|
தென்றல் பேசுகிறது.... |
|
- |பிப்ரவரி 2008| |
|
|
|
பொருளாதாரத் தூண்டல் திட்டத்திற்காக (Fiscal Stimulus Plan) அமெரிக்க செனட் 146 பில்லியன் டாலரை ஒதுக்கச் சம்மதம் கொடுத்துள்ளது. இந்தப் பணம் வணிக நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் சென்று சேரும். அவர்கள் நாட்டின் பணச்சுழற்சியை அதிகரிப்பார்கள், அதன் மூலமாக அமெரிக்காவின் தொய்ந்துவரும் பொருளாதாரம் சுறுசுறுப்படையும் என்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. ஆனால், இது அரசு கஜானாவைக் காலிசெய்து, அரசை பலவீனப்படுத்தும் என்பது ஒரு சாரார் வாதம். மற்றொரு சாராரோ, அமெரிக்கச் சந்தையில் குவிந்துகிடக்கும் சீனப் பொருள்களை மக்கள் வாங்கி, அதனால் இந்தப் பணமெல்லாம் சீனப் பொருளாதாரத்தைச் சூறாவளியாக்கிவிடும் என்று அஞ்சுகிறார்கள். அஞ்சவேண்டிய சூறாவளி தான். அமெரிக்கத் தேர்தல் சூடுபிடித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு மாநிலமாகத் தனது விருப்பத்தைத் தெரிவித்து வருகிறது. சூப்பர் செவ்வாய் அருகில்தான் உள்ளது. சௌத் கரோலினாவிலும் ப்ளோரிடாவிலும் மெக் கெய்னின் வெற்றி யோசிக்கத் தூண்டுகிறது. பெருத்த நம்பிக்கை தரும் சொற்பெருக்கோடு தனது பதவியில் அமர்ந்த புஷ்ஷின் பதவிக் காலத்தில் பிரச்சினைகளின் அணி வகுப்பைத் தான் காணமுடிந்தது. களத்தில் இருக்கும் அதிபர் வேட்பாளர்களைப் பார்க்கும்போது, மக்கள் அரசியல், நிர்வாக அனுபவத்துக்கு அதிக மதிப்புத் தருகிறார்கள் என்று தோன்றுகிறது. இன்று அமெரிக்கா இருக்கும் நிலையில், அரசுக் கப்பலை நிலைப்படுத்தி, சரியான திசையில் செலுத்த அனுபவம் மிக்க ஒருவர் அதிபராக வருவதே நல்லது என்று மக்கள் நினைக்கிறார்களோ! பிரிட்டனின் இளவரசர் சார்லஸ் பெய்ஜிங் ஒலிம்பிக்கைப் பார்க்கச் சீனாவுக்குப் போகமாட்டேன் என்று கூறியிருக்கிறார். காரணம்: சீனா திபெத்தையும் அதன் தலைவர் தலாய் லாமாவையும் நடத்தும் முறை. சீனாவின் அடக்குமுறை உலகப் பிரசித்தி பெற்றது. ஏப்ரல் 2000-ல் '·பலூன் காங்' என்ற தியானப் பயிற்சிப் பிரிவினர் டியனன்மென் சதுக்கத்தில் (1989-ல் ஜனநாயகம் கோரிக் குவிந்த மாணவர்களைக் கொன்று குவித்த அதே இடம்தான்) அமைதியாகப் போராடியபோது அவர்களை அரக்கத்தனமாகத் தாக்கி, அதன் தலைவர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்தது சீனப் போலிஸ். சுரங்கங்கள் இடிந்து விழுந்து உள்ளேயிருக்கும் தொழிலாளர்கள் இடிபாடுகளில் இறப்பது அங்கே கிட்டத்தட்ட அன்றாட நிகழ்வாக இருக்கிறது. சீன அரசு எந்தவிதத் தொழிலாளர் பாதுகாப்பு நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. சீனாவிலிருந்து தப்பித்து வந்தவர்கள் சொல்லும் கண்ணீர்க் கதைகள் இன்னமும் உலகத்தின் காதுகளில் உறைக்கவில்லை.
| ஒவ்வொருமுறை இந்தியாவின் வன்முறைச் செயல் நடக்கும் போதும் அதில் ஒரு பங்களாதேஷியாவது இருப்பது தெரியவருகிறது. தற்போது, போடோ (Bodo) வன்முறையாளர்களுக்கு பங்களா தேசத்தில் போர்ப்பயிற்சி நடப்பதை ஒரு டீ.வி. சேனல் பட ஆதாரத்தோடு வெளியிட்டுள்ளது. தெரிந்தது இவ்வளவு. தெரியாமல் நடப்பது எத்தனையோ. | |
சீனா என்றதும் அண்மையில் பிரதமர் மன்மோஹன் சிங் அங்கே விஜயம் செய்தது நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அங்கே இருந்தபோது 'சீனாவிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது' என்று கூறினார். திபெத்தைக் கபளீகரம் செய்து விட்ட சீனா, மாவோயிஸ்ட்களின் மூலம் நேபாளத்தைக் கைப்பற்றி வருகிறது. அங்கே இருக்கும் பிற கட்சியினர் ஏதோ மாவோ யிஸ்ட்கள் ஜனநாயகவாதிகள் என்ற தவறான நம்பிக்கையில் மாவோயிஸ்ட்டுகளின் வலையில் அகப்பட்டு வருகின்றனர். போதாததற்கு, சிக்கிம் எங்களுடையது என்று சமீபத்தில் சீனா ஒரு அறிக்கை விட்டிருக்கிறது. 'இந்தி சீனி பாய் பாய்' (இந்தியரும் சீனரும் சகோதரர்கள்) என்று இங்கே நேரு கோஷமிட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில் நமது எல்லைக்குள் நுழைந்து சௌ-என்-லாய் ஆக்கிரமித்ததை மன்மோஹன் சிங் மறந்துவிட்டார். எவ்வளவு தான் புன்னகையோடு கைகுலுக்கினாலும் காரியத்தைக் கோட்டை விடக்கூடாது என்பதைச் சீனாவிடமிருந்து அவர் கற்றுக்கொண்டு எச்சரிக்கையாக இருப்பாரானால் நல்லதுதான். |
|
இந்தியாவுக்குள் ஏராளமான பங்களாதேஷிகள் கள்ளத்தனமாக நுழைந்துவிட்டதை இந்திய அரசால் தடுக்க முடியவில்லை. அப்படி ஒரு பிரச்சினை இருப்பதாகவே மேற்கு வங்கமும் மத்திய அரசும் ஒப்புக் கொள்வதில்லை. காரணம் ஓட்டுவங்கி அரசியல். ஒவ்வொருமுறை இந்தியாவின் வன்முறைச் செயல் நடக்கும் போதும் அதில் ஒரு பங்களாதேஷியாவது இருப்பது தெரியவருகிறது. தற்போது, போடோ (Bodo) வன்முறையாளர்களுக்கு பங்களா தேசத்தில் போர்ப்பயிற்சி நடப்பதை ஒரு டீ.வி. சேனல் பட ஆதாரத்தோடு வெளியிட்டுள்ளது. தெரிந்தது இவ்வளவு. தெரியாமல் நடப்பது எத்தனையோ. பாரதம் எப்போது விழித்துக் கொள்ளும்? நாம் நம்பும் கட்சி, கொள்கை, கோஷங்கள் ரீதியாகச் சிந்திப்பதை விட்டு, 'மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்று ஒவ்வொருவரும் தத்தமது இதயத்தின் துணையோடு அறிவைப் பயன்படுத்தினால் மேலே கூறியவை நமக்குப் புதிய ஒளியைத் தரும்.
இந்த இதழ் டாக்டர் வி.சி. குழந்தைசாமி அவர்களின் தனித்துவமிக்க நேர்காணல், இளம் மேதை ரஜனாவின் சாதனைச் சித்திரம், கிளீவ்லாந்து சுந்தரத்தின் சம்பிரதாயத்தைக் கட்டிக்காக்கும் முயற்சி, அமெரிக்கத் தேர்தல் பற்றிய அலசல் என்று பல அரிய அம்சங்களோடு வருகிறது. படியுங்கள், ரசியுங்கள், எங்களுக்கு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
'தென்றல்' வாசகர்களுக்குக் காதலர்தின வாழ்த்துக்கள்.
பிப்ரவரி 2008 |
|
|
|
|
|
|
|