Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
சித்ரா ரமேஷ் (சிங்கப்பூர்)
- ஜெயந்தி சங்கர்|அக்டோபர் 2008|
Share:
Click Here Enlargeசித்ரா ரமேஷ் இலக்கியத்தைக் குறித்துப் பேசுமிடத்தில், 'இறைவன், இலக்கியம் இரண்டுமே இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் பரம்பொருள் தானே!', என்று சொல்லியிருப்பார். சமீபத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் 'வாழ்க்கையில் இலக்கியம்' என்ற தலைப்பில் விறுவிறுப்பாகவும் சரளமாகவும் உரையாற்றி எல்லோரையும் அசத்தியவர். இவருக்கு எழுதவேண்டும் என்பதில் மிகப் பெரிய குறிக்கோள் இல்லாததால் அதிகமாக எழுதுவதை விட அதிகமாகப் படிக்க விரும்பும் வாசகியாகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். படிப்பது என்ற விஷயம் பொழுதுபோக்கிற்காகச் சில சமயம் நிகழலாம். ஆனால், எழுதுவது என்பது வெறும் பொழுதுபோக்காகச் செய்யப்படும் விஷயம் அல்ல என்பது சித்ராவின் கருத்து. பதின்ம வயதிலேயே இவரது கட்டுரைகள் தமிழாசிரியையை விட இவருடைய தோழிகளுக்கு மிகவும் பிடித்திருக்கும். அந்தக் கட்டுரைகள் எந்த இலக்கண வரையறைக்குள்ளும் வராமல் சித்ராவின் பாணியில் அமைந்தவை. வெகுஜனப் பத்திரிகை ரசனையிலிருந்து விலகிநின்ற மேம்பட்ட எழுத்துக்களை இவரது மூத்த சகோதரர்தான் இவருக்கு அறிமுகம் செய்திருக்கிறார்.

'திண்ணை' இணையதளத்தில் 'ஆட்டோகிராஃப்' என்ற 25 வாரங்கள் வெளியான இவரது கட்டுரைத் தொடர் பரவலான வாசிப்பையும் கவனத்தையும் பெற்றது. சித்ரா, இந்தத் தொடரை 'எதிர்பாராமல் நடந்த இனிய விபத்து' என்று குறிப்பிடுவார். பெரிய திட்டங்கள் எதுவுமில்லாமல் எழுதத் துவங்கி, பின்னர் வாராவாரம் எழுதியிருக்கிறார். இந்தத் தொடருக்கு இன்றும் தொடர்ந்து வாசகர் கடிதங்கள் வந்தபடியிருக்கின்றன. இதுகுறித்துச் சொல்லும்போது, "வாசகர்கள் அந்த 'ஆட்டோகிராஃப்'பில் தமது கையெழுத்தையும் பார்க்கிறார்கள் என்று தோன்றுகிறது", என்பார் சித்ரா. வாசிக்கும் யாராலும் கட்டுரையில் சொல்லப்பட்டவற்றுடன் தன்னைப் பொருத்திப்பார்க்க முடியும். இந்தக் கட்டுரைகளில் சொல்லப்பட்டவை அவரது இளமைப்பருவத்தின் 'மலரும் நினைவுகள்'. எனினும், சாதாரண நினைவலைகளைப் போலில்லாமல் ரசித்துச் சிரிக்கக்கூடிய அங்கதத்துடன் ஆங்காங்கே நிகழ்கால நிகழ்வுகளுடன் பொருத்தி மிகவும் சுவாரசியமாக எழுதியிருப்பார். இக்கட்டுரைத் தொடரில் இவரின் சமூக அவதானிப்புகளின் ஆழமும் விசாலமும் வாசிப்பவருக்கு தெள்ளெனப்புரியும்; பிரமிப்பையும் ஏற்படுத்தும். மொழி பாய்ச்சலாய் இருக்கும். கிரேஸி மோகன் நாடகங்களில் ஒரு ஜோக்குக்குச் சிரித்து முடிக்கும் முன்னர் சிரிப்பலையில் அடுத்த ஜோக் காணாமல் போவதைப் பார்த்திருப்பீர்கள், இல்லையா? அதுபோல அடுத்தடுத்த வாக்கியங்களுக்கு அடுக்கடுக்காகச் சிரிக்கத் தயாராக இருக்க வேண்டும். படித்து முடித்ததும் சொந்த நினைவுகளில் மூழ்கவும்தான்.

