Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
ஹரிமொழி
தசரதனிடம் பெறாத விடை
- ஹரி கிருஷ்ணன்|டிசம்பர் 2008|
Share:
Click Here Enlarge'மன்னவன் பணியன்று' என்று தொடங்கும் கம்பராமாயணப் பாடலைப் பார்த்துக்கொண்டிருந்தோம். நிறுத்தப் புள்ளிகளை இடம்மாற்றிப் போட்டால் அந்தப் பாடலில் எப்படிப்பட்டதொரு உட்பொருள், மிக இயல்பாகவே கலந்து கிடக்கிறது என்பதைப் பார்த்தோம். 'அம்மா, எனக்குத் தெரியும். தசரத சக்ரவர்த்தி இப்படிச் சொல்லியிருக்க மாட்டார். நீங்கள்தான் சொல்கிறீர்கள். நீங்களாகவே சொல்வதாக இருந்தாலும் எனக்கு அது சம்மதமே. ஆனால் ஒன்று. பரதன் அரியணையில் ஏறி உட்காரமாட்டான் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அவனும் என்னைப்போலவே மரவுரி தரித்து, நகரத்துக்கு உள்ளே வராமல், வெளியிலேயே இருந்தபடிதான் எதையும் செய்யப்போகிறான். 'என்பின் அவன் பெறப்போகின்ற செல்வம் எது என்றால், இதோ அடியனேன் பெற்றிருப்பதாகிய தவக்கோலம்தான்' என்றொரு பொருள் இப்பாடலின் அடிநாதமாக ஒலிக்கிறது என்றால், அது பொருந்துமா பொருந்தாதா என்ற விவாதத்துக்குள் நுழைந்தோம். இரண்டாவது பகுதியான 'என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ' என்பதில் தோன்றும் விழைபொருளையும், அதனுள் மறைந்து கிடைக்கும் விளைபொருளையும் சான்றுகளோடு விளக்கினோம். இப்போது, 'மன்னவன் பணி அன்று. ஆகில், நும்பணி.' என்ற உட்பொருளை நோக்கிச் செலுத்தியிருப்பதில் கம்பனுக்கு ஏதும் பங்குண்டா, அவ்வாறு நாம் பொருள் கொள்வது கம்ப சித்திரத்தோடு பொருந்தி வருமா என்று பார்ப்பதற்காக, சம இடத்தில் வால்மீகியின் சித்திரிப்பையும் எடுத்துக்கொண்டு ஒப்பிட்டுப் பார்க்கப் போகிறோம்.

'இந்தக் கைகேயி என் மனைவி அல்லள். இதோ இவளை இந்தக் கணத்திலேயே துறக்கிறேன். இவளை மட்டுமல்ல. இவள் பெற்ற மகனாகிய பரதனையும் துறக்கிறேன். அவன் எனக்கு நீர்க்கடன் முதலான எதையும் செய்வதற்கு உரிமையற்றவன் ஆகிறான்.
நமக்குத் தெரியும். கைகேயியின் மனத்தை மந்தரை கலைத்து, பரதன் அரியணையேறவும், ராமன் காடேகவுமான வரங்களை தசரதனிடமிருந்து பெறுகிறாள். இரவு கழிந்தபடி இருக்கிறது. தசரதனுடைய தவிப்பு அதிகரித்தபடி இருக்கிறது. 'இதோ இரவு முடிவடையப் போகிறது. பொழுது விடிந்ததும் பெரியவர்களும் வசிஷ்டர் முதலானவர்களும் வந்து என்னை, இராமனுடைய மகுடாபிஷேகத்தை நடத்திவை, வா' என்று அழைக்கப் போகிறார்கள். அவர்கள் முகத்தில் நான் எவ்வாறு விழிப்பேன்' என்று தசரதன் தவிக்கிறான். அந்தச் சமயத்தில்தான், 'இவ்வாறு ராம பட்டாபிஷேகம் நடைபெறாமல் நீ என்னைத் தடுப்பாயே யானால்,--வ்யாஹந்தாஸ்ய ஷுபாசாரே யதி ராமாபிஷேசனம்--பாவியே, அக்னி சாட்சியாக, மந்திர கோஷங்கள் ஒலிக்க, பற்றிய உன் கரத்தை இத்தோடு துறக்கிறேன்--யஸ்தே மந்த்ர க்ருதா பாணிர் அக்னௌ பாபே மயா த்ருதா--என்றும்; தம் த்யாஜாமி ஸ்வஜம் சைவ தவ புத்ரம் ஸஹ த்வயா-- உன்னையும், நீ பெற்ற புத்திரனையும் ஒன்றுபோலத் துறக்கிறேன் (வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், சர்க்கம் 14, ஸ்லோகங்கள் 17, 14) என்றும் கூறி, த்வயா ஸபுத்ரயா நைவ கர்த்தவ்யா சலிலக்ரியா' உனக்கும், உன்னுடைய பிள்ளைக்கும் எனக்கு நீர்க்கடன் கழிக்கும் உரிமை அற்றுப் போகட்டும் என்றும் வால்மீகி பேசியிருப்பதை அப்படியே வரி பிசகாமல், வார்த்தை பிசகாமல்

