Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
அமெரிக்காவின் முதல் தமிழ் நாடகவிழா ஒரு முன்னோட்டம்
சுஜாதா நிரப்ப முடியாத இழப்பு
- |ஏப்ரல் 2008||(3 Comments)
Share:
Click Here Enlargeதனது மரணத்துக்குப் பின்னர் என்ன பேசுவார்கள் என்பதைக் கற்பனை செய்யாதவர் இருக்க முடியாது. ஆனால் கற்பனையின் விற்பன்னர் சுஜாதா கூட தனது மறைவுக்குப் பின் உலகெங்கிலும் இத்தனை பேர் தனிப்பட்ட இழப்பையும் வெறுமையையும் உணர்வார்கள் என்று எண்ணிப் பார்த்திருக்க மாட்டார். எங்கு பார்த்தாலும் சோகம், வெறுமை, புகழாரம், நன்றிக்கடன்! அவற்றில் சில இதோ:

மதுரபாரதி
(முதன்மை ஆசிரியர், தென்றல்)

அவர் இருக்கும்போது தெரியவில்லை தமிழ் எழுத்துலகின் மீது அவர் செலுத்திய இமாலய ஆளுமை. அவர்போலப் பேச்சிலேயே கதைசொல்ல யாரால் முடியும்? நீட்டிமுழக்கிய வர்ணனைகள் கிடையா. சிறு சொல், சிறுசிறு வாக்கியம். நினைத்ததை அப்படியே அவரது சொல் பிடித்தது. இது கைவராத கலை.

'ஓ, இவ்வளவு நாள் எனக்கு இது தோன்றாமல் போயிற்றே' என்று நினைத்த மாத்திரத்தில் 'இவ்வளவுதானா, நானும் இப்படியே எழுதிவிடலாம்' என்னும் மாயை தோன்றும். ஆனால் வார்த்தை வசப்படுவது எளிதல்ல. சுற்றிக் காணும் கோடிக்கோடி சிறிய, பெரிய விஷயங்களில் எதைச் சொல்வது எதை விடுவது என்று புரியாது. எதில் தொடங்கி எதில் முடிப்பது என்று குழப்பும். முக்கியமாக, பார்த்ததில் பார்க்காததை சுஜாதா சட்டென்று பிடித்துப் போடுவார். அந்த மாயம் நமக்குத் தெரியாது.

நானும் எழுதிவிடலாம் என்று எண்ணற்றவர் களை சிந்திக்கச் செய்த மாத்திரத்தில் சுஜாதா வெற்றி பெற்றார். அவர்களில் பலர் அவராகும் முயற்சியில் தொடங்கி, தம்மைத் தாமாக எழுத்துலகில் அடையாளப்படுத்திக் கொண் டார்கள். அது அவரது ஆளுமை, தாக்கம். தமிழ்க் கதை எழுதப் பெரும்படை புறப்பட்டது சுஜாதாவின் பேனாவிலிருந்துதான்.

தனக்குப் பின்னே தன் புகழும் பிறர் வசையும் பாட ஒரு படை சேர்த்துக் கொண்டு எழுத்து அரசியல் செய்யவில்லை. எழுதினார். தனக்குத் தொழில் எழுத்து என்பதை நிச்சயமாக வரித்துக் கொண்டு சளைக்காமல் எழுதினார். எழுத்தாளனுக்கு மற்றவை யெல்லாம் புறம்பானவை. அதனால்தான் அவரால் எழுதிக் குவிக்க முடிந்தது. ஆனால் அந்தக் குவியல் நவரத்தினக் குவியலாகவே இருந்தது.

கட்சிக் கொடியில் சட்டை தைத்துக் கொள்ளாதவர்களுக்கு இன்றைய இந்தியா வில் விருதுகள் இல்லை. விருதுகளுக்காக வெண்ணெய் தடவுவதும், கோஷமிடுவதும் சுஜாதா அறியாத ஒன்று. மரியாதைக்கான பட்டங்களைக் கூடக் கொட்டை எழுத்தில் கட்டம் கட்டிப் போட்டுக்கொள்கிற இந்தக் காலத்தில் வெறும் சுஜாதாவாகவே இருந்து போய்விட்டார். ஆனால் வெறும் கையோடு போகவில்லை.

இமயத்துக்குச் சரிவில்லை என்று எல்லோரும் நம்புகிறோம். சரிவில்லைதான். நமது நெஞ்சங்களில் உயர்ந்து நிற்பதால்.

அம்புஜவல்லி தேசிகாச்சாரி

ஒரு பொம்மை நாயைக் கதாபாத்திரமாக வைத்துக் கால யந்திரத்தைப் பல்லாண்டுகள் முன்னோக்கி நடத்தி இரண்டு பாகங்கள் நாவலாக எழுத அவர் ஒருத்தருக்கே வசப்படும். அக்கதையில் 65 வயது கடந்தவர் களைக் கட்டாயமாகத் திருநாட்டுக்கு அனுப்புவதாகக் குறிப்பிடுவார். ஆனால் பல்லாண்டுகாலம் அவர் வாழ்ந்து இலக்கியத் திற்கு அருந் தொண்டாற்றுவார் என எண்ணியிருக்க, கொடும் விதியானது எழுபதின் ஆரம்ப வயதிலேயே அவரைத் திருநாட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்ட கொடுமையை நம்மால் ஜீரணிக்கவே இயலவில்லை.

