Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
நேர்காணல்
வாசக ரசனையை மழுங்கடித்து விட்டது ஊடகங்களின் குற்றமே: இலக்கியவீதி இனியவன்
டாக்டர் அருள் சின்னையன்
- காந்தி சுந்தர்|ஆகஸ்டு 2008|
Share:
Click Here Enlargeடாக்டர் அருள் சின்னையன் சுக்கியன் (Prostate) புற்றுநோய் ஆராய்ச்சியில் உலகின் முன்னணி நிபுணர்களில் ஒருவர். அமெரிக்காவின் சிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றான யுனிவர்சிடி ஆஃப் மிச்சிகனில் (UFM) கேன்ஸர் பயோஇன்ஃபர்மேடிக்ஸ் துறையில் இயக்குநர். எஸ்.பி. ஹிக்ஸ் மானியத்தின்கீழ் நோய்க்குறியியல் பேராசிரியர் (S.P. Hicks Endowed Professor of Pathology). 2005, 2006 ஆண்டுகளுக்கான 'Prostate Cancer Foundation Competitive Award' பரிசைத் தட்டிச் சென்றவர். மிகச்சிறப்பான புற்றுநோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்கப் புற்றுநோய்க் கழகத்தின் ஆய்வுப் பரிசை இந்த ஆண்டு வென்றிருக்கிறார். மசாலா தோசை விரும்பியான சின்னையன் கமல்ஹாசன் விசிறியும்கூட. இந்தியப் பாரம்பரிய இசையையும் மேற்கத்திய இசையையும் ரசிப்பார். ஆங்கிலம், ஸ்பானிய மொழி ஆகியவை பேச, எழுத, படிக்கத் தெரியும். தமிழ் புரியும். கிளீவ்லாந்தில் ஒரு பாரம்பரியத் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த டாக்டர் அருள் சின்னையனைத் தென்றலுக்காகச் சந்தித்தபோது...

கே: உங்கள் ஆராய்ச்சி எதைப்பற்றியது?

ப: நான் சுக்கியன் புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன். 2005ஆம் ஆண்டு எனது ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லான வருடம். சகாக்களுடனான எனது ஆராய்ச்சி தொடர்ந்தபோது, அவ்வாண்டுதான் பிராஸ்டேட் கேன்ஸரில் பிரத்யேகமாக ஏற்படும் ஒரு நுண்ணிய, துல்லியமான விஷயத்தைக் கண்டுபிடித்தேன். குறிப்பிட்ட இடத்தில் இருக்க வேண்டிய இரண்டு குரோமோசோம்கள் (மரபணுவின் ஒரு முக்கியக்கூறு), இனம்புரியாத காரணங்களால் தம் இருப்பிடத்தை மாற்றிக் கொள்கின்றன. இதனால் சம்பந்தமே இல்லாத இரண்டு குரோமோசோம்கள் ஒன்றன்பின் ஒன்றாக நின்று இணைகின்றன. இந்த இணைப்பை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். இது பிராஸ்டேட் புற்றுநோய்க்கு மட்டுமே பிரத்யேகமானது. இந்தக் கண்டுபிடிப்பு சுக்கியன் புற்றின் வேகத்தைப் புரிந்து கொள்ளவும், அதைத் தடுக்கவும், அதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு புதுவிதமான சிகிச்சைகளை உருவாக்கவும் இப்போது உதவுகிறது.

கே: ஓ! அருமை. சுக்கியன் புற்று பெரும்பாலும் ஆண்களுக்கு மட்டும் தானே வரும்! அப்படியென்றால் உங்கள் ஆராய்ச்சி ஆண்வர்க்கத்துக்கு மட்டுமே உதவுகிறதா?

ப: இல்லை. இந்த ‘ஜீன் ஃப்யூஷன்' கண்டுபிடிப்பு (Gene Fusion) இப்போது மார்பகப் புற்றுநோய்க்கும் (breast cancer) உரித்தானதாக ஆராய்ச்சி மூலம் தெரிய வருகிறது. சுக்கியன் மற்றும் மார்பகப் புற்றுநோய்களுக்கு இடையே பல பொதுவான விஷயங்கள் உள்ளன. காரணம் இரண்டுக்கும் மூலகாரணம் நம் உடலிலுள்ள சுரப்பிகள்தாம். இன்னும் சொல்லப்போனால் என் ஆய்வுக்கூடத்தின் ஒரு பாதியை மார்பக ஆராய்ச்சிக்கும், மறு பாதியைப் பிராஸ்டேட்டுக்குமாகப் பிரித்துள்ளேன்.

சுக்கியன் மற்றும் மார்பகப் புற்றுநோய்களுக்கு இடையே பல பொதுவான விஷயங்கள் உள்ளன. காரணம் இரண்டுக்கும் மூலகாரணம் நம் உடலிலுள்ள சுரப்பிகள்தாம்
கே: உங்கள் சாதனைக்குக் கிடைத்துள்ள அங்கீகாரங்கள் பற்றிக் கூறுங்களேன்...

