Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | யார் இவர்? | சிரிக்க, சிந்திக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சிறுகதை
பத்தியம்
புன்னகைக்கும் இயந்திரங்கள்
- இராம. வைரவன்|ஜூன் 2008|
Share:
Click Here Enlarge'சமூக விஞ்ஞானி முனைவர் ராம் அவர்கள் நாளை காலை 8:00 மணிக்கு அரசாங்க ஆடிட்டோரியத்தில் தன் கண்டுபிடிப்புக்களைச் சமர்ப்பிக்கிறார். அன்று மாலை 5 மணிக்கு அரசாங்கம் சில முக்கிய முடிவுகளை அறிவிக்க இருக்கிறது.' நகரின் முக்கிய இடங்களில் லேசர் எழுத்துக்கள் வெற்று வெளியில் தோன்றி நகர்ந்து கொண்டிருந்தன மீண்டும் மீண்டும்.

ஒரு நிமிடம் நின்று பார்த்துக் கொண்டிருந்து விட்டுத் தொடர்ந்தேன். பெருமிதமாய் இருந்தது. வானொலி, தொலைக்காட்சி, பத்திரிக்கை விளம்பரங்கள், வெற்றுவெளி லேசர் அறிவிப்புக்கள் எனப் பல ஊடகங்களின் மூலம் இந்தச் செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் இந்த விஷயத்தில் முனைப்புடன் இருப்பது எனக்குச் சந்தோசமாக இருக்கிறது.

தெருவில் ரோபோக்களின் நடமாட்டம் மனிதர்களின் நடமாட்டத்தைவிடச் சற்று அதிகமாயிருக்கிறது. எங்குபோய்த் தொலைந்தார்கள் மனிதர்கள்? எண்ணிக் கொண்டே தெருக்களைக் கடக்கையில் மனநோய் மருத்துவமனைகளும் அவற்றில் மண்டிக்கிடந்த மனிதர்களும் கண்ணை உறுத்தினார்கள்.

நாளை என் முடிவுகளைச் சமர்ப்பிக்கப் போகிறேன். அதன் பிறகு ஓய்வும், அமைதியும் சந்தோசமும் கிட்டுமா? அதற்குமுன் இப்பொழுது எனக்குச் சிறு ஓய்வு வேண்டும். தலை சூடாகிவிட்டது. மூளை வேலை செய்ய மறுக்கிறது. அரைமணி நேரமாவது ஓய்வு கிடைக்குமா எனத் தெரியவில்லை. 'ராபர்ட்'டைத்தான் கேட்க வேண்டும். ராபர்ட்டை அழைத்து என் வேலைப் பட்டியலைக் கேட்டேன்.

'ஓகே பாஸ், நீங்கள் ஓய்வெடுக்கலாம். என்னிடம் உள்ள பதிவின்படி நீங்கள் ஆற்ற வேண்டிய முக்கியமான பணிகள் எதுவும் இல்லை. உங்கள் காரியதரிசி செல்வியிடமும் கேட்டுவிட்டேன். ஆனால் நீங்கள் ஆக்ஸிஜன் கூண்டில் புதுக்காற்றை சுவாசிக்க வேண்டிய நேரம் இது.'

'சரி. இசையின் அளவைக் கொஞ்சம் குறைத்து விடு.'

தெருவில் ரோபோக்களின் நடமாட்டம் மனிதர்களின் நடமாட்டத்தைவிடச் சற்று அதிகமாயிருக்கிறது. எங்குபோய்த் தொலைந்தார்கள் மனிதர்கள்?
'ஒகே பாஸ், மகிழ்ச்சியாய் ஓய்வெடுங்கள்.' என்று கூறி ஆக்ஸிஜன் கூண்டைத் திறந்து விட்டு, கதவை மூடி, இயந்திரத் தப்படிகள் வைத்துக் கடந்து போனது அந்த ரோபோ.

ஆக்ஸிஜன் குழாயை மாட்டிக் கொண்டு சாய்ந்தேன். மூன்று மாத உழைப்பு வீணாகி விடக்கூடாது என்ற நினைப்பு ஆக்ஸிஜனோடு சேர்ந்து நாசியில் நுழைந்து நுரையீரலை நிரப்பியது. மெல்லிய இசை பரவியது. என் மனைவியுடனான உரையாடல் 12 ஜனவரி, 2110ஐ மெமெரியிலிருந்து ஓட விட்டேன்.

'ஹாய் டியர்'

'ம் சொல்லுங்கள் என் அன்புக் கணவரே'

'அரசாங்கம் எனக்கு முக்கியப்பணி ஒன்றை அளித்திருக்கிறது. சமூக நன்மைக்கான பணி அது.'

'வாழ்த்துக்கள். உங்களுக்குப் பிடித்த பணி தானே, ஜமாயுங்கள். பணியின் நோக்கம் என்ன என்று நான் அறிந்து கொள்ளலாம் அல்லவா?'

'நன்றி. நோக்கம் பற்றிச் சொல்லுவதோடு முக்கியமாக உன்னிடம் சொல்ல வேண்டிய ஒன்றும் இருக்கிறது.'

'சீக்கிரம். உங்களுக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருக்கிறது. சுருக்கமாக இருக்கட்டும். மீதம் இருந்தால் அடுத்த அப்பாய்ன்ட்மென்ட்டில்,'

'ஓ.கே?'

'நோக்கம், மனித குலத்தின் பெருகிவரும் மன உளைச்சலுக்குத் தீர்வு காண்பது'

'ஓ.கே நல்ல விஷயம். என்னிடம் ஏதோ சொல்ல வேண்டுமென்றீர்களே?'

'என் பரிந்துரையின் முடிவு என்னவாகலாம் என்பது பற்றி எனக்கு ஓரளவு தெரிந்துதான் இருக்கிறது. நம் நாட்டுப் பெண்கள் அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டியிருக்கலாம். அவரவர் கணவருடன் சேர்ந்து ஒரு கூரையின் கீழ் செயல்பட வேண்டியிருக்கலாம். அது பற்றி உனக்கு முன்பே கோடிகாட்ட நினைத்தேன்.'

'இதற்கும் உங்கள் தீர்வுக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் அப்படியே இருந்தாலும் அது சாத்தியமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. எதற்கும் அடுத்த சந்திப்பில் விவரமாய்ப் பேசலாம். இப்போது காலம் இல்லை. பை பை.'

'பை பை.'

நான் என் பணியினைத் துவக்கி உண்மைகள் எனக்கு முகம் காட்ட ஆரம்பித்தபோது அவளிடம் பேசியது இது. அதற்குப் பிறகான இரண்டாவது உரையாடல் 05 பெப்ரவரி, 2110 அன்று நிகழ்ந்தது. அப்போது இன்னும் சற்று விவரமாகவே எடுத்துக் கூறினேன். அவள் கேட்கும் கேள்விகள் நியாயமாகவே இருந்தன. பண இழப்பு அதிகம் என்றாள். என்னால் அப்படி வரமுடியாது என்றாள். இவ்வளவு பிஸியாக இருந்துவிட்டு வீட்டில் சும்மா இருக்க முடியுமா? ஆனால் மனிதர்கள் பைத்தியங்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை நெருப்பை அள்ளி நெஞ்சில் கொட்டத்தான் செய்கிறது என்றும் ஒத்துக் கொண்டாள்.

