|
ஜூன் 2008 : வாசகர் கடிதம் |
|
- |ஜூன் 2008| |
|
|
|
|
தென்றல் மே 2008 இதழில் இரத்தினம் சூரியகுமாரன் எழுதிய 'யாழினி' படித்தேன். இதில் கதாநாயகன் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீலங்காவுக்குச் செல்கிறார். இந்தக் கதையைப் படித்தபோது எப்படி உணர்ந்தேன் என்பதை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கதை சொல்லியிருந்த விதம் மனதைத் தொட்டது. அதைப் படித்தபின் டாக்டர் சுவாமிநாதனின் 'டின்னர்' படித்தேன். வயிறுகுலுங்கச் சிரித்தேன். 'நடந்தாவது ராத்திரியே இந்தியாக்குப் போயிடணும்னு தோணறது' என்று அந்தப் பெரியவர் சொல்கிறார்! அவர்கள் எப்படிக் காய்கறிகளே இல்லாத, இலைகளாலான சாலடைச் சாப்பிடுகிறார்கள்! அற்புதமான இரண்டு சிறுகதைகள்.
பிரஹதா, லாஸ் ஏஞ்சலஸ் (கலி.)
******
தமிழகத்தில் இதழ்கள் இன்று நீர்த்துப் போயினவோ என வருந்திய மனதுக்குத் தென்றல் இதமாக இருக்கிறது. தாய்மண்ணை விட்டு வெளியே வாழும் தென்றல் குழுவின் தமிழுணர்வு பெருமிதத்தையும், உற்சாகத்தையும், புத்துணர்வையும் தருகிறது.வாழ்த்துக்கள்.
ஹேமாவின் 'அம்மாவுக்கு ஒரு கடிதம்' மிக யதார்த்தமாக நம் அம்மாவுடன் பேசும் உணர்வை ஏற்படுத்தியது. 'டின்னர்' சிறுகதை சில பெற்றோர்களின் உணர்வை, நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. தமிழ் நிகழ்வுகள், விழாக்கள் பற்றிய தகவல்கள் நெஞ்சை நெகிழ்த்தியது.
ச.து.சு. யோகியாரைப் பற்றிய கட்டுரை சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் அவரை அறிமுகப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது. யோகியாரின் 'அகல்யா' என்றொரு கவிதை. அகலியையும் இந்திரனும் முன்னரே சந்தித்துக் காதல் கொண்டதாகவும், முனிவர் இடையில் வந்து அகலிகையை அபகரித்துக் கொண்டதாகவும் கூறுகிறது. யோகியார் கோபத்துடன் முனிவரை, தாடிமுனி, கள்ளமுனி என்றெல்லாம் குறிப்பார். படிக்க வேண்டிய கவிதை.
கோ.வெ. கீதா, சன்னிவேல் (கலி.)
******
நன்கு கல்வி கற்ற ஓர் இளைஞர் வேலையிழந்து, வீட்டைவிட்டுத் துரத்தப்பட்டு, கையில் காசில்லாமல் தெருவுக்கு வந்து, இறுதியாக மன உளைச்சலுக்கு ஆளாகித் தற்கொலை செய்துகொண்டதை மிகுந்த மனவேதனையுடன் வாசித்தேன் ('ஒரு வேலையிழப்பும் தற்கொலையும்', தென்றல், மே 2008). இந்தியர்கள், குறைந்தபட்சம் தென்னிந்தியர்கள், கணேஷ் பட்ட பாட்டை அறியவில்லையா? இல்லை, கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்களா? கல்வி, வேலை, வளமான வாழ்க்கையைத் தேடி இந்தியர்கள் அமெரிக்காவுக்குப் போகிறார்கள். அவர்கள் செழிப்போடு வாழ்கிறார்கள். பிற தென்னிந்தியக் குடும்பங்களுடன் கலாசார ரீதியான தொடர்பு வைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். விழாக்களை ஆனந்தமாகக் கொண்டாடுகிறார்கள். அரைநூற்றாண்டுக் காலம் அங்கே செழித்த பின்னரும் கணேஷ் போன்றோருக்கு மறுவாழ்வளிக்க ஓர் அமைப்பை ஏற்படுத்தாதது ஏன்? அக்கறையின்மையா? 'நான் நல்லா இருந்தாப் போதும்டா சாமி' என்ற எண்ணமா? ஏதாவது செய்யுங்கள்.
P.V. சந்தானகிருஷ்ணன் (கணேஷின் உறவினரல்ல), அண்ணா நகர், சென்னை.
******
டாக்டர் சாமிநாதனின் 'டின்னர்' கதை அசத்தல். 15 முறையாவது படித்திருப்பேன். குலுங்கக் குலுங்கச் சிரித்து ரசித்தேன். என் கணவரும் படித்துச் சிரித்து மகிழ்ந்தார். போதாததற்குப் பலருக்கும் சொல்லிப் படிக்க வைத்தேன். 'டின்னர்' உங்கள் அனுபவமாக இருக்காது என்று நினைக்கிறேன். சூப்பர் டின்னர்தான் போங்கள்!
