Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | சாதனையாளர் | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சிறுகதை
சியாமளியின் ஹாரம்
ஆசையைக் குறைத்தல் அருகே சொர்க்கம்!
எங்க மாமா
- சசி வைத்தியநாதன்|பிப்ரவரி 2008|
Share:
Click Here Enlargeஆறு மாதங்களுக்கு முன்னால், அமைதி யான ஒரு ஞாயிறு காலை. என் கணவர் ரவி இன்டெர்நெட்டில் ஏதோ படித்துக் கொண்டிருந்தார். 6 வயது மகன் தமிழ்ப் பள்ளிக்குத் தயாராகிக் கொண்டிருந்தான். தொலைபேசி சிணுங்கவே என் மகன் அதை எடுத்து 'ஹலோ' என்றான். எதிர் முனையில் இந்தியாவிலிருந்து என் கணவரின் மாமா. அவருக்கு கொஞ்சம் மெல்லிய குரல். பெண்குரல் போலவே இருக்கும். 'ஹலோ' என்று அவர் பதில் கூறினார்.

தன் பாட்டிதான் பேசுகிறார் என்று நினைத்த என் மகன் 'பாட்டி, எப்படி இருக்க?' என்றான். 'ரவி கிட்ட குடு' என்றார் மாமா.

'பாட்டி, தாத்தா எங்கே?' பொடியன் விடவில்லை.

'நான் தாத்தாதான் பேசறேன், ரவிகிட்ட குடு.'

'அய்யே, நீ பாட்டிதான். பாட்டி எனக்கு புது டிரெஸ் வேணும்.'

'தம்பி, நான் பாலு தாத்தா பேசறேன். அப்பாகிட்ட குடு' என்றார் சற்றே கடுப்புடன்.

'பாட்டி, பொய் சொல்லக்கூடாதுன்னு என்கிட்ட சொல்லிட்டு, ஏன் பாட்டி பொய் சொல்ற?'

'தம்பி, என்ன பொய் சொல்றேனு சொல்ற? ரெண்டு வருஷம் முன்னால இந்தியாவுக்கு வந்தப்போ திருச்சிக்கு இந்தத் தாத்தா வீட்டுக்கு வந்தியே. எங்க வீட்டு சன்னலை கூட உடைச்சியே. அப்பாகிட்ட குடுன்னு சொல்றேன்?'

'போ பாட்டி, நீ என்கூட பேசமாட்டேங்கற. உன்னோட டூ, கா.'

மகன் தொலைபேசியை என் கணவரிடம் கொடுத்து விட்டான். அதை வாங்கி என் கணவர் 'ஹலோ, என்னம்மா, சொல்லு' என்றார். இன்னும் கடுப்பாகிப் போன மாமா 'என்னப்பா, ரவி, நான் பாலு மாமா பேசறேன்' என்றார்.

'ஓ மாமாவா? பையன் பேசுறது கேட்டு அம்மானு நினைச்சேன்' என்றார்.

மாமா 'ஏம்பா சின்ன பையனை போன் எடுக்க விடுற? நான் பாலு தாத்தா பேசுறேன், பவானி பாட்டி இல்லைனு சொன்னா அவன் என்னை பொய் சொல்றேனு சொல்றான்' என்றார். என் கணவராவது அத்தோடு விட்டிருக்கலாம். 'அதில்லை மாமா உங்க குரல் சில சமயம் அம்மா குரல் போலவே இருக்கு, அதான் பையன் தெரியாம சொல்லிட்டான். நீங்க எப்படி இருக்கீங்க? மாமி, அனு, சேகர் எல்லாம் நல்லா இருக்காங்களா?' என்றார். அவ்வளவு தான். மாமாவுக்கு அன்று என்ன மன நிலையோ, கடுப்பு கோபமாக மாறிவிட்டது. 'என்ன, சின்ன பையன் அவன்தான் அப்படி பேசுறான்னா, நீயுமா? இந்தியாவுலேந்து கூப்பிட்டு பேசினா, என்ன கிண்டல் பண்றியா?' என்று கூறி, என் கணவர் மறு மொழி கூறுமுன் போனை வைத்துவிட்டார்.

இதேதடா வம்பு என்று என் கணவர் சென்னையில் உள்ள மாமியாரைக் கூப்பிட்டு விசயத்தைக் கூறினார். அவர் 'விடுங்க, அவர் இப்படித்தான். எல்லாம் சரியாயிடும்' என்றார்.

ஆனால் விசயம் சரியாகவில்லை. மோச மாகியது. மாமாவின் மனதில் விசுவாமித்திரர் குடியேறினார். தன்னை அவமானப்படுத்தி விட்டதாக நினைத்தார். அடுத்த மாதம் என் மாமியாரும் மாமனாரும் மாமா வீட்டுக்குச் சென்றபோது அவர் முகம் கொடுத்துப் பேச வில்லை. தன் அண்ணியிடம் விசாரித்தார் மாமியார். அவரும் 'எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மாமாவின் கோபம் தணிய வில்லை, நாளாக நாளாகச் சரியாகிவிடும்' என்று கூறினார். அதோடு மாமாவின் பையன் சேகருக்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஒன்றில் மேல்படிப்புக்கு இடம் கிடைத்திருப்பதாகவும் கூறினார்.

இரண்டு மாதங்கள் கடந்தன. ஒரு நாள் என் மாமியாரின் தங்கை பங்களூரிலிருந்து என் மாமியாருக்கு போன் செய்தார். 'என்ன பவானி, உனக்கும் அண்ணாவுக்கும் என்ன ஆயிற்று? நேற்றுதான் திருச்சியிலிருந்து வந்தேன். அனுவுக்கு மாப்பிள்ளை பார்ப்ப தாகக் கூறினார். என்ன அண்ணா, பவானியின் இரண்டாவது மகன் ரகுவுக்குத் தானே அனுவைக் கல்யாணம் செய்யலாம்னு இருந்தீங்க, என்ன ஆயிற்று என்று கேட்டேன். அவர் சரியாக பதில் கூற வில்லை. அண்ணியிடம் விசாரித்தேன். அவர் உன்னையே கேட்டுக் கொள்ளச் சொன்னார்' என்று கூறினார்.

இந்த சமாசாரத்தை என் மாமியார், மாமனாரிடமும் மைத்துனரிடமும் என் கணவரிடமும் தெரிவித்தார். மாமனார் திருச்சிக்கு போன் செய்தார். ஆனால் மாமா பேச மறுத்து விட்டார். மாமி, தன்னால் அவர் மனதை மாற்ற இயலவில்லை என்று போனில் அழத் தொடங்கிவிட்டார்.

என் கணவர் இங்கிருந்து போன் செய்தார். அப்போதும் அதேதான் நடந்தது. என் மைத்துனர் சொல்ல முடியாத வேதனை அனுபவித்தார். இரண்டு வருடமாக மாமா வின் பெண் அனுவைத் திருமணம் செய்து கொள்ளக் கனவு கண்டுகொண்டிருந்தார்.

பத்து நாட்கள் சென்றன. சென்னையில் மாமியாரின் வீட்டுக்கு எங்கள் குடும்ப நண்பர் நாராயணன் மாமா திடீர் விஜயம் செய்தார். இவரை நாரதர் நாரயணன் என்றுதான் நெருங்கியவர்கள் அழைப்பார் கள். ஏதாவது கலகம் செய்து கொண்டே இருப்பார். திருச்சியில் இருக்கும் இவர் பல வருடங்களாக மாமாவின் நண்பர். டில்லியிலிருந்து திருச்சிக்கு செல்லும் வழியில் சென்னையில் இவர்களைப் பார்க்க வந்ததாகக் கூறினார். காபி கொடுத்து உபசரித்து நலம் விசாரித்தார்கள் மாமனாரும் மாமியாரும். 10 நிமிடங்கள் கழித்து 'பாலுவின் பையன் சேகருக்கு கலிபோர்னியாவில் மேல்படிப்புக்கு அனுமதி கிடைத்திருக்கிறதாமே, பாலு பையனை அவ்வளவு தூரம் அனுப்ப கவலைப் பட்டான். நம்ம ரவி அங்கேதானே இருக்கிறான், அவனுக்கு போன் செய்யச் சொன்னேனே, செய்தானா?' என்று கேட்டார். மாமியாரும் மாமனாரும் அவரைப் பார்வையாலேயே எரித்தனர்.

என்னவென்று புரியாமல் திருதிருவென்று முழித்தார் நாராயணன். 'நல்லா ரவிக்கு போன் பண்ணச் சொன்னீங்க' என்று கூறி மாமனார் நடந்த கதையைக் கூறினார். 'ஓ, பாலுவிடம் ரவிக்கு போன் பண்ணச் சொல்லிவிட்டு நான் டில்லிக்குப் போய்ட் டேன். இப்போதான் திருச்சிக்குப் போகிறேன். நீங்க தைரியமா இருங்க. நான் போய் பாலுவை சமாதானப் படுத்துகிறேன்' என்று கூறினார்.
நாரயணன் மாமா திருச்சிக்குச் சென்ற பின்னர் பாலு மாமாவைச் சந்தித்து பேசினார். எவ்வளவோ எடுத்துச் சொல்லி யும் பாலு மாமா மனம் மாறவில்லை. நாரயணன் மாமா மனம் தளர்ந்து விட வில்லை. சரியான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

தன் குரலைக் குறையாக நினைக்காமல் தக்க சமயத்தில் அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பாலு அவர்களை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன்.
பாலு மாமா ஒரு நாடக ஆசிரியர். சிறு வயதில் நாடகங்களில் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அவர் குரல் மெலிதாக இருந்ததால் ஆண் பாத்திரங்களில் நடிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆகையால் நடிப்பதை நிறுத்திவிட்டு நாடகாசிரியராகவும் இயக்குனராகவுமே இருந்தார். ஒரு மாதத்தில் சென்னையில் ஒரு தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டும் பொருட்டு நாடகம் ஒன்றைப் போட பாலு மாமா ஒப்புக் கொண்டிருந்தார். நாரயணன் மாமாவும் அதில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடிக்கவிருந்தார். தக்க சமயத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்த நாரயணன் மாமா இந்தச் சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொள்ள தீர்மானித்தார்.

நாடகம் அரங்கேறும் நாளும் வந்தது. திருச்சியிலிருந்து நாடகக் குழுவோடு பாலு மாமா சென்னை வந்தார். நாடக அரங்கின் அருகில் ஒரு ஹோட்டலில் நாடகக் குழு தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. பொதுவாக சென்னைக்கு வந்தால் தன் தங்கையைக் காண இரயிலிலிருந்து இறங்கியவுடனே வந்து விடுவார். இந்த முறை நேராக ஹோட்டலுக்கு சென்று விட்டார். நாரயணன் மாமா இதை கவனிக்கத் தவறவில்லை.

மாலை 6 மணிக்கு நாடகம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மதிய உணவுக்குப் பின்னர் குழுவினர் ஓய்வெடுக்கச் சென்று விட்டனர். நாராயணன் மாமா மட்டும் தனக்கு வெளியில் சிறிது வேலை இருப்பதாகக் கூறி விட்டு என் மாமனாரையும் மாமியாரையும் சந்தித்து மாலை நாடக அரங்குக்கு வருமாறும் நாடகம் முடிந்த பின்னர் சிறிது நேரம் தங்கியிருக்குமாறும் கூறிவிட்டுச் சென்றார்.