பெரிய நிறுவனமொன்றில் உயர்பதவியில் இருக்கும் அவள் கேட்ட 'என் சுதந்திரத்தில் நீங்கள் கை வைப்பதாக ஆகாதா?' என்பது தான் இந்த முயற்சியில் மிகப்பெரிய தடைக்கல்லாக இருக்கப்போகிறது என்று எனக்குள் குடைந்து கொண்டே இருக்கிறது. அரசாங்கம் அதற்கு மாற்று வழிகளை யோசிக்க வேண்டும் என்ற வரிகளை என் பரிந்துரையில் சரியான இடத்தில் சேர்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

சென்ற வாரம் பிள்ளைகள் லைனில் வந்தார்கள். சொல்ல வேண்டியவற்றைச் சொல்லிவிட்டேன். அடுத்து என் தாத்தா, பெற்றோரிடமும் அப்படியே பேசிவிட்டேன். அனைவரும் எனக்குச் சாதகமான பதிலையே தந்தார்கள். என் மனைவி மட்டும்தான் பல கேள்விகளோடு இருக்கிறாள். இவளைப் போல இந்நாட்டுப் பெண்கள் இதனை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதுதான் எனக்குள் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. நான் ஆக்ஸிஜன் கூண்டை விட்டு வெளியே வந்தேன். கதவைத் தட்டி என் அனுமதியுடன் உள்ளே நுழைந்தது ராபர்ட்.

'பாஸ் நன்றாக ஓய்வெடுத்தீர்களா?'

'ம்'

'உங்கள் முகம் இப்போது தெளிவாக இருக்கிறது. உங்களுக்கான ரொட்டியும், டீயும் ரெடி' என்று சொல்வதற்குச் சற்று முன் அதன் தலை ஆடியது. எனக்கு ராபர்ட் மீது ஏற்பட்ட சந்தேகம் உறுதியானது.

ராபர்ட்டின் கண்ணிலிருந்து மறைந்து, அது ஊடுருவ முடியாத ரகசிய அறைக்குள் சென்று அரசாங்கத் தலைமையிடமும், அரசாங்க விஞ்ஞானியிடமும் தொடர்பு கொண்டு பேசினேன்.

'ராபர்ட் முதன்முறையாகப் பொய் சொல்லக் கற்றுக்கொண்டிருக்கிறது'. ரோபோக்களின் சுய பயிற்சிக்கான அலைவரிசைகளை முடக்கி உள்ளதாகவும், இதுபற்றி விஞ்ஞானிகள் குழுமத்திற்கு தெரியப்படுத்தி உள்ளது என்றும் அரசாங்க அதிகாரி எனக்கு உறுதியளித்தார்.

***

3 மாதங்களுக்கு முன்... 2110ஆம் ஆண்டு இந்த மனித குலத்துக்கு நல்ல ஆண்டாகவே பிறந்திருக்கிறது. எனக்கும்தான். இல்லாவிட்டால் அரசாங்கம் இப்படி ஒரு முக்கியமான பணித்திட்டத்தை எனக்கு அளித்திருக்குமா என நினைத்துக் கொண்டிருந்தேன்.

'பாஸ், உங்களுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன. முக்கியமாக அரசாங்கத் தலைமை நீங்கள் இந்த ப்ரோஜெக்டை ஏற்றுக்கொண்டதற்காகப் பாராட்டி, வெற்றி பெறத் தன் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார்' இப்படிச் சொல்லி விட்டு ராபர்ட் நின்று கொண்டிருந்தது. நான் வீட்டுப்பணிக்கென புதிதாய் வாங்கியிருக்கிற அசிமோ வகை ரோபோ. ஒரு மில்லியனை விழுங்கிவிட்டு அமைதியாக நிற்கிறது புன்னகை ததும்பும் முகத்துடன். அது சொன்ன செய்தி எனக்குச் சந்தோசமாயிருந்தது.

'எல்லோருக்கும் என் சார்பாக நன்றி சொல்லிவிடு' என்றேன்.

'ஓ.கே பாஸ், இன்று நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள்' என்றது ராபர்ட் தலையை ஆட்டிக்கொண்டே. 'நன்றி' எனச்சொல்ல நினைத்த நான் சட்டெனெ நிறுத்திக் கொண்டேன். ரோபோக்களிடம் 'நன்றி', 'தயவு செய்து', 'மன்னித்து விடு' போன்ற வார்த்தைகளைச் சொல்லி, சக்தியை விரய மாக்குவதில்லை நான். ரோபோக்கள் இயந்திரங்கள் மட்டுமே. மனிதனைப் போல கோபம், இரக்கம், வெறுப்பு, பாரபட்சம் எல்லாம் அவற்றுக்கு இல்லை என்பதால் வேலைகளை மட்டும் சொன்னால் போதும் என்பது எல்லாருக்குள்ளும் பதிவாகியிருக்கிறது. அதனால் இயந்திரப் பரிவர்த்தனையில் 'உண்மையான நன்றியறித'லோடு தேவையற்ற பல்லிளிப்பு, வழிதல், கெஞ்சுதல், முகமன் கூறுதல் போன்றவைகளையும் கூறி சொற்களை விரயம் செய்வதில்லை மனிதர்கள். ஆனால் ரோபோக்கள் பேசும் போது 'நன்றி', 'வாழ்த்துக்கள்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்கின்றன. ரோபோவை உருவாக்கிய விஞ்ஞானிகள் நினைத்திருக்கக் கூடும் மனிதர்கள் இது போன்ற வார்த்தைகளை எதிர்பார்ப்பார்கள் என்று. இயந்திரத்தோடு நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்ற பிரக்ஞை அற்றுப் போகும் நேரங்களில் இந்த வார்த்தைகள் பயனளிக்கக் கூடும். அதனால் அவர்கள் இவ்வார்த்தைகளை லாஜிக்கில் இணைத்து ஆணைநிரல் செய்திருக்கக் கூடும். ஆனால் ராபர்ட்டால் நான் மகிழ்ச்சியாய் இருப்பதை எப்படி உணரமுடிந்தது? 'ராபர்ட் சற்று முன் என்ன சொன்னாய்?'

'பாஸ், இன்று நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள் என்று சொன்னேன்' என்ற போது அதன் தலை மேலும் கீழும் ஆடியது.

'எப்படி உனக்கு இது சாத்தியமானது?'

