலும், தமிழ் நாட்டின் தீபம், கணையாழி, கல்கி, இந்தியா டுடே, தீராநதி, காலச்சுவடு, யுகமாயினி, வார்த்தை ஆகிய இதழ்களிலும் எழுதியுள்ளார். இணைய இதழ்களான திசைகள், திண்ணை, பதிவுகள் ஆகியவற்றிலும் எழுதியுள்ளார். 17வது வயதிலேயே நாடு தழுவிய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றபோது தமிழவேள் கோ.சாரங்கபாணியிடமிருந்து 'சிறுகதை மன்னன்' என்ற பாராட்டைப் பெற்றார்.

ரெ.கா. 12வது வயதில் சிறுவர் இதழ்களில் எழுதத் துவங்கி, மூன்று தலைமுறைகளாக எழுத்துலகில் தொடர்ந்து இயங்கி வருகிறார். அவரது மகன் 'ஸிதார்' எனும் ஹிந்துஸ்தானி வாத்திய இசையில் வல்லவர். இசையாசிரியரும் கூட. ரெ.கா.வின் மூத்த சகோதரர் ரெ.சண்முகம் மலேசியாவில் நன்கு அறியப்பட்ட இசைக் கலைஞர். அறுபத்தெட்டு வயதிலும் எழுத்துலகில் தொடர்ந்து இயங்கிவரும் ரெ.கா. மலேசியாவின் பினாங்கில் இருக்கும் மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்திலிருந்து ஓய்வு பெற்றவர். தொடர்புத் துறைப் பேராசிரியராகவும் 'துணை டீன்' பதவியிலும் இருந்தவர்.

1920ல் மலாயாவுக்கு வந்த இவரது தகப்பனார் திருச்சியைச் சேர்ந்தவர். தாயார் மலாயாவிலேயே பிறந்தவர். தோட்டப்புறத் தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்ற ரெ.கா. பின்னர் ஆங்கிலத்தில் இடைநிலைக் கல்வி பயின்று, 1968ல் மலாயா பல்கலைக் கழகத்தில் இந்தியவியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1977ல், கொலம்பியாவில் இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இங்கிலாந்தின் லெஸ்டரில் 1991ல் பொது மக்கள் தகவல் சாதனத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

ரெ.கா.வின் ஒரேயொரு சிறுகதையைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். தொழிலில் முதலை இழந்து பங்குதாரர்களால் விரட்டப்பட்டுச் சாகும் விரக்தியில் இருளை நோக்கிச் செல்லும் படித்த பகட்டான பாஸ்கரன் என்ற ஒரு (முன்னாள்) முதலாளிக்கும், சீனனிடம் வேலை செய்யும் நாகராஜ் என்ற ஒரு சாதாரணத் தொழிலாளிக்கும் இடையே நடக்கும் உரையாடலாக 'இன்னொரு தடவை' சிறுகதை ஆரம்பிக்கும். எளியவன் கொண்டு வந்த சாராயத்தை இருவரும் குடிப்பார்கள். பிறகு, அவரவர் வாழ்க்கை மற்றும் பெண்டாட்டி பற்றிய குறைகளைப் பேசிவிட்டு பாஸ்கரன் நாகராஜையும் 'வா சாவோம்' என்றழைப்பான். போதையில் இருவரும் ஒரு பங்களாவுக்குப் பின்னால் இருக்கும் நீச்சல் குளத்தில் விழப் போவார்கள். முதலில் பாஸ்கரன் நாகராஜுக்கு 'சாவுத் தோழ'னாக வந்ததற்கு நன்றி சொல்லிவிட்டு நீருக்குள் குதித்து விடுவான். ஆனால், நாகராஜனோ, 'நாங் குடியை நிறுத்திட்டேன்னா என் பெண்டாட்டி என்னோட வருவான்னு நெனக்கிறேன். கடைசியா இன்னொரு தடவ முயற்சிக்கிறேன். வல்லன்னா அப்புறம் பார்த்துக்குவோம்', என்று சொல்லிவிட்டு தள்ளாடியபடி வேலியின் ஓட்டைக்குள் புகுந்து வெளியேறிப் போய்விடுவான். அதிக விவரணைகளின்றி பெரும்பாலும் உரையாடலாகவே கச்சிதமாக அமைந்திருக்கும் இந்தச் சிறுகதையின் சிறப்பே வாசித்து முடித்ததும் ஏராளமான கேள்விகள் நம் மனதில் முளைப்பதுதான்.
மலாயாப் பல்கலைக் கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், பொள்ளாச்சி NGM கல்லூரி போன்ற பல கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் இவரது படைப்புக்களை ஆராய்ந்து கட்டுரைகளும் ஆய்வேடுகளும் எழுதியுள்ளனர்.
இன்னொரு தடவை என்று சொல்லும் நாகராஜுக்கு மட்டும் வாழ்க்கையின் மீது ஒரு துளி நம்பிக்கை எப்படி இன்னமும் மிச்ச மிருக்கிறது? வசதிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் லௌகீகங்களும் அவை கொணருமென்று நம்பியிருந்த மகிழ்ச்சியும் வெறும் மாயையா? பொதுவாகவே, மில்லியன் கணக்கில் பற்று வரவு, கார் பங்களா, வீடு, வாசல் என்றிருப்போருக்கு வாழ்வின் மீது இருக்கவேண்டிய நம்பிக்கை சடாரென்று காணாமல் போவதேன்? கீழ் மட்டத்தில் வாழும் எளிய மக்களை ஒப்பு நோக்க மேல்மட்டத்தில் இருப்போருக்கு வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளைச் சந்திப்பதில் தைரியம் இல்லாமல் போவதேன்? வசதியானவனுக்கு மனைவி, 'சனிய'னாக இருக்க எளியவனுக்குத் தன் மனைவியின் மீது அன்பு இருக்கிறது. சுற்றியிருப்போர் மீதுதான் குற்றமும் குறையும். 'அந்திம காலம்', 'காதலினால் அல்ல' ஆகிய இரு நாவல்கள் மற்றும் பல சிறுகதைகள் உள்ளிட்ட ரெ.கா.வின் படைப்புகளில் பலவற்றை இணையத்தில் www.tamil.net என்னும் சுட்டியில் வாசிக்கலாம்.