இன்னே பலவும் பகர்வான்; இரங்கா தாளை நோக்கி,
'சொன்னேன் இன்றே; இவள் என் தாரம் அல்லள்; துறந்தேன்;
மன்னே ஆவான் வரும் அப் பரதன் தனையும் மகனென்று
உன்னேன்; முனிவா! அவனும் ஆகான் உரிமைக்கு'

என்றான். என்று வசிஷ்டனிடத்தில் தசரதன் பேசுவதாகக் கம்பன் அமைத்திருக்கிறான். 'இந்தக் கைகேயி என் மனைவி அல்லள். இதோ இவளை இந்தக் கணத்திலேயே துறக்கிறேன். இவளை மட்டுமல்ல. இவள் பெற்ற மகனாகிய பரதனையும் துறக்கிறேன். அவன் எனக்கு நீர்க்கடன் முதலான எதையும் செய்வதற்கு உரிமையற்றவன் ஆகிறான்' என்று கம்பனுடைய தசரதன் பேசினாலும், இவ்வாறு வான்மீகத்தை அடியொற்றிப் பேசும் கட்டம் எது? கைகேயியையும் பரதனையும துறப்பதாக வான்மீகத்தில் தசரதன் பேசுவது, (மன்னவனுடைய பணி இது என்ற சொல்வதற்காக அழைத்துவரச் சொல்லப்பட்ட) ராமன், தசரதனும் கைகேயியும் இருந்த அந்த அறைக்குள் வருவதற்கும் முன்னர். கம்பராமாயணத்தில் இந்த வாசகங்கள் பேசப்படுவதோ, ராமன் கானகத்துக்குப் புறப்பட்டுச் சென்ற பின்னர். இந்த வாசகங்களை ('உன் கழுத்தின் நாண் உன் மகற்குக் காப்பின் நாணாம்' உன் கழுத்திலிருக்கும் தாலிக் கயிற்றை அவிழ்த்து, உன் மகன் பரதனுக்கு--பட்டாபிஷேகம் செய்வதற்கு முன்னால் கட்டப்படும்--காப்புக் கயிறாகக் கட்டு என்று அமிலமாகச் சிந்தும் சொற்களோடு சேர்த்து) வால்மீகியின் சித்திரத்தில் ராமனுடைய பிரவேசத்துக்கு முன்னதாகவே பேசப்பட்டிருக்கும்போது, கம்பனுடைய சித்திரத்தில், இவை இடம் மாறுவானேன்? ஏன் ராமன் புறப்பட்டு சென்ற பிறகே இந்த வாசகங்கள் பேசப்படுகின்றன? அதற்கு முன்னதாக ஏன் பேசப்பட முடியாமற் போயிற்று?