'என் கேமிராக் கண்களால் உங்கள் முகத்தை வருடிப்பார்த்தேன்' என்றது.
'மனித உணர்வுகளை அறிய நீ எப்போது கற்றாய்?' நான் இப்படிக்கேட்கக் காரணம் இருந்தது. நான் இந்த புது மாடல் ரோபோ 'ராபர்ட்'டை வாங்கி ஒரு மாதம் ஆகிறது. ராபர்ட் என்றுமில்லாமல் இன்று தன் புதிய திறனைக் காட்டியிருக்கிறது.

'நான் 'அசிமோ-பிஎக்ஸ்100' சீரிஸைச் சேர்ந்தவன். நாங்கள் நாங்களாகவே பயிற்சி நிலையத்திடம் ஆன்லைனில் தொடர்பை ஏற்படுத்தி பயிற்சியைப் பெற முடியும். இப்போது நான் உங்கள் முகத்தை ஆராய்ந்து உங்கள் சோகத்தை, மகிழ்ச்சியை, வெறுப்பை அறிந்து அதற்கேற்றவாறு பேசக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.'

நான் புரிந்து கொண்டேன். தானாகவே பயிற்சி பெறுகிறது ராபர்ட். அதனை உடனே நிறுத்த வேண்டுமெனத் தோன்றியது. 'இனி மேல் இப்பயிற்சி வேண்டாம். நிறுத்திவிடு. வேறு ஏதேனும் கவிதை எழுத, நாவல் எழுத, சிலை வடிக்க, ஓவியம் வரைய இப்படிக் கற்றுக்கொள். நீ பயிற்சி பெறுமுன் என் அனுமதி பெற்றுக்கொள்' என உத்தரவிட்டேன்.

'ஒகே பாஸ்' என்றது ராபர்ட்.

அசிமோ ரோபோக்களின் வரலாறு இரண்டு நூற்றாண்டுகளைக் கொண்டது. அசிமோ 20ம் நூற்றாண்டு ஹூமனாய்ட் ரோபோ வகையைச் சேர்ந்தது. 'ஈ-ஜீரோ' சீரிஸில் ஆரம்பித்து இன்று 'பிஎக்ஸ்100', 'பிஒய்100' வரை வந்து விட்டது. ஆரம்பத்தில் நடக்க, ஓட அப்புறம் மாடி ஏற, புன்னகைத்து வரவேற்க, கீபோர்ட் வாசிக்க, இன்று மனிதனுக்குச் சமமாக எல்லாம் செய்யமுடிகிறது 'மனம்' ஒன்றைத் தவிர. 'மனத்தை' உள்வைக்க முயன்று வருகிறார்கள் விஞ்ஞானிகள்.

'ரோபோக்களுக்கு உணர்வுபூர்வமாக சுயமாகச் சிந்திக்கும் திறனையும், மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளுகிற திறனையும் உண்டுபண்ணிவிட எடுத்துக் கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தகுந்த பலனளித்துள்ளன. அதில் முழுவெற்றி அடையும் நாள்தான் மனிதகுலத்துக்கு மகத்தான பொன்னாள். அந்தநாள் அதிக தூரத்தில் இல்லை' என்று விஞ்ஞானிகள் குழுமத் தலைவர் சென்ற மாதம் அறிவித்திருந்தார். அவர் கூறியிருப்பது சரிதானா? அது மனிதனுக்கு நன்மையளிக்குமா? என்பதைவிட மனிதகுலத்தின் அழிவுக்கான ஊற்றுக்கண்ணைத் திறந்து விட்டுவிடுகிற முயற்சியோ என்கிற ஐயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த ப்ரோஜெக்ட்டின் உள்நோக்கங்களில் ஒன்றாக அதுவும் சேர்க்கப்பட்டிருக்கிறது. அதனை அரசாங்கத் தரப்பு எனக்குச் சுட்டிக்காட்டி இருந்தது. அரசாங்கத் தலைமை என்னை அணுகி இந்த ப்ரோஜெக்ட்டை 3 மாதத்தில் முடிக்கும்படி கேட்டுக்கொண்டது. ப்ரோஜெக்ட்டின் நோக்கம் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் என்னிடம் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.

'அந்தக் காலத்துல கணவன் வேலைக்குப் போயிட்டு வருவான். மனைவி வீட்ல இருந்து குடும்பத்த பாத்துக்குவா. புள்ளைகளைப் பாத்துக்குவா. கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் நல்லது கெட்டதுகளச் சொல்ல முடியும்.இப்பத்தேன் அதெல்லாம் இல்லாமப் போச்சே.
'நம் நாட்டில் எல்லாத்துறைகளும் அதீத வளர்ச்சி பெற்று பில்லியன்களை குவித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் ஒரு ரோபோவைத் துணை சேர்த்துக் கொண்டு மில்லியன்களைச் சம்பாதிக்கிறான். சந்தோசங்களை இழக்கிறான். புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. 20ம் நூற்றாண்டில் படிப்படியாக அதிகரித்த மனிதனின் மனஉளைச்சல் 21ஆம் நூற்றாண்டில் மேலும் கூடி இன்றைக்கு 22 ஆம் நூற்றாண்டில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்றைக்கு நாட்டில் சைக்கோ குற்றங்கள் அதிகமாகிவிட்டன. மனநோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. 60 சதவிகித மக்கள் மனநல மருத்துவமனைகளில் சிகிச்சைக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆண்டுக்காண்டு இது அதிகரித்துக் கொண்டே போகிறது. தெருவுக்கு ஒரு மனநல மருத்துவமனை இருந்தும் போதவில்லை. இதற்கெல்லாம் சமூகத்தீர்வு ஏதாவது உண்டா? என்பதுதான் நோக்கம். ஆராய்ந்து சொல்லுங்கள் மிஸ்டர் ராம். உங்கள் பரிந்துரைகள் மனித வாழ்க்கையில் மகிழ்ச்சியை மீட்டுத்தரட்டும்..'

'மிஸ்டர் ராம் உங்கள் ஆராய்ச்சிக்கான எல்லாம் இந்த சிஸ்டத்தில் இருக்கிறது. ரோபோ 'செல்வி' உங்களுக்கு உதவியாக இருந்து காரியதரிசி பணியைக் கச்சிதமாகச் செய்யும். 'செல்வி' அசிமோ-பிஒய்100' சீரிஸைச் சேர்ந்தது. உங்களுக்கான எல்லா சப்போர்ட்டும் அரசாங்கம் அளிக்கும். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.' கைகுலுக்கி விடைபெற்ற அடுத்த நொடியிலிருந்து என் ஓய்வில்லாத பணி துவங்கியது.

மாடல் 'பிஒய்100' ரோபோக்கள் அசிமோக்களின் உயரிய மாடல். செயற்கை அறிவின் அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவானவை.

பிரத்யேகமாக காரியதரிசிப் பணிக்காகவே பயிற்சியளிக்கப் பட்டவை. அதுமட்டுமல்ல இவை ப்ரோஜெக்ட்களுக்கு ரோட்மேப் தயாரிக்க, பல மண்டைக் குழப்பிக் கேள்விகளுக்கு விடைகள் பெற, சில முடிவுகளை எடுக்க எனப் பல பணிகளையும் செய்யக் கூடியன.

செல்வியின் ரோட்மேப் படிதான் என் பணிகளைத் துவக்கினேன். என்னிடம் கேட்கப்பட்டிருக்கும் கேள்வியை அதனிடம் கேட்டுப் பார்த்தால் என்ன என்று தோன்றியது.

'மனித மன உளைச்சலுக்கு என்ன தீர்வு?'

'மன்னிக்கவும், மன உளைச்சல் என்ற சொல் என் அகராதியில் இல்லை' என்று இயந்திரக் குரலில் பேசிவிட்டு யோசிப்பது போல் சற்று நிறுத்தியது. அதன் மற்ற தொடர்புகளிடம் கேள்வியை அனுப்பி விடை கிடைக்கிறதா எனப்பார்க்கிறது போலும். பின் அதுவே 'என் தொடர்புகளிடமும் விடையில்லை, மன உளைச்சல் என்றால் என்ன?' என்று கேட்டு தன் மூளையில் பதிவு செய்து கொண்டது.

புதிய வார்த்தைகளைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்கிற லாஜிக்கை உள்வைத்த விஞ்ஞானிகளின் புத்திசாலித்தனத்தை மெச்சிக் கொண்டே கேள்விகளை மாற்றி மாற்றிக் கேட்டேன்.

'மனித மூளைப் பகுதியின் அழுத்தத்துக்கு என்ன காரணம்? இதற்கு இயந்திரத்தீர்வு உண்டா? உதாரணத்திற்கு உங்கள் சிஸ்டத்தையே எடுத்துக் கொண்டு பதில் தரலாம்.

பதில்களை அடுக்கியது.

'செயல்திறனுக்கு மேல் அதிக வேலைப்பளு காரணமாய் இருக்கலாம்.'

'லோடிங் பகுதியின் வேலை அதிகரிப்பினால் மெமரி நிறைந்து போயிருக்கலாம்'

'அன்லோடிங் பகுதி வேலை செய்யாமல் பழுதாகி அதனால் ப்ராசசர் கரப்ட் ஆகியிருக்கலாம்.'

இந்த லாஜிக்கை மனிதன் வாழ்க்கையில் பொருத்திப் பார்த்தேன். எனக்குப் புரிந்தது போல இருந்தது. எந்தப்புள்ளியில் ஆராய்ச்சியை ஆரம்பிப்பது என்ற கேள்விக்கான விடை கிடைத்தது. இரண்டு தலைமுறைகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்கள் எப்படி சந்தோசமாக வாழ்ந்தார்கள்? அவர்கள் வாழ்க்கை முறை எப்படி இருந்தது? படிப்படியாக எப்படி மாறியது? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை நோக்கி ஆராய்ச்சியை நகர்த்தினால் பயனளிக்கலாம் என்று தோன்றியது. அதற்கான பாதையில் தொடர்ந்தேன்.

இரண்டு தலைமுறை வரலாற்றை அறிய பல அணுகுமுறைகளைக் கையாண்டேன். அந்த காலத்திய திரைப்படங்கள், நாவல்கள், செய்தித்தாள்கள், தற்போது உயிரோடு இருக்கிற மிக வயதானவர்கள் மூலமாகவும் அறிய முற்பட்டேன், மிகவும் வயதானவர்களின் பட்டியலையும், அவர்கள் தங்கியுள்ள முதியோர் இல்லம் பற்றிய தகவல்களையும் காரியதரிசி அளித்தது. பட்டியலில் சிலரை மட்டும் சந்திக்க முடிவு செய்துகொண்டேன்.

அதில் ஒருவர் என் தாத்தா என்பதை அறிய ஆச்சரியமாக இருந்தது. அவரை மூன்றோ, நான்கோ தடவைகள்தான் பார்த்திருக்கிறேன். அவருடனான என் சந்திப்பு மிகப் பயனளித்தது. என் தாத்தா தங்கியிருந்த முதியோர் இல்லம் நாட்டின் வடக்குப்பகுதியில் இருந்தது. அங்கு சென்றேன். வரவேற்பில் இருந்த ரோபோ புன்னகைத்து வரவேற்று விவரம் கேட்டு வழி சொன்னது. முதல் தளத்தில் இருந்த ஹாலில் கீபோர்ட் வாசித்துக் கொண்டிருந்தது ஒரு ரோபோ. இசைக் கச்சேரியைப் பல கிழவர்கள் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தனர். அதனைக் கடந்து என் தாத்தாவின் அறையை அடைந்தேன். ஒரு ரோபோ அவருக்கு உடம்பு பிடித்துக் கொண்டிருந்தது.

என்னை அவருக்கு அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. புரிந்துகொண்டு என் கைகளைப் பற்றிக் கொண்டார். என் நோக்கத்தை விவரமாகச் சொன்னேன். 'அந்தக் காலத்துல எப்படி வாழ்ந்தீங்க தாத்தா?' கொஞ்சம் சத்தமாகக் கேட்க வேண்டியிருந்தது.

அவர் பேச ஆரம்பித்தார். நான் பதிந்து கொள்ளத் தயாரானேன். 'அந்தக் காலத்துல கணவன் வேலைக்குப் போயிட்டு வருவான். மனைவி வீட்ல இருந்து குடும்பத்த பாத்துக் குவா. புள்ளைகளைப் பாத்துக்குவா. கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் நல்லது கெட்டதுகளச் சொல்ல முடியும். இப்பத்தேன் அதெல்லாம் இல்லாமப் போச்சே. அந்தக்காலத்துல ஒருவனுக்கு ஒருத்தி. இப்ப அதெல்லாம் முக்கியமில்லாமப் போச்சே. படிப்படியா எல்லாம் போச்சு. வசதி பெருகப் பெருக பணம் தேவையா இருந்துச்சு. அதுக்காக மனைவியும் வேலைக்கு போக ஆரம்பிச்சா. பிள்ளைகளை பாத்துக்க முடியல. இப்படித்தேன் இது ஆரம்பிச்சுச்சு. வீட்டுல இருந்தவளும் டீவியப்பாத்துக் கெட்டாளுவ. அப்பறம் புள்ளைக கெட்டுப் போச்சுக. இப்புடித்தேன் எல்லாம் மாறிப்போச்சு.'

தாத்தா சுருக்கமாகத் தொகுத்திருந்தார். இன்னும் விளக்கமா பேச வைக்க அவர் பதிலிலிருந்தே விளக்கம் கேட்டுக் கேள்வி களைப் போட்டேன்.

'குடும்பம்னா என்ன தாத்தா?'

'கணவன், மனைவி, குழந்தைகள், பெற்றோர் எல்லாரும் சேர்ந்துதேன் குடும்பம்.'