லதா சந்திரமௌலி, பென்சில்வேனியா
******
த - தமிழின் மணம் வீசும் தென்றலே தா - தாய் மொழியை மலர வைக்கும் தென்றலே தி - தித்திக்கும் தேனாய் சுவையூட்டும் தென்றலே தீ - தீர்வுக்கு விடை அளிக்கும் தென்றலே து - துரித நடையில் நடைபயிலும் தென்றலே தூ - தூய்மையான வாழ்வுக்கு வழிவகுக்கும் தென்றலே தெ - தென்றல் காற்றாய் பறந்துவரும் தென்றலே தே - தேனிலவைப் போல் உள்ளம் கவரும் தென்றலே தென்றலே தென்றலே உலகளவும் உன்புகழ் ஓங்க பல்லாண்டு வாழ்க வளர்க
கெளரி வைத்தியநாதன், அட்லாண்டா, (ஜார்.)
******
நான் அமெரிக்காவுக்கு விடுமுறையில் புதிதாக வந்திருக்கிறேன். தென்றலைப் படித்தேன். உலகத் தமிழர்களுக்கு அது அளப்பரிய சேவை புரிவதாகக் கருதுகிறேன். 'அன்புள்ள சிநேகிதியே' பகுதியில் வரும் பெரும்பாலான கடிதங்கள் மாமியார்-மருமகள் பிரச்சனையைக் குறித்ததாக இருக்கிறது. ஜாதி மதம் எதுவாக இருந்தாலும் திருமணம் என்னும் வழக்கம் ஏற்பட்டதிலிருந்து துவங்கிய இந்தப் பிரச்சனைக்கு முடிவே கிடையாது. கல்வியின் காரணமாக இன்றைய மாமியார்கள் முன்பைவிடப் பரவாயில்லை. விட்டுக்கொடுத்துப் போவதைத் தவிர வேறு தீர்வு இதற்குக் கிடையாது. சகோதரிகளோ, நண்பர்களோ, மாமியார்-மருமகளோ யாராக இருந்தாலும் இரண்டு பெண்கள் ஒத்துப்போவதில்லை. உங்கள் தீர்வுகள் மிகச் சரியானவையே. நீங்கள் வழிதான் காட்ட முடியும். அமைதியான வாழ்வுக்கான பாதையை அவர்களேதான் கடைப்பிடிக்க வேண்டும்.
S. நீலகண்டன், (மின்னஞ்சலில்) |
|
வாசகர் தீர்ப்பு
கே.ராஜாராம் அவர்களின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. வணிக எழுத்தாளர்கள் சினிமாத் துறையினர், மாடல்கள் இவர்களை நாம் வெகுவாகப் புகழ்கிறோம் என்று கூறியுள்ளார். இதற்குக் காரணம் பத்திரிகையா, மக்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவர் குறிப்பிடும் பட்டியலில் உள்ளவர்களில் பெரும்பாலோர் தங்கள் பொருட்செலவில் கூட்டம் கூட்டிப் பாராட்டும் புகழும் தேடிக்கொள்ளும் நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் போன்றவர்கள். அவர்களுக்கு விளம்பரம் அவசியமாகிறது. இப்படிப்பட்டவர்கள் நீடித்த புகழுக்கும் பாராட்டுக்கும் உகந்தவர்கள் அல்ல.
சுஜாதா இந்தப் பட்டியலைச் சேர்ந்தவரல்ல. கறைபடியாக் கையுடையவராய்த் திகழ்ந்த முன்னாள் முதலமைச்சர், கர்மவீரர் காமராஜர்; குடும்பம், மனைவி, மக்கள் என்பதெல்லாம் மறந்து நாடு, விடுதலை, நாட்டுமக்களின் நல்வாழ்வு என்ற பரந்த மனம் கொண்ட தியாகியாய் வாழ்ந்து மறைந்த தீரர் சத்தியமூர்த்தி ஆகியோர் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவர்கள். காமராஜர் வழங்கிய இலவசக் கல்வி, மதிய உணவு போன்ற திட்டங்களை மக்கள் மறக்கமுடியுமா? சென்னை நகரக் குடிமக்களுக்கு குடிநீர்த் திட்டம் வழங்க விடுதலை வீரர் சத்தியமூர்த்தி அன்றைக்கிருந்த ஆங்கில அரசாங்கத்திடம் தனித்து நின்று போராடி புழல் ஏரியில் அணை கட்டியபோது, மக்கள் கூடி அதனைச் செயலாக்கிய தீரர் சத்தியமூர்த்தி பெயரிலேயே அத்திட்டம் அழைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். இன்று அது சத்தியமூர்த்தி ஸாகர் என்று அழைக்கப்படுகிறது.