'திண்ணை' இணையதளத்தில் 'ஆட்டோகிராஃப்' என்ற 25 வாரங்கள் வெளியான இவரது கட்டுரைத் தொடர் பரவலான வாசிப்பையும் கவனத்தையும் பெற்றது
நகைச்சுவை என்றாலும் அதில் உள்ளுறையாக ஒரு உன்னத நோக்கம் இருக்க வேண்டும் என்று நம்புகிறார் சித்ரா. சார்லி சாப்ளின் நகைச்சுவையைப் போல். எழுத்து என்பது ஒரு காலப்பதிவு. அதில் ஈடுபடும் போது பொறுப்புணர்ச்சி தேவை. தவறான வார்த்தைகளோ அல்லது கருத்துக்களோ எழுத்தின் மூலம் பதிவு செய்யப்படும் போது அந்த தவறுக்கு ஒரு எழுத்தாளனே முழுப் பொறுப்பு. எனவே, எழுத்தும் எண்ணங்களும் எப்போதும் உன்னதங்களையே சொல்ல வேண்டும் என்பது ஒரு இலட்சிய வாதம். அப்படி இலட்சியவாதங்கள் பேசி ஏமாற்றிக் கொள்ளும் இலட்சிய எழுத்தாளர் தான் இல்லை என்றும் ஒரு தவறான கருத்தைச் சொல்வதன்மூலம் சமுதாயப் பொறுப்புணர்ச்சியற்று இருக்க விரும்பவில்லை என்றும் சொல்வார். 'கனமான நோக்கம்' ஒன்றை முன்கூட்டியே தீர்மானம் செய்து கொண்டு கதைகள் எழுத முடியாது. கட்டுரைகள் எழுதலாம். அவ்வப்போது கதாசிரியர் உள்ளே புகுந்து 'திருடாதே பாப்பா திருடாதே' என்று உபதேசிக்காமல் ஆனால் அதே சமயம் கதையின் இயல்பான ஓட்டத்தில் அறம் வளர்க்க நினைக்கும் அடிப்படைக் கருத்துகளை எழுதுவதில் தனக்கு உடன்பாடு உண்டு என்றும் கூறுவார்.

சித்ராவின் 'பிதாமகன்' என்ற சிறுகதை அவருக்கு அங்கீகாரம் வாங்கிக் கொடுத்த இன்னொரு முக்கியப் படைப்பு என்று துணிந்து சொல்லி விடலாம். இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ஒரு பிரச்சனையைப் பேசும் இந்தச் சிறுகதை அற்புதமானது. வெளிநாட்டில் இறந்துபோன தந்தையின் பிரேதத்தைத் தன் சொந்த நாட்டுக்கு/ ஊருக்கு எடுத்துச் செல்ல முயலும்போது எதிர்கொள்ளும் சவால்களினூடாகப் பயணிக்கும் சிறுகதை இது. நெருக்கடிகள் மிகுந்த உலகில் ஒவ்வொரு செயலுமே வெறும் கடமையாகச் செய்யப்படுகின்றன என்பதைச் சுவாரசியமாகச் சொல்லும். செய்நேர்த்தியிலும் சரி வடிவத்திலும் சரி இந்தச் சிறுகதை சிறப்பாக அமைந்திருந்தது. வாசிப்பவருக்கு மூத்த தமிழ் எழுத்தாளர் தி. ஜானகிராமனின் எழுத்தை வாசித்தது போன்ற அனுபவம் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உண்டு. இந்தச் சிறுகதை சித்ரா ரமேஷின் எழுத்தின் மீதான எனது நம்பிக்கையைப் பலப்படுத்தியது என்றே உணர்ந்தேன்.
அதிக இடைவெளிகள் இல்லாமல் தொடர்ந்து எழுதவேண்டிய திறன்மிகுந்த ஓர் எழுத்தாளர் இவர். எண்ணிக்கையில் குறைவாகவே எழுதியிருந்தாலும் எழுதியவை 'சத்தான கதைகள்' என்று தன்னம்பிக்கையுடன் கூறும் சித்ரா ரமேஷ், ஒரு முதுகலைப் பட்டதாரி. தமிழகத்தில் பிறந்த இவர் தற்போது நிரந்தரக் குடியுரிமை பெற்ற சிங்கப்பூர்வாசி. சிறுவயதில் கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 1990களின் துவக்கத்தில் சிங்கப்பூருக்கு வந்த பிறகுதான் சிறுகதைகள் எழுதத் தொடங்கியிருக்கிறார். சிங்கப்பூரில் குடியேறிய பிறகு பல நட்புகள், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், தமிழ் முரசு, இணையம் போன்ற பல ஊடகங்களின் மூலம் படிப்பதற்கான இவருக்கான எல்லைகள் விரிவடைந்திருக்கிறது. சித்ராவின் அனைத்து முயற்சிகளுக்கும் துணைநிற்கும் அனுசரணையான இவரது கணவர் ரமேஷ் ஒரு பொறியாளர். பொறியியல் படிக்கும் கௌதம் என்ற ஒரு மகன், புகுமுகவகுப்பில் பயிலும் சுருதி என்ற ஒரு மகள் என்று இரண்டு குழந்தைகள் இவருக்கு.

எழுதாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுதிக் குவித்து இனிமேல் எழுத எதுவுமில்லை என்று நீர்த்து போகும் போதோ, அல்லது எழுத்து, இலக்கியம் எல்லாவற்றிலும் அவநம்பிக்கை ஏற்படும் போதோ நிகழலாம்
எழுத்தைக் குறித்து கேட்டால் சொல்ல இவருக்கு நிறைய இருக்கிறது. யாரும் கையைப் பிடித்து எழுது என்று வற்புறுத்த முடியாது என்பார். அதே நேரத்தில் எழுதாமல் இரு என்று கையைக் கட்டிப் போடவும் முடியாது. எழுதாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுதிக் குவித்து இனிமேல் எழுத எதுவுமில்லை என்று நீர்த்து போகும் போதோ, அல்லது எழுத்து, இலக்கியம் எல்லாவற்றிலும் அவநம்பிக்கை ஏற்படும் போதோ நிகழலாம். இப்போதைக்கு இவருக்கு எழுத வேண்டாம் என்ற தீர்மானம் எதுவுமில்லை. கண்டிப்பாக இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற எண்ணமே உண்டு. எழுத வேண்டும் என்று அவகாசம் கிடைக்கும் போது எழுத எதுவும் தோன்றாமல் போய்விடுகிறது. வேலைப் பரபரப்பில் இதை இப்படி எழுதலாமே என்ற கற்பனைகள் தோன்றும். பரீட்சை எழுதும் போது கவிதை வரிகள் எழுத வருவது போன்ற வாழ்வின் அபத்தங்களில் இதுவும் ஒன்று என்றுரைப்பார். கையில் பேப்பர் பேனா எல்லாம் இருக்கும் போது வெற்றுத் தாள்கள் மட்டுமே மிஞ்சும்.

'கடல் கடந்த கனவு' என்ற இவரது சிறுகதை சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்றது. தேசிய கலைகள் மன்றம் மற்றும் சிங்கப்பூர் பிரெஸ் ஹோல்டிங்க்ஸ் இணைந்து இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் 'தங்கமுனைப் பேனா விருது -2005'ல் 'பறவைப்பூங்கா'விற்காக மூன்றாம் பரிசு பெற்றார். 'கடவுளின் குழந்தைகள்' என்ற இவரது சிறுகதை நாடக வடிவமாக்கப் பட்டு சிங்கப்பூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் ஓர் ஆசிரியருமாவார். இவரிடம் விஞ்ஞானப் பாடங்கள் பயிலும் மாணவர்கள் மெச்சிப் பேசுவதை நானே கேட்டதுண்டு. மாணவன் மெச்சும் ஆசிரியராக விளங்குவது, அதுவும் இந்த யுகத்தில் எத்தனை சிரமம் என்று ஆசிரியர்கள் அறிவார்கள்.

பட்டிமன்ற மேடைகளிலும் இவர் பேசுவார். இயல்பாகவே கலகலப்பாகப் பேசி எல்லோரையும் கவரும் இவர், மனதில் பட்டதைப் பளிச்சென்று பேசக்கூடியவர். வீட்டுப் பராமரிப்பிலும் சமையல் கலையிலும் சிறந்து விளங்குபவர். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் செயலவை உறுப்பினராகப் பதவி வகிக்கும் இவரின் தலைமைத்துவமும் ஆளுமையும் சிங்கப்பூரில் மிகவும் பிரசித்தம். சித்ராவின் சமீபத்திய கனவு - விரைவில் தனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றைப் பதிப்பிப்பது. அந்தத் தொகுப்பு வெளிவரும்போது சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களிடையே இவருக்கு இருக்கும் முக்கிய இடம் உறுதிப்படும் என்பதில் சந்தேகமில்லை.

ஜெயந்தி சங்கர்
Share: 




© Copyright 2020 Tamilonline