***


வால்மீகி ராமாயணத்தில் இந்தக் கட்டத்தைப் பார்க்கலாம். கைகேயியுடன் வாதிட்டவாறு இரவு முழுமையும் கழிகிறது. தசரதனுக்கும் கைகேயிக்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உரையாடல்கள் எதனையும் அறிந்திராத வெளியுலகம், ராமனுடைய பட்டாபிஷேகத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. பொழுது விடியும் சமயம். வசிஷ்டர், சுமந்திரனை அழைத்து, 'எல்லாம் தயார் நிலையில் இருக்கின்றன என்பதைத் தெரிவித்து, மன்னவனை, ராமனுக்கு முடிசூட்டுவதற்காக அழைத்துவா' என்று பணிக்கிறார். சுமந்திரன், கைகேயியும் தசரதனும் இருக்கும் அறைக்கு வெளியில் நின்றவாறு, தசரத சக்ரவர்த்தியின் பெருமைகளைப் பேசி, 'பட்டாபிஷேகத்துக்கு உரியன எல்லாம் தயாராக இருக்கின்றன; வசிஷ்டர் தயார் நிலையில் இருக்கிறார். ஆகவே மன்னனே, உரிய ஆடை ஆபரணங்களைப் பூண்டு, மேருமலையிலிருந்து எழுந்துவரும் சூரியனைப்போல் புறப்பட்டு வருவாயாக' என்ற உபசார மொழியால்--உள்ளே உறங்கிக் கொண்டிருப்பதாக அவன் நினைத்திருக்கும்--தசரதனை எழுப்ப முயல்கையில், உள்ளே இருக்கும் தசரதனை இந்த மொழிகள் வதைக்கின்றன. உள்ளம் நைந்து, வெந்து, 'வாக்யைஸ்து கலு மர்மாணி மம பூயோ நிக்ரின்தசி' (அயோத்தியா காண்டம், சர்க்கம் 14, ஸ்லோகம் 59) 'உன் சொற்கள் என் உயிர்நிலைகளைச் சென்று தாக்குகின்றன' என்று உள்ளே இருந்தபடியே பதில் சொல்கிறான்.
நேற்று இரவுவரையில் அளவிறந்த மகிழ்ச்சியோடு காணப்பட்ட அரசன், இப்போது தன்னுடைய துதிமொழிகளையும், 'ராமனுக்கு முடிசூட்டுவதற்காக எழுந்து வா' என்ற அழைப்பையும் கேட்டு, இவ்வாறு மறுமொழி உரைக்கக் கேட்ட சுமந்திரனுக்கு இந்த நிலை விளங்கவில்லை. அதிர்ச்சியுடன் கைகூப்பிய வண்ணம், அந்த இடத்திலிருந்து சற்று விலகிச் சென்றான் என்கிறார் வால்மீகி. இதைத் தொடர்ந்து கைகேயியின் குரல் ஒலிக்கிறது. 'ராமனுடைய பட்டாபிஷேகத்தைப் பற்றிய உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்ட மன்னர் இரவெல்லாம் தூங்கவில்லை. இப்போதுதான் உறங்கலானார். நீ போய் ராமனை உடனே இங்கே அழைத்துவா. இதைப் பற்றி மேற்கொண்டு சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை (நாத்ர கார்ய விசாரணா)' என்ற உத்தரவைக் கேட்டதும் சுமந்திரன் என்ன சொல்கிறான் தெரியுமோ? 'அச்ருத்வா ராஜ வசனம் கதம் கச்சாமி பாமினி' (மேற்படி சர்க்கம், சுலோகம் 64). 'அரசனுடைய வாயால் எந்த மொழியையும் கேட்காமல் நான் எப்படிச் செல்ல முடியும் அரசியாரே!' இதற்குப் பிறகு தசரதனே 'சுமந்திரா! நான் ராமனைப் பார்க்க விரும்புகிறேன். உடனே அவனை இங்கே அழைத்துவா' என்று உத்தரவு பிறப்பித்தபிறகே சுமந்திரன் அங்கிருந்து செல்கிறான்.

ராமா, நீ என்னோடு போர்தொடுத்தால் நான் உன்னைத் திருப்பித் தாக்கக்கூட மாட்டேன். மகிழ்ச்சியுடன் சிறைக்குச் சென்றுவிடுவேன். அப்பா! நீ காட்டுக்குப் போகவேண்டாம். அறிவிழந்த உன் அப்பனைச் சிறைக்கு அனுப்பிவிட்டு நீ அரியணை ஏறு'
இந்தச் சம்பவத் துணுக்கை இப்போது எதற்காக எடுத்துக் கொண்டோம் என்றால், அரசவையில் மிகப்பெரிய பதவியை வகித்தவன் என்றபோதிலும், உத்தரவை அரசன் வாய்மொழியாகக் கேட்டு அறிந்த பின்னரே செயல்படுத்தவேண்டும் என்பதில் சுமந்திரன் தெளிவாக இருந்தான்; அப்படித்தான் செயல்பட்டான் என்பது இங்கே கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகிறது.