இத்தகையோரின் புகழுக்குத் தென்றல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இது பத்திரிகை தருமமுங்கூட. அப்படிப் பாராட்டப்பட்டவர்தான் சுஜாதா என்ற காலத்தால் மறக்கமுடியாத அழியாப்புகழுக்கு முற்றிலும் தகுதி வாய்ந்த எழுத்தாளர். தகுதியிருந்தால் புகழ் தேடி வருவதை யாரும் தடுக்கமுடியாது. மேலும் ராஜாராமன் அவர்கள் மருத்துவத் துறையினரை நாம் கண்டுகொள்வதில்லை என்கிறார். இது முற்றிலும் தவறு. நோபல் பரிசு பெற்ற ஸர்.ஸி.வி.ராமனை எல்லோருக்கும் தெரியும். இன்று அமெரிக்காவில் புற்றுநோய் உடலில் எங்கு தாக்கியுள்ளது என்று துல்லியமாகக் கண்டுபிடித்துச் சொல்வதோடு ஆரம்பநிலையிலேயே கண்டுபிடிக்க உதவும் கருவிக்கு மந்திரங்களை நம்பாத அமெரிக்கர்களே ராமன் மந்திரக்கோல் (Raman's Magic Wand) என்று பெயரிட்டிருக்கின்றனர். இச் செய்தியை எனக்குத் தெரிவித்தவர் மிச்சிகனில் உள்ள காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். ராஜாராமன். (இவரது நேர்காணலும் தென்றலில் வெளியானது).
டி.வி.எஸ். நிறுவனர் சுந்தரமய்யங்காருக்கு மகளாகப் பிறந்து, ஏழை எளியவர்களுக்காகவே வாழ்ந்து, காந்தி கிராமம் நிறுவிய பெண்மணியின் நூற்றாண்டு விழா இரண்டு ஆண்டுகளுக்குமுன் கொண்டாடப்பட்டது. தமிழக அரசு அந்த ஆண்டு முழுவதையும் அவர் நினைவாகக் கொண்டாட உத்தர விட்டது. அதுபோலவே 50 ஆண்டுக் காலம் தொடர்ந்து தினமணி நாளிதழின் ஆசிரியர் பொறுப்பு வகித்த ஏ.என்.சிவராமனின் நூற்றாண்டில் (2004) அவரது பெயரில் அறக்கட்டளை நிறுவியுள்ளது.
மேலே கூறியவர்களைப் பற்றியும் இன்னும் சாதனையாளர், சான்றோர், எழுத்தாளர் பலரைப் பற்றியும் தென்றல் இதழில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தொடர்ந்து வெளிவருகின்றன. வாழ்ந்து மறைந்த சான்றோர் பெருமக்களின் சாதனைகளை அடுத்த தலைமுறையினர் தெரிந்து கொள்ள தென்றல் ஒரு கருவியாகப் பயன்படுகிறது என்பதையும், சுஜாதாவின் புகழாரங்களுக்கு அவர் முற்றிலும் தகுதி வாய்ந்தவர் என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டவே இந்தக் கடிதம்.
டாக்டர். அலர்மேலு ரிஷி
******
சுஜாதா பற்றிய விவாதம் மனதை வருத்தியது. அவர் சினிமாக் கதாசிரியர் மட்டுமல்லவே. சங்க இலக்கியம் முதல் சிவாஜி வரை அவரது ஆளுமை, லகுவாக விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் தன்மை, இணையதளம்வரை எளிமையாகத் தமிழைப் புரியவைத்தது போன்றன அவருக்கென்று தனியிடத்தைத் தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது. தமிழின் ஆழத்தை, பெருமையை அவை உணர்த்தின.
கோ.வெ. கீதா, சன்னிவேல் (கலி.)
******
நான் தென்றலைத் தவறாமல் விரும்பிப் படிப்பவன். சுஜாதா அவர்களைப் பற்றிய கே.ராஜராமின் கூற்றில் சிறிது உண்மை உள்ளது. சேஸ் நாவல்கள் மட்டுமல்ல, ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளைத் தழுவியும் சுஜாதாவின் சில துப்பறியும் கதைகள் அமைந்துள்ளன என்பதில் சந்தேகமில்லை. வாசகரைக் கவரும் அவருடைய எழுத்து நடையும் நகைச்சுவை உணர்வும் கட்டாயம் ரசிக்கத் தக்கவை என்பதிலும் சந்தேகமில்லை.
பி. சங்கரன், சான் டியகோ (கலி.)
******
அடுத்து என்ன, மணிரத்னம் மகாபாரதத்தைத் தழுவி 'தளபதி' படம் எடுத்ததால் மட்டுமே பிரபலம் ஆனார் என்று சொல்வார்களா? இன்ஸ்பிரேஷன் என்பது வேறு, தழுவி எழுதுவது என்பது வேறு. சுஜாதாவுக்குத் தென்றல் அஞ்சலி செய்தவிதம் சரியே. சுஜாதா மற்ற மேற்க்கத்திய எழுத்தார்களின் படைப்புகளைத் தழுவி எழுதினார் என்று சொல்பவர்களை, (சுஜாதாவின் நடையில் சொன்னால்) பசித்த புலி தின்னட்டும்!
சூப்பர் சுதாகர் www.geocities.com/sujathapage/ |
|
|
|
|
|
|
|