பாரதி தமிழ்ச் சங்கம்: டாக்டர் கோபாலியின் நாடகப் பட்டறை சிகாகோவில் இசைப்போட்டி சவிதா செந்தில் நடன அரங்கேற்றம் பிரீதி கண்ணன் நடன அரங்கேற்றம் கிரேடர் அட்லாண்டா தமிழ்ச் சங்கம்: கல்லூரிக் கல்வி வழிகாட்டல் கருத்தரங்கம் லக்ஷ்மிநாராயணா இசைப்பள்ளி விநாயக சதுர்த்தி சினிமாயா குழுமத்தின் இந்திய அமெரிக்க சாதனையாளர் விருதுகள் சந்தியா நடாதூர் நடன அரங்கேற்றம்
|
|
கலாலயா வழங்கிய உன்னிகிருஷ்ணன் திரையிசை விருந்து |
|
- ச. திருமலைராஜன்|நவம்பர் 2007| |
|
|
|
செப்டம்பர் 23, 2007 அன்று ஹேவார்டு ஷபோ கல்லூரி அரங்கில் 'கலாலயா' தமிழ்த் திரையிசைத் தாரகைகளான உன்னிகிருஷ்ணன், சாதனா சர்கம், கார்த்திக், கங்கா ஆகியோர் பங்குபெற்ற இன்னிசை இரவொன்றை வழங்கினார்கள்.
கர்நாடக இசையின் முன்னணி இசைக் கலைஞரான உன்னிகிருஷ்ணன் தன் குரல் வளத்தால் ரசிகர்களின் மனதை 'என்னவளே அடி என்னவளே' பாடல் மூலம் கொள்ளை கொள்ள ஆரம்பித்து, தற்பொழுது திரையுலகின் மிகப் பிரபலமான பின்னணிப் பாடகராகவும் விளங்கி வருகிறார். வளைகுடாப் பகுதி இசை ஆர்வலர்கள் பலமுறை உன்னிகிருஷ்ணனை சாஸ்திரிய சங்கீத மேடைகளில் கேட்டு மகிழ்ந்திருக்கின்றனர். கலா ஐயர் அவர்களின் முயற்சியால் இந்த முறை ஒரு வித்தியாசமான உன்னிகிருஷ்ணனை ரசிகர்கள் அனுபவித்தனர். வழக்கமான வேஷ்டி, ஜிப்பா அல்லாமல், பளபளா உடைகளில் தோன்றி மேடையில் ஆடிப் பாடும் உற்சாகமான மெல்லிசைக் கலைஞர் உன்னிகிருஷ்ணனை அன்று ரசிக்க முடிந்தது. அவருடன் இணைந்து சாதனா சர்கம், கார்த்திக், கங்கா ஆகியோர் உற்சாகமான இசை விருந்தை அன்று அளித்தனர்.
ஆரம்பம் முதலே உன்னிகிருஷ்ணனும், கார்த்திக்கும் அடிக்கடி மேடையில் இருந்து இறங்கி வந்து ரசிகர்களுடன் கலந்து கொண்டு, அவர்களைத் தங்களுடன் பாட வைத்தது பரவசமான அனுபவமாக அமைந்தது. கார்த்திக்கின் பாடல்களுக்கு ஆட்டத்துடன் கூடிய பெரும் கரகோஷம் கிட்டியது. கார்த்திக்கும் உன்னியும் மைக்கேல் ஜாக்சன் நிகழ்ச்சி போன்ற இளமைத் துடிப்பான நிகழ்ச்சியை அன்று வழங்கினார்கள். உற்சாகம் கரைபுரண்டோடியதால் பாடகர்களும் சிறப்பான பாடல்களைத் தொடர்ந்து அளித்தனர். வளர்ந்து வரும் பின்னணிப் பாடகர் கார்த்திக்கு வளமையான குரல். உச்சஸ்தாயிக்கு அநாயசமாகச் சென்று வந்து ரசிகர்களைக் கொள்ளை கொண்டார்.
சாதனா சர்க்கம் மிக அடக்கத்துடன் தமிழ்த் திரையின் இளமைமாறாப் பாடல்களைப் பாடினார். சினேகிதியே, கொஞ்சும் மைனாக்களே, குழலூதும் கண்ணனுக்கு, நிலா காய்கிறது போன்ற பாடல்களைத் தனியாகப் பாடினார்.
உன்னிகிருஷ்ணன், கார்த்திக்குடன் இணைந்து பூம்பாவாய், ஆம்பல் ஆம்பல், சஹானா சாரல் பூத்தது, காற்றின் மொழி, உயிரே, உயிரே போன்ற பாடல்களைப் பாடினார். இனிமையும் உச்சரிப்புச் சுத்தமும் சேர்ந்த சாதனாவின் குரல் ரசிகர்களைச் சொக்க வைத்தது. கங்காவும் பல பாடல்களை அபாரமான குரல் வளத்துடன் பாடினார். |
|
உன்னிகிருஷ்ணன் 'உன் சமயலறையில் நான் உப்பா சர்க்கரையா', 'என்னவளே அடி என்னவளே' போன்ற தன் பிரபலமான பாடல்களுடன் தொடங்கி 'மார்கழித் திங்கள் அல்லவா' பாடலுக்கு எடுத்துக் கொண்ட ஆலாபனையில் தனது கர்நாடக இசைத் தேர்ச்சியை வெளிப்படுத்தினார். அந்தப் பாடல் நிகழ்ச்சியின் முத்திரைப் பாடலாக அமைந்து விட்டது.
சாதனா 'சந்தா ஓ சந்தா' போன்ற இந்திப் பாடல்களையும், கார்த்திக் 'சூடத் தாண்டுனா' போன்ற தெலுங்குப் பாடலையும், உன்னி 'கடலினக்கர போணோரே' போன்ற மலையாளைப் பாடலையும் பாடி, இசை மொழிகளைத் தாண்டியது என்பதை நிரூபித்தனர். உன்னிகிருஷ்ணன் செம்மீன் படத்தில் வந்த 'கடலினக்கர போணோரே' பாடியபொழுது ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆடிக்கொண்டே அரங்கத்தை ஒரு முழு வலம் வந்தனர்.
மொத்தத்தில் அன்றைய இசை இரவு உற்சாகத் துள்ளல் மிகுந்ததாக அமைந்தது.
ச. திருமலைராஜன் |
|
|
More
பாரதி தமிழ்ச் சங்கம்: டாக்டர் கோபாலியின் நாடகப் பட்டறை சிகாகோவில் இசைப்போட்டி சவிதா செந்தில் நடன அரங்கேற்றம் பிரீதி கண்ணன் நடன அரங்கேற்றம் கிரேடர் அட்லாண்டா தமிழ்ச் சங்கம்: கல்லூரிக் கல்வி வழிகாட்டல் கருத்தரங்கம் லக்ஷ்மிநாராயணா இசைப்பள்ளி விநாயக சதுர்த்தி சினிமாயா குழுமத்தின் இந்திய அமெரிக்க சாதனையாளர் விருதுகள் சந்தியா நடாதூர் நடன அரங்கேற்றம்
|
|
|
|
|
|
|