கம்பனுடைய காவியத்திலேயேகூட, மூர்ச்சித்துக் கிடந்த தசரதன் தெளிவுபெறத் தொடங்கும் சமயத்துக்குள் ராமன் காட்டுக்குச் சென்றுவிட்டிருந்தான். வசிஷ்டர் முதலானோர் அந்த அரண்மனைக்குள் வந்து, தசரதனுடன் உரையாடத் தொடங்கும் சமயத்தில்கூட, ராமன் காடேகிய செய்தியை தசரதன் அறிந்திருக்கவில்லை. கைகேயியைக் கண்டித்துப் பேசத் தொடங்கும் வசிஷ்டர்,

'வாயால், மன்னன், மகனை, "வனம் ஏகு" என்னா முன்னம்,
நீயோ சொன்னாய்; அவனோ, நிமிர் கானிடை வெந் நெறியில்
போயோ புகலோ தவிரான்; புகழோடு உயிரைச் சுடு வெந்
தீயோய்! நின்போல் தீயார் உளரோ? செயல் என்?' என்றான்.

காட்டுக்குப் போ என்று சொல்லவேண்டியது யாருடைய வேலை? மன்னனுடையது அல்லவா? அவ்வாறு நிகழாமல், அரசன் அந்த வார்த்தையை ராமனிடத்தில் பேசாத முன்னர், நீ எவ்வாறு அவனிடத்தில் சொல்லப் போயிற்று? (அரசியே ஆனாலும், அரசாங்க விவகாரங்களில் நீ எவ்வாறு தலையிடலாம்?) சரி. நீ சொல்லிவிட்டாய். ராமனுக்கோ, நீ அரசி மட்டுமல்லள். தாய். அதிலும் கோசலையைக் காட்டிலும் பெரிதாக அவன் நேசிக்கின்ற தாய். அவனை இப்போது நிறுத்த முடியுமோ! அவனும் போய்விட்டான். உன்னைப்போன்ற தீயவர் இன்னொருவர் இருக்கவும் முடியுமோ? (நீ செய்த காரியம் வெகு அழகாகத்தான் இருக்கிறது.) இதைக்காட்டிலும் செய்யத் தக்கது வேறு என்ன இருக்க முடியும்!'

வசிஷ்டர் இவ்வாறு சொல்லிக் கொண்டு வருகின்ற சமயத்தில்தான் தசரதனுக்கே ராமன் காடேகிய செய்தி தெரிய வருகிறது. 'பாவி! நீயே வெங்கான் படர்வாய் என்று என் உயிரை ஏவினயோ! அவனும் ஏகினனோ!' என்று திடுக்கிட்டுப்போய் வினவுகின்றான்.
வால்மீகியின் சித்திரிப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சித்திரம் இது. வான்மீகத்தில் ராமன் வனம்புகும் முன்னர், தசரதனிடம் நிறைய வாதிடவேண்டி வருகிறது. 'ராமா, இந்தச் சத்தியம் என்னைத்தான் கட்டுப்படுத்தும். உன்னை அது கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை. நான் சொன்னேன் என்பதற்காக நீ எதையும் கேட்டுக் கொள்ள வேண்டியதில்லை' என்றெல்லாம் பேசி, எதற்கும் மசியாமல் கானகம் செல்வதிலேயே குறியாக நிற்கும் பிள்ளையிடம், 'ராமா, நான் சொல்வதைக் கேள்.

அஹம் ராகவா கைகேய்யா வர தானேன மோஹிதா
அயோத்யாயா த்வம் ஏவ அத்ய பவ ராஜா நிக்ருஹ்ய மாம்
(வால்மீகி, அயோத்தியா காண்டம், சர்க்கம் 34, ஸ்லோகம் 26)

கைகேயிக்குக் கொடுத்த வரத்தினால் நான் என் புலன்களை (அறிவை) இழந்துவிட்டேன். ராகவா! நீ என்னைச் சிறைப்பிடி. (அப்படிச் சிறைப்பிடித்து) நீ அயோத்திக்கு அரசனாக விளங்கு.

