தங்கர்பச்சானின் 'அழகி' மீடியா ட்ரீம்ஸ் வழங்கும் சேரனின் பாண்டவர் பூமி மஜ்னு கேசட் வெளியீட்டு விழா ஞாயிறு ஒளி மழையில் நடிகர் திலகம் 1927 - 2001
|
|
இசைத்தமிழ் நீ செய்த அருட்சாதனை.... |
|
- மது|ஆகஸ்டு 2001| |
|
|
|
திரை இசை வரலாற்றில் நாற்பதுகளில் தொடங்கி நாற்பது ஆண்டுகள் திரை இசையில் ராகமாளிகை படைத்த அற்புதமான இசைக் கலைஞர் கே.வி. மகாதேவன். இசையின் அடிப்படை நுணுக்கங்களை சாதாரண மக்களிடம் 'எதையும் கொடுக்கிறபடி கொடுத்தால் நிச்சயம் வரவேற்பு கிடைக்கும்' என்ற நம்பிக்கையுடன் மக்கள் ரசனையை நிலைநிறுத்த முயற்சி செய்தவர்.
ஜி. ராமநாதனின் கர்நாடகப் பாணிக்கு வாரிசாக வளர்ந்தவர் கே.வி. மகாதேவன். ராக இசையும், தெம்மாங்கும், மெல்லிசையும் தேவைக்கேற்றபடி மலர்ந்து பாட்டை உயிர்ப்பிக்கும் கலை இவரிடம் இயல்பாக இருந்தது. அத்தகைய கலைஞன் கே.வி. மகாதேவன் உலக இசைதினமாக ஜூலை 21 அன்று தனது கலைமூச்சை நிறுத்திக் கொண்டார்.
நாகர்கோவில் அருகே கிருஷ்ணன் கோயில் என்ற ஊரில் வெங்கடாசலம் அய்யர் இலட்சுமி அம்மாள் தம்பதிக்கு மகாதேவன் 20.3.1918இல் பிறந்தார். பாரம்பரியமான இசைவிற்பன்னர்கள் நிறைந்த குடும்பம். மகாதேவன் தாத்தா திருவிதாங்கூர் அரண்மனையில் சங்கீத வித்வானாக இருந்தார். மகாதேவனின் தந்தையும் ஒரு பெரிய பாகவதர். மகாதேவன் முதலில் தந்தையிடமே இசைப் பாடல்களை கற்றார். பிறகு பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறைப்படி சில ஆண்டுகள் இசை பயின்றார். மேடையில் தனியாக கச்சேரி செய்யக் கூடியளவிற்கு மகாதேவனுக்கு இசை ஞானம் வளர்ந்தது.
அந்தக் காலத்தில் பாய்ஸ் கம்பெனி நாடகங்கள் பிரபலமாக இருந்தது. இங்கு மகாதேவன் தனது பதிமூன்றாவது வயதில் பெண் வேடமேற்று நடிக்கத் தொடங்கினார். பின்னர் ஒரு ஓட்டலில் வேலைக்குச் சேர்ந்தார். இவ்வாறு வயிற்றுப் பாட்டை பார்த்து வந்தார்.
ஒருவாறு இசையமைப்பாளர்கள் டி.ஏ. கல்யாணம், எஸ்.வி. வெங்கட்ராமன் ஆகியோரிடம் உதவி இசையமைப்பாளராக இணைந்து கொண்டார். மார்டன் தியேட்டர்சில் நுழைந்தார். அப்போது அங்கு வாத்தியக் கலைஞர்களாக இருந்தவர்களில் டி.ஜி. லிங்கப்பா, டி.ஆர். பாப்பா ஆகியோர் டி.ஆர். சுந்தரத்திடம் கே.வி. மகாதேவனை இசையமைப்பாளராக முன்னிறுத்தினார்கள்.
மார்டன் தியேட்டர்ஸ் தயாரித்த மனோன்மணி (1942) என்னும் படத்தில் தன் முதல் திரையிசைப் பாடலுக்கு கே.வி. மகாதேவன் இசையமைத்தார். இப்பாடல் பி.யு. சின்னப்பாவின் உணர்ச்சி ததும்பும் குரலில் ஒலித்த 'மோகானாங்க வதனி'.