மலேசிய வானொலியின் முன்னாள் ஒலிபரப்பாளரான இவர் வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார். தமிழ்ப் புத்திலக்கியம் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். மலேசிய மற்றும் ஆசியப் பொதுமக்கள் தொடர்புச் சாதனங்கள் பற்றி அனைத்துலகக் கருத்தரங்குகளில் ஆங்கிலம், மலாய் மொழிகளில் கட்டுரைகள் படைத்துள்ளார். 'புதிய தொடக்கங்கள்' (1974), 'மனசுக்குள்' (1995), 'இன்னொரு தடவை' (2001), 'ஊசி இலை மரம்' (2003) ஆகியவை இவருடைய சிறுகதைத் தொகுதிகள். 2004ல் விமர்சன முகம் என்ற கட்டுரை நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் முக்கிய இலக்கிய ஆவணம். பெரும்பாலும் மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலையும் ஓரளவுக்கு, தமிழ்நாடு மற்றும் புலம் பெயர்ந்தோர் எழுத்துக்களின் வளர்ச்சியையும் ஆராயும் பயனுள்ள கட்டுரைகள். இது தவிர, மலாய் மொழியில் 1994ல் 'Sejarah Perkembangan TV di Malaysia' ('மலேசிய தொலைக்காட்சி வரலாறு') என்னும் நூல் வெளியாகியுள்ளது. மலாயாப் பல்கலைக் கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், பொள்ளாச்சி NGM கல்லூரி போன்ற பல கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் இவரது படைப்புக்களை ஆராய்ந்து கட்டுரைகளும் ஆய்வேடுகளும் எழுதியுள்ளனர்.

தமிழ் நேசன் பவுன் பரிசு, மலாயாப் பல்கலைக் கழகப் பேரவைக் கதைகள் போட்டி முதலிய போட்டிகளுக்கு நீதிபதியாக இருந்துள்ளார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். பினாங்கு இந்து சங்கத்தின் செயலாளராகவும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் துணைச் செயலாளராகவும் இருந்துள்ளார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 'தனிநாயக அடிகள் விருது' பெற்றதுடன் மாதாந்தரச் சிறுகதைத் தேர்வில் பலமுறை தங்கப் பதக்கம் பெற்றுள்ளவர் ரெ.கார்த்திகேசு. 'அந்திம காலம்' நாவலும் (1998) 'ஊசி இலை மரம்' சிறுகதைத் தொகுப்பும் (2003) மலேசியாவில் வழங்கப்படும் மிகச் சிறந்த நூலுக்கான டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் பரிசு பெற்றுள்ளன. கணையாழி இதழின் சம்பா நரேந்திரர் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றுள்ளார் (1999). 'கல்கி' வைரவிழாவை ஒட்டிய சிறுகதைப் போட்டியில் (2002) முதல் பரிசு பெற்றார். 'திண்ணை' இணையஇதழும் மரத்தடி குழுமமும் இணைந்து நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார் (2005); 'மனசுக்குள்' நூலுக்கு லில்லி தெய்வ சிகாமணி பரிசு கொடுக்கப்பட்டுள்ளது (1996). தமிழ்நாடு இலக்கியச் சிந்தனை மாதாந்திரக் கதைத் தேர்வில் இவர் கதை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது (2003). இவருக்கு மலேசிய அரசாங்க விருதான KMNம் வழங்கப்பட்டுள்ளது.

ஜெயந்தி சங்கர்
Share: 




© Copyright 2020 Tamilonline