என்னோடு போர் தொடுத்து, என்னை வெற்றிகொண்டு, சிறையில் அடை. என்றால் என்ன பொருள்? ராமா, நீ என்னோடு போர்தொடுத்தால் நான் உன்னைத் திருப்பித் தாக்கக்கூட மாட்டேன். மகிழ்ச்சியுடன் சிறைக்குச் சென்றுவிடுவேன். அப்பா! நீ காட்டுக்குப் போகவேண்டாம். அறிவிழந்த உன் அப்பனைச் சிறைக்கு அனுப்பிவிட்டு நீ அரியணை ஏறு' என்று பேசுகிறானே, 'பித்ரு வாக்ய பரிபாலனம்' என்று பேசப்படுகிறதே ராமாயணம் நெடுகிலும், இதுவும் பித்ரு வாக்யம்தானே? தந்தையின் மொழிதானே, வழிகாட்டல்தானே, ஆணைதானே! பிறகு தந்தையின் எந்த வாக்கியத்தைப் பரிபாலனம் செய்வதற்காக கானகத்துக்குப் போனான் என்றல்லவா கேட்கத் தோன்றுகிறது! (நாம் இவ்வாறு பேசுவது வாதத்துக்காக. உண்மையில் ராமாயணம் பேசும் பித்ரு வாக்கிய பரிபாலனம் அல்லது தந்தையின் வாக்கைக் காத்தல் என்பதை அணுகவேண்டிய முறைமையே வேறு. அது நம்முடைய உடனடி வேலையன்று. ஆகவே இப்போதைக்கு அதைத் தவிர்க்கிறேன்.)

சரி. இவ்வளவு நடந்திருக்கிறது. ராமனும் தசரதனும் நீண்ட வாதப் பிரதிவாதங்களைச் செய்திருக்கின்றனர். தசரதனுடைய மேற்படி வேண்டுகோளைக்கூட ராமன் மிக உறுதியுடன், ஆனால் மிக்க வினயமுடன் மறுத்துக் கானகம் சென்றான் என்று பார்க்கிறோம். இருக்கட்டும். இங்கே நம்மவர், கம்பர், ஏன் இவற்றைப் பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை? எல்லாம் இருக்கட்டும். அரண்மனையில் இருக்கும் அத்தனை பேரிடமும் ஒவ்வொருவராகப் போய்ச் சொல்லி, 'நான் காட்டுக்குப் போகிறேன். வருத்தப்பட வேண்டாம். பதினாலு வருஷம் என்பது நொடியில் பறந்துவிடும். போய்வருகிறேன்' என்று சொல்லிக் கொண்டு, விடைபெற்றுச் சென்ற ராமன், தசரதனிடம் ஏன் விடைபெறவில்லை! அதையல்லவா அவன் முதலில் செய்திருக்க வேண்டும்! மன்னனுடைய வாய்மொழியாகக் கேட்பது மட்டும்தான் உத்தரவு. மன்னனுடைய ஆணை. அரசியே ஆனாலும் அவள் மொழியை மட்டுமே முழுமையாக ஏற்றுக் கொண்டு செயல்பட முடியாது என்று சுமந்திரனுக்குத் தெரிந்திருந்த அளவுக்குக் கூடவா ராமனுக்குத் தெரிந்திருக்கவில்லை? பிறகு எதற்காக 'மறுப்பனோ யான்' என்று சொல்லி, இதோ கிளம்பிவிட்டேன், விடையும் கொண்டேன்' என்று அடுத்த கணமே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்? என்னவோ ஒன்று குறைகின்றது அல்லவா!

இப்போது, கம்பனுடைய சித்திரத்தின் உள்கட்டமைப்பு லேசாகப் பிடிபடத் தொடங்குகிறது அல்லவா? மன்னவன் பணி அன்று. ஆகில், உன் பணி. என்று மாற்றிப்போட்டு பொருள் சொல்வதற்கு உரிய காரணமும் பொருத்தமும் இருக்கின்றன அல்லவா? 'என்னவோ பேசுகிறாய். ஒன்றும் முழுமையாகப் புரியவில்லை. தெளிவாக இல்லை' என்றுதானே சொல்கிறீர்கள்? அடுத்த தவணையில் இன்னமும் விரிப்போம்.

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline