Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
சுத்த சக்தியின் சங்கடம் - பாகம் 17
- கதிரவன் எழில்மன்னன்|டிசம்பர் 2008|
Share:
Click Here Enlargeமுன்கதை: Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன். தன் தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான்ஃபோர்டு மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பல பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

ஷாலினியின் தந்தை முரளியின் நண்பர் மார்க் ஷெல்ட்டன், தன் சுத்த சக்தித் தொழில்நுட்ப நிறுவனமான வெர்டியானின் தலைமை விஞ்ஞானி தாக்கப்பட்டு, நிறுவனமே பெரும் ஆபத்திலிருப்பதாகக் கூறவே, முரளி அவருக்கு சூர்யாவை அறிமுகம் செய்தார். மார்க், வெர்டியான் பல வடிவங்களில் வளையும், பெருமளவில் சூர்ய மின்சக்தி தரும் புரட்சிகரமான நுட்பத்தை வெர்டியான் உருவாக்கியிருப்பதாக விளக்கினார். சூர்யா விஞ்ஞானி யூ பிங் சூ தாக்கப்பட்டதைப் பற்றிக் கேட்கவே, ஷாலினியின் உதவியுடன் அவரை நேரில் விசாரிக்கச் சென்றனர். யூ நிறுவனத்திலிருந்த கார் அருகிலேயே தாக்கப்பட்டதைக் கேட்டு, உள் ஆட்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சூர்யா சந்தேகித்தார். மீண்டும் வெர்டியானுக்குச் சென்று பேட்டரி நுட்ப விஞ்ஞானியான பீட்டர் பார்க்கருடன் பேசினார். பிறகு...

பேட்டரி நுட்பங்களைப் பற்றிய விவரங்களைக் கிரண் ஆவலாகக் கேட்கவும், அந்த விவரங்களைப் பிறகு கேட்கலாம், முதலில் அடுத்த உபதலைவரைச் சந்திக்க வேண்டும் என்று சூர்யா கூறவே, சூர்யா, கிரண், முரளி மூவரையும் வெர்டியானின் நிதித்துறை உபதலைவரான ரிச்சர்ட் கோல்ட்டனின் அலுவலக அறைக்கு மார்க் அழைத்துச் சென்றார்.

உங்களுக்குக் குதிரைப் பந்தயத்துல ரொம்பவே ஆர்வம் இருக்குன்னு புரியுது. அதுவும் நீங்க பல பந்தயங்கள் வென்ற ஒரு பெரிய சாம்பியன் குதிரையை வச்சிருக்கீங்க. கங்க்ராட்ஸ்! சின்ன வயசிலிருந்தே எனக்கும் குதிரைகள்னா ரொம்பப் பிடிக்கும்.
மலர்ந்த முகத்துடன் வரவேற்ற பீட்டர் போலன்றி, ரிச்சர்ட் கடுகடுவென்ற தோற்றத்துடன் வெறுமனே மெல்லத் தலை வணங்கி அவர்களை உள்ளழைத்தார். கிரண் முரளியின் காதில் "இந்த பீன் கவுண்ட்டர்ஸே இப்படித்தான். கடுகடுன்னு. இதே நிதித்துறையிலதான நானும் இருக்கேன். இந்த அக்கவுண்ட்டன்ட் ஆளுங்க மூஞ்சில சிரிப்பே கிடையாது. எங்க ஆஃபீஸ்லயும் இதே கதைதான்!" என்று முணுமுணுக்கவும், முரளி "சுஷ்!" என்று அவனை அடக்கினார்.

மார்க் அவர்கள் மூவரையும் ரிச்சர்டுக்கு அறிமுகப் படுத்தினார். அந்த சில நொடிகளுக்குள் ரிச்சர்டின் அலுவலக அறையை அலசிவிட்ட சூர்யா, வழக்கம் போல் ஒரு யூக வெடியை வீசினார். "உங்களை சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம் ரிச்சர்ட். உங்களுக்குக் குதிரைப் பந்தயத்துல ரொம்பவே ஆர்வம் இருக்குன்னு புரியுது. அதுவும் நீங்க பல பந்தயங்கள் வென்ற ஒரு பெரிய சாம்பியன் குதிரையை வச்சிருக்கீங்க. கங்க்ராட்ஸ்! சின்ன வயசிலிருந்தே எனக்கும் குதிரைகள்னா ரொம்பப் பிடிக்கும். அரேபியப் புரவிகள் எவ்வளவு உன்னதமானவை! அதுங்க ஓடற கம்பீரமே தனி."

