Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தமிழக அரசியல் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | ஜோக்ஸ் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பொது | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
வேண்டும் சகிப்புத் தன்மை [நவம்பர் 16 - உலக சகிப்புத் தன்மை நாள்]
பிச்சை
நன்றி நவில ஓர் நாள்
- ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ|நவம்பர் 2001|
Share:
'எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந் நன்றி கொன்ற மகற்கு' -

இன்று நேற்றல்ல ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் திருவாய் மலர்ந்தருளிய வேதமிது;

அமெரிக்கர்கள் வருடத்தில் ஒருநாளை நன்றி சொல்ல ஒதுக்கியிருக்கிறார்கள். அதற்காக மற்ற நாள்களில் அமெரிக்கர்கள் நன்றி சொல்ல மாட்டார்களா? என்று யாரும் கேட்டு விடாதீர்கள். வருஷம் முழுக்க எங்களுக்காக உழைத்தீர்கள், உங்களுக்கு எங்கள் நன்றிகள்! முதலாளிகள், தொழிலாளிகளுக்கும்; நிர்வாகம் தங்கள் ஊழியர்களுக்கும்; ஒருவருக்கொருவர் நன்றி பரிமாறிக் கொள்ளும் நன்நாளாக, ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நான்காம் வாரத்தில் வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

'உதவி' என்ற மூன்றெழுத்தைச் செய்யும் போதோ, பெறும் போதோ, அடிமனத்து வானில் உதயமாகும் மூன்றெழுத்து தான் 'நன்றி'. அந்த நன்றியைக் கொடுக்கிறவருக்கும் பெறுகிறவருக்கும் தான் எவ்வளவு பேரானந்தப் பெருவெள்ளம் மனதில் பொங்கி வழிகிறது.

இன்றைக்கு அமெரிக்கா முழுமைக்கும் இந்த நன்றி நவிலப்படுவதற்குக் காரணம் யார்? இங்கிலாந்து......! ஏன்? இதற்கும் ஒரு பின்னணி உண்டு.

இங்கிலாந்து

1600களில் இங்கிலாந்து நாட்டின் கிறிஸ்துவ தேவலாயங்கள் அந்த நாட்டை ஆண்டு வந்த மன்னனின் இரும்புப்பிடிக்குள் சிக்கித் தவித்தது. இப்படித்தான் ஆலயங்களில் வழிபட வேண்டும்; மதச் சடங்குகள் இன்னின்னபடிதான் நடைபெற வேண்டும்; பிறப்பாயிருந்தாலும், இறப்பாயிருந்தாலும் அரச கட்டளைப்படிதான் நடக்க வேண்டும், என்கிற கட்டுப்பழட கிறிஸ்தவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தியது. இவர்கள் அரச கட்டளைக்கு எதிரானவர்கள் என முத்திரை குத்தப்பட்டுக் கொடுமைப்படுத்தப் பட்டனர். வெஞ்சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளாயினர். தங்களுக்கு விருப்பமான முறையில் கடவுளை வணங்க முடியவில்லையே என்று எண்ணியவர்கள் இரகசியமாகத் திட்டம் தீட்டி இங்கிலாந்தை விட்டு வெளியேறுவது என்ற முடிவுக்கு வந்தனர். இவர்கள் 'பியூரிட்டன்ஸ்' (puritans) என அழைக்கப்பட்டனர்.

மத சுதந்திரம் வேண்டித் தங்கள் தாயகத்தை விட்டு ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக, 'ஸ்பீட் வெல்' மற்றும் 'மே ·ப்ளவர்' என்ற இரண்டு கப்பல்களில் இலக்கு இல்லாத தங்கள் பயணதைத் (செப்டம்பர், 1620ம் ஆண்டு) துவங்கினர். புதிய உலகம் புகுவோம்; புதிய, புதிய இன்பம் காண்போம்; நமக்கென ஒரு வரலாறு சமைப்போம் என்கிற உறுதிமொழியோடு புறப்பட்டனர். உணவு, துணி, ஆயுதம், விவசாயக் கருவிகள், விதைகள் என்கிற சேகரிப்புகளோடு நிரந்தரமாகப் புலம் பெயர்ந்து விடுகிற முயற்சியாகப் பயணித்தனர்.