'கணவனும் மனைவியும் நல்லது கெட்டதுகளைச் சொல்லிக்கிறதால என்ன நன்மை?'

'பேசிக்கிட்டா கவலைகள் குறையும். இப்பத்தேன் அதுக்கே வழியில்லாமப் போச்சே. இப்ப யாராவது யாருகிட்டயாவது போயி ஒரு அஞ்சு நிமிசம் என் கவலையச் சொல்லுறேன்னு சொல்லமுடியுமா? எல்லாரும் ஓடிக்கிட்டேயில்ல இருக்கீக. ஒரு நிமிசம் கெடச்சாலும் அத எப்படிக் காசு பண்ணுறதுன்னுல்ல பாக்குறீக. இப்ப நீயே இத்தன வருசத்துல எத்தனமுற என்ன வந்து பாத்து பேசீருக்கெ. எண்ணி நாலு முறை இருக்குமா? இப்ப என்னவோ அரசாங்கம் சொன்னதால வந்துருக்கே. இந்த ரோபோ எனக்கு தெனமும் காலப்புடிச்சு விடுது. மாத்திரையெல்லாம் நேரப்படி பாத்துப் பாத்து தருது. அதுக்காக அதுக்கிட்டப்போயி என் மனக்கொறையச் சொல்லமுடியுமா? அது ஒங்க பாட்டிக்கித் தோது வருமா? என்ன ஒண்ணு, கெழவி சண்ட போடுவா. ஊடலும் கூடலும் சேர்ந்தது தானே வாழ்க்கை. அதுதானே சந்தோசம்.'

'குழந்தைகளை மனைவி பாத்துக்குவான்னு சொன்னிங்க தாத்தா. இப்பத்தேன் அதுக்கு அதவிட பெட்டரா வேற ஏற்பாடெல்லாம் இருக்கே தாத்தா?'

'அந்தக் காலத்துல ஒரு தாய் பத்து மாசம் சொமந்து புள்ளயப் பெத்து, கண்ணுக்கு கண்ணா பொத்திப் பொத்தி வளப்பா. தாய்ப் பாசம், அன்பு எல்லாம் இருந்துச்சு. புள்ளயப் பெத்து அது தவழ்றது, நிக்கிறது, நடக்குறது, பேசுறது எல்லாமே அழகு. அதோட ஒவ்வொரு அசைவும் பெத்தவங்க கவலையப் போக்கீரும். இப்ப யாரு அப்பிடி இருக்கா சொல்லு? செனமுட்டையக் கொண்டு போய் கொடுத்துட்டா புள்ளைய பெத்துக்குடுக்க ஆஸ்பத்திரி வந்துருச்சு. தவழ்ற கொழந்தயக் கவனிச்சுக்க தனியா ஒரு புள்ளக்காப்பகம். நடக்குற புள்ளயக் கவனிச்சுக்க இன்னொரு காப்பகம்னு ஒண்ணொண்ணுக்கும் ஒரு காப்பகம் வயசுக்குத் தக்கபடி வந்திருச்சு. அன்பு, தாய்ப்பாசம், மழலை இன்பம் இதெல்லாம் இல்லாமப் போச்சுப்பா.'

'அப்பறம் ஒருத்தனுக்கு ஒருத்தின்னு சொன்னீங்களே தாத்தா? அதப்பத்திக் கொஞ்சம் சொல்லுங்க'

'அப்பல்லாம் ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கி ஒருவன்கிற கட்டுப்பாடெல்லாம் இருந்துச்சு. அந்தக் காலத்துலயும் விபசாரம் இருந்துச்சு. ஆனா அது தப்பான ஒண்ணுங்கிற நெனப்பு எல்லாருகிட்டேயும் இருந்துச்சு. இப்ப அது தப்பே இல்லன்னு ஆயிப்போச்சே. இன்னக்கி எல்லாச் சுகங்களும் கடையில அதுக்கான வெலயக் குடுத்தா அதுக்கேத்த கவனிப்போட பாதுகாப்போட கெடக்கிது. இதெ ஆண் பெண் இருவருமே மிகப்பெரிய சுதந்திரமா எடுத்துக்கிட்டதுதேன் இப்ப குடும்பமுன்னு ஒண்ணு இருக்க வேண்டிய அவசியமே இல்லைங்கிற நெலைக்கிக் கொண்டு போயிருச்சு.'

தாத்தாவோட இந்த பதிலுக்கு சபாஷ் போடத் தோன்றியது. அவரை ஆமோதித்துப் பாராட்டினேன். அவர் பல விசயங்களை மிகத் தெளிவாக விளக்கினார். எனக்கு சுலபமாகப் புரிந்தது. அவரிடம் 'எல்லாம் மாறிவிட வாய்ப்பிருக்கிறது' எனக் கூறி அவரை ஆதரவாய்த் தொட்டு அணைத்து நன்றி கூறினேன்.

அவர் என்னைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துச் சொன்னார் 'கொஞ்ச நேரம் ஒங்கிட்டப் பேசினதுல வருசக் கணக்கா எனக்குள்ள இருந்த பாரமெல்லாம் கொறஞ்சு போச்சுடா பேராண்டி. நாந்தாண்டா ஒனக்கு நன்றி சொல்லோணும்' உணர்ச்சிப் பெருக்கில் அவர் கண்களில் நீர் முட்டியது. எனக்குள்ளும் அந்த உணர்வு ஏதோ ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியது.

அன்றே பட்டியல்படி இன்னும் இரு முதியவர்களையும் சந்தித்து அவர்கள் கூறியவைகளையும் பதிவு செய்து கொண்டேன். ஒரு கிழவர் சொன்னார் 'என் மனைவி மரித்தபோது மகன்கள், மகள்கள் இதே நகரில் இருந்தும் ஒருவரும் எட்டிப் பார்க்கவில்லை. அவர்களின் ரோபோக்கள்தான் அவர்கள் சார்பாக இரங்கல் செய்தி அனுப்பியிருந்தன. எல்லாம் காலக்கொடுமை' என்றார்.

இன்னொரு முதியவர் 'எங்க தாத்தன் பாட்டன் காலத்துல வீடுகள் திண்ணை வச்சுக் கட்டுனாங்க தம்பி. எதுக்குத் தெரியுமா? அடுத்த வீட்டு, எதுத்த வீட்டு சனங்க கூடிப் பேசுறதுக்கு. அது வெட்டிப் பேச்சுன்னு சொல்லி எங்க காலத்துல அத விட்டுப்புட்டோம். அப்புறம் பல அறைகள் வச்சு வீடு கட்டுனோம். இப்ப ஒரு ஆளுக்கு ஏண்டா இத்தன அறையின்னு சொல்லி எல்லா வசதிகளோடயும் ஓரறை வீடுகளாக்கிட்டமே. இப்ப பேசிக்கிறதே இல்லாமப் போச்சே தம்பி. பேசிக்கிட்டாத்தானே அன்பு வளரும். உறவுகளத் தொலச்சிட்டொம். அவ்வளவு ஏன் புருசன் பொண்டாட்டியே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கில்ல பேசிக்கிறம். அப்பறமில்ல அடுத்த வீடு, உறவு எல்லாம். எல்லாத்தயும் விடுறதுக்கு பணம் சம்பாரிக்கிறதுல இருந்த நாட்டந்தேன் காரணம் தம்பி.'

அவர்களின் காரணங்களும், விளக்கங்களும், ஒப்பீடுகளும், கோபங்களும், ஒரு புள்ளியையே சென்று சேர்ந்தன. எனக்குப் பல உண்மைகளை உணர்த்தின.

விஞ்ஞானிகள் குழுமத்தலைவர் சொன்னதை நினைத்துப் பார்த்தேன். முட்டாள்தனமாக இருந்தது. மனிதனின் அழிவுப் பாதைக்கு இட்டுசெல்லும் இவர்களின் ஆராய்ச்சியை தடை செய்ய வேண்டும் முதலில். சரியான நேரத்தில் சரியாக முடிவுகளை எடுத்துக்கொண்டிருக்கிற அரசாங்கத்தின் மீது எனக்கு பெருமதிப்பு ஏற்பட்டது.

கிழவர்களிடம் நடத்திய உரையாடல்களை மீண்டும் மீண்டும் ஓடவிட்டுப் பார்த்தேன். அப்போது என் தாத்தா பேசும் போது 'மனைவியும் வேலைக்குப் போக ஆரம்பிச்சா..' என்ற வரிகள் என்னை யோசிக்க வைத்தது. அப்படியானால் பெண்கள் அதற்கு முன் வேலைக்குப் போகாமல் இருந்திருப்பார்களோ? அவரிடமே கேட்டிருக்கலாம். பரவாயில்லை, பட்டியல்படி இன்னொரு கிழவர் பாக்கி இருக்கிறார். அவரைச் சந்திக்க அடுத்த வாரம் செல்ல வேண்டும். அப்போது இதுபற்றிக் கேட்க வேண்டும் எனக் குறித்துக் கொண்டேன்.

என் காரியதரிசி ரோபோவைத் தொடர்பு கொண்டேன். இரண்டு நூற்றாண்டு திரைப்படங்கள், நாவல்கள், பத்திரிக்கைகளைத் தொகுத்து வைக்கச் சொல்லியிருந்தேன். எல்லாம் தயாராய் இருப்பதாய்ச் சொன்னது. ஆங்காங்கே ஒரு ரஷ் பார்த்துவிட வேண்டும் அதுவும் அடுத்த முதியவரைச் சந்திக்குமுன் என நினைத்துக் கொண்டேன். அது சந்தேகங்கள் ஏதேனும் எழுந்தால் கிழவரிடம் விளக்கம் பெற ஏதுவாக இருக்கும் என்பது என் எண்ணம்.

திரைப்படத் தொகுப்பைப் பார்த்துக் கொண்டே வந்தேன். தொகுப்பு பின்னோக்கி விரிந்தது. போகப் போக ஒன்றை உணர முடிந்தது. அது ஒரு காலக் கட்டத்தில் ஆண்கள் ஹீரோக்களாகவும், ஆண்களை முன்னிலைப் படுத்தியுமே கதைகள் பின்னப்பட்டிருப்பது தெரிந்தது. பெண்கள் வெறும் கவர்ச்சிக் கன்னிகளாகவும் காதலிகளாகவுமே வந்து போனார்கள். அப்படியானால் ஒரு காலத்தில் ஆணாதிக்கம் இருந்திருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது. மேலும் விவரம் அறிய வேண்டும் எனக் குறித்துக் கொண்டேன். என் தாத்தா சொன்ன 'குடும்பம்', அது எப்படிச் செயல்பட்டது என்பதையெல்லாம் படங்களின் வாயிலாகப் புரிந்து தெளிந்து கொள்ள முடிந்தது. மக்களிடம் இருந்து இப்போது இல்லாமல்போன சிரிப்பையும், சந்தோசத்தையும் படங்களிலே பார்க்க முடிந்தது.

பத்திரிக்கைகளைப் புரட்டினேன். ஆணாதிக்கம் பற்றி ஏதேனும் தெரிந்து கொள்ள முடிகிறதா எனப் பார்த்தேன். குப்பு என்னை ஏமாற்றவில்லை. ஒரு செய்தி கிடைத்தது. பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்த செய்தி அது. தொடர்ந்து பின்னோக்கி அது பற்றிய செய்திகளைத் தேடினேன். பல பெண்ணுரிமைச் சங்கங்கள் இருந்த செய்திகள் கிடைத்தன. பெண்ணுரிமை பாடிய பல கவிதைகள், ஆணுக்குப் பெண் சமம் என்று ஆர்ப்பரித்த கவிதைகள் கிடைத்தன. இன்னும் சற்று பின்னோக்கிப் பார்த்தேன். பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட காலம், பெண்களை வீட்டில் பூட்டி வைத்திருந்த காலம் இருந்திருப்பது தெரிந்தது.

எனக்கு இது பெரும் ஆச்சரியமாய் இருந்தது. இன்றைக்குப் பெண்களின் நிலை எப்படி மாறிவிட்டது என்பது பிரமிப்பூட்டியது. பெண்ணடிமை இருந்ததற்கான சுவடே இல்லாத வளர்ச்சி. எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது?

கடைசிக் கிழவரிடம் என் சந்திப்பை நினைவூட்டியது செல்வி. அவரது பின்னணி என்ன எனக் கேட்டேன். தயாராய் வைத்திருந்த தகவல்களை அளித்தது செல்வி. பெயர்: தாமோதரன்; பணி: ஆசிரியர், சிறப்புத் தகுதிகள்: எழுத்தாளர், கவிஞர். என் தேடலுக்கு இவர் நல்ல பங்களிப்பைச் செய்ய முடியும் என்று நினைத்துக் கொண்டேன்.

கேட்க வேண்டிய எல்லாக் கேள்விகளுடனும் அவரைச் சென்றடைந்தேன். தாமோதரன் கட்டு விடாமல் இருந்தார். அவர் பார்வை தீர்க்கமாய் இருந்தது. இந்த வயதிலும் இப்படி ஒருவர் என நினைத்துக் கொண்டேன். என் நோக்கத்தையும், சந்தேகங்களையும் அவர்முன் வைத்து விட்டு அவர் பேசக் காத்திருந்தேன். என் தேவைகளை அவர் எளிதில் புரிந்து கொண்டார். என் பதிவுக் கருவிகள் பதிந்து கொள்ளத்தயாராய் இருந்தன. என் தாத்தாவைப் போலவே இவரும் பேசப் போகிறார். அதன் மூலம் அவர் மனம் லேசாகக்கூடும் என்கிற நினைப்பு மகிழ்ச்சியாக இருந்தது.