ப: ஆன் ஆர்பரிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் எஸ்.பி. ஹிக்ஸ் நோய்க்குறியியல் மானியப் பேராசிரியர் மற்றும் புற்றுநோய் உடற்செய்தியியல் இயக்குனர் (Director Of Cancer Bioinformatics) ஆகப் பதவி வகிக்கிறேன். இது எனக்கு என் பல்கலைக் கழகம் அளித்துள்ள கௌரவம். எஸ்.பி. ஹிக்ஸ் என்பவர் ஒரு சிறந்த மூளை பேதாலஜிஸ்ட். அவர் பெயரில் ஓர் நிதிக்கட்டளை அமைத்து அதற்குத் தலைமை தாங்க என்னைப் பணித்துள்ளனர். இதுதான் Endowed Chair என்பதன் பொருள். இதுவே ஒரு அரிய, பெரிய கௌரவம்.

2005ஆம் ஆண்டின் சிறந்த அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் விருதை நான் பெற்றிருக்கிறேன்.

2005, 2006ஆம் ஆண்டுகளில் சுக்கியப் புற்றுநோய் மையத்தின் சிறந்த போட்டியாளர் விருதும் எனக்குக் கிடைத்தது.

2008ல் புற்றுநோயில் தலைசிறந்த ஆராய்ச்சிக்கான விருதினை, அமெரிக்கப் புற்றுநோய்க் கழகம் எனக்கு அளித்திருக்கிறது.

கே: அமெரிக்க அரசின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறீர்கள், அல்லவா?

ப: ஹார்வர்டு-ஹியூஸ் மெடிக்கல் இன்ஸ்டிட்யூட்டில் என்னை உறுப்பினராக நியமித்துள்ளனர். இது அமெரிக்காவைச் சேர்ந்த 300 விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளுக்கு நிதியுதவி அளிக்கும் பெருமைக்குரிய மையம். என் ஆராய்ச்சிக்கூடத்தின் நிதித் தேவைகளையும் இது பார்த்துக்கொள்கின்றது. அமெரிக்க அரசின் பாதுகாப்புத் துறையும், தேசீய சுகாதாரக் கழகமும் எனக்கு நிதி ஒதுக்கியுள்ளன.
Click Here Enlargeகே: உங்கள் குடும்பப் பின்னணி என்ன?

ப: நான் கிளீவ்லாந்தில் பிறந்தேன். தந்தையார் சின்னையன், தாயார் இந்திராணி. பாரம்பரியமான தமிழர்கள். வேலை நிமித்தமாக என் தந்தை மிச்சிகனுக்குக் குடி பெயர்த்தார். பிளைமத்தில் உள்ள சலேம் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். இளங்கலை, முதுகலைப் படிப்புகளை மிச்சிகன் பல்கலையில் செய்தேன் (UFM). அச்சமயம் என் தந்தையார் இறந்துவிடவே, நான் என் தாயாரின் அருகிலேயே இருக்கவேண்டி இருந்தது. அதனால் அதே பல்கலைக்கழகத்தில் (UFM) வேலைக்குச் சேர்ந்தேன். விளையாட்டாக ஏழு வருடங்கள் ஓடிவிட்டன. இங்கு என்னை மிகக் கௌரவமாக நடத்துகிறார்கள். ஹார்வர்டு, ஜான் ஹாப்கின்ஸ் ஆகியவற்றிலிருந்து வந்த அழைப்புகளையும் மறுத்துவிட்டு மிச்சிகன் பல்கலைக்கழகத்திலேயே இருக்கிறேன். இதற்கு முக்கியக் காரணம், சுக்கியச் சுரப்பியைப் பொறுத்தவரை மிச்சிகன் பல்கலைக்கழகம் ஓர் உன்னத மையம் (center of excellence). மற்றொரு காரணம், என் ஆராய்ச்சிக்குத் தேவையான திசுக்கள் (tissue) இங்கு ஏராளமாகக் கிடைக்கின்றன. என் தம்பி டாக்டர் பிரகாஷ். இவர் ஒரு புற்றுநோய்க் கதிர்வீச்சு நிபுணர் (Radiation Oncologist). என் மனைவி இருதய மருத்துவர். மிச்சிகனின் போமோண்ட் ஹாஸ்பிடலில் பணிபுரிகிறார். எங்களுக்கு இரண்டு மகள்கள்: 5 வயது ஆன்யா, 3 வயது ஆனிகா. இதில் ஆனிகா என்னை 'டாக்டர், டாக்டர்' என்று தான் அழைக்கிறார். காரணம் நான் M.D., Ph.D. ஆயிற்றே!

ஆராய்ச்சி என்பதே 90% எதிர்மறை, 10% சாத்தியம் என்ற விகிதத்தில்தான் இருக்கும். இதில் வெற்றி வாய்ப்பு 1-5% தான். புதுப்புது நோய்க் கண்டுபிடிப்பு வழிகளைத் தேடுவது, எப்படியெல்லாம் அந்நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது என்பவைபற்றி ஆராய்தலே என் நோக்கம்
கே: உங்கள் ஒருநாள் வாழ்க்கை எப்படி என்று கூறுங்கள்...

ப: நான் புற்றுநோய் ஆராய்ச்சி நிபுணன். ஆகையால் நேரடியாக நோயாளிகளைப் பார்ப்பதில்லை. இதர மருத்துவர்களைச் சந்தித்து அவர்களது சந்தேகங்களைத் தீர்த்துவைப்பேன். அவர்களின் கேஸ் (Case) பற்றி ஆராய்ச்சி செய்வேன். காலை 9:30 முதல் மதியம் 1:00 மணிவரை ஆராய்ச்சி. பிறகு நோய்க்குறியியல் பேராசிரியராக இருப்பதால் மாணவர்களைச் சந்தித்தல், இதர மருத்துவ ஆய்வாளர்களைச் (Research Fellows) சந்தித்தல் என்றிருக்கும். அழைப்பின் பேரில் உலகின் பல பல்கலைக்கழகங்களுக்கும், மருத்துவம் சார்ந்த நிறுவனங்களுக்கும் சிறப்பு விரிவுரையாளராகச் செல்வதுண்டு. இதில் எனக்குப் பிடித்த இடங்கள் இந்தியா மற்றும் ஐரோப்பா. ஒரு வருடத்திற்குள் இரண்டு முறை இந்தியா சென்று திரும்பியுள்ளேன். அங்கு மும்பை, பங்களூரு ஆகிய ஊர் களுக்குச் சென்றுள்ளேன். என் மாலை நேரங்களை பிரத்யேகமாக என் குழந்தைகளுக்கென்று ஒதுக்கிவிடுவேன். அவர்களை வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வது (பரதநாட்டியம், நீச்சல்), அவர்களோடு விளையாடுவது ஆகியவற்றில் எனக்கு விருப்பம் அதிகம்.

என் மனைவி இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். தமிழ் நன்கு பேசுவார். எங்கள் வீட்டில் இந்தியத் தமிழ் சேனல் இணைப்பும் உள்ளது. என் குழந்தைகள் இப்போது தமிழ் பழகுகிறார்கள். என் மனைவிக்கு ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டமுண்டு என்பதால், சமீபத்தில் நாங்கள் ஜூலை 4 விடுமுறையில் பிட்ஸ்பர்க், வர்ஜினியா கோவில்களுக்குச் சென்று வந்தோம்.

கே: ஆராய்ச்சியில் அடுத்த கட்டம் என்ன?

ப: ஆராய்ச்சி என்பதே 90% எதிர்மறை, 10% சாத்தியம் என்ற விகிதத்தில்தான் இருக்கும். இதில் வெற்றி வாய்ப்பு 1-5% தான். புதுப்புது நோய்க் கண்டுபிடிப்பு வழிகளைத் தேடுவது, எப்படியெல்லாம் அந்நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது என்பவைபற்றி ஆராய்தலே என் நோக்கம். ஒரு குறிப்பிட்ட புற்றுநோய்க்கு என்ன முக்கிய காரணம், அந்தப் புற்றுநோய் வராமல் தடுக்க எந்த மருந்து உதவும் என்பன போன்ற துறைகளில் ஆய்வுகளைத் தொடர விரும்புகிறேன்.

கே: நல்ல உடல்நலத்திற்கு உங்கள் அறிவுரை?

ப: நன்றாக உடற்பயிற்சி செய்யுங்கள். அதிகக் கொழுப்பு, அதிகச் சர்க்கரை இல்லாத புரதச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்வது மிக அவசியம். அந்தந்த வயதுக்கேற்ப உங்கள் உடலின் பல பகுதிகளையும் பரிசோதனை செய்துகொள்ள அஞ்சாதீர்கள். நான் சொல்வதில் மார்பகம், உணவுக்குடல் மற்றும் பிராஸ்டேட் சோதனைகள், பி.எஸ்.ஏ. (P.S.A.- Prostate Specific Antigen) அளவு கணித்தல் ஆகியவை அடங்கும்.

கே: அடிக்கடி இந்தியாவுக்குச் சென்று வருகிறீர்கள், அங்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?

ப: கடந்த 10-15 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார, விஞ்ஞான ரீதியில் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் நாம் இந்தியர்கள். எத்தருணத்திலும், எதற்காகவும் நம் கலை, கலாசாரத்தை மறக்கக் கூடாது. பின்பற்றாமல் விடக்கூடாது என்பதை அவசியம் நினைவில் கொள்ள வேண்டும்.

காந்தி சுந்தர்
More

வாசக ரசனையை மழுங்கடித்து விட்டது ஊடகங்களின் குற்றமே: இலக்கியவீதி இனியவன்
Share: 




© Copyright 2020 Tamilonline