முழுமையான முதல்பட வாய்ப்பு ஆனந்தன் (1942) மூலம் ஆரம்பமாகிறது. அமராவதி (1947), பர்மாராணி (1945), தேராஸ் (1948) என தொடர்ந்த இசைப்பயணம் 1950கள் 1960களில் திரை இசையில் கே.வி. மகாதேவன் எல்லோரும் மெச்சதக்க புதிய இசைக் கோலங்களை வழங்கி வந்தார். கர்நாடக சங்கீதத்தை திரைப்பாடல்களில் அதன் பாடல் வரிகளில் புதுமெருகுடன் வழங்கி வந்தார்.
சில படங்கள் தோல்வியுற்றாலும் அப்பத்தில் இடம்பெற்ற பாடல்கள் வெற்றி பெற்று சாதனை நிகழ்த்தி வருவது தமிழ்த் திரை இசை வரலாற்றில் ஒன்றும் புதிதல்ல. கே.வி. எம். இசையில் மலர்ந்த சில பாடல்களுக்கும் இந்நிலை ஏற்பட்டது. புதிய புதிய மெட்டுகளுடன் மண்வாசனை மிக்க பண்வாசனையை அள்ளியெடுத்து வந்தார். கிராமப்புற மக்களிடையே இப்பாடல்கள் எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தன. |
|
கர்நாடக இசை, நாட்டுப்புற இசை என ஒரு பெரும் சுவர் எழுப்பாமல் இசையின் நுட்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து குறிப்பிட்ட ஒரு சூழலுக்குத் தக்க பாடல் என்றும் நடைமுறை திரை இசை மரபில் செழுமையாக வேரூன்றுவதற்கு உரிய தளம் அமைத்துக் கொடுத்தார்.
தனது இனிமையான இசையால் திரை இசையில் தனித்துவமான இசைக் கோலங்கள் அமைத்து தமிழிலும் தெலுங்கிலும் சுமார் 500க்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். திரை இசை உலகில் ''மாமா'' என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர். 'கந்தன் கருணை' திரைப்படத்தில் இசையமைத்தமைக்காக 1967ம் ஆண்டு முதன் முதலாக தேசிய விருது பெற்றார். மீண்டும் சங்கராபரணம் படத்துக்காகவும் தேசிய விருது பெற்றார்.
திரை இசையில் தனக்கென்று சில தனிப்பாணி கொண்ட இசையமைப்பாளர். இவரது இசையில் பல்வேறு பாடகர்கள் பாடி தங்கள் குரல் வளத்தை மெருகூட்டி வந்துள்ளனர். இத்தகைய பாடல்கள் சில அற்புதமான மெட்டுக்களால் அனைவரையும் ஈர்க்கக் கூடியவை.
திரைப்படத்தில் இசை மொழி பெறும் இடம் எத்தகையது என்று ஆய்வு செய்யும் நிலை ஏற்படும் போது மகாதேவன் இசைமொழியில் வெளிப்பட்ட படங்கள் கவனிப்புப் பெறுவது தவிர்க்க முடியாது.
அவர் இசையமைத்த சில படங்கள் : நல்லகாலம், கூண்டுக்கிளி, டவுன் பஸ், தாய்க்கு பின் தாரம், தை பிறந்தால் வழி பிறக்கும், வண்ணக்கிளி, படிக்காத மேதை, அன்னை இல்லம், இருவர் உள்ளம், வானம்பாடி, நவராத்திரி, திருவிளையாடல், கந்தன் கருணை, தாயே உனக்காக, தில்லானா மோகனாம்பாள், வசந்த மாளிகை, எங்கள் தங்க ராஜா, முருகனே துணை, பாக்கியலட்சுமி, சங்கராபரணம்.
மது |
|
|
More
தங்கர்பச்சானின் 'அழகி' மீடியா ட்ரீம்ஸ் வழங்கும் சேரனின் பாண்டவர் பூமி மஜ்னு கேசட் வெளியீட்டு விழா ஞாயிறு ஒளி மழையில் நடிகர் திலகம் 1927 - 2001
|
|
|
|
|
|
|