தாத்தா செருமிக் கொண்டு பேசினார். '19ம் நூற்றாண்டில் பெண்ணடிமை இருந்தது உண்மை. அந்த நூற்றாண்டின் இறுதியில் அதற்கான மீட்புக் குரல்கள் ஒலிக்க ஆரம் பித்தன. 20ஆம் நூற்றாண்டுத் துவக்கத்தில் அந்த மீட்புக்குரல்கள் இன்னும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தன.

பெண்கள் ஆண்களுக்குச் சமமாக படிக்க ஆரம்பித்தார்கள். அதுவரையில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. பெண் மிகச் சிறந்த குடும்ப நிர்வாகி. குடும்பத்தில் வேலைக்குச் சென்று திரும்பும் கணவனுக்கும், பிள்ளைகளுக்கும் நல்ல வடிகாலாகவும், நல்ல துணையாகவும் இருந்து அவர்களை நெறிப்படுத்துபவளாகவும் இருந்து வந்திருக்கிறாள். அதுமட்டுமல்ல வீட்டில் இருந்த வயதான பெற்றோரையும் அவள்தான் கவனித்து வந்திருக்கிறாள். ஒரு கட்டத்தில் பெண்கள் வேலைக்குப் போக ஆரம்பித்தார்கள். அப்பத்தான் பல மாற்றங்கள் ஏற்பட்டன தம்பி. பல பெண்கள் வேலைக்குச் சென்று பொருளீட்டியதோடு குடும்பத்தைக் கவனித்துக் கொள்கிற பொறுப்பையும் திறம்படச் செய்தார்கள். சிலரால் அது முடியவில்லை. அப்போதுதான் பிள்ளைக் காப்பகங்கள் அவர்களுக்கு உதவ ஏற்பட்டிருக்க வேண்டும். சிலர் பணிப் பெண்களை வைத்துக் கொண்டார்கள். முதியோர் இல்லங்கள் முளைத்தன. இந்த பிள்ளைக் காப்பகங்கள், பணிப் பெண்கள், முதியோர் இல்லங்கள் எல்லாம் பெண்களின் பிசிகல் வேலைகளைத்தான் பகிர்ந்து கொள்ள முடிந்தனவே தவிர, மனம் சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியவில்லை.

பெண்கள் வேலைக்குப் போனதால் குடும்பப் பொருளாதாரம் பெருகியது. அதில் ஒரு பகுதிச் செலவே காப்பகங்களுக்குப் போதுமானதாய் இருந்தது. உபரியான பணத்தில் வசதிகளைப் பெருக்கிக் கொண்டான் மனிதன். அந்த வசதிகள் தந்த மயக்கத்தில் பெண் வேலைக்குச் செல்வது அத்தியாவசியத் தேவையாகிப் போனது. அதனால் ஏற்பட்ட மனம் சார்ந்த இழப்புக்களை அவன் பெரிது படுத்தவில்லை. அதுதான் இன்று இப்படி விடிந்திருக்கிறது.' பெரியவரின் விளக்கமான உரை என் கேள்விகளுக்குப் பதிலாய் இருந்தது.

அவருக்கு நன்றி சொல்லி விடை பெற்றுக் கொண்டேன்.

அன்றைய நாள் காலை பல எதிர்பார்ப்புக்களோடு விடிந்தது. என் தலைமை அதிகாரியோடு பல ஒத்திகைகள், பல மாற்றங்கள், எல்லாவற்றுக்கும் பிறகு எனக்கான மேடை தயாராய் இருந்தது.

அரங்கம் அமைச்சர்கள், எம்.பிக்கள், முக்கியப் பிரமுகர்கள், மீடியாக்காரர்கள், விஞ்ஞானிகள், ரோபோக்கள் என நிறைந்திருந்தது. வர்ச்சுவல் அரங்கிலும் பல அமைப்புக்கள் கொக்கி போட்டுக் காத்திருந்தார்கள். பல பெண் அமைப்புக்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.

மேடையில் நானும், தலைமை அதிகாரியும் மட்டும். உதவிக்காக செல்வி. எல்லாக் கருவிகளும் சரியாக இயங்குகின்றன என்ற சமிக்ஞை கிடைக்கப் பெற்றதும் தலைவர் எழுந்து நின்றார் முன்னுரைக்காக. விளக்குகள் ஒளிர்ந்தன.

'என் பிரியமான மனிதகுலப் பிரதிநிதிகளே எல்லோருக்கும் வணக்கம். இந்த 22ஆம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. தனிமனித உயர்வில் தன்னிறைவு அடைந்துள்ளோம். அறிவியல் வளர்ச்சியால் உலகம் சிறிதினும் சிறிதாகி விட்டது. ஆனால் மனிதர்களுக்கு இடையேயான இடைவெளி தான் அதிகரித்து விட்டது. அவர்கள் தங்களைச் சுற்றிக் கூண்டுகளை அமைத்துக் கொண்டு சிறைகளுக்குள் வாழ்வதைப் போல வாழ ஆரம்பித்துவிட்டார்கள். முனைவர் திரு. ராம் அவர்களின் பரிந்துரைகளின்படி அரசாங்கம் வெளியிடப்போகும் முடிவுகள் மனிதகுலத்துக்குப் பயனளிக்கும் என உறுதியளிக்கிறேன். டாக்டர். ராம் அவர்களை அவரது கண்டுபிடிப்புக்களை வெளியிட்டுப் பேச அழைக்கிறேன்' என்னை அழைத்து விட்டு அமர்ந்தார்.

நான் எழுந்தேன். சம்பிரதாயப்படி, காரியதரிசியிடமிருந்து கோப்புக்களைப் பெற்று தலைமை அதிகாரியிடம் சமர்ப்பித்தேன். கை தட்டினார்கள். கைதட்டி அடங்கியதும் பேச ஆரம்பித்தேன்.

'அனைவருக்கும் வணக்கம். நாம் சந்தோசமாக இருக்கிறோமா?' கூட்டத்தைப் பார்த்துக் கேட்டேன்.

'இல்லை' என்றது கூட்டம்.

'என்ன காரணம்? நாம் வாழும் முறைதான் அதற்குக் காரணம்' என்றேன்.

'ஆமாம்', 'யெஸ்', 'யூஆர் ரைட்' - என்ற பதில்கள் கூட்டத்திலிருந்து வந்தன. கூட்டத்தின் மறுமொழி எனக்கு நம்பிக்கை ஊட்டியது. மனிதகுலம் மாறிப்போனதை, உலகம் சுருங்கிப் போனாலும் மனிதர்களுக்குள் இடைவெளி அதிகமாகிப் போனதை உதாரணங்களோடு எடுத்துச் சொன்னேன். 'ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் எதற்கு? சுக துக்கங்களைப் பகிர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கவும் தான். ஆனால் அந்தப் பகிர்தல் இப்போது இல்லாமல் போய்விட்டது. கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள் இவர்களுக்கிடையே யான உறவு என்பது பிறந்த நாளில், திருமண நாளில், ஒரு மணி நேரச் சந்திப்பாகவோ, ஒரு நாள் சந்திப்பாகவோ மாறிப்போனது இப்போது. நான் என் மனைவியை கடந்த ஒரு வருடத்தில் இரண்டு முறைகளும், பிள்ளைகளை 4 முறைகளும் தான் நேரில் சந்தித்திருக்கிறேன். நீங்கள்?' கூட்டத்தில் ஒருவரைக் கை காட்டினேன்.