ஹோட்டலிலிருந்து 4 மணி சுமாருக்கு குழுவினர் அனைவரும் நாடக அரங்குக்கு வந்தனர். வாழ்க்கையில் பல இடையூறு களைச் சந்தித்து அவற்றை வெற்றி கொண்ட ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியைப் பற்றிய கதை நாடகமாக்கப் பட்டிருந்தது. பல வருடங்களாக பாலு மாமாவின் குழுவில் நடித்து வந்த சாரதா என்பவர் அந்தப் பாத்திரத்தில் நடிக்கவிருந்தார். குழுவினர் ஒப்பனை அறையில் ஒப்பனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது சாரதா பாலு மாமாவிடம் வந்து 'சார், எனக்கு வயிற்றில் என்னவோ சங்கடம் செய்கிறது. அடிக்கடி கழிவறைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. என்னால் இன்றைக்கு நாடகத்தில் நடிக்க இயலாது' என்று கூறினார். பாலு மாமா ஆடிப் போய் விட்டார். உடம்புக்கு முடியவில்லை என்பவரை என்ன சொல்ல முடியும்? அன்றைக்குத்தான் அரங்கேற்றமாதலால், குழுவிலிருந்தவர்கள் யாருக்கும் சாரதா ஏற்கவிருந்த கதாபாத்திரத்தின் வசனம் முழுமையாகத் தெரியாது. குழுவின் மூத்த நபர் முத்து, பாலு மாமாவிடம் வந்து 'பாலு இனிமேல் நாடகத்தை நிறுத்த முடியாது. இதை எழுதி இயக்கியது நீதான். உனக்குத்தான் எல்லா வசனங்களும் தெரியும். உன் உருவமும் குரலும் இந்தப் பாத்திரத்திற்கு சரியாக இருக்கும். உனக்கு நல்ல வேளையாக தாடி மீசை இல்லை. ஆகையால் நீதான் நடிக்க வேண்டும்' என்று கூறினார். அருகிலிருந்த பலரும் அதை ஆமோதித்தனர். அந்த நெருக்கடியில் பாலு மாமாவுக்கும் வேறு என்ன செய்வதென்று தோன்றவில்லை. வாக்கு கொடுத்து விட்டோமே என்று சம்மதித்தார்.

மணி 6. திரை தூக்கப்பட்டு நாடகம் தொடங்கியது. சபையோர் நாடகத்தை மிகவும் ரசித்தனர். நாடகத்தின் முடிவில் கரகோஷம் அரங்கை நிறைத்தது. பெண் ணாக நடித்த பாலு மாமாவைத் தொண்டு நிறுவனத்தின் தலைவர் மிகவும் பாராட்டி னார். நாடகத்தின் முக்கிய நடிகைக்குச் சுகமில்லாமல் போன செய்தி அவர் காதுக்கும் எட்டியிருந்தது. அதை அவை யோருக்கு கூறிவிட்டு 'தன் குரலைக் குறையாக நினைக்காமல் தக்க சமயத்தில் அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பாலு அவர்களை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன்' என்றார். பாலு மாமா வுக்குச் சுருக்கென்றது.

வந்தனம் கூறி அனைவரும் விடைபெற்ற பின்னர் குழுவினர் ஒப்பனை அறைக்கு வந்தனர். அங்கே எல்லோரும் பாலு மாமாவைப் பாராட்டினர். நாரயணன் மாமா மட்டும் ஒன்றும் கூறவில்லை. 'என்னப்பா நாரயணா நீமட்டும் ஒன்றும் சொல்ல வில்லை' என்று கேட்டார் முத்து. 'பாலு நாடகத்தில் மட்டுமில்லை, வாழ்க்கையிலும் நன்றாக நடிப்பான்' என்று கூறினார். ஒன்றும் புரியாததுபோல் முத்து 'என்ன சொல் கிறாய்?' என்று கேட்டார். 'ஆமாம் முத்து, இன்றைக்கு வாக்கு கொடுத்து விட்டோம் என்பதற்காகப் பெண்வேடம் ஏற்று நடித்து பலரும் பாராட்டும்போது சிரித்துக் கொண்டே ஏற்றுக்கொண்ட பாலு, சிறு பிள்ளை ஒன்று அறியாமல் இவர் குரலை போனில் கேட்டுவிட்டுப் பெண்குரல் என்று நினைத்துக் கொண்டதால் கோபித்துக் கொண்டு தன் தங்கைக்குக் கொடுத்த வாக்கை காற்றில் பறக்கவிட்டு விட்டார். இதை நடிப்பு என்று கூறாமல் என்ன சொல்லுவது' என்று கூறினார்.

பாலு மாமா உடனே 'நாராயணா, நீ சொல்றது சரிதான். நான் பிடிவாதமாகத் தான் இருந்து விட்டேன். உடனே என் தங்கையைப் பார்க்கப் போகிறேன், நீயும் வா' என்று கிளம்பினார்.

சசி வைத்யநாதன், சன்னிவேல் (கலி.)
More

சியாமளியின் ஹாரம்
ஆசையைக் குறைத்தல் அருகே சொர்க்கம்!
Share: 




© Copyright 2020 Tamilonline