Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | தகவல்.காம்
போகிற போக்கில்
Tamil Unicode / English Search
நேர்காணல்
தமிழ்நாடு அறக்கட்டளை என்றொரு அகல் விளக்கு
பேரா. டாக்டர் எம்.எஸ். ஆனந்த்
- எல். ரவிச்சந்திரன், க. காந்திமதி|ஜூலை 2003|
Share:
Click Here Enlargeபொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும், தொழில்நுட்பக் கல்வி படிக்கும் மாணர்வகளின் எண்ணிக்கையும் வருடத்திற்கு வருடம் அதிவேகமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. என்றாலும், தரமான தொழில்நுட்பக் கல்வியைப் பெற விரும்பும் எந்த ஒரு இளைஞனின் மனதிலும், கனவிலும் முதல் இடம் பெறுவது ஐஐடி தான். உலகத்தரமான தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வியை வழங்குவதில் ஐஐடி - மதராஸின் (IIT - Madras)ன் தற்போதைய இயக்குநர் Dr. M.S. ஆனந்த் அவர்களைத் 'தென்றல்' இதழுக்காகச் சந்தித்தோம்.

தென்றல் : வணக்கம் திரு. ஆனந்த் அவர்களே! தற்சமயம் ஐஐடி-மதராஸில் எத்தனை பேர் படிக்கிறார்கள்.

ஆனந்த் : ஐஐடி-மதராஸின் உறுதியான இலட்சியம் எல்லாத்துறைகளிலும் தரமான மாணவர்களை உருவாக்குவது தான். அதனால் தகுதியின் அடிப்படையில் தான் மாணவர்களைத் தேர்வு செய்கிறோம். தற்போது இங்கே 4000 மாணவர்கள் படிக்கிறார்கள். 360 பேராசிரியர்கள் பணி செய்கிறார்கள். கிட்டத்தட்ட 1500 பேர் இந்த வளாகத்தில் நிர்வாகம் உட்பட பல்வேறு பொறுப்புகளில் பணியில் இருக்கிறார்கள்.

தென்றல் : இன்றும் ஜெர்மனியின் ஒத்துழைப்பு ஐஐடி -மதாராஸ¤க்கு இருக்கிறதா?

ஆனந்த் : இன்றும் இருக்கிறது என்றாலும், ஆரம்பத்தில் இருந்ததற்கும் இப்போது இருப்பதற்குமூ ஒரு அடிப்படையான வித்தியாசம் இருக்கிறது. ஆரம்பத்தில் அவர்கள் எங்களை வழிநடத்துபவர்களாக இருந்தார்கள். இப்போது அவர்கள் பங்களிப்பவர்களாக மாறியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒரு வழிப்பாதையாக இருந்த ஒத்துழைப்பு. இப்போது இருவழிப் பாதையாகியிருக்கிறது. அதாவது, ஆரம்பத்தில் அங்கிருந்து வந்து இங்கு வகுப்பெடுப்பது, ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டுவது, உதவி செய்து என்று இருந்தார்கள். இன்று இங்குள்ளவர்களும், அதாவது ஐஐடி - மதாராஸிலிருந்து நாங்களும் ஜெர்மனி சென்று அவர்களுக்கு ஆராய்ச்சியில் உதவவும், வகுப்பெடுக்கவும் செய்கிறோம். ஒத்துழைப்பு என்பதைத் தாண்டி இருவருக்கிடையிலும் பரஸ்பரம் பங்களிப்பு இருக்கிறது என்று சொல்வது தான் மிகவும் பொருந்தும்.

தென்றல் : மாணவர் தேர்வு எதன் அடிப்படையில் செய்யப்படுகிறது? சமீபத்தில் ஐஐடி - மதராஸில் அறிமுகமாயிருக்கும் புதிய துறைகள் என்னென்ன?

ஆனந்த் : இளநிலைத் தொழில்நுட்பப் பட்டத்துக்கு (B.Tech.) பொது நுழைவுத் தேர்வு (Joint Entrance Examination - JEE) முறையிலும், முதுநிலைத் தொழில்நுட்பப் பட்டத்துக்கு (M.Tech.) பட்டதாரி பொறியியல் உளச்சார்புத் தேர்வு (Graduate Aptitude Test in Engineering - GATE) முறையிலும், மற்ற முதுநிலைப் படிப்புகளுக்கு அந்தந்தத் துறைக்¡ன தனித்தனி நுழைவுத் தேர்வுகளின் அடிப்படையிலும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இரண்டு பட்டங்கள் (Dual Degree) என்றொரு பாடப்பிரிவு அண்மைக் காலத்தில் ஐஐடி - மதராஸில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பாடப்பிரிவில் ஐந்தே வருடத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டங்களை ஒருசேரப் பெற்று விடலாம். இது தவிர முதுநிலை வணிக நிருவாகம் (M.B.A.), பொறியியல் இயற்பியல் (Engineering Physics), உயிரியல் தொழில்நுட்பம் (Bio Technology) போன்ற துறைகளையும் சமீபத்தில் ஐஐடி - மதராஸில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (TCS) ஆதரவில் கணிப்புப் பொறியியல் (Computation Engineering) துறையும் ஐஐடி - மதராஸில் செயல்பட்டு வருகிறது.

தென்றல் : இதுவரை ஐஐடி - மதராஸிலிருந்து எத்தனை பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்?

ஆனந்த் : மிகச் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், இதுவரை 24,961 பேர் ஐஐடி - மதராஸில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

தென்றல் : ஐஐடி - மதராஸில் தேர்ச்சி பெற்று மேல்படிப்புக்காகவோ, வேலைக்காகவோ எத்தனை சதவீதம் பேர் வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறார்கள்.

ஆனந்த் : இந்தக் கேள்விக்கு அவ்வளவு சரியாகப் பதில் சொல்ல இயலாது. எங்களுடைய முன்னாள் மாணவர்கள் (Alumini) பட்டியலில் வெளிநாடு சென்றிருப்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3000 என்று இருக்கிறது. இந்தப் பட்டியலில் இல்லாதவர்களையும் சேர்த்து குத்துமதிப்பாக 4000பேர் வரைக்கும் வெளிநாட்டில் இருப்பார்கள் என்று சொல்லலாம். ஆனால் இங்கே படிப்பவர்கள் எல்லாரும் வெளிநாட்டுக்குப் போய்விடுகிறார்கள் என்று இப்போது பரவலான ஒரு பேச்சு இருக்கிறது. அது நிச்சயமாக உண்மையில்லை. இதுவரை 25,000 பேல் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அவர்களில் அதிகபட்சம் 4000லிருந்து 5000 பேர் வரைக்கும் தான் வெளிநாடுகளில் இருக்கிறார்கள்.

இங்கே இளநிலை பட்டம் பெற்றவர்களில் மூன்றில் ஒரு பங்குதான் வெளிநாட்டுக்குப் போகிறார்கள். அதுவும் எல்லா துறைகளிலிருந்தும் இல்லை. கணினியியல் (Computer Science), தொலைத்தொடர்பு (Telecommunication) போன்ற துறைகளிலிருந்து தான் அதிகமாப் போகிறார்கள். குடிமுறைப் பொறியியல்¡ (Civil Engineering) போன்ற துறைகளிலிருந்து செல்பவர்கள் வெகு குறைவு. மீதியுள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இங்கேயே நிர்வாகத் துறைகளுக்குப் போய்விடுகிறார்கள். மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு மாணவர்கள் 2001 வரைக்கும் தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்குச் சென்றிருக்கிறார்கள். ஆனால் தற்போது (பொருளாதார மந்த நிலையில்) இது மிகவும் மாறியிருக்கிறது. இப்போது இவர்களில் பாதி பேர் தான் தகவல்தொழில் நுட்பத் துறைக்குச் செல்கிறார்கள். முதுநிலைப் பட்டம் பெற்றவர்களில் அதிகபட்சம் 20% பேர்தான் வெளிநாட்டுக்குப் போகிறார்கள். இப்படித் தனித்தனியாகக் கணக்கு போட்டுப் பார்த்தால்தான், இங்கே படித்து வெளிநாடு போகிறவர்களின் எண்ணிக்கை எவ்வளவு குறைவு என்கிற உண்மை தெரிய வரும்.

தென்றல் : கல்வி மற்றும் இதர செயல்பாடுகளில் மற்ற ஐஐடிக்களோடு ஐஐடி - மதராஸை ஒப்பிட முடியுமா?

ஆனந்த் : எல்லா ஐஐடிக்களுமே தரமான முறையில் தான் செயல்படுகின்றன. அதனால் நான் ஒப்பிட விரும்பவில்லை. இருந்தாலும் கல்வியிலும் சரி, மற்ற செயல்பாடுகளிலும் சரி ஐஐடி - மதராஸ் நிச்சயம் உயர்ந்த நிலையில் இருக்கிறது என்று சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன். கல்வி எப்போதுமே இங்கு உயர்ந்த தரம் தான். கல்வியோடு சேர்த்து மற்றச் செயல்பாடுகளையும் சிறப்பான முறையில் ஊக்குவிக்கிறோம்.

படித்துப் பட்டம் பெறுவதை விடவும், குணத்தில் பழகும் விதத்தில் பெயரெடுப்பது ஒருவரின் எதிர்காலத்திற்குப் பக்கபலமாக இருக்கும் என்பது ஐஐடி - மதராஸின் அசைக்க முடியாத கருத்து. அதனால் படிப்போடு சேர்த்து அவர்களது குணத்தைச் சீரான முறையில் வளர்த்துக் கொள்வதற்கும் இங்கே முக்கியத்துவம் கொடுக்கிறோம். உலகத்தரமான கல்வியைச் சிறப்பாகக் கொடுப்பதில் மட்டுமின்றி உலகில் எந்த மூலையிலும் உலகத்திலுள்ள எந்த மனிதர்களுக்கும் ஈடுகொடுத்துப் பணிபுரியும் ஆற்றலையும் தைரியத்தையும் ஐஐடி - மதராஸில் படிக்கும் மாணர்வகளுக்கு அளிக்கிறோம்.

மாணவர்களிடம் இருக்கும் பண்பாடு, கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் கலைத்திறமைகளை ஊக்குவிக்கும் விதத்தில் 'கலை விழா'வையும், அவர்களது அறிவுக்கூர்மையை வெளிப்படுத்தும் விதத்தில் 'டெக்·பெஸ்டை'யும் (Technical Festival - தொழில் விழா) ஒவ்வொரு ஆண்டும் ஐஐடி - மதராஸில் நடத்துகிறோம். இவை இரண்டிலுமே மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பங்கெடுத்துக் கொள்கிறார்கள்.

தவிரவும் ஒவ்வொரு புதன் கிழமையும், சமூகத்தில் உயர்ந்த நிலையிலுள்ள ஒரு பெரிய மனிதரை இங்கு அழைத்து சிறப்புரைக்கு ஏற்பாடு செய்கிறோம். இந்த நிகழ்ச்சி மாணவர்களுக்கு மிகுந்த பயனளிப்பதாக இருக்கிறது. சமூகத்தின் பல்வேறு துறைகளைப் பற்றிய நடைமுறை அனுபவங்களை விருந்தினர்களிடமிருந்து அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பு ஐஐடி - மதராஸில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கிறது.

தென்றல் : ஐஐடிக்கு அரசாங்கம் அளித்து வந்த நிதியுதவியைச் சில வருடங்களுக்கு முன்னால் நிறுத்தி விட்டதாகச் செய்தி வந்ததே! ஐஐடியால் அரசு உதவியில்லாமல் செயல்பட முடியுமா?

ஆனந்த் : இது முற்றிலும் தவறான செய்தி. உலகிலுள்ள எந்த ஆய்வுப் பல்கலைக்கழகமுமே சுயசார்புடன் செயல்படவில்லை. எங்களுடைய தற்போதைய தேவையில் 70% நிதியுதவியை MHRD (Ministry of Human Resources and Development, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்) அளிக்கிறது. உண்மையிலேயே முன்பிருந்ததை விடவும் அரசாங்கத்தின் நிதிஉதவி இப்போது அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது. தொடர்ந்து இதே அளவுக்கான ஒத்துழைப்பை MHRD அளிக்க வேண்டிய சூழல் தான் இப்போது இருக்கிறது. எனவே ஐஐடி - மதராஸ¤க்கு முதன்மை நிதி அரசாங்கத்திடம் இருந்துதான் கிடைக்கிறது. இது தவிர மாணர்வகளிடம் படிப்புக்காக வசூலிக்கும் பணம், ஆராய்ச்சிக்காக வழங்கப்படும் தொகை, தொழிற்சாலைகளுக்கு ஆலோசனை வழங்கி அதற்காகப் பெறப்படும் தொகை, இவற்றையெல்லாம் விடவும் மிக முக்கியமாக பழைய மாணவர்கள் தாமாகவே முன்வந்து வழங்கும் உதவித்தொகை போன்ற வழிகளிலும் ஐஐடி - மதராஸ¤க்கு நிதி கிடைக்கிறது.

தென்றல் : சமீபத்தில் இளநிலை (B.Tech.)பட்டப்படிப்பை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, ஆராய்ச்சிப் படிப்புகளை மட்டும் ஐஐடி - மதராஸில் மேற்கொள்ளப் போவதாக அமைச்சகத்தில் இருந்து ஒரு தகவல் வந்ததே! அது உண்மையா?

ஆனந்த் : அமைச்சர் சொல்லிய செய்தி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, இப்படி ஒரு தகவல் வெளியாகியிருக்கிறதே தவிர இதில் சிறிது கூட உண்மையில்லை. ''பி. டெக். படிப்பைப் பொறுதூதவரைக்கும் ஐஐடிக்கு நிலையான நல்ல பெயர் கிடைத்து விட்டது. அதனால் அதில் அதிகம் கவனம் செலுத்துவதைக் குறைத்துக் கொண்டு முதுநிலைப்பட்டப் படிப்பில் கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்துங்கள். இப்போது இளநிலை மற்றும் முதுநிலை 1 : 1 என்ற விகிதத்தில் தான் இருக்கிறது. இதை 1 : 1 : 1 ஆக உயர்த்தி, கொஞ்சம் கொஞ்சமாக இந்த விகிதத்தை 1 : 1 : 3 ஆகக் கொண்டு வரவேண்டும்'' என்று தான் அமைச்சர் சொன்னார்.

இதில் இருக்கும் அடிப்படையான பிரச்சனை என்னவென்றால், வேலைவாய்ப்பு நன்றாக இருந்தால் ஆராய்ச்சிப் படிப்பிற்கும், முதுநிலைப் பட்டப்படிப்பிற்கும் மாணவர்கள் திரும்பி வருவதில்லை. தற்சமயம் இந்தியாவில் மாணவர் - ஆசிரியர் விகிதம் மிகவும் மோசமாக இருக்கிறது. அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் 90,000 இளநிலை பட்டதாரிகளும், 90,000 முதுநிலைப் பட்டதாரிகளும் இருக்கிறார்கள். 1 : 1 என்ற விகிதம் என்பதால் அங்கே ஆசிரியர் கிடைப்பது மிகவும் எளிது. இங்கே கிடைப்பது மிகமிகக் கடினம். இந்தியாவிலுள்ள பொறியியல் கல்வி நிறுவனங்கள் எதிர்கொண்டிருக்கக் ழுடிய மிகப் பெரிய பிரச்சனை இதுதான்.

மொத்தம் இந்தியாவில் 350,000 இளநிலை பொறியியல் பட்டதாரிகள் இருக்கிறார்கள். முதுநிலைப் பட்டத்துக்கு மொத்தம் 20,000 இடங்கள் இந்தியாவில் இருக்கின்றன. இதில் 10,000 இடங்களுக்குத் தான் மாணவர்கள் சேருகிறார்கள். அதிலேயும், ஐஐடியிலுள்ள இடங்கள் தான் முழுமையாக நிரப்பப்படுகின்றன. மற்ற பிரபலமான கல்வி நிறுவனங்களிலேயும் இந்தப் பிரிவுகளில் ஓரளவுக்கு மாணவர் சேர்க்கை இருக்கிறது. மொத்தத்தில் 10,000 முதுநிலைப் பட்டதாரி மாணவர்களில் 8,000 பேர் ஐஐடியிலிருந்து தேர்ச்சி பெறுகிறார்கள். இந்த 10,000 பேரும் ஆசிரியர் வேலைக்கு வருவதில்லை. இவர்களில் அதிகபட்சம் 20% பேர்தான் ஆசிரியர் வேலைக்கு வருகிறார்கள். அப்படியானால், கிட்டத்தட்ட 350,000 பேருக்குச் சொல்லிக் கொடுப்பதற்கு வெறும் 2,000 ஆசிரியர்கள் தான் இருக்கிறார்கள்.

தென்றல் : இந்நிலைக்குக் காரணம் என்ன?

ஆனந்த் : முக்கியமான காரணம் முதுநிலைப் பட்டப்படிப்பு படிப்பதால் வருமானம் அதிகமாவதில்லை. ஒரு குறிப்பிட்ட துறையில் மிகவும் சுவாரசியமான வேலை இருந்து, அதற்கு முதுநிலைப் பட்டம் தேவை என்கிற கட்டாயம் இருந்தால் மட்டுமே இதைப் படிப்பதற்கு நிறைய மாணவர்கள் வருவார்கள். அதுவுமில்லாமல், முதுநிலைப்பட்டம் பெற்று ஆசிரியரான பிறகு ஐஐடியிலேயே வேலை கிடைத்தால், நல்ல சம்பளத்தோடு கூடவே தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசனை செய்தும் நிறைய சம்பாதிக்கலாம். மற்ற கல்வி நிறுவனங்களில் சாதாரணமாகக் கொடுக்கும் ஊதியமே ஐஐடியோடு ஒப்பிடும்போது குறைவு தான். அதனால் தான் நிறையபேர் முதுநிலைப் பட்டப்படிப்புக்கு வருவதில்லை.

இந்த நிலைமையை மாற்றி, மாணவர்களை முதுநிலைப் பட்டப்படிப்பிற்கும், ஆராய்ச்சி படிப்பிற்கும் ஈர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் நிறைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உதாரணமாக ஆராய்ச்சிப் படிப்புக்கு ஒவ்செவாரு மாணவனுக்கும் மாதம் ரு. 9,000 உதவித் தொகையாக அரசாங்கம் வழங்கி வருகிறது. கூடவே 'சிறப்பு தேசிய உதவித் தொகைத் திட்டப்படி' சில ஆராய்ச்சியாளர்களுக்கு மாதம் ரூ. 12,000 வழங்கி வருகிறது.

தென்றல் : இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் தரமான திறமையான ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவதில் திணறிக் கொண்டிருக்கின்றன. இந்த வகையில் ஐஐடி - மராஸின் நிலை பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இதைச் சரி செய்வதற்கு இந்தத் துறையின் தேவை என்ன?

ஆனந்த் : ஆராய்ச்சி என்பது அதிகம் செலவாகக் கூடிய ஒரு முயற்சி. ஐஐடி - மதராஸ¤க்குப் போதுமான அளவுக்கு நிதி கிடைக்கிறது என்றாலும், அமெரிக்காவில் எம்ஐடியோடு ஒப்பிடும்போது நமக்கு இது மிகவும் விலை அதிகமான ஒன்றாகவே தெரிகிறது. இங்கே எனக்கு ஆசிரியர் வேலைக்குக் கிடைக்கும் ஊதியத்திற்கும், அமெரிக்காவில் இதே வேலைக்குக் கிடைக்கும் ஊதியத்திற்கும் ஐம்பது மடங்கு வித்தியாசம் இருக்கிறது. அங்கே உள்ள பணத்துக்கும் இங்கே உள்ள பணத்துக்கும் அடிப்படை வித்தியாசம் இருப்பதால், ஆராய்ச்சிக்காக ஒரு உபகரணம் வாங்கினேன் என்றால், இங்குள்ள பணத்தில் அது அதிக விலையுடையதாகத் தானிருக்கும். அங்கே 1000 டாலர் கொடுத்து மேற்கொள்கிற ஆராய்ச்சியை, நான் இங்கே 500 டாலர் மட்டும் வாங்கிக் கொண்டு அதே ஆராய்ச்சி முடிவுகளைக் கொண்டு வரமுடியும். ஆனால் அதற்கு நான் பயன்படுத்துகிற உபகரணங்களுக்கு அங்கே செலவழிக்கிறதை விடவும் இங்கே பல மடங்கு செலவழிக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவில் ஆராய்ச்சியாளருக்கு அதிகம் செலவு கிடையாது. ஆனால் ஆராய்ச்சிக்கு அதிகம் செலவு செய்தாக வேண்டியிருக்கிறது.

அதே போல் இன்னுமொரு அடிப்படையான பிரச்சனை, எந்த ஓர் ஆராய்ச்சியையும் தனிமனிதனாக இருந்து செய்து முடிவு கொண்டு வருவதென்பது மிகவும் கடினமான விஷயம். அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ஆராய்ச்சி செய்ய குறைந்தது பதினைந்திலிருந்து இருபது பேர் வரை இருப்பார்கள். எல்லோரும் சேர்ந்து ஒருவரோடு ஒருவர் கலந்தாலோசித்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு செய்யும்போது அந்த ஆராய்ச்சியில் அதிகம் சிரமம் தெரிவதில்லை. ஆனால் இங்கு அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று பேர் தான் ஒரு குறிப்பிட்ட துறையில் ஈடுபாடுள்ளவர்களாக, ஆராய்ச்சி மேற்கொள்ள விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள். அதனால் இரண்டு மூன்று பேரை வைத்து ஆராய்ச்சி செய்து ரொம்பவும் கடினம்.

இவ்வளவு இருந்தாலும், இன்றைய தினத்தில் இந்தியாவில் செய்யப்படும் ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் நிச்சயம் தரமானவைகளாக மற்ற உலக நாடுகளிலுள்ள ஆராய்ச்சியாளர்களையும் வியக்க வைப்பதாகத்தான இருக்கின்றன. ''இந்திய ஆராய்ச்சியாளனிடம் முறைத்துக் கொண்டால், எப்பாடுபட்டாவது அவனே ஆராய்ச்சி செய்து முடிவுகளைக் கொண்டு வந்துவிடுவான்'' என்ற எண்ணம் உலக ஆராய்ச்சியாளர்களிடத்தில் வந்து விட்டது. அதாவது இந்திய ஆராய்ச்சியாளர்கள் உலக ஆராய்ச்சியாளர்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பது தான் இதற்குப் பொருள். நாம் நடத்திய அணுகுண்டு சோதனை இதைத் தெளிவாக மெய்ப்பிக்கிறது.

ஆராய்ச்சித் துறையை மேம்படுத்துவதற்கு தேவை என்ன என்று பார்த்தால், ஒரு குறிப்பிட்ட துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள அதிகமான எண்ணிக்கையில் ஆராய்ச்சியாளர்கள் வேண்டும். மிக முக்கியமானப் போதுமான பொருளாதார உதவிகள் வேண்டும்.

தென்றல் : பன்னாட்டு நிறுவனங்கள் நிதிவழங்கி, அதைக் கொண்டு அவர்களுக்காகச் செய்யப்படும் ஆராய்ச்சித் திட்டங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்.

ஆனந்த் : பன்னாட்டு நிறுவனங்களிடம் நிதிபெற்று நிறைய ஆராய்ச்சித் திட்டங்களை ஐஐடி - மதராஸில் செய்து வருகிறோம். இதற்கு அந்த நிறுவனம் எந்தத் துறையில் ஆராய்ச்சித் திட்டம் தொடங்க விரும்புகிறதோ அந்தத் துறையில் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள எங்களது ஆராய்ச்சியாளரைத் தொடர்பு கொண்டால், அடுத்தடுத்து செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றி வேண்டிய தகவல்களை அவரே வழங்குவார். மேலும் இது தொடர்பான தகவல்களை http://www.iitm.ac.in என்ற எங்களது வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தென்றல் : சமீபத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட சரிவினால் ஐஐடி - மதராஸ¤க்கு எந்த வகையிலாவது பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா?

ஆனந்த் : நிச்சயம் ஏற்பட்டது. அதாவது 2001ல் பட்டம் பெற்று வெளியேறிய எல்லா மாணவர்களுமே அந்த மார்ச் மாதத்திற்குள் வேலையில் அமர்த்தப்பட்டு விட்டார்கள். 2002ல் தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட சரிவினால் 2002ல் தேர்ச்சி பெற்ற மாணவர்களை வேலையமர்த்துவதில் கொஞ்சம் அதிக சிக்கல் இருந்தது. மார்ச் மாதத்திலேயே முடிய வேண்டிய இந்தப்பணி செப்டம்பர் வரை இழுத்துக் கொண்டு போனது. காரணம் மற்ற துறைகளில் 10% சரிவு ஏற்பட்டால் வேலை வாய்ப்பு 1% தான் பாதிக்கப்படும். ஆனால் தகவல் தொழில்நுட்பத்துறையில் 10% சரிவு ஏற்பட்டாலும் வேலைவாய்ப்பு 30% வரை பாதிக்கப்படும். அதே நேரம் இந்தத் துறையில் பணிபுரிபவர்களுக்குக் கிடைக்கும் ஊதியமும் உயர்ந்துகொண்டே இருக்கும். இருந்தாலும் இந்த வருடம் தகவல் தொழில் நுட்பச் சரிவினால் ஐஐடி - மதராஸில் ஏற்பட்ட தொய்வு பெரும்பாலும் சீர் செய்யப்பட்டுவிட்டது என்று தான் நான் சொல்வேன்.

தென்றல் : ஐஐடி - மதராஸின் வளர்ச்சியில் பழைய மாணவர்களின் பங்களிப்பு என்ன?

ஆனந்த் : ஐஐடி - மதராஸில் படித்துப் பயன் பெற்ற பழைய மாணர்வகள் பலர் இப்போது சமூகம் மதிக்கத்தக்க நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். தங்களை வளர்த்துவிட்ட நிறுவனத்துக்குத் தங்களால் இயன்றவற்றை முழுமனதோடு, வேறு எந்த விதத்திலும் ஐஐடி - மதராஸிடமிருந்து உதவியை எதிர்பார்க்காமல் செய்கிறார்ககள். அதில் அவர்களுக்கு ஒரு திருப்தி, சந்தோஷம். அதுபோல் இங்கிருந்து பட்டம் பெற்று வெளியேறியவர்கள் அளிக்கும் உதவியை நாங்களும் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் பெற்றுக் கொள்கிறோம். அந்த உதவியை அவர்கள் விரும்பியபடியே ஐஐடி - மதராஸ¤க்குப் பயனுள்ள வகையில் மாற்றித் தருகிறோம். இதில் எங்களுக்கும் பெரிய சந்தோஷம். இவர்கள் கொடுக்கும் பண உதயினால் ஐஐடி - மதராஸில் நிறைய கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

பெண்கள் தங்கும் விடுதி, கணினி ஆய்வுக்கூடம் போன்றவைகளை உதாரணமாகச் சொல்லலாம். இது தவிர அவர்கள் அளிக்கும் பணம் தற்போது படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகையாகவும் பயன்படுத்தப்படுகிறது. சென்னையில் இப்போது தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சனைக்கு மத்தியில் மாணவர் விடுதிக்கு சுத்தமான குடிதண்ணீர் வசதி, பழைய மாணவர்கள் கொடுத்த பணத்தில் தான் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

"Chairpersonship" என்ற வகையில் ஒரு குறிப்பிட்ட துறையில் சிறந்த விளங்குபவரை, அவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஐஐடி - மதராஸ¤க்கு அழைத்து வந்து அவர்களைக் கொண்டு இங்கு படிக்கும் மாணவர்களுக்கு செமினார், மற்ற வகுப்புகள் நடத்தும் ஏற்பாடு இவர்களின் பணஉதவியினால் தான் செய்யப்படுகிறது. இன்னும் ஐஐடி - மதராஸின் வளர்ச்சியில் இவர்களின் பங்களிப்பு எண்ணிக்கையில் அடங்காத அளவுக்கு நிறைய இருக்கிறது. பழைய மாணவர்களின் ''வெள்ளி விழா'' (25 ஆண்டுகள்), மற்றும் ''முத்து விழா'' (30 ஆண்டுகள்) வருடாவருடம் கொண்டாடப்படுகிறது. கடந்த வருடம் நடந்த வெள்ளி விழாவில் '77ல் படித்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வருடம் '78ல் படித்த மாணவர்கள் கலந்து கொள்வார்கள்.
தென்றல் : பழைய மாணவர்கள் பல வகைகளில் ஐஐடி - மதராஸ¤க்கு பணஉதவி செய்து வருவதாகச் சொன்னீர்கள். சமீபத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட சரிவினால் இவர்களது பங்களிப்பில் ஏதாவது குறைவு ஏற்பட்டிருக்கிறதா?

ஆனந்த் : அப்படி எதுவும் எனக்குத் தெரியவில்லை. அதுவுமில்லாமல் பழைய மாணவர்களின் பங்களிப்பை வெறும் பணத்தை மட்டும் வைத்து மதிப்பிடுவது மிகவும் தவறு என்று தான் நான் நினைக்கிறேன். உள்ளூரிலேயே கூட நிறைய பழைய மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அடிக்கடி இங்கு வருகிறார்கள். (வெளிநாடுகளில் இருப்பவர்கள் கூட இந்தியாவிற்கு வரும் போது தவறாமல் ஐஐடி - மதராஸ¤க்கு வருகிறார்கள்). இங்கு படிக்கும் மாணவர்களோடு பேசுகிறார்கள். அடுத்தடுத்து என்ன படிக்கலாம் அல்லது எந்த இடத்தில், துறையில் வேலைக்குச் செல்லலாம் என்பதையெல்லாம் பற்றி வழிகாட்டுதல் செய்கிறார்கள். தொழில்முறை பயிற்சிக்கு அனுமதி கேட்டு நான் கடிதம் எழுதினால், உடனே அந்த இடத்தில் வேலையில் இருக்கும், பழைய மாணவர், ''நானும் ஐஐடி - மதராஸில் படித்தவன் தான் சார்'' நான் ஐந்து பேரை பயிற்சிக்கு எடுத்துக் கொள்கிறேன்'' என்று சொல்லி அந்த வகைகளில் உதவுகிறார்கள். எங்களைப் பொறுத்தவரைக்கும் இதுமாதிரியான உதவிகள் தான் மிகவும் முக்கியம் என்று நினைக்கிறோம். பண உதவி என்பது இரண்டாம்பட்சம் தான்.

இங்கு படித்து முடித்து விட்டு ஓர் இடத்தில் நல்ல வேலையில் இருக்கும் ஒரு பழைய மாணவன் வந்து, ''நான் இங்கே படித்தேன், இப்போது இந்த இடத்தில் நல்ல வேலையில் இருக்கிறேன், நீங்களும் இங்கே வாருங்கள், நல்ல எதிர்காலம் இருக்கிறது! என்று இப்போது படிக்கிற மாணவர்களிடத்தில் நேரடியாக அறிமுகமாகிச் சொல்லும்போது, அது இப்போதுள்ள மாணவர்களுக்குப் பெரிய தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுக்கிறது. சில பழைய மாணவர்கள் அவர்களுக்கு விருப்பமான துறையில், அந்தத் துறைசார்ந்த பேராசிரியர்களிடத்தில் அனுமதி வாங்கி இப்போது உள்ள மாணவர்களுக்கு ஒரு சில சிறப்பு வகுப்பும் எடுக்கிறார்கள். இவையெல்லாம் பணத்தைவிடவும், விலைமதிப்பில்லா உதவிகள். பணமாகவோ, அறிவாகவோ இது போன்ற உதவிகளை நாங்கள் பழைய மாணவர்களிடம் இருந்து தொடர்ந்து எதிர்பார்க்கிறோம். ஆனால் இவை அனைத்துமே அவர்களாக விரும்பி மனமுவந்து செய்வதுதான். நாங்கள் எந்த விதத்திலும் பழைய மாணவர்களைக் கட்டாயப்படுத்துவதில்லை.

தென்றல் : வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஐஐடி - மதராஸ¤க்கு வந்து தங்கள் பங்களிப்பை மீண்டும் ஐஐடி - மதராஸ¤க்கு வழங்குவதற்கு அவர்களை ஈர்க்கும் வகையில் ஏதாவது வரைப்படுத்தப்பட்ட திட்டங்கள் வைத்திருக்கிறீர்களா?

ஆனந்த் : அப்படி வரைப்படுத்தப்பட்ட திட்டம் எதுவும் கிடையாது. ஆனாலும் இங்குள்ள திறமை வாய்ந்த ஆராய்ச்சியாளர்கள், வெளிநாட்டிலுள்ள பல இந்திய ஆராய்ச்சியாளர்களிடத்தில் தனிப்பட்ட முறையில் தொடர்பு வைத்திருக்கிறார்கள். பல்வேறு வகைகளிலும் வெளிநாட்டிலுள்ள இந்திய ஆராய்ச்சியாளர்கள் ஐஐடி - மதராஸ¤க்குப் பங்களிப்பு செய்யும் வகையில் அவர்களை இவர்கள் ஊக்கப்படுத்துகிறார்கள். அவ்வளவு தான்!

தென்றல் : சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையில் பழைய மாணவர்கள் அளிக்கும் பணம் அரசாங்கம் நியமித்துள்ள 'பாரத ஷிக்ஷா கோஷ்' மூலம் எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே. இதனால் பழைய மாணவர்கள் அனுப்பும் தொகை, அவர்கள் விரும்பிய பணிக்குப் பயன்படுத்தப்படுவதில் சிக்கல் உண்டா? அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் இப்போது இருப்பதுபோல் பழைய மாணவர்களின் பணஉதவி தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்பு தடைபடுமா?

ஆனந்த் : இந்த அறிக்கையின் ஒரு சில முக்கிய விதிகளை நான் சொல்ல விரும்புகிறேன். பாரத ஷிக்ஷா கோஷ் மூலம் தான் பணம் பட்டுபாடா செய்யப்படும் என்ற கூற்று உண்மை தான் என்றாலும், அதற்குச் சில விதிகளை அரசாங்கம் கொடுத்துள்ளது. இந்த அமைப்பை அரசாங்கம் உருவாக்கியிருப்பதற்கு அடிப்படைக் காரணமே இந்தியாவில் செயல்படும் நிறுவனங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து எவ்வளவு உதவித் தொகை வருகிறது என்பதை அரசாங்கம் தெரிந்து கொள்வதற்காகத் தான். பணம் அனுப்புபவர்கள் எந்த நிறுவனத்திற்கு, எந்தப் பணிக்கு செலவழிப்பதற்காக என்று குறிப்பிட்டிருந்தார்களேயானால் அந்தப் பணம் அந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு விடும். அதனால் பணம் அனுப்புபவர்கள் செய்ய நினைக்கும் உதவி எந்த வகையிலும் தடைபடப் போவதில்லை. ஆனால் இந்த அமைப்பின் மூலம் அரசுக்கு ஒரு தெளிவான கணக்கு கிடைத்து விடுகிறது. இந்த அமைப்பில் உள்ள ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், வெளிநாட்டிலுள்ளவர்கள் அனுப்பும் உதவிப்பணம் உரியவர்களை வந்தடைய வழக்கத்தை விடவும் கொஞ்சம் அதிக நாட்கள் செலவாகும். என்றைக்கா¡லும் அவர்கள் அனுப்பிய பணம் கொஞ்சம் கூடக் குறைவில்லாமல் அவர்கள் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு அவர்கள் விரும்பிய வகையில் நிச்சயம் பயன்படுத்தப்பட்டு விடும். அதனால் இப்படி ஒரு அமைப்பை அரசாங்கம் உருவாக்கியதால் வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் உதவிகள் குறைவதற்குக் கொஞ்சமும் வாய்ப்பில்லை.

தென்றல் : தொழில் நிறுவனங்களோடு சேர்ந்து பல கூட்டு ஆராய்ச்சிகளில் ஐஐடி - மதராஸ் ஈடுபடுவதாகச் சொன்னீர்கள். அது போன்ற ஆராய்ச்சிகளில் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் பங்கெடுத்துக் கொள்ள ஏதாவது வாய்ப்புகள் ஐஐடி - மதராஸில் இருக்கிறதா?

ஆனந்த் : நிறைய ஆராய்ச்சித் திட்டங்களை இந்த முறையில் செய்து கொடுத்திருக்கிறோம். ஆராய்ச்சியில் விருப்பமுள்ள யார் வேண்டுமனாலும், சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனத்தின் அனுமதிபெற்ற பிறகு எங்களோடு ஆராய்ச்சியில் கலந்து கொள்ளலாம். அப்படிப்பட்டவர் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். தொடர்பில்லாத மூன்றாவது நபரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு நான் ஆராய்ச்சிகளை மேற்கொண்டால், இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள் இந்த ஆராய்ச்சி முடிவுகள் வேறு யாருக்காவது இவர் மூலம் தெரிந்துவிடுமோ என்ற முன்னெச்சரிக்கை உணர்வு, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு இருப்பது தான் இதற்குக் காரணம். அப்படி ஒரு சூழ்நிலை உருவானால் அது அந்தத் தொழில் நிறுவனத்திற்குப் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்துமென்பதால், எந்தத் தொழில் நிறுவனமும் ஒரு மூன்றாவது நபர் ஆராய்ச்சியில் பங்ககெடுப்பதை அனுமதிப்பதில்லை. ஆராய்ச்சி செய்யும் எனக்கு உதவிக்காக நான் விரும்புவதுபோலோ அல்லது இதற்கென்று தனி விதிகளுக்குட்படுத்தி ஆட்களைத் தேர்ந்தெடுத்தோ ஆராய்ச்சியைச் செய்ய முடியாது. அந்தத் தொழில் நிறுவனமே திறமையான நம்பிக்கையான ஒருவரைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் வகையில் அப்படிப்பட்டவர்கள் ஆராய்ச்சியில் எங்களோடு கலந்து கொள்ளலாம்.

தென்றல் : ஐஐடி - மதராஸ் சுற்றுச் சூழலுக்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடியது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். எந்தெந்த வழிகளில் இதை நீங்கள் கடைப்பிடிக்கிறீர்கள்?

ஆனந்த் : இது முழுக்க முழுக்க உண்மை. ஐஐடி - மதராஸ் தொடங்கப்பட்டபோது கட்டிடங்கள் எல்லாம் கட்டுவதற்கு திட்டம் தீட்டப்பட்ட சமயத்தில் பல்வேறு வகையான திட்ட வரைபடங்களைக் கொண்டு வந்து அப்போதைய இயக்குநர் பேரா. சென்குப்தா அவர்களிடம் காட்டியிருக்கிறார்கள். அவற்றில் தகுதியானவற்றை இயக்குநர் எதன் அடிப்படையில் தேர்ந்தெடுத்தார் தெரியுமா? எந்தத் திட்ட வரைபடத்திற்கு குறைவான மரங்கள் வெட்டப்படும் என்பதைக் கருத்தில் வைத்துக் கொண்டுதான் கட்டுமானப் பணிக்கான திட்டத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இன்று வரையிலும் நாங்கள் அதைப் பின்பற்றுகிறோம். சமீபத்தில் புதியதாக ஒரு கட்டிடம் எழுப்ப வேண்டிய சூழல் வந்து அதற்காக இடம் பார்த்த போது, எங்கள் வளாகத்திற்குள் தேர்ந்தெடுத்த அந்த இடத்தில் அரிய வகையான மான்கள் (Black Buck) வந்து உலாவிச் செல்லும். அந்த இடத்தில் கட்டிடம் எழுப்பினால் மான்களுக்குப் பிரச்சனை ஏற்படுமா என்பதை அருகிலுள்ள காட்டு இலாகாவிடம் விசாரித்தோம். அவர்களும் தீவிரமாக ஆராய்ந்து அதற்கு மாற்று ஏற்பாட்டைச் செய்து கொடுத்தார்கள். அதன்படி இப்போது அந்தக் கட்டிடப் பணியை மேற்கொள்ளவிருக்கிறோம்.

இந்த வளாகத்தைப் பச்சைப் பசேலென்று பராமரிப்பதை எங்களுடைய தலையாய கடமையாக் கருதுகிறோம். ஐஐடி - மதராஸ¤க்கு எந்தப் பெரிய மனிதர் வந்தாலும், எந்த விழா நடத்தினாலும், பழைய மாணவர்கள் வந்தாலும் முதலில் மறக்காமல் செய்வது மரக்கன்று நடுவதைத்தான்.

ஐஐடி - மதராஸ் வளாகத்திற்குள் இரண்டு சக்கர வாகனம் ஓட்டக் கூடாது என்று விதித்திருக்கிறோம். அதற்குப் பதிலாக கல்லூரி வளாகத்தினுள் இடம்பெயர்வதற்குப் பயன்படுத்துவதற்காக பத்து மின்சார ஊர்திகளை வாங்கி விட்டிருக்கிறோம். தற்சமயம் இங்கே 4000 பேர் படிக்கிறார்கள். மொத்தம் 6000 மாணர்வகள் வரை வளாகத்தின் சுற்றுச்சூழலை பாதிக்காமல் சமாளிக்க முடியும். இப்போதே மாணவர்கள், ஆசிரியர்களின் குடும்பங்கள், ஊழியர்கள் எல்லோரையும் சேர்த்து கிட்டத்தட்ட 10,000 பேர் இருக்கிறோம். இந்த வளாக சாலைக்குள் இதற்கு மேல் நெருக்கடி ஏற்பட்டால் சூழலைப் பராமரிப்பதில் நிச்சய்ம சிரமங்கள் ஏற்படும்.

தென்றல் : வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பவர்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?

ஆனந்த் : நாம் வளர்கிற, படிக்கிற, வாழ்கிற சூழ்நிலைக்கு சமூக நோக்கில் எந்த அளவுக்குப் பயனுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவிலிருப்பவர்கள், வெளிநாட்டுக்குச் சென்று சம்பாதிப்பவர்களைப் பார்த்து, 'அவர்களுக்கென்ன டாலரில் சம்பாதிக்கிறார்கள்' என்று நினைக்கலாம். ஆனால் என்னைப் பொருத்தவரைக்கும் வெளிநாட்டில் இருப்பவர்களை விட, இந்தியாவில் இருப்பவர்களிடத்தில் தான் ஒரு சந்தோஷம் இருப்பதாக உணர்கிறேன். காரணம் இந்தியாவில் இருப்பவர்களுக்குக் கிடைக்கும் குடும்பச் சூழ்நிலை வெளிநாட்டில் இருப்பவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஆனால் உண்மையிலேயே இந்தியக் கலாசாரத்தில் வளர்ந்த எந்த ஒரு மனிதனாலேயும் குடும்பச் சூழலை விடுத்து தனியே சந்தோஷமாக எவ்வளவு சம்பாதித்தாலும் வாழவே முடியாது. பணம் சம்பாதிக்க வேண்டியது என்பது நிச்சயம் தேவையான ஒன்றுதான். அதற்காக ஐந்து வருடமோ பத்து வருடமோ வெளிநாட்டிலிருந்து சம்பாதித்துவிட்டு சொந்த நாட்டுக்குத் திரும்பிவிடுவதுதான் நல்லது. ''இன்னும் ஐம்பதாயிரம் டாலர் சம்பாதித்துவிட்டு வரலாமே'' என்று நினைத்து நிறைய பேர் வெளிநாட்டில் இருக்கிறார்கள். அதற்குள் ஐந்து ஆண்டுகள் ஓடிவிடுகின்றன. அதற்குள் அவர்களது பிள்ளைகள் வளர்ந்து அந்த வெளிநாட்டுக் கலாசாரத்திற்குப் பழகிப் போய்விடுவார்கள். அவர்களைக் கட்டாயப்படுத்தி இந்தியா அழைத்து வந்து இந்தியக் கலாசாரத்திற்குக் கட்டாயப்படுத்துவது என்பது மிகவும் கடினம். அதனால் ஓரளவு சம்பாதித்து விட்டு சொந்த நாட்டுக்கு திரும்பி விடுவது தான் தனிமனிதனுக்கு மட்டுமல்ல அவன் குடும்பத்திற்கும் சந்தோஷம் கொடுக்கும். எந்தச் சூழ்நிலை சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுக்கிறதோ, வேறு எந்தத் தேவைகளுக்கும் வளைந்து கொடுக்காமல் அந்தச் சூழ்நிலைக்குத் தன்னை உட்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்பது என் அபிப்பராயம்.

தென்றல் : உங்கள் கண்ணோட்டத்தில் ஐஐடி - மதராஸைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஆனந்த் : வேலை செய்வதற்கு அருமையான இடம் இது. நெருக்கடியான சென்னை மாநகர வாழ்க்கைக்கு இடையில் இப்படியொரு அமைதியான ஆரோக்கியமான இடத்தில் பணிபுரிவது நிச்சயம் சந்தோஷமளிக்கிறது. கல்வித்தரத்தை உயர்த்துவதிலும் சரி, ஆராய்ச்சி, செயல்பாடு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களிலும் சரி, சுற்றுச்சூழல் பராமரிப்பிலும் சரி, மாணவர்கள், ஆசிரியர்கள், இதர பணியாளர்கள், பழைய மாணவர்கள், மற்ற தொழில் நிறுவனங்கள், அரசாங்கம் உட்பட அனைத்து தரப்பிலிருந்தும் போதுமான ஒத்துழைப்பும் ஆதரவும் ஐஐடி - மதராஸ¤க்குக் கிடைத்து வருகிறது. இது ஐஐடி - மதராஸின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவையான ஒன்று.

கடந்த சில வருடங்களாக ஐஐடி - மதராஸில் பணி ஓய்வு மற்றும் நியமனம் (retirement & replacement) மட்டும்தான் கொஞ்சம் பிரச்சனைக்குரிய விஷயமாக இருக்கிறது. தற்சமயம் 100 இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. கவர்ச்சிகரமான சம்பளம் கொடுக்கப்படாததும் இந்தப் பிரச்சனைக்கு ஒரு காரணம். இப்போதைய இளைஞர்கள் பட்டம் பெற்றதும் தனியார் நிறுவனங்களில் (ஆசிரியர் அல்லாத தொழில்களில்) தொடக்கத்திலேயே லட்சக்கணக்கில் சம்பளம் பெறுவதைத் தான் விரும்புகிறார்கள். இதில் அவர்களைக் குறை சொல்வதற்கும் ஒன்றும் இல்லை. இந்த நிலையும் கூடிய விரைவில் மாறும் என்று நினைக்கிறேன்.

ஐஐடி - மதராஸில் மட்டுமல்ல. மற்ற ஐஐடிக்களில் கூட இந்தப் பிரச்சனை இருக்கிறது. தகுதியானவர்களைப் பேராசிரியர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் நியமனம் செய்வதில் எல்லா ஐஐடிக்களிலுமே பற்றாக்குறை இருக்கிறது. எந்தெந்தத் துறைகள் நிரப்பப்படாமல் இருக்கின்றன என்பது பற்றிய தகவல்களைத் தொடர்ந்து நாங்கள் ஐஐடிக்கான் வலைத்தளத்தில் அளித்து வருகிறோம். பொதுவாகப் பொறியியல் தொடர்பான எல்லாத் துறைகளிலும் திறமையானவர்களை நியமனம் செய்யத் தேடிக் கொண்டிருக்கிறோம். மிகக் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் கணினியியல் மற்றும் தொலைத்தொடர்புத் துறைகளில் தகுதியானவர்கள் நிறைய பேரை எதிர்பார்க்கிறோம். எங்கள் வலை முகவரி www.iitm.ac.in

மொத்தத்தில் ஐஐடி - மதராஸில் படிப்பதற்கும் ஐஐடி - மதராஸில் வேலை செய்வதற்கும் மட்டுமல்ல, ஐஐடி - மதராஸ¤க்குள் நுழைந்தாலே நிச்சயம் எல்லோருக்கும் சந்தோஷம் தானாக வரும் என்பது தான் ஐஐடி - மதராஸைப் பற்றிய என்னுடைய ஒட்டு மொத்த கருத்து.

தென்றல் : நன்றி திரு. ஆனந்த் அவர்களே! உங்களுடைய பரபரப்பான வேலைகளுக்கிடையில் ''தென்றல்'' இதழுக்காக நேரம் ஒதுக்கி ஐஐடி - மதராஸ் பற்றிய பல தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி. வணக்கம்.!

சந்திப்பு :எல். ரவிச்சந்திரன், க. காந்திமதி
எழுத்து :க. காந்திமதி

*****


IITM

ஐஐடி மதராஸ் 1959ல் தொடங்கப்பட்டது. மொத்தம் இந்தியாவில் ஏழு ஐஐடிக்கள் இருக்கின்றன. (காரக்பூர், மும்பை, சென்னை, கான்பூர், டெல்லி, கெளஹாத்தி மற்றும் ரூர்கீ). சென்னை ஐஐடி மூன்றாவதாகத் தொடங்கப்பட்டது. தென் சென்னையில் கிட்டத்தட்ட 640 ஏக்கர் நிலப்பரப்பில் இது அமைக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மன் ஒத்துழைப்போடு தொடங்கப்பட்ட இக்கல்வி நிறுவனம், ஜெர்மனியின் RWTUVயிடமிருந்து ISO 9001 சான்றிதழைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் ஐஐடி - மதராஸின் ஆளுநர் குழுனி தலைவர் (Chairman Board of Governors) Dr. K. கஸ்தூரிரங்கன் அவர்கள். ஆரம்பத்தில் 180 மாணர்வகள் தான் இங்கு படித்தார்கள். ஆரம்பிக்கும்போதே எல்லா வகையான பொறியியல் துறைகளும் இங்கே இருந்தன. உயர்தரமான தொழில் நுட்பக் கல்வியை அளிப்பதோடு உயர்ந்த அளவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டினையும் ஐஐடி-மதராஸில் செய்து வருகிறார்கள். தற்சமயம் ஐஐடி-மதராஸில் கற்பித்தல் தவிர, ஆய்வு, தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் அவர்கள் நிதி உதவியுடன் ஆராய்ச்சி செய்து கொடுத்தல் (Industrial consultancy and Sponsored Research, ICSR) போன்ற நான்கு வகையான செயல்பாடுகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவைகளில்லாமல் ஒரு சில ஆலோசனை ஆராய்ச்சிகளைச் சமூக சேவையாகவும் ஐஐடி-மதராஸ் செய்து வருகிறது.
More

தமிழ்நாடு அறக்கட்டளை என்றொரு அகல் விளக்கு
Share: 




© Copyright 2020 Tamilonline