அமெரிக்க அதிபர் தேர்தல் '08
|
|
கிளீவ்லாந்து தியாகராஜ ஆராதனை 'சம்பிரதாயத்தைக் கட்டிக்காப்போம்'' |
|
- காந்தி சுந்தர்|பிப்ரவரி 2008| |
|
|
|
|
கிளீவ்லாந்து சுந்தரம் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து கிளீவ்லாந்து தியாகராஜ ஆராதனை விழாவைக் கொண்டாடி வருகிறார். இவர் 2007 டிசம்பர் சீசனில் சென்னையில் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கிச் சாதித்திருக்கிறார். அமெரிக்காவில் பிறந்து வளரும் 16 குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து, கர்நாடக இசையில் பயிற்சி அளித்துச் சென்னைக்கு அழைத்துச் என்று பாரம்பரியமான சம்பிரதாயப் பாடல்களைப் பாட வைத்திருக்கிறார். அதற்கு 'Sustaining Sampradayam' எனப் பெயரும் சூட்டியிருக்கிறார். இதைப் பற்றிய விவரங்களை சுந்தரம் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
'ஒவ்வோர் ஆண்டும் நாங்கள் கிளீவ்லாந்தில் ஏதேனும் புதிய முயற்சியைச் செய்து பார்ப்போம். 2007 எங்களுக்கு 30வது ஆண்டு நிறைவு. எமது விழாவைத் தொடர்ந்து ஆதரிக்கும் அமெரிக்காவாழ் இந்தியக் குழந்தைகளை ஊக்குவிக்க எண்ணினோம். 30 குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து விழாத் தொடக்கத்தில் அவர்களைப் பாட வைத்தோம். தொடக்க நிகழ்ச்சி எப்போதும் பெரிய வித்வான்களுக்கு மட்டுமே. இதில் குழந்தைகளைப் பாடச் சொல்வதா என்று பலர் எதிர்த்தனர்.
'அமெரிக்காவில் பிறக்கும் இந்தியக் குழந்தைகள் சற்று வித்தியாசமானர்கள். அவர்கள் தம் நோக்கில் குறியாய் இருப்பார்கள். படிப்பிலும் சரி, இதர கலைகளிலும் சரி அவர்கள் முடியும் என்று மனது வைத்தால் முடித்துக் காட்டுவதில் சூரர்கள். இவர்களின் தன்னம்பிக்கையில் திடமாய் இருந்தோம். ஒரு தீவிரத் தேடலில் 70-75 விண்ணப்பங்கள் வந்தன. முதலில் mp3யில் தமது பாடல்களை அனுப்பினார்கள். அவற்றைச் சென்னையிலுள்ள பிரபல வித்வான்கள் பரிசீலித்து 34 பேரைத் தேர்ந்தெடுத்தனர். பிறகு இவர்களுக்குச் சென்னையிலிருந்தே வித்வான்களால் பயிற்சி அளிக்கப்பட்டது. சங்கீதத்தில் வெவ் வேறு துறையில் கோலோச்சும் வித்வான்கள் தத்தம் துறையில் பயிற்சியளித்தனர்.
'சென்னையிலுள்ள என் இல்லத்தில் மேல்தளத்தில் இதற்காகக் கம்ப்யூட்டரில் பிராட்பேண்டு வசதிகளை ஏற்படுத்தினோம். சனி, ஞாயிறுகளில் வித்வான்கள் வந்து குழந்தைகளைப் பயில்வித்தனர். திருப் புகழைச் செங்கல்பட்டு ரங்கநாதன், தீட்சிதர் பாடல்களை டாக்டர் வேதவல்லி, அன்ன மாச்சாரியா கிருதிகளை நேடுநேரி கிருஷ்ணன் என்று, அந்தந்த சம்பிரதாயத்தில் தோய்ந்தவர்கள் அதன் பயிற்சியைக் கொடுத்தனர். அதனால்தான் இதை 'Sustaining Sampradayam' என்கிறோம். இம்முயற்சி கிளீவ்லாந்தில் பெரும் வெற்றியடைந்தது.'
இதே முயற்சியைச் சென்னையில் டிசம்பர் சீசனில் செய்தால் என்ன என்ற எண்ணம் சுந்தரத்துக்குத் தோன்றியதாம். பங்கேற்ற 28 பேரில் மிகச் சிறந்த 16 குழந்தைகளைத் தேர்வு செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றார். அங்கே நாரத கான சபாவில் அவர்கள் பாடினார்கள். அவரே அதைப் பற்றிக் கூறுகிறார். 'பிரபல வித்வான்கள் பலர் அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்து குழந்தைகளை ஊக்குவித்தார்கள். அதுமட்டுமல்ல, விழா வின் இறுதியில் வந்திருந்தவர்கள் எழுந்து நின்று கைதட்டி, குழந்தைகளை நெகிழச் செய்தார்கள். அடுத்து மியூசிக் அகாடமியில் புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவில் பெரிய வித்வான்களுக்கு ஒதுக்கப்படும் நேரத்தில் 10 நிமிடம் ஒதுக்கினார்கள். குழந்தைகள் அங்கே 'மைத்ரீம் பஜத' என்ற எம்.எஸ். அவர்கள் பிரபலப்படுத்திய பாடலைப் பாடினார்கள்.
'மூன்றாவதாக, பாரம்பரியமான தியாக பிரம்ம சபாவிலும் குழந்தைகள் பாடினார்கள். இதில் குறிப்பிடத்தக்கது, பாடல்களில் ஒன்று பூச்சி ஸ்ரீநிவாச ஐயங்காரின் பரஸ் ராகப் பாடல். இவர் ராமநாதபுரம் சேதுபதி மகாராஜாவின் ஆஸ்தான வித்வான். இவர் வம்சத்தில் வந்த கொள்ளுப் பேத்தியும் இப்பாடலைப் பாடிய குழந்தைகளில் ஒருவர்.' |
|
கிளீவ்லாந்து சுந்தரம் கச்சேரியோடு நிற்கவில்லை. ஒரு பேருந்தை ஏற்பாடு செய்து குழந்தைகள் எல்லோரையும் மும்மூர்த்திகள் பிறந்த இடங்களான திருவையாறு மற்றும் திருவாரூருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பாரத கலாசாரம் பற்றிய ஒரு பாடத்தையே நடத்தியிருக்கிறார். அமெரிக்கா திரும்பும் முன்தினம் பிட்சா பார்ட்டியையும், 'காட்ஸ் மஸ்ட் பி கிரேஸி' என்ற ஆங்கிலப் படத்தையும் ரசித்திருக்கின்றனர் சுந்தரம் அண்டு கோ.
ஆனாலும் சுந்தரத்துக்கு ஒரேயொரு ஆதங்கம் உண்டு. 'விஞ்ஞானத்தில் இந்தியா இவ்வளவு முன்னேறியிருந்தும் எங்கள் பயிற்சிக்குத் தடையாய் இருப்பதே அகலப் பட்டை (பிராட்பேண்டு) பற்றாக்குறைதான்' என்கிறார். மற்றொரு ஆச்சர்யம் இந்த அரிய முயற்சிக்குத் தமிழக அரசாங்கத்திடமிருந்து எந்தவிதமான பாராட்டும் வரவில்லையாம். ஆனால் பத்திரிகை விமர்சனங்கள் குவிந்தனவாம்.
பின்குறிப்பு: கிளீவ்லாந்து சுந்தரம் என்று அறியப்படும் வி.வி. சுந்தரம் இசையில் மட்டுமல்ல, தொழில்நுட்பத்திலும் ஆர்வ முள்ளவர். இன்று கோவேன்சிஸ் என்று அழைக்கப்படும் பிரபல IT நிறுவனத்துக்கு CEOவாகப் பணியாற்றியவர் இவர்.
காந்தி சுந்தர், மிக்சிகன் |
|
|
More
அமெரிக்க அதிபர் தேர்தல் '08
|
|
|
|
|
|
|