'மனைவியை ஒரு முறையும், பிள்ளைகளை இரண்டு முறையும்..' என்ற பதில் வந்தது.

'காரணம், நம் ஒவ்வொருவரையும் சிறப்பாகக் கவனித்துக் கொள்ள தொழில் முறை நிலையங்கள் இருக்கின்றன. உடல் சுகம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சுதந்திரம் அளித்தது. அதுவும் ஒரு கோப்பி, டீ சாப்பிடுவது போல சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. திருமணம் என்ற ஒன்று அதனைக் கட்டுப்படுத்தவில்லை. ஒரு நாளின் 24 மணி நேரத்தின் ஒவ்வொரு நொடியையும் எப்படிப் பணமாக்கலாம் என்பதில் மனிதர்கள் முனைப்புக் காட்டியதும் ஒரு காரணம். அவர்கள் அதற்காக எதையும் விட்டுக் கொடுக்கத் தயாராய் இருந்தார்கள்.' நான் பேசப் பேச கூட்டம் சீரியசாகக் கவனித்துக் கொண்டிருந்தது.

தேவையான இடங்களில் ஆதாரங்களாகப் பல திரைக்காட்சிகளை, முதியவர்களிடம் நடத்திய உரையாடல்களைப் போட்டுக் காட்டினேன்.

'ஆக நான் முக்கியமாகக் கேட்டுக் கொள்'வது இதுதான்..' என்று கூறிச் சற்று இடைவெளி விட்டேன். கூட்டம் உன்னித்துக் கேட்டுக் கொண்டிருந்தது. எனது முத்தாய்ப்புச் செய்தியினை உணர்வுபூர்வமாக முன் வைத்தேன். 'மனிதன் இயந்திரம் சார்ந்து வாழ்தல் படிப்படியாய்க் குறைந்து மனிதன் சார்ந்து வாழ்தல் வேண்டும். அதற்கு நம் மூதாதையர் காலத்தில் இருந்து பின் அழிந்து போன 'குடும்பம்' என்கிற அடிப்படை அமைப்பு உயிர் பெற வேண்டும். அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் என ஒரே குடும்பமாய் வாழும்போது பகிர்தல் சாத்தியமாகும். அது நம் கவலைகளுக்கெல்லாம் வடிகாலாய் அமையும். மன உளைச்சல் குறையும்.'

என் பேச்சின் ஊடே சில ரோபோக்களின் தலைகள் ஆடியதைக் கவனித்தேன். அவற்றின் எல்யீடி கண்கள் குரூரம் காட்டியதைக் குறித்துக் கொண்டேன். பின்னர் ஆபத்து ஏதும் இருக்கிறதா என அறிய வேண்டும்.

'மனிதர்களே காதல் செய்யுங்கள். சக மனிதர்களிடம் பேசுங்கள். சிரியுங்கள்' என்ற லேசர் வாசகங்கள் ஆடிட்டோரியத்துக்குள் அங்கங்கே தோன்றி ஓடின ஸ்பெசல் எஃபெக்டாக.

'நன்றி' என் உரையினை முடித்துக் கொண்டேன். கைதட்டுக்கள். கூட்டத்தினரின் அங்கீகரிப்புக்கள்தான் கைதட்டுக்களாக மாறியிருப்பதாகத் தோன்றியது. சந்தோசமாக இருந்தது. அரசாங்க அதிகாரி கைகுலுக்கிப் பாராட்டினார்.

அன்று மாலை அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்புக்கள் வெளியாயின. பெண்கள் ஊதியத்தோடு பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு 'குடும்பத்தை' நிர்மாணிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனினும் இந்த முடிவு எடுக்கும் சுதந்திரம் அவர்களிடமே விடப்படுகிறது.

படிப்படியாக முதியோர் இல்லங்களும், குழந்தைக்காப்பகங்களும் மூடப்படும். இவற்றோடு ரோபோ ஆராய்ச்சி பற்றிய முக்கிய அறிவிப்பையும் அரசாங்கம் வெளியிட்டது. அது விஞ்ஞானிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தக் கூடும். ரோபோ பயிற்சிக்கும், ரோபோக்களுக்கு உணர்வுகளை உள்வைக்க முனைகிற ஆராய்ச்சிக்கும் உடனடித் தடையும் அறிவிக்கப்பட்டது. வீட்டுப்பணிகளுக்கான ரோபோக்களின் பயன்பாடு படிப்படியாகக் குறைக்கப்படும். ரோபோக்கள் வருங்காலத்தில் விபத்து, மற்றும் நெருக்கடி காலங்களிலும், முக்கியமான அலுவலகப் பணிகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப்படும்.

அறிவிப்புக்கள் எனக்கு திருப்தியளித்தன. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற செய்தி இனிமேல்தான் தெரிய வரும். அதற்கு முன் என் மனைவி என்ன முடிவெடுத்திருப்பாள் என அறிய ஆவலோடு வீடு புகுந்தேன். என் பெற்றோர், தாத்தா, பிள்ளைகள் என எல்லோரும் என்னை வரவேற்று என்னைத் திக்குமுக்காடச் செய்தார்கள். ஆனால் அவள் எங்கே? சில நொடிகள் என்னைத் தவிக்க விட்டு பின் ரகசிய அறையிலிருந்து வெளிப்பட்டாள்.

'அரசாங்க அறிவிப்புக்கள் நல்ல முடிவுகள். உங்கள் வெற்றிக்கு என் பாராட்டுக்கள். உங்களுடன், பிள்ளைகளுடன் சேர வந்து விட்டேன்' எனக் கூறி என்னைக் கட்டியணைத்துக் கொண்டாள். எனக்குச் சந்தோசமாக இருந்தது.

ராபர்ட் இயந்திரத் தப்படிகள் வைத்து முன்னே வந்து நின்றது. என்ன சொல்லப் போகிறது என நினைத்தேன். தலையை ஆட்டி அதன் கேமராக் கண்களால் என் முகத்தை வருடிப் படித்தது. நீங்கள் இப்போது மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள். எனக்கு விடை கொடுங்கள் பாஸ்' என்று சொல்லிவிட்டு உயர்த்திய அதன் கைகளில் ஒரு பிஸ்டல்.

இராம. வைரவன், சிங்கப்பூர்
More

பத்தியம்
Share: 




© Copyright 2020 Tamilonline