கனவு பூமி

கடற்பயணம் எளிதாக அமைந்து விடவில்லை. நிலம் காணா நீர்ப்பரப்பு நீண்டுகொண்டே போக, கடல் நோய் கண்டு பலர் தங்கள் கனவு நிறைவேறாமலேயே மாண்டு போயினர். பல்வேறு சிரமங்களுக்கு இடையே அவர்கள் வந்து சேர்நத் இடம் அமெரிக்காவின் மஸாசுசெட்ஸ் மாநிலத்தில் வடக்கு கேப் காட் நகரின் ப்ளைமவுத் பகுதியாகும். கனவுப் பூமியில் கால் பதித்த நேரம் (டிசம்பர் 11ம் தேதி) உடலை ஊடுருவி உள்ளெலும்பைக் குளி வைக்கிற டிசம்பர் குளிர்; பயணக் களைப்பு, பழக்கமில்லாத சீதோஷ்ண நிலை என அவர்களில் பலர் அதற்குப் பலியாக நேரிட்டது.

எஞ்சியிருந்தோர், கனவுகள் கலைந்து, எதிர் காலம் இருண்டு கவலை சூழ, நம்பிக்கைகள் பொய்த்துப் போன நிலையில் அவர்களுக்கு விடிவெள்ளியாக, 'ஸ்குவாண்டோ' என்ற அமெரிக்கர் தனது சகாக்களோடு உதவ முன்வந்தார். புதிய சுற்றுச் சூழலில் தங்களைக் காத்துக் கொள்ள, வாழ்வை எதிர்கொள்ள வழி முறைகளைச் சொல்லிக் கொடுத்தார். அநேக விஷயங்களைப் பூர்வீக அமெரிக்கர்களிடம் கற்றுக் கொண்டனர். அமெரிக்கச் சூழலுக்கு ஏற்றவாறு எப்படி விவசாயம் செய்வது? விஷத்தன்மை வாய்ந்த பயிர்கள் எது? முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்திக்கு என்ன முறைகளைக் கடைப்பிடிப்பது? வேட்டையாடுவதற்கான சிறந்த வழிமுறைகள் எது? போன்றவற்றை கற்றுக் கொண்டனர்.

ஸ்குவாண்டோ, தனது நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் இவர்களுக்கு உதவச் செய்தார். இவர்களுக்கு மீனைச் சாப்பிட மட்டும் கொடுக்காமல், மீன் பிடிக்கவும் கற்றுக் கொடுத்தார்கள். இது அவர்களுக்கு மிகவும் பேருதவியாக இருந்தது. மண்ணின் மகிமைக்கு ஏற்றவாறு பயிர் செய்தனர்; மக்காச் சோளம் பொன் போல விளைந்தது; மிகப் பெரிய பூசணி மற்றும் காய்கறி, பழ வகைகளைப் பயிரிட்டனர். 'டர்க்கி' எனப்படும் காட்டு வான்கோழிகளை வளர்த்து உணவுக்குப் பயன்படுத்தினர். இங்கிலாந்திலிருந்து கையோடு கொண்டு வந்த விதைகள் பல இந்த மண்ணில் முளைக்கும் சாத்தியமற்றுப் போனாலும், அமெரிக்கர்களின் அன்பான உதவியாலும், வழி காட்டுதலாலும் கடின உழைப்பால் கற்பாறை நிலங்களைப் பொன்கொழிக்கும் பூமியாக மாற்றினர்.

அறுவடைத் திருவிழா

அறுவடைக்காலம் வந்தது; அதாவது 1621ம் ஆண்டு அவர்களுக்குக் கிடைத்த செழிப்பான பூமி விளைச்சலால் அகமும் முகமும் ஒரு சேர மகிழ்ந்து அதைச் சிறப்பாகக் கொண்டாட எண்ணினர். புதிய பூமியில் அவர்களுக்கு வழிகாட்டிய அமெரிக்கர்களைக் கெளரவிக்க விரும்பினர். அபரிமிதமான விளைச்சலுக்கு உறுதுணையாக இருந்ததற்கும், தங்களின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை ஒளியை எண்ணெய்யும் திரியுமாக இருந்து உதவிய அமெரிக்கப் பேருள்ளங்களை மகிழ்விக்க மூன்று நாட்கள் விருந்தை ஏற்பாடு செய்தனர். எப்படி இங்கிலாந்து தேசத்தில் அறுவடைத் திருநாளைப் பரம்பரை பரம்பரையாகக் கொண்டாடுவார்களோ அதைப்போலக் கொண்டாடினர்.
உற்சாக ஷாம்ப்பெய்ன்