சித்ரா வைத்தீஸ்வரன், கனக்டிகட்

அண்மையில் சென்னைக்குச் சென்றிருந்த போது அவரைச் சந்தித்தேன். அவரது மாமியாரின் மரணம் தொடர்பானதொரு சடங்கு அது. எல்லாம் முடிந்தபின் 'தென்றலுக்கு ஒரு சிறப்புப் பேட்டி தருவீர்களா?' என்று கேட்டேன். 'தருகிறேன். இந்த கலாட்டா முடியட்டும்' என்றார். நான் அவருடன் கடைசியாகப் பேசுகிறேன் என்பதை உணர்ந்திருக்கவில்லை. சில நாட்களுக்குப் பிறகு அவரைச் சந்திக்க முயன்றபோது உடல்நலம் குன்றியிருந்தார். நான் அமெரிக்கா திரும்பும்போது அவர் ஆஸ்பத்திரியில் இருந்தார். அவருடைய வார்த்தையை அவர் காப்பாற்றிவிட்டார், தென்றலின் கடைசிப் பக்கத்தில் அவருடைய படமும், அஞ்சலியும்! ஆனால் 'கலாட்டா' அது முடிந்ததா?

நமது தமிழ்ச் சமுதாயம் அவரை இழந்து விட்டது என்பதை என்னால் இன்னமும் ஏற்கமுடிய வில்லை. அவருடைய அறிவு, கூர்ந்த பார்வை, வசீகரமானநடை என்று சொல்லிக்கொண்டே போகலாம். நாம் அவரை இழந்துவிட்டோம், அவரை இழந்துவிட்டோம் என்று என் மனம் புலம்பிக்கொண்டே இருக்கிறது.

மரு. வரலட்சுமி நிரஞ்சன், கனக்டிகட்

'வாசல்'வரை வந்த பத்திரிகைகள் மூலம் நம்மைக் 'கனவுத் தொழிற்சாலை'க்கு அழைத்து சென்றவர் சுஜாதா. 'கம்ப்பூட்டரே ஒரு கதை சொல்லு' என்பது இன்று அவரது www.writersujatha.com வலைதளத்தில் சாத்தியமாகி உள்ளது. 'சிறுகதை எழுதுவது எப்படி' என்று ஆரம்பித்தவர் பின்னர் பிரபந்தத் தமிழையும் கணினித் தமிழையும் சராசரி மக்களிடம் கொண்டு சேர்த்தார். 'ஒரு கதையில் இரண்டு கதைகள்' என்று எழுதி 'நிலா நிழலையும்' 'நீர்க்குமிழ்'களையும் நமக்கு அறிமுகப்படுத்தியவர் சுஜாதா. இவரின் படைப்புகளில் 'கற்றதும் பெற்றதும்' ஆயிரம். 'கடைசிப்பக்கம்' வரை எழுதி, வாசகர் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றவர் சுஜாதா. 'கால யந்திரம்' சுழலும் வேகத்தில் 'என்றாவது ஒரு நாள்' 'விதி' விளையாடும் என்பது இன்று மெய்யாகிவிட்டது. சுஜாதா, நீ செய்த 'சிலிக்கன் சில்லு புரட்சியில் தமிழன்னை இன்று மின்தகடுகளில் மினு மினுக்கிறாள். 'விடிவதற்குள் வா' என்று அழைப்பு வந்தவுடன், நீ சொர்க்கத் தீவுக்கு சென்றாயோ!

கதிரவன் எழில்மன்னன்

சுஜாதாவின் கதைகளையும் தொடர் களையும் படித்தபடியேதான் நான் வளர்ந் தேன். நிச்சயம் என்னை அவர் உற்சாகப் படுத்தினார். அவரது பன்முகத் தன்மையும், எழுத்துலகில் நீடித்திருந்த தன்மையும் எனக்குப் பேராச்சரியங்கள். உயிர்ப்புள்ள தமிழுக்கு அவர் மகத்தான கொடையளித் திருக்கிறார். மகத்தான இழப்பு இது.

மோகன், ஹூஸ்டன், டெக்ஸாஸ்

1975ஆம் ஆண்டு பெங்களூரில் ஒரு குளிரான மாலையில் சுஜாதாவைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவர் படித்த அதே பொறியியல் கல்லூரியின் கடைசி ஆண்டு மாணவராகிய நாங்கள் எங்கள் முன்னோ டியை ஒரு ஓட்டலில் சந்தித்தோம். உயரமான, ஒல்லியான உருவம், நீண்ட முடி, தீர்க்கமான கண்கள், மென்மையான ஆனால் அழுத்த மான பேச்சு, கல்லூரி நாட்களின் கலாட்டாக்கள் முதல் கதையெழுதும் ஆர்வம் வரை நகைச்சுவை கலந்து எங்களைச் சொக்கவைத்தவர், மறுநாள் அவர் வேலை செய்த பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு நாங்கள் சென்ற போது முழுதான பொறியாள ராக மாறி எங்களை அசர வைத்தார்.

சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த கற்பனைக் குதிரையை சுதந்திரமாக்கிச் சீறி எழுந்து ஓடச் செய்தவர். அடங்காத மனக் கவலைகளால் நித்திரையற்ற ராத்திரிகளில் அவர் புத்தகத்தைப் புரட்டிய சில நொடிகளில் புன்முறுவல் பூக்கச் செய்தவர். 'மனித வாழ்க்கையில் நிலையானது எது?' என்ற ரசிகரின் கேள்விக்கு ஒருமுறை அவர் அளித்த பதில் 'மரணம்'. பீரோவிலிருந்து அவர் புத்தகத்தைக் கையிலெடுக்கும்போது அவருடைய மெல்லிய உருவம் தோன்றி மறைகிறது. அடிமனம் 'நீ நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை' என்று பாடுகிறது.

தங்கம், அட்லாண்டா, ஜார்ஜியா

பெங்களூரு ஐஐஎஸ்சியில் அவரைப் பலமுறை சந்தித்த நினைவுகள் என்றும் என் மனதுள். தமிழ்ச்சங்க கட்டுரைப் போட்டியில் முதலாம் பரிசாக என் கட்டுரையைத் தேர்ந்தெடுத்து, கட்டுரையின் சில வரிகளை இலக்கிய விழாவில் வாசித்ததை நான் இன்னும் மறக்கவில்லை!

கீதா பென்னெட், தென் கலிபோர்னியா

திருமணம் முடிந்து சில வருடங்களுக்குப் பிறகு நியூயார்க் தமிழ் சங்கம் என்னை எழுத்தாளர் என்ற முறையில் அழைத்தது. 'சுஜாதா வருகிறார். நீங்களும் கலந்துக் கொள்ள முடியுமா?' என்று கேட்ட அந்த நிமிடமே ஒப்புக் கொண்டேன். அப்போது கனெக்டிகட்டில் இருந்தோம். திருமதி சுஜாதா, ரங்கராஜன் என்ற எழுத்தாளர் சுஜாதா இருவரையும் முதன்முதலாக அங்கே சந்தித்ததேன். இரண்டு நாட்கள் கழித்து எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வந்தார். என்னைப் பற்றி அவர் நிறையத் தெரிந்து கொண்டாரே தவிர தன்னைப் பற்றிய விஷயம் எதுவும் அவர் வாயிலாக வரவில்லை. அன்றுமட்டும் அல்ல. தொடர்ந்து பழகிய இருபத்தி ஐந்து வருடங்களிலும் அவர் ஒருமுறை கூடத் தன்னைப் பற்றியோ தன்னுடைய சாதனைகளைப் பற்றியோ ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை. அதனாலேயே உலகத் தமிழர் போற்றும் இந்த எழுத்தாள ருக்கு எந்த விதப் பட்டங்களும் கொடுக்கப் படவில்லை என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இல்லை!

சில வருடங்களுக்கு முன் டல்லஸ் தமிழ் சங்கத்தில் பேச சுஜாதா, உதயமூர்த்தி இருவரும் வந்தபோது நானும் கலந்து கொண்டேன். அவர் பேச ஆரம்பித்த போது முதல் வரியே அங்கு வந்திருந்த இளம் வயதினர்களை நிமிரச் செய்தது. 'உலகத்திலேயே மஹா பாவம் ஒன்று இருக்கிறது.' என்று சொல்லி ஒரு இடைவெளி கொடுத்தார். பின் 'அது ஒரு எழுத்தாளரைப் பேச சொல்வது' என்றார். அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது. 'சிறுகதை எழுதுவது எப்படி?' என்ற கட்டுரையில் 'பத்திரிகை ஆசிரியருக்கு ஒரு நாளில் எத்தனை கதைகள் வரும் என்று நினைத்துப் பாருங்கள். முதல் வரியில் 'தொலைபேசி மணி அழைத்தது' என்று ஆரம்பித்தால் என்ன சுவாரசியம் இருக்கும்? 'அவன் தலையால் நடந்து வந்தான்' என்று அதிரடியாக இருந்தால் நிச்சயம் மேலே படிக்க ஆவல் வரும் இல்லையா? அதனால் வித்தியாசமாக முயற்சி செய்யுங்கள். அத்தோடு எந்த பத்திரிகைக்கு எந்தக் கதையை அனுப்ப வேண்டும் என்றும் தெரிந்து கொள்ளுங்கள்' என்று அவர் சொன்னதை அவருடைய மானசீக சிஷ்யர்கள் நாங்கள் பலரும் இன்றும் கடைப்பிடிக்க முயலுகிறோம்.

அவருக்குக் கர்னாடக சங்கீதத்தில் மிகவும் விருப்பம் உண்டு. டிசம்பர் சீசனில் என்னுடைய பல சென்னை வீணைக் கச்சேரிகளுக்கு வந்து அமர்ந்து ரசித்ததை என்னுடைய பாக்கியமாகவே கருதுகிறேன். என்னுடைய முதல் கதை தொகுப்புக்கு மனம் உவந்து முன்னுரை எழுதிக் கொடுத்ததோடு ஒரு விஷயமும் என்னிடம் நேரடியாகச் சொன்னார். அது என் எழுத்தாளர் நோக்கையே மாற்றிவிட்டது. முதலில் நான் சென்னையில் நடக்கும் விஷயங்களைப் பற்றி கனெக்டிகட்டிலிருந்து எழுதி அனுப்பிக் கொண்டு இருந்தேன். அத்தோடு பனிரெண்டாயிரம் மைல் தொலவில் இருந்தாலும் இந்தியாவைப் பற்றி என்னால் எழுத முடிகிறது பார் என்று எனக்குள்ளாகவே ஒரு அசட்டு கர்வமும் கொண்டிருந்தேன். ஆனால் சுஜாதா 'கீதா.. சென்னையைப் பற்றி எழுத சுப்ரமணியம், ஸ்ரீனிவாஸன் என்று ஆயிரம் பேர் உண்டு. உங்கள் வீட்டு சன்னல் கதவைத் திறந்து பார். அதை உற்று கவனித்து எழுது.' என்றார். அதன்பின் என்னுடைய கண்ணோட்டமே மாறி விட்டது. எனக்கும் நிறையக் கதைக்கரு கிடைக்க ஆரம்பித்து விட்டது.

சுஜாதாவின் நட்பு கிடைத்தபின் முதல் தடவை பெங்களூர் செல்லும்போது அவரு டைய ஒரு புதின நாவல் ஒன்றை ரயிலில் அப்போதுதான் படித்து முடித்திருந்தேன். அதன் பணக்கார வீட்டு கதானாயகன் ஒரு பார்ட்டியில் மது அருந்திக் கொண்டு சிக்கன் கடித்துக் கொண்டு இருப்பதை விரிவாக எழுதியிருந்தார். அந்த அனுபவத்தை அவரே பெற்றிருந்தால்தான் அவ்வளவு தெளிவாக விரிவாக எழுதமுடியும் என்று நானே கற்பனை செய்து வைத்திருந்தேன். பெங்களூரில் அவரைச் சந்தித்த அந்த சமயத்தில் திருமதி சுஜாதா சிங்கப்பூர் சென்றிருந்ததால் தனியாகச் சமைத்து சாப்பிட்டுக் கொள்வதாக சொன்னார். 'மற்றதை எல்லாம் பார்த்துக் கொள்கிறேன். சாதம் தான் சரியாக வடிக்க வரவில்லை' என்றார். 'பாஸ்மதி அரிசியை உபயோக படுத்துங்கள், சுலபம்' என்று சொன்னேன். 'அதுவா... மாமிச வாசனை வருமே... எனக்குப் பிடிக்காது' என்று அவர் சொன்ன போதுதான் எல்லாரையும் போல் எழுத்தாளரையே கதாநாயகனாகக் கற்பனை செய்தால் அது எவ்வளவு தவறு என்று எனக்குப் புரிந்தது.

வடிவேல் ஏழுமலை, கூப்பர்டினோ, கலி.

அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்கு வந்த புதிதில் என்னை வாட்டிய தனிமையிலிருந்து தப்பிக்க என் நண்பனிடமிருந்து சுஜாதாவின் நாவல் ஒன்றை இரவல் வாங்கிச் சென்றேன். 10 பக்கம் புரட்டலாம் என்று ஆரம்பித்தவன், 3 மணி நேரத்தில் அந்த நாவலை முடித்துவிட்டேன். அப்படிக் கட்டிப்போட்டது சுஜாதாவின் எழுத்து. அப்போது புரிந்தது ஏன் எல்லோரும் சுஜாதாவை இப்படிப் புகழ் கிறார்கள் என்று. சில வருடங்களுக்கு முன் அவர் விகடனில் எழுதிய 'கற்றதும் பெற்றதும்' தொடரின் முதல் அத்தியாயத்தில் அவருக்கு மருத்துவமனையில் ஏற்பட்ட அனுபவத்தை யும், காலனின் கைக்கு அகப்படாமல் தப்பி வந்ததையும், மருத்துவர், செவிலியர்களின் செய்கைகளையும் நையாண்டியோடு எழுதி யிருந்த விதம், அவருடைய வசீகரமான எழுத்துத் திறனுக்கு ஓர் உதாரணம். நவீன தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரை அது. இத்தனை திறமைசாலியான அவரைத் தமிழக அரசோ, மத்திய அரசோ பாராட்டி விருதளிக்காதது வேதனையளிக்கிறது. அவர் மறைவு என்னை வெகுவாக பாதித்தது. எந்த ஒரு எழுத்தாளர் மறைவும் என்னை இம்மாதிரி சோகத்தில் ஆழ்த்தியதில்லை.

மலர் செந்தில் (நாஷ்வா, நியூஹாம்ப்ஷயர்)

சுஜாதாவின் மரணம் மிகுந்த துயரத்தைக் கொடுத்தாலும் அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதில் ஒரு சிறிய ஆறுதல்;

திருமதி. இந்திரா பார்த்தசாரதி (தென் கலிபோர்னியா)

'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' கதையின் ஈர்ப்பு எந்தக் கதைக்கும் வந்ததாகத் தெரியவில்லை. அதில் நடமாடும்

கதாபாத்திரங்களில் அனேகர் நமக்குத் தெரிந்தவராகக் கூட இருக்கலாம். சில சமயம் வரிகள் கூடச் சிலருக்கு ஞாபகம் இருக்கிறது என்று ஒருமுறை கற்றதும் பெற்றதும் தொடரில் எழுதியிருந்தார். 'கிருஷ்ணன் கால் போட்டுக்கொண்டு கதாநாயகன் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தான்' என்பது போன்ற அபூர்வ பிரயோத்தை என்னால் கூட மறக்க முடியாது. சமீபகாலமாக அவர் முழுக்க முழுக்க திவ்ய பிரபந்தங்களைப் பற்றிய அவரது சிந்தனைகளைக் கல்கியில் கொடுத்ததை நினைத்தால் ஒரு மாதிரியாக அவர் இறுதிப் பயணத்துக்குத் தயாராகிவிட்ட மாதிரிதான் தோன்றியது.

சூரி ஆனந்தராமா, அட்லாண்டா

சிங்கப்பூர் பன்னாட்டுத் தமிழ் மாநாட்டில் சுஜாதாவுடன் இரண்டு நாட்கள் செலவிட்டேன். எளிமையும் இலக்கு நோக்கிய பார்வையும் கொண்ட அவர் எதையும் கவனமாகக் கேட்பவர். டெக்கிகளிடம் தமிழிலேயே பேசி, அவர்களை ஒருவரால் அசரவைக்கமுடியும் என்றால் அவர்தான் சுஜாதா. நவீன தமிழ் இலக்கியத்தின் தூண் அவர். உலகெங்கும் அவ்ரது விசிறிகள் அவரது புகழ் பாடியபடி இருப்பார்கள்.

உமா வெங்கடராமன், மெளண்டன் வியூ (கலி.)

பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. சிஎம்சி சார்பாக பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸில் காரசாரமான விவாதம். நான் சூடாக தர்க்கம் செய்துகொண்டிருந் தேன். எங்களுடன் விவாதித்துக் கொண்டி ருந்த பிஇஎல் குழுமத் தலைவர் எடுத்து வைத்த வாதங்கள் பிரமாதமாகவும் நுட்ப மாகவும் மிகத் துல்லியமாகவும் இருந்தன. விவாதம் முடிந்து வெளியில் வந்தவுடன், அதுவரை காத்துவந்த தன்னடக்கம், தொழில் நாகரிகம் எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டுக் குதூகலித்தேன். குத்தாட்டம் போட்டேன். என் ஹீரோவைக் கண்டதால் ஜன்ம சாபல்யம் அடைந்ததாய் அரற்றினேன். என்னை அந்த நிலைக்குக் கொண்டு சென்றவர், கணையாழியில் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்று ஆரவாரமில்லாமல் ஆரம் பித்து இன்றுவரை தமிழுலகமே கொண்டாடும் தமிழ் இலக்கியத்தின் முடிசூடா மன்னராக விளங்கும் சுஜாதா என்ற ரங்கராஜன்.

என்னுடன் அந்த ப்ராஜக்டில் பணியாற்றி யவர்களில் யாரும் தமிழ் படித்தவர்கள் அல்லர். ஆயினும் தினமும் நான் கூறிய சுஜாதா பிரதாபங்களைக் கேட்டு அவரது பெருமையை நன்கு அறிந்தவர்கள். என் குதூகலத்தைச் சாக்காக வைத்து ஒரு பார்ட்டிக்கான செலவு எனக்குப் பழுத்து விட்டது. இன்னொரு நாள், நாங்கள் நின்றிருந்த வழியே (சுஜாதாவின் பாஷையில்) வழுக்கிச் சென்ற காரை உற்றுப் பார்த்த என் தோழி, 'ஹே உமா, உன் ஹீரோ போகிறார்' என்று சத்தமாகக் கூறியது காதில் விழுந்து அவர் என்னை முறைத்துப் பார்த்தது இன்றும் என்னைச் சந்தோஷ சங்கடத்தில் ஆழ்த்துகிறது.

'வாக்குப்பதிவு இயந்திரத்தை வடிவமைத்த வாத்தியாருக்கு கௌரவம் தர வக்கில்லை' என்கிறார் ஜராசு வருத்தத்துடன். எந்தத் துறையைத் தொட்டாலும் தனக்கு நிகர் எவருமில்லை என்று நிரூபித்த சுஜாதாவுக்கு சாஹித்ய அகாடமி, பத்மஸ்ரீ, டாக்டர் பட்டம் போன்றவற்றைக் கொடுத்து நம்மை நாம் மேன்மைப்படுத்திக் கொள்ளத் தவறி விட்டோம்.

சுரேஷ் கண்ணன்

என்னை முதலில் கவர்ந்தது, மொழியை மிக லாவகமாகவும் எளிமையான ஆடம்பரத்து டனும் கையாளும் அவரின் திறமைதான். பத்து வரிகளில் ஒரு தேர்ச்சியில்லாத எழுத்தாளன் விவரிப்பதை, கிட்டத்தட்ட ஒன்றரை வரியில் உள்ளடக்கத்தின் சேதார மில்லாமல் எழுதுவது. படித்துக் கொண்டி ருக்கும் போதே சம்பவங்கள் visual-ஆக நம்முன் விரிவதைக் காணும் பரவசத்தை அடைவது. உரைநடையில் விளக்காமல் உரையாடல்களின் மூலமாகவே கதையையும் காட்சியையும் நகர்த்துவது. கதை மாந்தர் களின் உணர்வுகளை அப்படியே நம் மூளைக்குள் செங்குத்தாக இறக்குவது.

வெகுஜன பத்திரிகைகளுக்கும் சிறுபத்திரி கைகளும் இடையில் ஒரு பாலமாக ஒரே உதாரணமாக இருந்த (அவரது மொழியில் 'இலக்கியக் கடத்தல்') சுஜாதா ஏற்படுத்தின வெற்றிடத்தை இனிமேல்தான் யாராவது நிரப்ப வேண்டும்.

வலைப்பதிவு: www.pitchaipathiram.blogspot.com/

வற்றாயிருப்பு சுந்தர்

ஆதர்ச திரைப்படக் கதாநாயகர்களை அந்த அளவு ரசித்தோமோ இல்லையோ வாத்தி யாரின் எழுத்துகளை நிறையவே ரசித்தோம். என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, நைலான் கயிறு, பிரிவோம் சந்திப்போம், தூண்டில் கதைகள், கற்றதும் பெற்றதும் என்று சகட்டு மேனிக்கு இந்தியச் சாலைகளில் ஓடும் பலவித வாகனங்களைப் போல, பல களன் களைக் கொண்ட எழுத்துகளில் பயணித்துக் கொண்டே இருந்தார். ஜீனோவைக் கழற்றி செயலற்றதாக ஆக்கியபோது நிஜமாகவே கண்ணில் நீர் பெருகியது. அந்த எழுத்துகள் அழ வைத்திருக்கின்றன. நிறையவே சிரிக்க வைத்திருக்கின்றன. ஏராளமானவற்றை ரசிக்க வைத்திருக்கின்றன.

நேற்று அரட்டையில் (சுஜாதாவுடன் Ambalam chat) ஒரு சிறு உரையாடல்

சுஜாதா: நாளை மாலை அரிமா சங்கக் கூட்டத்தில் கலந்து கொள்கிறேன். அங்கு வாருங்கள்

நான்: நான் அரிமா உறுப்பினர் இல்லை. ஆனால் சிம்மராசி. அந்தத் தகுதியில் உள்ளே விடுவார்களா?

சுஜாதா: நானே ரிஷப ராசிதான். சிம்மத்திற்கு உணவு. என்னை விடும் போது உங்களையும் விடுவார்கள்.

மரணத்தின் விளிம்புவரை ஏற்கெனவே சென்று அந்த அனுபவங்களையும் அவரது வழக்கமான பாணியில் எழுதியதைப் படித்த போது 'இவர் நிஜமாகவே மரணித்தபின் அந்த அனுபவங்களைக் கட்டுரையாக எழுதிவிடு வார்' என்று நம்பிவிடலாம் போல இருந்தது.

வலைப்பதிவு: http://agaramuthala.blogspot.com
Click Here Enlargeஹரன் பிரசன்னா

தேசிகன் மூலம் நண்பர்கள் சிலர் அவரைச் சந்தித்தோம். ஆறு மணிக்கு சரியாக உட்லேண்ஸ் டிரைவ் இன் வந்த அவர் மிக இயல்பாக எல்லாருடனும் பேசினார். இப்படி சிலர் சேர்ந்து அவரை வறுத்தெடுக்கிறோமே என்று எல்லாருக்குமே தோன்றினாலும், விடாமல் அவருடன் பேசிக்கொண்டிருந்தோம். கமல், ரஜினி, சிறுகதை, தொடர்கதை, பிரபந்தம் என ஆளாளுக்குப் பல கேள்விகள் கேட்டோம். எல்லாவற்றிற்கும் பதில் சொன்னார். கவிதைகள் பற்றிப் பேச்சு வந்தபோது என்னைப் பார்த்து 'நீங்ககூட கவிதை நல்லா எழுதுறீங்களே' என்றார். இரண்டு முறை சொன்னார். எனக்கு சந்தோஷமாக இருந்தது.

புத்தகக் காட்சியில் திருமகள் நிலையத்துக்கு வந்த சுஜாதா திரும்பிச் செல்லும்போது மெல்ல நடந்து சென்றார். அவரால் தனியாக நடந்து செல்லமுடியாது. திருமகள் நிலையம் பதிப்பகத்தின் நிறுவனர் அவரை அழைத்துச் சென்றார். அவரும் உடல் நிலை சரியில்லாமல் வேகமாக நடக்கமுடியாத நிலையில் இருப்பவர். அவர் சுஜாதாவை ஆதரவாகப் பிடித்திருக்க, சுஜாதா அவரை ஆதரவாகப் பிடித்திருக்க, இரண்டு பேரும் மெல்ல நடந்து என்னைக் கடந்து சென்றார்கள்.

வலைப்பதிவு: http://www.nizhalkal.blogspot.com

வெங்கட், கனடா

என் பள்ளிப் பருவங்களில் சக தோழர்களில் சிலர் தங்களைக் கமலஹாசனாகவும் ரஜினிகாந்த் ஆகவும் உருவகித்துக் கொண்டு ஸ்டெப் கட்டிங், சாக்பீஸைத் தூக்கிப்போட்டு வாயால் பிடித்தல் என்று தங்களுக்கான பிம்பங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார் கள். அதே சமயத்தில் எனக்காக நான்

வரித்துக் கொண்ட தோற்றம் வஸந்த். அது "மோபெட்டில் ஏறி ஆக்ஸ்லரேட்ட எட்டு நொடிக்குள் அறுபது" என்று செயலில் துரிதம் காட்டுவதிலும், அடுத்தத் தெரு உஷாவிடம் அபத்த ஜோக் சொல்லவும், மதியம் தூங்கி எழுந்தவுடன் பேச்சு குளறும் பாட்டிக்கு வந்திருப்பது மயஸ்தேனியா க்ராவிஸ் என்று வாயில் நுழையாத பெயரைச் சொல்லி மாமாவைப் பயமுறுத்தவும், நீண்ட நேரமாக கட்டைபோட்டு ஓவர்களை வீணடிக்கும் பீக்காசுவை ஹேபியஸ் கார்பஸில் வெளியே அழைக்கிறேன் என்று எதிர் காப்டனிடம் சொல்லவும், செஸ்ஸில் தோற்றுப் போன வக்கீல் மாமாவிடம் ரை லோபெஸ் ஒப்பனிங்க்கு நைட்டை வெட்டுக்கொடுத்தது தான் உங்கள் தோல்விக்குக் காரணம் என்று அவர் முகத்தில் பேஸ்த் அடிக்கச் சொல்லி விட்டு நகர்வதற்கும் இன்னும் இத்யாதி மூளை, ஆண்மை, இளமை சமாச்சாரங் களுக்கும் நம்மிடம் இருக்கும் வஸந்த்-தனம்தான் காரணம் என்ற பதின்மக் கதாநாயகக் கனவுகளுக்குப் பேருதவியாக இருந்தது.

வானொலி மாமா சோதனைகள் என்று குழந்தைத்தனமாகவும், பொழுதுபோக்கு பௌதீகம் என்று வறட்சியாகவும் வாசித்துக் கொண்டிருந்த தமிழில் சிலிக்கன் சில்லுப் புரட்சியைக் கொண்டு வந்தவர் சுஜாதா. ஸ்பான், ஸ்பூட்னிக், கூரியர், சயன்டிபிக் அமெரிக்கன், நேஷனல் ஜியாகரபிக் சமாச்சாரங்களை 'சுடச்சுட' அந்தக் காலங்களில் தமிழுக்குக் கொண்டுவந்தவர். என்னுடைய வாழ்க்கையின் போக்கை மாற்றியமைத்ததில் அவருக்கும் கொஞ்சம் பங்குண்டு.

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் கணினி வருகிறது என்று சுஜாதா எழுதும் பொழுதுதான் காகிதங்கள் வாயிலாக மாத்திரமே அறிந்திருந்த ஒன்றிலிருந்து நாம் நீண்ட காலம் தப்பமுடியாது எனவே இதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று படிக்கும் ஆர்வம் வந்தது.

பெங்களூர் ஐஐஎஸ்ஸியில் படிக்கும்பொழுது சிலமுறைகள் அவரை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்புகளில் அவரது கூர்மையான அவ தானிப்பை நேரடியாக அறியமுடிந்தது. முதல் தடவை ஒரு சாவகாசமான சனிக்கிழமை காலை, இரண்டு மணி நேர இலக்கில்லா அரட்டைக்கு இடையில் மழைவிட்டிருந்த பொழுது காப்பி குடிக்கச் சென்றோம். ஓய்ந்த மழைக்குப்பின் ஐஐஎஸ்ஸியின் சாலைகள் கழுவிவிடப்பட்டதுபோல் கருப்பாக, பளபளப் பாக மிகக் கவர்ச்சியாக. சாலையின் இரு ஓரங்களிலும் கரையிட்டதுபோல் மஞ்சள் பூக்கள் உதிர்ந்து கிடந்தன. அந்தப் பூக்களைப் பற்றிய பேச்சு வந்தது. இது என்ன பூ என்றார். நான் சரக்கொன்றை என்றேன். இதுக்கு இங்கிலீஷ்ல என்ன பேர் தெரியுமா என்று கேட்டார்? அவர் அறிந்திருக்கவில்லை. என் நண்பர் ஒருவர் இண்டியன் லேபர்னம் என்று சொன்னார். இந்தச் சந்திப்புக்கு அடுத்த இரண்டு வாரத்தில் கல்கியில் ஒரு புதிய தொடரை ஆரம்பித்தார் (தலைப்பு நினைவில் இல்லை, அது ஒரு பெங்காலி பேராசிரிய ரையும் அவரது இளம் மாணவியையும் பற்றிய கதை). அந்தக் கதையே இப்படித்தான் துவங்கும் 'இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால் இன்ன தேதியில் சொல்லிவைத்தாற்போல் பெங்களூர் சாலையோரமெங்கும் மஞ்சள் பூக்கள் பூக்கட்டும்' எங்களுக்கும் சுஜாதாவுக்கும் நடந்த அதே இண்டியன் லேபர்னம் உரையாடல் எந்த மாற்றமுமில்லாமல் அந்த ஆசிரியருக்கும், மாணவிக்கும் இடையில் கதையில் நடந்தது.

நான் பழகிய மனிதர்களில் இத்தனை கூர்மையான அவதானம் கொண்டவர்கள், அந்த அவதானத்தை சுவாரசியமான உரைநடையாக்கம் செய்யும் திறன் கொண்டவர்கள் மிகச் சிலரே.

பூர்ணம் விஸ்வநாதன் உதவியுடன் அபத்தத் துணுக்குத் தோரணங்களிடமிருந்து மேடை நாடகங்களை மீட்டெடுக்கும் முயற்சி பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும்கூட என்னைப் பொருத்தவரை அவர் ஆத்மார்த்த மாகச் செய்த ஒரே காரியம் இதுவாகத் தானிருக்கும் என்று தோன்றுகிறது.

ஓய்வுக்குப் பின் அவர் மாபெரும் படைப்பு களை உருவாக்கப் போகிறார் என்றிருந்தது. வைணவம், அறிவியல், புதினம், சிறுகதை என்று ஆர்வமுள்ள துறைகளில் முத்திரை பதிக்கும் படைப்புகளை அறுபது வயதுக்குப் பின் படைக்கப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் சென்னைப் பிரவேசத்திற்குப் பின் குமுதம், மணி ரத்னம், ஷங்கர் என்று வர்த்தகம் அவரை முழுமையாக விழுங்கிவிட்டது.

வலைப்பதிவு: http://domesticatedonion.net/tamil

ஜெயமோகன்

அவரைப் புரிந்துகொள்ள முக்கியமான ஒரு நிகழ்வு உதவும். திருச்சிபக்கம் பின்தங்கிய வணிக ஊர் ஒன்றில் போலியோவால் கால்களை இழந்து, கல்விகற்பிக்கக்கூடப் பொருட்படுத்தப்படாமல், முற்றிலும் புறக் கணிக்கப்பட்டு, சுயநம்பிக்கையே இல்லாமல் தனக்குள் சுருண்டு வாழ்ந்த முஸ்லீம் இளைஞன் ஒருவனின் சில கவிதை வரிகள் வழியாக அவனைக் கண்டுபிடித்தார் அவர். இருண்ட உள்ளறைக்குள் நாள்கணக்கில் வாரக்கணக்கில் அவன் வாழ்ந்த அந்த உயரமான பிசுக்கு படிந்த பழங்காலக் கட்டிலை நான் கண்டிருக்கிறேன். அவன் அறியாத ஓர் உலகிலிருந்து சுஜாதா அவனை நோக்கி கையை நீட்டினார். அவனுக்கு தன்னம்பிக்கையை அளித்தார். அவன் வெளியுலகைப் பார்க்கச்செய்தார். வெளி யுலகம் அவனைப் பார்க்கும்படிச் செய்தார். படிப்படியாக அவனை ஒரு முக்கியமான கலாச்சாரச் சக்தியாக தமிழ்ச்சூழலில் நிலை நாட்டினார். மனுஷ்யபுத்திரன் சுஜாதா தமிழுக்கு அளித்த கொடை. அவரது எழுத்தில் அதிகம் தெரியாத அவரது அகம் எத்தகையது என்பதற்கான முக்கியமான ஆதாரம்.

முன்பொருமுறை எழுதிய கடிதத்தில் கீதைபற்றிய என் கேள்விக்குப்பதிலாக, விவாதத்தை முடிக்கும்முகமாக சுஜாதா 'அறிதலின் எல்லைகளை உணர ஒரு வயது இருக்கிறது. இந்த புரோட்டீன் காலி·ப்ளவர் சலித்துக் கொள்ள ஆரம்பிக்கிறது. அப்போது தான் அது அதை மீறி எதையாவது அறிய ஆரம்பிக்கிறது'என்று எழுதினார்.

இணையத்தள: www.jeyamohan.in

மனுஷ்ய புத்திரன்

சுஜாதா இந்த நூற்றாண்டில் தமிழ் அடைந்த நவீனத்துவத்தின் மாபெரும் மைய நீரோட்டம். அதில் கால் வைக்காமல் படைப்பின் சவால்களை மொழியின் சவால்களை ஒருவர் கடப்பது மிகவும் கடினம். எமது எல்லாச் செயல்பாடுகளிலும் சுஜாதாவின் சொல்லின் வலிமையும் அன்பின் நிழலும் படிந்திருக்கிறது. உயிர்மை குடும்பத்தினர் அவரது நினைவு களை நெஞ்சில் ஏந்துகின்றனர்.

மனுஷ்ய புத்திரன்(உயிர்மை)


மொழியை வெறுமனே பயன்படுத்தும் கலைஞர்களுக்கிடையே தான் புழங்குகிற மொழியைப் புதுப்பித்து அதற்கு புதிய உள்ளோட்டங்களை வழங்குகிறவனே மகத்தான கலைஞனாகிறான். 20ஆம் நூற்றாண்டில் பாரதியும் புதுமைப்பித்தனும் தமிழில் உருவாக்கிய நவீனத்துவத்தின் பேரலைகள் மொத்த படைப்பியக்கத்தையும் மாற்றியமைத்தது. அதற்குப் பின் தமிழ் உரைநடைக்கு புதிய வேகமும் வண்ணமும் கொடுத்த பேரியக்கம் சுஜாதா.

தமிழ் இலக்கிய உலகின் ஊழல்களால் அவருக்குரிய மரியாதைகளையும் அங்கீகாரங் களையும் இங்குள்ள இலக்கிய அமைப்புகள் முற்றாக மறுத்தன. அவருடைய அஞ்சலி குறிப்பில் குறிப்பிட அவருக்கு வழங்கப்பட்ட இலக்கிய விருதுகளின் பெயர் ஏதும் இல்லை. ஆனால் அது அவருக்கு என்றுமே அவசிய மாக இருந்ததுமில்லை. அவர் இலட்சக்கணக் கான வாசகர்களின் இதயத்துடிப்பினால் இயங்கிய கலைஞன்.

மனுஷ்ய புத்திரன்(இந்தியாடுடே)


சூப்பர் சுதாகர்

பள்ளிப் பருவத்திலேயே சுஜாதாவின் 'நைலான் கயிறு', 'கொலையுதிர் காலம்', 'ஏன்? எதற்கு? எப்படி?' பத்திரிக்கைகளில் தொடர்களாக வந்தபோது அவற்றைப் பிரித்து பைன்டிங் செய்து வைத்தது இன்னும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது. 'என் இனிய இயந்திரா' படித்த தாக்கத்தில், எங்கள் வீட்டுப் புதிய நாய்குட்டிக்கு 'ஜீனோ' என்று பெயரிட்டேன்.

அவரை முதலில் நேரில் பார்த்தது கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கல்லூரியின் தமிழ் சங்கம் நிகழ்ச்சியில். 'ஹோலோகிராம்' பற்றி அவர் பேசியதை ஆர்வத்துடனும், ஆச்சரியத்துடனும் கேட்டேன். 1997ம் ஆண்டு விடுமுறையில் இந்தியா சென்றிருந்த போது, அவரை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்து மின்-அஞ்சல் அனுப்பினேன். அவர் வீட்டுக்கு வரும்படி பதில் அனுப்பினார். சந்தித்தேன். நல்ல உயரம், கூர்மையான கண்கள். ரொம்ப நாள் பழகிய நண்பரைப் போல் சகஜமாகப் பேசினார்.

இணையத்தில் அவருக்காக வாசகர் பக்கம் () ஒன்றைத் தொடங்க இருப்பதாகச் சொன்னேன். இணையத்தை பற்றியும், அவரது அப்போதய படைப்புகள் பற்றியும் நிறைய பேசினோம். சுஜாதாவின் ஹைக்கூ பற்றிய கட்டுரைகளை படித்த பாதிப்பில் நான் எழுதிய ஹைக்கூ கவிதகளைக் காட்டி, அபிப்பிராயம் கேட்டேன். எது ஹைக்கூ, எது ஹைக்கூ இல்லை என்று விளக்கினார். கார்ல் சாகனின் புதிய புத்தகம் ஒன்றைக் கொடுத்தேன். பதிலுக்கு 'கற்பனைக்கும் அப்பால்' புத்தகத்தை ஆட்டோகிராப் இட்டுத் தந்தார். சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்ட போது, பிளாஷ் அடித்ததும் 'கேமரா கண்சிமிட்டறதே!' என்றார்.

அந்தச் சந்திப்புக்குப் பிறகு, தொலைபேசியிலும் மின்-அஞ்சலிலும் அவரோடு நட்பைத் தொடர்ந்தேன். ஒவ்வொரு மே 3ம் தேதியும் அவரைத் தொலைபேசியில் அழைத்துப் பிறந்தநாள் வாழ்த்து சொல்வேன். இந்த மே 3ம் தேதி முடியாது.

கடைசியாகத் தொலைபேசியில் பேசியபோது, 'அடுத்த முறை சாண்டா க்ளேரா வரும்போது தமிழ்ச் சங்கம் மற்றும் ஸ்டேன்போர்ட் ரேடியோ நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள வேண்டும்' என்று கேட்டுக்கொண்டேன். 'சரி' என்றார். அதுவும் நிறைவேறாது.

சுஜாதாவின் எழுத்துக்கள் மூலம் நாம் 'கற்றது' எவ்வளவோ. சுஜாதா 'பெற்றது' லட்சக்கணக்கான வாசகர்கள்.

அவரைப்பற்றிய எனது வலைப்பக்கம்: http://www.geocities.com/sujathapage/
மேலும் படங்களுக்கு
More

அமெரிக்காவின் முதல் தமிழ் நாடகவிழா ஒரு முன்னோட்டம்
Share: 




© Copyright 2020 Tamilonline