ரிச்சர்ட் ஒரு கணம் பிரமித்தாலும், சுதாரித்துக் கொண்டார். பிரமிப்பு உடனே கரைந்து மறைந்து விட்டது. கொஞ்சம் கூட கடுகடுப்பு மாறாமல் சூர்யாவின் யூகத்தை அலட்சியப் படுத்தினார். "ஹூம்... மார்க் ஏற்கனவே உங்க யூகத் திறமையைப் பத்தி எனக்கு சொல்லிட்டார். நானும் நீங்க திறமைசாலின்னு நம்பறேன். அதுக்காக என்னைப் பத்தி யூகிச்சுக் காட்ட வேண்டிய அவசியமில்லை. என் அறையில இருக்கற குதிரைப் படங்கள், சான்றிதழ்கள் கோப்பைகள், மற்றும் பந்தயப் பத்திரிகைகளை வச்சு யூகிச்சிருக்கீங்கன்னு புரியது. வெர்டியான் பிரச்சனைக்கு உடனே வருவோம். அதுபத்தி விசாரிக்கணும்னு மார்க் சொன்னார். என்ன விசாரிக்கணும். விஷயத்துக்கு வாங்க" என்றார்.

கிரண் முரளியிடம், "அய்யே! இந்தாளு என்ன சுத்த சிடுமூஞ்சியா இருக்கான் பாருங்க. நான் சொல்லல்லே? சரியான பீன் கவுண்ட்டர்தான்!" என்றான். முரளி மீண்டும் அவன் கையை அழுத்தி அடக்கினார்.

மார்க் மன்னிப்புக் கேட்க ஆரம்பித்தார். "ரிச்சர்ட், இவ்வளவு கறாராப் பேசணுங்கறதில்லை. சூர்யா காலத்தை வீணாக்கறவரில்லை. இதுவரை அவரேதான் எங்களையே இந்தப் பிரச்சனையிலயே குறியா வச்சிருக்கார். ரிச்சர்டின் தொனிக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன் சூர்யா..."

சூர்யா குறுக்கிட்டுத் தடுத்தார். "சே, சே! மன்னிப்பாவது?! ரிச்சர்ட் சொன்னதுல ஒரு தப்புமில்லையே. நாம மேல பேசலாம்" என்று தலைவணங்கி ரிச்சர்டின் கருத்தை ஏற்றுக் கொண்டு தொடர்ந்தார். "ரிச்சர்ட், வெர்டியானின் நிதி நிலவரம் எப்படி இருக்கு? இந்தப் பிரச்சனைக்கும் அதுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கலாமோன்னு பார்க்கணும்."

சூர்யா கூறியதைக் கேட்டு சற்றே இளகிய ரிச்சர்ட் முகக் கடுப்பைத் தணித்துக் கொண்டு பதிலளித்தார். "இப்போதைக்கு நிதி நிலவரம் பரவாயில்லைன்னுதான் சொல்லணும். இன்னும் ஒரு வருட காலத்துக்காவது பணக் கவலையில்லை. ஆனா, இன்னும் சிலமாதங்கள் கழிச்சு மீண்டும் மூலதனக்காரங்க கிட்ட போய் அடுத்த சுற்று கேட்க ஆரம்பிக்கணும். அதுக்குள்ள எங்க தொழில்நுட்பப் பிரச்சனைகள் தீர்ந்து உற்பத்தி நிலைக்கு வந்தாகணும். இந்தப் பிரச்சனை தீராம அப்படியே தடுமாறிக்கிட்டிருந்தா, நிறுவன மதிப்பீட்டை ரொம்பக் குறைச்சிடுவாங்க. முதலீடு கிடைக்கறத்துக்கே கூடக் கஷ்டப்பட வேண்டியிருக்கலாம்."

மார்க் சோகமாகத் தலையாட்டி ஆமோதித்தார். "ஆமாம் சூர்யா. எவ்வளவு சீக்கிரம் நிவர்த்திக்க முடியுமோ அவ்வளவுக்கு நல்லது. ஏற்கனவே எங்க காலக் கட்டம் ரொம்ப நெருக்கடியாயிக்கிட்டு வருது ..."

