Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
November 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சமயம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா!
சிறுகதை
காந்தி தந்த பாடம்
மறுபடியும் விடியும்
பிறந்த மண்
- மோகன்|நவம்பர் 2007|
Share: 
சதாசிவம் மெதுவாகக் குனிந்து இரண்டு பிடி மண்ணை எடுத்து பிளாஸ்டிக் கவரில் போட்டார். மண். பிறந்து வளர்ந்த மண். நியூயார்க் சென்றவுடன் கார்லாவிடம் சொல்லி ஒரு அழகான கண்ணாடி ஜாடியில் போட்டு வைக்க வேண்டும். கடற்கரையில் அதிகக் கூட்டம் இல்லை. மீனும் உப்பும் கலந்த காற்றின் வாசனையை முகர்ந்தபடி சிலர் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் பெண்ணின் பிரசவத்துக்காகவோ பிள்ளையைப் பார்ப்பதற்காகவோ அமெரிக்கா சென்று வந்திருந்த சிலர் ஜார்ஜ் புஷ்ஷின் அரசியலை அலசியபடி அரை நிஜாருடனும், வெள்ளையாக இருந்து காவி படிந்து போன ஷ¥க்களுடனும் ஜாகிங் செய்து கொண்டிருந்தார்கள்.

சதாசிவம் மேகமூட்டத்தைப் பார்த்தார். இன்று அம்மா தெரியவில்லை. சாதாரணமாய் கனமான மனத்துடன் மேலே பார்த்தால் அம்மா தெரிவாள். நாலடிக்கும் மேலான உருவம். மாம்பழ நிறம். ஒல்லியான, சோகம் பாய்ந்த உருவம். சதாசிவத்தின் மனம் லேசாகிப் போகும். சதாசிவம் மெதுவாக வீட்டை நோக்கி நடந்தார். இன்று மாலை டெல்லி சென்று அங்கிருந்து நியூயார்க்.

இருபத்தியெட்டு வருடங்களுக்கு முன் இதேபோல் சதாசிவம் டெல்லி வழியாக நியூயார்க் செல்லும்போது அம்மாவும் அப்பாவும் ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தார்கள். கூடவே தங்கை உமா. லண்டன் விமான நிலையத்தில் அம்மா தந்திருந்த இட்லியும் தயிர்சாதமும் அமிர்தமாய் இனிக்க, அப்படியே திரும்பி வீட்டுக்கு ஓடிவிடமாட்டோமா என்று மனம் தத்தளிக்க, குளமான கண்களோடு நியூயார்க் விமானத்தில் ஏறிய சதாசிவம், ஐந்து வருடங்களில் டாக்டர் சிவாவாகத் திரும்ப வரும்போது தனியாக வரவில்லை. கூடவே ஐந்து மாத கர்ப்பிணியாய் கார்லாவும் வந்தாள். ஆடிப் போனார்கள் அப்பாவும் அம்மாவும்.

அரசல்புரசலாய் பிள்ளையின் சகவாசம் பற்றிக் கேட்டிருந்தாலும், அதையெல்லாம் மறந்துவிடுவான் என்ற நம்பிக்கையுடன் அம்மா ஒரு நாலைந்து பெண்களைத் தயார் செய்து வைத்திருந்தாள். அப்பா அடுத்தவள் உமாவின் கல்யாணத்தைப் பற்றிக் கோட்டை கட்டியிருந்தார். தகர்ந்த நம்பிக்கையும், ஆதங்கமும் அம்மாவை அதிக நாள் வாழவிடவில்லை. அப்பா, தங்கை உமாவை எங்கேயோ ஓரிடத்தில் கொடுத்துவிட்டு சாமியராகப் போனதாகக் கேள்வி.

கார்லா ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவள். கல்லூரி ஆராய்ச்சியில் துணையாக இருந்தவள். சதாசிவத்தின் வாழ்க்கைத் துணைவியாகி இரண்டு அழகான குழந்தைகளையும் தந்தவுடன், சதாசிவத்துக்கு வேறு உறவுகள் தேவையாக இருக்கவில்லை. பிறந்த உறவுகள் அறுந்து போக, புதிதாய் மலர்ந்த உறவுகளில் சதாசிவம் மூழ்கிவிட்டார். பச்சை டாலரும், பதவி உயர்வுகளும் அவரைச் சொந்தங்களிலிருந்து நிரந்தரமாகப் பிரித்து விட்டன.

கார்லாவின் அழகும், சதாசிவத்தின் அறிவும் இரண்டு குழந்தைகளையும் நியூயார்க்கின் மேல்மட்டத்துக்குக் கொண்டு செல்ல, சதாசிவம் தனிமைப்படலானார். தனிமை ஆணுக்கு மட்டும் சொந்தமல்ல. இரண்டு பெண் குழந்தைகளும் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொண்டனர்; கார்லா கர்த்தருக்குச் சேவை செய்வதில் தன்னை அர்ப்பணித்தாள். சர்ச்சைச் சார்ந்த நண்பன் ஜானுடன் கார்லா அதிக நேரத்தைச் செலவழிக்கத் தொடங்கினாள். சதாசிவம் கார்லாவை விட்டு ஒதுங்கிச் சென்னைக்குப் புறப்பட்டார்.

இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. சதாசிவத்தின் எதிர்பார்ப்புகள் கரைந்தன. தப்பு செய்து விட்டோமோ என்று வருத்தப்பட ஆரம்பித்தார். சென்னை முன்போல இல்லை. அம்மா, அப்பா இல்லாத ஊர். தங்கையை வம்புக்கிழுக்க முடியாத வீடு. எதுவுமே எதிர்பார்த்த மாதிரி இல்லை. கார்லாவும் இப்போதெல்லாம் கூப்பிடுவதில்லை. முதலில் அடிக்கடி கூப்பிட்டு அவள் பேசும் போதெல்லாம் அவளை உதாசீனப்படுத்தினார். மெதுவாக, கூப்பிடுவதை அவள் நிறுத்திவிட்டாள். குழந்தைகள் எப்போதாவது கூப்பிடுவதோடு சரி. சமையல்காரன், வேலைக்காரன் துணையோடும், கடற்கரை, கோவில் என்று பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த போதுதான் பழைய கம்பெனியிலிருந்து அழைப்பு வந்தது.
டாக்டர் சிவாவை உடனடியாக வரும்படி அழைப்பு விட்டனர். வாழ்க்கை மீண்டும் ஆரம்பித்தது போல உணர்ந்தார். கார்லாவிடம் மன்னிப்புக் கேட்டு மறுபடியும் தன் வீடு, தன் மனைவி, தன் குழந்தைகள் என்று வாழ வேண்டும்.

கேட்டைத் திறந்து சாதசிவம் உள்ளே வர சமையல்காரன் இரண்டு சப்பாத்திகளையும் ஒரு கிண்ணத்தில் பருப்பையும் கொண்டு வைத்தான்.

'ஐயா! வண்டி வந்திருமுங்க. சாப்பிட்டுட்டுக் கிளம்பச் சரியாயிருக்கும். மருந்தெல்லாம் பார்த்து சாப்பிடுங்க' அவன் குரலில் துக்கம்.

இரண்டு வருட பந்தம் முறிகிறதே என்ற ஏக்கம்.

வேலைக்காரன் பெரிய பிரயத்தனத்துடன் பெட்டிகளைத் தூக்கிக் காரில் வைப்பதைப் பார்த்தார். கடைசியாக அம்மாவின் படத்தை எடுத்துத் துடைத்து பெட்டியில் வைத்துக் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டார்.

'ஐயா லெட்டருங்க' கவரைப் பிரித்தார் சதாசிவம். ஆச்சரியம். கார்லாவிடமிருந்து. அவசரமாகப் படித்தார்.

'அன்புள்ள சிவா! இந்தக் கடிதம் உன் கையில் கிடைக்கும் போது நான் ஜானுடன் ஸ்பெயின் நாட்டுக்கே திரும்பியிருப்பேன். நம் இருபத்தி ஐந்து வருட தாம்பத்தியத்தின் பயனாக, பிறந்த மண் என்றால் என்ன என்று இப்போது உன்னிடமிருந்து கற்றுக்கொண்டு விட்டேன். இரண்டு வருடமாய் நீ எவ்வளவு நிம்மதியாயிருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். பிறந்த மண் என்பது எல்லா உறவுகளையும் விட மேலானது என்று நான் உணர ஜானும் ஒரு காரணம். இருவரும் ஒரு சர்ச்சில் சேவை செய்யப் போகிறோம். கர்த்தர் பிரியப்பட்டால் எப்போதாவது நாம் மீண்டும் சந்திப்போம்... பிரியமுடன் கார்லா'

தள்ளாடி காரைப் பார்த்து நடந்த சதாசிவம் பெட்டிகளை எடுத்து வீட்டுக்குள் வைக்க, வேலைக்காரன் ஒன்றும் புரியாமல் பார்த்தான்.

மெதுவாகப் பெட்டியைத் திறந்து பிளாஸ்டிக் கவரை எடுத்து, ரோஜாச் செடியின் அடியில் மண்ணைக் கொட்டினார். கொட்டிய மண்ணில் தெளிவாக அம்மா தெரிந்தாள். நாலடிக்கும் மேலான உயரம். மாம்பழ நிறம். ஒல்லியான உருவம். முகத்தில் மட்டும் சோகம் மறைந்து பரிவு.

மோஹன், ஹூஸ்டன், டெக்ஸாஸ்
More

காந்தி தந்த பாடம்
மறுபடியும் விடியும்
Share: