Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | சிறுகதை | ஜோக்ஸ் | பொது | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | தமிழக அரசியல் | சமயம் | சினிமா சினிமா | முன்னோடி
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
டெட்ராய்ட் பெருநகதில் தமிழர் திருவிழா
- கோம்ஸ் கணபதி|ஆகஸ்டு 2001|
Share:
Click Here Enlargeதமிழ்நாடு அறக்கட்டளையும் தமிழ்ச் சங்கப் பேரவையும் மிச்சிகன் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து டெட்ராய் பெருநகரில் ஜூலை 6,7,8 தேதிகளில் கொண்டாடிய தமிழர் திருவிழா பல வகைகளில் மிகச் சிறப்புடைய ஒன்றாகும். எப்படி இந்த விழாவை நடத்தப் போகிறோம்..... என்று விழா அமைப்பாளர்கள் மலைத்து நின்றது மறுக்க முடியாத உண்மை. ஆனாலும் சீரான நிகழ்ச்சிகள், செவ்வையான உணவு, கண்களுக்கு விருந்தாய் நடனங்கள், காதுக்கினிய இசை.... என்று எல்லாமே வியத்தக்க முறையில் நடைபெற்றது மறைக்க முடியாத உண்மை. இவ்விழாவினை இத்தனை அழகாய் நடத்தித் தந்த விழாத் தலைவர் திரு. கணேசன் மற்றும் மிச்சிகன் தமிழ்ச்சங்க நண்பர்கள் அனைவரும் நமது பாராட்டுக்கும் அன்புக்கும் உரியவர்கள்.

இந்த அமெரிக்க மண்ணில் வந்து வேரூன்றிய நம்பில் பலர் நீண்டநாளாய் நண்பர்களாய் இருந்து பின்னர் உறுதி மிக்கப் பாசப் பிணைப்பில் நம்மைப் பிணித்துக் கொண்டு கிட்டத்தட்ட உறவினர்களாகவே ஆகி விடுகிறோம் என்றாலும் வேலை காரணமாகப் பல நூறு ஆயிரம் மைல்கள் என்று பிரிந்து வாழுகையில் நட்பிற்காக ஏங்குகிறோம். தமிழர் விழா அந்த நட்பு கருகிவிடாதிருக்க ஓரளவேனும் துணைபுரிகிறது. நம்மைக் காட்டிலும் நமது குழந்தைகள் நல்லதொரு இவ்வாய்ப்பினை நழுவ விடுவதில்லை.

வெள்ளிக்கிழமை மாலையே விழா களை கட்டிவிட்டது. மிச்சிகன் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. ஸ்ரீநிராமன் தலைமையில் டாக்டர் சுப்ரமணியம் குழுவினர் வந்திருந்தோரை வரவேற்ற அழகு... நாதசுரமும், வெற்றிலைத் தட்டும் இல்லாத குறை தான், போங்கள்!

தமிழ்நாடு அறக்கட்டளையின் துணையுடன் தமிழகத்தில் திரு. இளங்கோவின் தலைமையில் இயங்கி வருகிறது கூத்தங்குளம் கிராமப் பஞ்சாயத்து.

இங்கு வாழும் ஏழைப் பெண்டிரின் கைவண்ணத்தில் சணல் கயிற்றில் வண்ணப் பேழையாய் வடித்தெடுக்கப்பட்ட அழகான பைகளில் (Jute Bags) விழா நிகழ்ச்சி விரலுடன், மாநாட்டுச் சிறப்பு மலரையுடம் இணைத்து விழாவுக்கு வந்திருந்தோருக்கு வழங்கிய போது அவர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி.

எங்கோ தமிழகத்தில் வாழும் ஓர் ஏழைச் சகோதரிக்கு ஏதோ என்னாலியன்ற சிறிய உதவி.....

ஆடம்பரமான தாம்பூலப் பைகளைக் காட்டிலும் அழுகு மிகுந்த கோணிப் பையில் பொதிந்திருந்த கிராமத்து அன்பு....

ஜுலை 7 சனிக்கிழமை - டெட்ராய்ட் நகர் மில்லன்னியம் அரங்கு என்றுமில்லாது ஒரு அண்ணாமலை மன்றத்தைப் போலவோ மியூசிக் அகாடமியைப் போலவோ பட்டாடை புனைந்து தன்னை அழகுபடுத்திக் கொண்டு ஆணவமாய் நின்றதெனலாம். கள்ளையும் தீயையும் சேர்த்து நல்ல காற்றையும் வானவெளியையும் சேர்த்துத் தெள்ளு தமிழை நாளெல்லாம் உண்டு மகிழ்ந்ததெனலாம்.

தமிழ்த் தாய் வாழ்த்துடன் விழாத் துவங்கியது. கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தில் பெண்களின் கல்விக்காகத் தன்னைச் சந்தனமாய் அரைத்துக் கொண்ட டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ் துவக்க உரையினை வழங்கி விழா சிறப்பு மலரையும் வெளியிட்டார். எண்ணி இருபது நாட்களுக்குள் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் வகையில் விழாச் சிறப்பு மலரை உருவாக்கிட்ட திரு. சோமலெ சோமசுந்தரம் மற்றும் மலர் வெளியீட்டுக் குழுவினரைப் பாராட்ட வார்த்தைகளேயில்லை! பால்டிமோர் ந்ருத்யசாலா தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற தலைப்பில் வழங்கிய பரதநாட்டிய நிகழ்ச்சி வண்ண விளக்காய் ஒளிர்ந்தது. புதுமைக் கவிஞர் அறிவுமதியின் தலைமையில் கவியரங்கம் தடி உதை உண்டும், காலுதை உண்டும் வருந்திடும் செய்தி, ஈழத்தில் மாய்ந்திடும் செய்தியைச் சொல்லியபோது அரங்கு உரைந்து போனது.

மதிய நிகழ்ச்சிகள் மிச்சிகன் தமிழ்ச்சங்கச் சங்கத்தினரின் நாட்டிய, நாடகங்களுடன் துவங்கியது. பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் வில்லுப்பாட்டு என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து வரும் திரு. எரிக் மில்லர் மகாகவியின் கவிதை ஒன்றினைச் சொல்லி வில்லுப்பாட்டின் சிறப்புக்களை மழலைத் தமிழில் வழங்கிய போத மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதில் ஓர் மகிமை இல்லை; திறமையான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்று பாரதி ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கண்ட கனவு நனவாயிற்றோ என எண்ணி வியந்தோம்.

தமிழகத்திலிருந்து வந்திருந்த அபிநயா நாட்டியாலயா குழுவினர் முத்தமிழ் முழக்கம் என்ற பொருளில் வழங்கிய நாட்டிய நடனம் விழிகளுக்கும் செவிகளுக்கும் பெரும் விருந்தாய் இருந்ததோடு தேமதுரத் தமிழோசையின் சிறப்பினை செவ்வையாய்ச் சொல்லிற்று. நாட்டியக்குழுவினர் அனைவரும் தமிழகத்தில் கல்லூரி மாணவியர்; அவர்களில் ஒருவருக்கு காது கேட்காது என அறிந்த போது அரங்கம் நெகிழ்ந்து போயிற்று.

பின்னர், ஈழத்தில் நிகழும் துயர்களை டொரன்டோ தமிழ்ச் சங்கம் நாட்டிய நிகழ்ச்சி மூலம் படம் பிடித்துக் காட்டியது. தொல்காப்பியனார் தலைமையில் படடிமன்றத்துடன் மதிய நிகழ்ச்சிகள் முடிவுற்றன.

காலை மற்றும் மாலை நிகழ்ச்சிகளின் போது தமிழ்நாடு அறக்கட்டளையின் உதவியில் இயங்கி வரும் திட்டங்கள் சிலவற்றை டாக்டர் ஆதி நாராயணன், திரு. காசி கவுண்டன் ஆகியோர் விளக்கினர். முன்னாள் அறக்கட்டளைத் தலைவர்களில் ஒருவரான டாக்டர் பெருமாள்சாமி அறக்கட்டளையின் துவக்க நாட்களை நின¨வு கூர்ந்ததோடு நின்றிடாது, இனி எங்கு செல்லுதல் நலம் பயக்கும் என்றும் தீர்க்கமாய் எடுத்துரைத்தார்.
இனி... மாலைச்சிறப்பு நிகழ்ச்சிகளை விவரிப்பதற்கு முன் விழாவின் போது வழங்கப்பட்ட உணவு மற்றும் விருந்தோம்பலைப் பற்றிச் சொல்வது அவசியமாகிறது.

......... எதைச் சொல்ல, எதை விட! இலை, அம்பி, சாருக்கு சாம்பார் கொண்டு வா. இதுவெல்லாம் இல்லையே தவிர தமிழ்நாட்டில் கூட இத்தனைப் பரிவுடன் கூடிய ஒரு விருந்தோம்பலைப் பார்ப்பது அரிது. அப்பப்பா! எத்தனை வகை! எத்தனை சுவை! எத்தனை அழகு! ... அதை வழங்கிய நேர்த்தி, பரிவு, எங்குமே காத்திருக்க வேண்டாத நிலை... எல்லாவற்றையும் விட நேரம் தவறாமல் வழங்கிய அழகு..... யாராவது ஒரு குறை சொல்ல வேண்டுமே! திருமதி. ராணி கணேசன் மற்றும் பாலு தலைமையிலான பந்திக் குழுவினரே (Food Committee!) - Food was superb! Service was excellent!!

தமிழ்ச்சங்கப் பேரவையின் சார்பில் மாட்சிமைப் பரிசு வழங்கும் நிகழ்ச்சியுடன் மாலை விழா தென்றலை வீசத் தொடங்கியது என்றாலும் ஈழவர் தம் துயர்கண்டு, கொதித்து, வெம்பி, எழுவதில்லாப் புழுவினங்கள் இருந்தென், போயென்? என்ற திரு. வை.கோ அவர்கள் பரணி பாடியபோது அரங்கத்தில் தென்றல் புயலானது போலொரு உணர்வு.

தேசியத் தமிழ் இளைஞர் அமைப்பு (National Tamil Youth Organization) வழங்கிய நிகழ்ச்சிகள் மண்வாசனையை நம் மழலைகள் மறந்துவிடவில்லை என நினைவூட்டிற்று. NTYO தலைவர் சுதாகர் வடிவேலு தலைமையில் தமிழ்நாட்டில் Medic Van Project க்காக அவர்கள் நிதி திரட்டிய பாங்கு ஒன்றிற்காகவே நம் குழந்தைகளைப் பற்றி நாம் பெருமை கொள்ளுதல் வேண்டும்.

எக்ஸ்நோரா திரு. நிர்மல் அவர்கள் பேசினால் நாளெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம். ஏனென்றால் அவரிடமிருந்து வரும் வார்த்தைகள் அத்தனையும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வருபவை. வார்த்தைகளுக்கு அரிதாரம் பூசாமல் வாக்கியங்களுக்கு நெருப்பூட்டி நடப்பதைச் சொல்லி நாளைக்கு வழி சொல்பவர். தமிழகத்துக்கு இன்னும் எத்தனையோ நிர்மல்கள் தேவை.

வார்த்தைச் சித்தர், ஞானபாரதி வலம்புரி ஜான் அவர்களின் உரை தென்றல் போய், புயல் வீசிய பின் இதமாய் வருடிய வாடைக் காற்றாய்த் தமிழைச் சுமந்து மணத்தது.

மாலைச் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு மாலையிட்டது உன்னி கிருஷ்ணன், தேவன் குழுவினர் வழங்கிய இன்னிசை.

இன்னிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த செல்வி விநோதினி ஷண்முகவேலு நிகழ்ச்சிகளை அழகாய்த் தொகுத்து வழங்கினார்.

ஜூலை 8 ஞாயிறு

முந்திய இரவும் யாரும் தூங்கியதாய்த் தெரியவில்லை. என்றாலும் ஞாயிறு காலையில் என்னினிய தமிழகமே......! என்ற தலைப்பில் சனிக்கிழமை விழாச் சிறப்புரையாளர்கள் அனைவரும கலந்து கொண்டு உரையாற்றிய கருத்தரங்குக்கு நூற்றுக்கும் மேலானோர் வந்திருந்து, கேட்டு மகிழ்ந்தனர்.

எத்தனையோ தடங்கல்கள் குறுக்கிட, இந்த விழா நடக்குமோ நடக்காதோ என்ற நிலை கடந்து குறுகிய நாட்களுக்குள் திட்டமிட்டு, சிக்கனமாய்ச் செலவிட்டு குறைவான குறைகளுடன் டெட்ராய்ட் பெருநகரில் நாமெடுத்திட்ட இந்தப் பெருவிழா ஒரு சாதனையெனில், அது விழாவை வந்திருந்து சிறப்பித்த தமிழ் நண்பர்களின் சாதனையேயாகும்.!

கோம்ஸ் கணபதி
Share: 




© Copyright 2020 Tamilonline