சூர்யாவும் தலையாட்டிக் கொண்டு தீவிர யோசனயுடன் தொடர்ந்து வினாவினார். "இந்தப் பிரச்சனை கூடிய சீக்கிரம் தீராம, இழுத்துக்கிட்டே போச்சுன்னா நிதிநிலைமை என்ன ஆகும்?"

ரிச்சர்ட் முகம் மேலும் இருண்டது. "என்ன ஆகுமா? எங்க போர்ட் ஆஃப் டிரெக்டர்ஸ் எல்லாரையும் கழுத்தைப் புடிச்சு வெளியில தள்ளிட்டு நிறுவனத்தை நடத்த வேற ஆளுங்களைக் கொண்டு வருவாங்க. அதான் நடக்கும்" என்றார். மார்க் பேசாமல் இன்னும் அதிக சோகத்தோடு தலையாட்டி ஆமோதித்தார்.

கிரண் உடனே "ஆஃப் வித் தேர் ஹெட்ஸ், ஆஃப் வித் தேர் ஹெட்ஸ்!" என்று தலையை வெட்டித் தள்ளி விடுவது போல் கையை வீசிக் காட்டவும் மற்ற அனைவரும் அவனை முறைத்தார். கிரண் நிறுத்திவிட்டு, "ஸாரி, தடுத்துக்க முடியலை. ரிச்சர்ட் சொன்னது, அலிஸ் இன் வொண்டர்லேண்ட்ல க்வீன் ஆஃப் ஹார்ட்ஸ்-ங்கற கேரக்டர் சொன்னதை நினைவு படுத்திச்சு. அதான் சொல்லிட்டேன்!" என்றான்

அவனுடைய விளக்கம் அங்கு நிலவிய கனமான மயானக் களையக் கொஞ்சம் விலக்கி யாவர் முகத்திலும் ஓர் இளம் புன்னகையை மலரச் செய்தது - ரிச்சர்ட் முகத்திலும் கூடத்தான்!

மார்க் கிரண் முதுகைத் தட்டினார். "தேங்க்ஸ் கிரண். இந்த சிரிப்பு இந்த நிலைமைக்குத் தேவைதான்!"
சூர்யா ரிச்சர்டிடம் தொடர்ந்து வினாவினார். "அப்படி நடந்தால் உங்களையும் நிறுவனத்திலிருந்து நீக்கிடுவாங்களா?"

ரிச்சர்ட் சற்று யோசித்துவிட்டு, புன்னகை மாறாமல் பதிலளித்தார். "பிரச்சனை தொழில்நுட்பம் சம்பந்தப் பட்டதுங்கறதுனால, என் தலை உருளாம தப்பிக்க வாய்ப்பிருக்கு."

சூர்யா ரிச்சர்டுக்கு நன்றி தெரிவித்தார். "ரொம்ப நன்றி ரிச்சர்ட். உங்க நிதித்துறை நோக்கமும் முக்கியமானது. உங்க கருத்துக்கள் என் விசாரணைக்கு ரொம்பவே உதவியாயிருக்கும். நான் யோசிச்சுப் பார்த்துட்டு, இன்னும் எதாவது கேட்கணும்னா கூப்பிடறேன்" என்றார்.

ரிச்சர்ட் புன்னகையுடன் தலைவணங்கி நன்றியை ஏற்றுக் கொண்டு, கையசைத்து விடை கொடுத்தார். மற்ற நால்வரும் ரிச்சர்டின் அலுவலக அறையை விட்டு வெர்டியானின் பொதுவிடத்துக்கு வந்தனர்.

சூர்யா சற்று நேரம் அமைதியாக யோசிக்கலானார். ஒன்றுமே கூறாமல், மற்ற மூவரை விட்டு விலகி ஒரு மூலைக்குச் சென்று ஒரு கையை இடுப்பின் மேலும், மற்றொரு கையை முகத்தாங்கலாவும் வைத்துக்கொண்டு ஆழ்ந்த சிந்தனையுடன் குறுக்கும் நெடுக்குமாக அலையலானார்.