இங்கிலாந்திலிருந்து வந்தவர்களுக்கு தலைவராக இருந்த கேப்டன் மைல்ஸ் ஸ்டாண்டிஷ், வெனிசன் என்ற ருசி மிக்க காட்டு வான்கோழி, காட்டுப் பறவைக்கறி வகைககள், விதம்விதமான மீன் வகைகள், பழங்கள் என்று தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்தார். வந்தாரை வரவேற்று வாழ வழி கோலியவர்களுக்குத் தங்கள் நன்றியை வெளிப்படுத்தும் வகையில், செய்ந் நன்றி மறவாமல் அவர்களுக்கான விமரிசையான விருந்தாகப் படைத்தனர். இவ்விருந்திற்கு ஸ்குவாண்டோவும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் அழைக்கப்பட்டு கலந்து கொண்டனர்.

பொது இடத்தில் பெருவிருந்து நடத்தித் தங்கள் நன்றியை வெளிப்படுத்தினர். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நன்றி நவிலும் திருவிழாவில் விளையாட்டு, கேளிக்கைகள், நடனங்கள் என அமெரிக்கர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினர். மூன்றாம் நாள் விசேஷ மதுபான வகைகளுடன் 'பம்ப்கின் பை' எனப்படும் பூசணி கேக் வெட்டி, ஷாம்ப்பெய்ன் பாட்டில்கள் உற்சாகமாய்ப் பொங்கித் திறக்க, உல்லாசப் பொழுதாகிப் போனது. அன்றிலிருந்து 'தாங்க்ஸ் கிவ்விங் டே' மெனுக்களில் இன்றுவரை பெரிய மாற்றம் ஏதும் இன்றித் தொடர்கிறது.

1621ம் ஆண்டு நடைபெற்ற நன்றித் திருநாள், 'First THanks Giving Day' தொடர்ந்து இது அமெரிக்காவின் பட்டி தொட்டி, நகரம் எங்கும் நன்றி நவில்கிற விருந்து வருடம் தவறாமல் நடந்தது. 1676ம் ஆண்டு மஸாசுசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த சார்லஸ் டவுன் கவுன்சில் இந்த நாளை அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடத் தீர்மானம் நிறைவேற்றி அங்கீகரித்தது.

1777ம் ஆண்டு அமெரிக்க கான்டினென்டல் காங்கிரஸ் தேசியக் கொண்டாட்டமாக அறிவித்தது. இதில் அன்றைய 13 மாகாணங்களும் கலந்து கொண்ட பெருவிழாவாக நடைபெற்றது. 1783ம் ஆண்டு வரை அரசின் சார்பில் நன்றி நவிலும் நாளாக விளங்கினாலும், அமெரிக்க அதிபர் ஜியார்ஜ் வாஷிங்டன் 1789ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதியன்று நாம் ஒவ்வொருவரும் நன்றி பரிமாறிக்கொண்டாலும், அன்றைய தினம் இறைவனுக்கும் நன்றி செலுத்திடும் வகையில் விசேஷ பிரார்த்தனைகளை மேற்கொள்ளவும் வேண்டும் என்றார்.

தேசிய விடுமுறை தினம்

சாரா ஜோசப் ஹேலி என்ற பத்திரிக்கை ஆசிரியரும், சமூக சேவை இயக்கத் தலைவியுமான இவர் அமெரிக்க அரசாங்கத்தை இந்நாளை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கக் கோரி போராடினார். இவருடைய சீரிய இயல்புகளுக்கு விடை கண்டவர் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன். நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் வரும் வியாழக்கிழமை 'தேசிய விடுமுறை தினம்' என 1863ம் ஆண்டு அறிவிக்க, நன்றி நவிலல் மழையில் நனைந்தார் லிங்கன்.

அரசியல்வாதிகள் அநியாயம் அந்தக் காலகட்டத்தில் கூட அரங்கேறியிருக்கிறது. லிங்கனுக்குப் பின் வந்த அமெரிக்க அதிபர் ·ப்ராங்களின் டி. ரூஸ்வெல்ட் தடாலடியாக நன்றி நவிலல் தினம் நவம்பர் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் வரும் வியாழக்கிழமை என்று 1939ம் ஆண்டில் மாற்றி அறிவித்தார். இந்த மாற்றத்திற்கு வினோதமான காரணத்தையும் கூறினார். இதற்கு அமெரிக்க மக்கள் ஆதரவு இல்லாததோடு தங்கள் அதிருப்தியையும் வெளியிட்டனர். அது மட்டுமல்லாமல், வழக்கமாகக் கொண்டாடும் நாலாவது வாரத்தில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் கொண்டாடி மகிழ்ந்தனர். அதிபர் ரூஸ்வெல்ட், தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ள மீண்டும் 1941ம் ஆண்டு மீண்டும் 'THANKS GIVING DAY' நவம்பர் நான்காம் வார வியாழக்கிழமை தேசிய விடுமுறையோடு, நன்றி நவில் தினம் அனுசரிக்கப்படும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

இன்று....

உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அவரவர் பகுதியில் உள்ள சமூகக் கூடங்களில் கூடி மன மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துக் கொள்ளுகின்றனர். குடும்பங்கள், நண்பர்கள், அண்டை அயலார், தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடின்றிப் பொது விருந்தில் கலந்து கொள்கின்றனர். மகிழ்ச்சியில் ஒன்றாகிச் சங்கமித்துப் போகின்றனர். வெளியூர், வெளி மாநிலங்களில் உள்ள உறவினர், நண்பர்களுக்கு வாழ்த்து அஞ்சல் அட்டைகளை அனுப்பித் தங்கள் எண்ணக் கிடக்கைகளை - நன்றியை வெளிப்படுத்துகின்றனர். அலுவலகங்களில் வேலை பார்ப்போர் அலுவலக வளாகங்களிலோ அல்லது ஓட்டல்களில் விருந்து உண்டு பரிசுப் பொருள்கள் அளித்து மகிழ்கின்றனர்.

தேவாலயங்களில் விசேஷப் பிரார்த்தனைகளின் முடிவில் சிறப்பு விருந்துண்டு மகிழ்கிறார்கள். பெரும்பாலான அலுவலகங்களில் தமது ஊழியர்களுக்கு, 'கி·ப்ட் சர்டிபிகேட்' பரிசாக வழங்கி கெளரவிக்கின்றனர். கடைகளில் 10% முதல் 50% வரை சிறப்புத் தள்ளுபடிகளை வழங்கி வாடிக்கையாளர்களை வசீகரிக்கிறார்கள். பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர்களும், மாணவர்களும் கூடி நன்றிதனை விருந்தோடு பரிமாறிக் கொள்ளுகின்றனர்.

அமெரிக்கா என்றாலே சொர்க்கமாகவும், பணம் கொழிக்கும் பூமியாகவும், அங்கு வாழ்கிறவர்கள் எல்லோரும் மலர்ப்படுக்கையில் இருப்பது போலவும் பல நாட்டினர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை பேர்களுக்கு இந்நாடு முள்படுக்கையாக இருக்கிறது என்பதை இது போன்ற நாளில் நன்றாக அறிய முடியும். அனாதைச் சிறுவர், சிறுமியர், ஆதரவற்ற முதியோர், மூவேளை உணவுக் கனவு.... ஒருவேளை நனவு ஆகுமா? உயிரை உறைய வைக்கும் உறைபனியில் உறைவிடம் சாத்தியமில்லாமல் வாழ்க்கைச் சிக்கல்களில் நைந்து நாராகிப் போனவர்கள் எல்லாம் இங்கிருக்கிறார்கள் என்றால் மிகப் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்காகப் பல்வேறு சமூக நலத்தொண்டு நிறுவனங்கள் இந்நாளில் பொது விருந்துக்கு ஏற்பாடு செய்து அளிக்கின்றனர். பெரிய, பெரிய உணவு விடுதிகள் கூட பாரம்பரிய விருந்தான வான்கோழிக் கறி சமைத்து ஏழைகளுக்கு அன்று மதியம் இலவசமாக வழங்குகிறார்கள். அவர்களின் குழந்தைகளுக்கு உணவுடன் சிறு பரிசுகள் அல்லது ஐந்து டாலர் பணமும், உணவுப் பொட்டலமும் வழங்குவதைக் காணலாம். பசித்தே கிடந்த வயிறு புசித்த பின் மனநிறைவாக, இதயப்பூர்வமாக பூக்கிற நன்றிகள் இந்நாளில் தான்!

ஆல்பர்ட் ·பெர்னாண்டோ
More

வேண்டும் சகிப்புத் தன்மை [நவம்பர் 16 - உலக சகிப்புத் தன்மை நாள்]
பிச்சை
Share: 




© Copyright 2020 Tamilonline