Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | யார் இவர்? | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
ரமணன் கவிதைகள்
- |ஜூலை 2008|
Share:
Click Here Enlargeஒரு பயணத்தின் முடிவில்

இன்னும் சிலநொடிகள்..
இறங்கித்தான் ஆகவேண்டும்
நீ நான் என்பார், அந்த
நிலை மாறத்தான் வேண்டும்

கன்னல் பேச்சுக்கள்
காதினிலே குறுகுறுப்பு
சின்ன விளையாட்டு
சிலநேரக் கண்பனிப்பு

என்று பலவாறாய்
இன்புற் றிருந்ததெல்லாம்
இன்னும் சில நொடிக்குள்
எங்கோ பறந்துவிடும்!

உறவாகி விடுமென்றா
உதடோரம் புன்னகைத்தோம்?
மனமாரக் கண்ணிமைத்தோம்?
மறைவாக சொப்பனித்தோம்?

எந்தக் கூட்டத்தில்
எங்கெங்கே பிறந்தோமோ
அந்தக் கூட்டந்தான்
அங்கங்கே சேர வந்தோம்!

சேர்வது வேறு, இணைந்து
செல்வது வேறு, என்றிந்தப்
பார்வைக்குத் தெரிந்திருந்தால்
படாதபாடு படுவோமா?

நிலையமிருப்பது
நீ நான் இறங்கத்தான்
நினைவொன் றிருப்பது
நீ நான் துடிக்கத்தான்

இருப்புப் பாதை
இணைந்திடத்தான் போகிறது
விருப்பேது வெறுப்பேது
விவரமற்ற சூனியத்தில்...

*****


கோடுகள் இல்லா உலகம்

கோடுகள் இல்லா உலகம் ஒருநாள்
வானில் சுழன்றிட வேண்டும்! அதில்
கூடுக ளின்றி மனிதர்கள் யாவரும்
கொஞ்சி மகிழ்ந்திட வேண்டும்!

ஆடல் பாடல் பேச்சினி லெல்லாம்
அர்த்த மிருந்திட வேண்டும்! இங்கே
வேடனு மின்றிப் பறவையு மின்றியோர்
வெற்றி கிடைத்திட வேண்டும்!

ஒரு கடலுக்குப் பல பெயர் சொல்லும்
மடமை தொலைந்திட வேண்டும்! இங்கே
வருபவரெல்லாம் ஒருகுலம் என்னும்
வண்மை மலர்ந்திட வேண்டும்.

பிள்ளை மனத்தில் இருக்கும் தாய்மை
பெரிதாய் வளர்ந்திடு மானால், இங்கே
பின்னிக் கிடக்கும் இருளில் ஒருநாள்
மின்னல் இறங்கிடு மானால்

அன்னை பூமியின் நெஞ்சம் மகிழ்ந்து
அமுதம் சுரக்காதோ? இனி
ஆயிர மாயிரம் கோடி யுகங்கள்
அன்பு செழிக்காதோ?

*****
Click Here Enlargeஎதுவும் அழிவதில்லை

உதிர்ந்த மலரே உரமாகி
உச்சிக் கிளையில் முகையவிழும்!
ஊரார் குளித்துக் குடித்தால்தான்
ஊற்றுக் கண்கள் இமைவிரியும்!
முதிர்ந்த பாட்டனின் மூளைத்தீ
முற்றக் குழந்தையின் நெஞ்சிலெழும்!
மொத்தக் காடும் தீயில்பட
மூங்கில் காடுகள் முறுவலிக்கும்!

வாயோ பழத்தை உண்கிறது
வழியில் அதன்தோல் விழுகிறது
பசுவின் வாயில் நுழைகிறது
பாதையில் சாணம் விழுகிறது
தாயின் கையில் பந்தாகித்
தட்டப் பட்டுக் காய்கிறது
தணலில் உணவைச் சமைக்கிறது
சாம்பல் தேய்த்துக் கரைகிறது.

கன்னம் வருடிய காற்றேதான்
கடலைப் புரட்டி எடுக்கிறது
காயத்தினிலே சலியாமல்
கம்பலை ஏறி இறைக்கிறது
முன்னே சுடரைக் காக்கிறது
மூண்ட தீயை அணைக்கிறது
மூச்சை மறந்த மானிடர்மேல்
மூளும் தீயை வளர்க்கிறது.

கருத்த காளியின் வெளிமூச்சே
காணும் படைப்பாய் விரிகிறது
களமொன் றினிலே பலவிதமாய்க்
கண்ணாமூச்சி நடக்கிறது
ஒருநாள் உள்ளே இழுக்கையிலே
ஊரே மறைந்து போகிறது
ஒருநாள் மறுபடி எழுகையிலே
உயிரின் கீதம் தொடர்கிறது.

அழிவென்றேது மில்லைகாண்!
அத்தனையும் வெறும் மாற்றம்தான்!
மாறும் வாழ்வில் மாற்றம்தான்
மாறாதியங்கும் அசைவாகும்
விழியுள்ளோர் இதன் விதமறிவார்
விண்டார் கண்டார் விடைகொண்டார்
விரையும் காட்சியில் வீழாமல்
விரிந்த நிலையில் உயிர்வைத்தார்.

*****


அது போதுமடா தம்பி!

வாரண மாயிரம் கேட்டதில்லை - புது
வண்ணப்பட் டாடைகள் தேவையில்லை
தாரக மந்திரம் கேட்டது போல் - தம்பி
தலையசைப்பது போதுமடா!

ஊரறியப் புகழ் தேவையில்லை - குயில்
ஒண்டுக் குடித்தனம் செய்வதில்லை
வேரைப் பிடித்தது போலத் தம்பி - குரல்
விக்கித் திணறுதல் போதுமடா!

நாற்சந்தியில் சிலை நட்டுவைத்துப் பல
நாட்களுக்கோர்முறை மாலையிட்டு
ஊர்க்குருவிக்காகம் எச்சமிட்டுக் கடல்
உப்புக் கரிப்பினில் சிக்குவனோ?

மார்பு துடிக்குது வார்த்தையிலே! எந்தன்
மண்டை சுழலுது போதையிலே என்று
வார்த்தை தடுமாறித் தம்பிவிழி - ஏழு
வண்ணம் பளிச்சிடல் போதுமடா!

வானக் கருமுகில் பொழிவதெல்லாம் - ஒரு
வண்ணச் சிறகின் வருடலிலே!
மோனம் கவிதையில் விடிவதெல்லாம் - உன்
மோக மனத்தின் துடிப்பினிலே
(வாரணமாயிரம்...)

*****


கவிஞர் ரமணன் பாரதி யுகத்துக் கவிஞர். தான் இயற்றிய கவிதைகளை மிகுந்த உணர்ச்சியோடு பாடுகிறவர். இவரது கவிதை நூல்களான 'வண்டி போய்க்கொண்டிருக்கிறது', 'ரமணனைக் கேளுங்கள்' ஆகிய இரண்டுமே அச்சு நூலாகவும், குறுந்தகடுகளாகவும் ஒரே சமயத்தில் (2006) வெளியாயின. ஆங்கில நாளிதழ் ஒன்றின் பதிப்பாளராகப் பணிபுரிந்த இவர் விருப்ப ஓய்வு பெற்று விசாகப்பட்டினத்தில் வசிக்கிறார். கவிதை, இலக்கியம், ஆன்மீகம் என்று இவற்றிலே முழுநேரம் செலவிடுகிறார்.
Share: 




© Copyright 2020 Tamilonline