மார்க், உங்க பிரச்சனைக்கு காரணம் என்னங்கறது எனக்கு புரிஞ்சிடுச்சுன்னு நினைக்கறேன். கூடிய சீக்கிரமே வெர்டியானுக்கு நிவாரணம் கிடைச்சுடும், விடிவு காலமும் மலரும்.
அப்படியே சில நிமிடங்கள் கழிந்துவிடவே, பொறுமையிழந்த மார்க் ஷெல்ட்டன் கையை உயர்த்தி சூர்யாவை அழைக்கப் போனார். உடனே முரளி, கிரண் இருவரும் ஒரே சமயத்தில் தங்கள் கைகளை உயர்த்தி மார்க்கை அவசரமாகத் தடுத்தனர். கிரண்தான் முதலில் உதட்டில் விரலை வைத்து "உஷ்!" என்று அமைதியாகக் கூறிவிட்டு விளக்கினான். "மார்க், சூர்யா இதுவரை கேட்டதையெல்லாம் யோசிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கார். இன்னும் கொஞ்சம் பொறுமையா இருங்க. நாம வேற எங்கயாவது போய் எதாவது சாப்பிட்டுக்கிட்டு அரட்டை அடிக்கலாம் வாங்க" என்று மெல்லிய குரலில் கிசுகிசுத்தான்

முரளியும் வேகமாகத் தலையாட்டி அதை ஆமோதிக்கவே, வேண்டா வெறுப்பாக மார்க் அவர்களை வெர்டியானின் கஃபே பகுதிக்கு அழைத்துச் சென்று தின்பண்டங்களையும் பானங்களையும் எடுத்துக் கொடுத்து ஒரு ஓரமாக அமரச் செய்தார். மூவரும் அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியும், பதவிக்கு வந்துள்ள புதிய அதிபர் ஒபாமா பசுமைச் சக்திக்கு மிக நண்பராதலால் வெர்டியானுக்கும், அமெரிக்காவுக்கும், உலகத்துக்கும் கூட எத்தகைய நன்மைகள் விளையக் கூடும் என்று உரையாடிக் கொண்டிருந்தனர்.

சில நிமிடங்கள் கழித்து, திடீரென சூர்யா பரபரப்புடன் அவர்களைத் தேடி வந்தார். "ஓ... இங்க இருக்கீங்களா?!"

சூர்யாவின் கண்களில் பளிச்சிட்டுக் கொண்டிருந்த ஒளி கிரணுக்கு செய்தி தெரிவித்தது. பல விசாரணைகளில் சூர்யாவோடு நெருங்கி ஒத்துழைத்திருந்ததால், சூர்யாவுக்கு எதோ முக்கியமான யூகம் புலப்புட்டிருப்பதை கிரண் உணர்ந்து கொண்டு, தானும் பரப்பரப்படைந்து ஆவலுடன் சூர்யா என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்தான்.

சூர்யாவும் கிரணை ஏமாற்றாமல் ஒரு பெரும் வெடியை வீசினார்! "மார்க், உங்க பிரச்சனைக்கு காரணம் என்னங்கறது எனக்கு புரிஞ்சிடுச்சுன்னு நினைக்கறேன். கூடிய சீக்கிரமே வெர்டியானுக்கு நிவாரணம் கிடைச்சுடும், விடிவு காலமும் மலரும்!"

மார்க்கும் முரளியும் ஒரே சமயத்தில் துள்ளினர்! "என்ன, என்ன? புரிஞ்சுடுச்சா, சொல்லுங்க!" கிரண் குதிக்கவில்லை, ஆனாலும் மகிழ்ச்சிப் பரபரப்புடன் சூர்யா மேலே என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலோடு எதிர்பார்த்தான்.

சூர்யா அவர்களை அமைதிப்படுத்தினார். "சொல்றேன். ஆனா இங்க இல்லை. நாம எல்லாரும் யூ பிங் சூவின் மருத்துவமனை அறையில மீண்டும் கூடலாம். ரிச்சர்ட், பீட்டர் ரெண்டு பேரும் கூட வரட்டும். எல்லாத்தையும் விளக்கறேன்" என்றார்.

மார்க் தாங்க முடியாத பரபரப்புடன் பீட்டர், ரிச்சர்ட் இருவரையும் மருத்துவமனைக்கு வருமாறு தொலைபேசியில் ஆணையிட்டார். கிரணும் யூ பிங்கைச் சந்திக்கும் ஏற்பாடுகளை செய்ய ஷாலினியோடு உரையாடலானான்.

அனைவரும் சுத்த சக்தியின் சங்கடம் தீரும் எதிர்பார்ப்போடு மருத்துவமனைக்கு விரைந்தனர்.

தொடரும்

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline