|
|
சிச்சு முடிச்சாச்சா சார்?' என்று நண்பர் தொடங்கினார். 'இப்ப சொல்லு. இன்னாச் சொல் முற்றிலும் ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றா, இல்லை ஏற்றுக்கொள்ள வேண்டியதும், இன்சொல்லுக்கு ஒருபடி குறைவானதுமா?'
'முற்றிலும் ஒதுக்கப்பட வேண்டிய ஒன்று தான்' என்றேன் நான். 'அதான். அதான். அங்கதான் தப்பு பண்றோம்' என்றபடி தொடர்ந்தார் நண்பர். 'அதாவது, பழம் இருக்கும் போது காயை எடுப்பது தவறு என்று இந்தக் குறள் பொருள்படுமா' என்று கேட்டார். 'அப்படித்தானே சொல்கிறார்? பழம் இருக்கும் போது காயைப் போய் எடுப்பவன் முட்டாள் தான். அதிலென்ன சந்தேகம் இருக்க முடியும்' என்றேன் நான் சற்றே குழப்பத்துடன். நான் சொல்வது சரிதானா என்ற ஐயம் எனக்கே தலைதூக்கி விட்டது.
'வள்ளுவத்தை வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வாயே அப்பனே! இப்ப என்ன தடுமாற்றம்?' என்று கேட்டு ஒரு கணம் நிறுத்தினார் நண்பர். 'காய் என்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றா? அப்படித் தான் நம் வாழ்வில் செய்கிறோமா? அது தவிர, பழத்தை ஒதுக்கிவிட்டுக் காயை மட்டுமே பொறுக்கி எடுப்பது நம் அன்றாட வாழ்வில் நடக்கவே நடக்காத ஒன்றா?' என்று கேட்டார். குழப்பம் அதிகம்தான் ஆனது.
'சரி. கொஞ்சம் வேற மாதிரி யோசிப்போம். இப்ப வீட்டுக்குப் போகும் வழியில் காய்க் கடைக்குப் போகிறோம். நாளைக்கு கறி சமைப்பதற்காக உங்க வீட்டம்மா ஏதாவது வாங்கிட்டு வரச் சொல்லியிருக்காங்க. கடையில் வாழைப்பழம் குலைகுலையாகத் தொங்குகிறது. இன்னொரு பக்கத்தில் வாழைக்காய் சீப்பு சீப்பாக இருக்கிறது. சார் எதை எடுப்பீங்க? நல்ல கெட்டியா இருக்கற காயைப் பாத்துப் பாத்து எடுப்பீங்களா இல்லாட்டி, வாழைப்பழத்தை எடுப்பீங்களா? ஊறுகாய் போட வேணும். கடையில் மாம்பழம் கொட்டிக் கிடக்கிறது. அதை எடுப்பியா இல்லாட்டி கொஞ்சம் கூடப் பழுக்காத நல்ல பசிய காயா வேணும்னு பாத்து எடுப்பியா?'
கொஞ்சம் மலர்ந்தேன். புரிவதுபோல் இருந்தது. 'காயைத்தான்' என்றேன். 'நம்ம கிட்ட என்ன குறை என்றால்,' நண்பர் தொடர்ந்தார் 'பல விஷயங்களில் நமக்கு முன்முடிபு இருக்கிறது. 'இதுதான் சரியானது' என்ற தீர்மானத்தை யோசிப்பதற்கு முன்னாலேயே எடுத்துவிடுகிறோம். அங்கதான் தடுக்கி விழுகிறோம். 'இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' என்பதில் இன்சொல் என்பது கனிக்கும்; இன்னாச்சொல் காய்க்கும் உருவகம். இல்லையா? பொதுவாக நாம் கனியைத்தான் விரும்புவோம். ஆனால் அதற்காகக் காயை முற்றிலும் ஒதுக்கிவிட மாட்டோம். அதுவும் உண்ணத் தகுந்த ஒன்றுதான். சில குறிப்பிட்ட காரியங்களுக்குக் கனியைக் காட்டிலும் காயே ஏற்றதாக இருக்கிறது என்பதையும் அறிவோம். இத்தனை இருந்தும், நாம என்ன பண்றோம்? மேற்படிக் குறளில் இன்னாச்சொல் என்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்ற பொருள் பயில்வதாக நாமே ஒரு தீர்மானத்துக்கு வந்துவிடுகிறோம். அப்படி இன்னாச் சொல்லைக் கிட்டவே சேர்க்கக் கூடாது; முற்றிலும் ஒதுக்கியே வைக்க வேண்டும் என்று சொல்ல வந்திருந்தால் வள்ளுவர் என்ன சொல்லியிருப்பார்? 'இனிய உளவாக இன்னாத கூறல் அமுதிருக்க நஞ்சை எடுத்தற்று' அப்படின்னோ அதுபோல வேறமாதிரியோ சொல்லியிருப்பார்; இல்லையா? ஒண்ணை அமுதமாகவும் இன்னொன்றை விஷமாகவும் சொன்னால் அல்லவோ இன்னொண்ணு விலக்கப்பட வேண்டியது--தற்கொலை செய்துகொள்ள வேண்டியிருந்தால் ஒழிய--என்று பொருள் கொள்ள?'
'அதாவது பொதுவா இன்சொல்லே பேசு; சில குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு, ஆக்கபூர்வமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய பயன்பாடுகளுக்கு--அதாவது இந்தக் கறி சமைப்பது, ஊறுகாய் போடுவது போன்ற குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில்--காயைப் பயன்படுத்துவதைப் போல இன்னாச் சொல்லை selectiveஆகப் பயன்படுத்து' அப்படின்னு சொல்றார் இல்லையா?' என்றேன்.
'அதே. உண்ணத் தகுந்த இரண்டு பொருள்களில் ஒன்றை இதற்கும் ஒன்றை அதற்கும் சொன்னாரே தவிர, உண்ணக் கூடிய ஒன்றையும், உண்ணவே கூடாத ஒன்றையும் பொருத்தி இந்தக் குறளில் உவமையை அமைக்கவில்லை. இரண்டும் ஏற்புடையது; இது அதிக ஏற்புடையது; இது குறிப்பிட்ட இடங்களில் மட்டும், தகுந்த பயன்களைக் கருதி மட்டுமே பயன்படுத்தக் கூடியது' என்றுதான் சொல்லவருகிறார்? ஒப்புக் கொள்கிறாயா இல்லையா?'
'சரி. ஒப்புக் கொள்கிறேன். அப்ப சினம் என்பது நெருப்பைப் போன்றது என்று சொல்லியிருக்கில்லையா? இன்னாச் சொல் சினம் இல்லாம வெளி வர முடியுமா? சினம்தான் சேர்ந்தாரைக் கொல்லி அல்லவா? எடுத்த கை என்பதற்காக அதைச் சுடாமல் விடுமா நெருப்பு? கொளுத்திய கையையும் தானே அது சுடும்?'
'ஆமாம். நீ சொல்வது உண்மைதான்' என்று நண்பர் தொடர்ந்தார். 'முதல்ல ஒரு புறநானூற்றுப் பாடல் பாத்தோமில்ல, அதுல அரசனுடைய பெருங்குணங்களைக் குறிக்கும் போது என்னென்ன உவமை சொல்லி யிருந்தது, குறிப்பா சினத்தையும் அருளையும் குறிக்க என்ன சொல்லியிருந்தது? |
|
வளித் தலைஇய தீயும் தீ முரணிய நீரும் (புறம் 2)
என்றல்லவா? அதாவது, தண்டிப்பதில் தீயைப் போலவும் அருளில் நீரைப் போலவும் இருப்பவன் என்று அந்த அரசனைக் குறிப்பிடுகிறார் இல்லையா புலவர்? இரண்டும் ஒரே ஆளிடம் இருக்கும் வேறுவேறும் எதிரெதிரானதுமான குணங்கள்தாமே? ஆனால் இரண்டுமே சிறப்பான குணங் களாகக் கூறப்படுகின்றன இல்லையா?' என்றார். 'நாம வள்ளுவனுக்கு வள்ளுவனே அகராதி என்று வைத்திருக்கிறோம் சார்' என்றேன் சிரித்தவாறு. 'மறுக்கவில்லை. ஆனால் பரந்துபட்ட நம் இலக்கியத்தில் ஒத்த கருத்துகளின் துணையே சிறிதும் இல்லாமல் திருக்குறளைப் பார்க்கவேண்டும் என்று எப்போதாவது முடிவெடுத்ததுண்டோ?' என்று மடக்கினார் நண்பர். 'பாரம்பரியமான நம் இலக்கியங்களில் பெறும் பயிற்சிதான் நம்முடைய வாழ்க்கை முறையையும், நாம் வாழ்ந்த விதத்தையும், ஒவ்வொரு திறக்கிலும் முடிவானதான நம்முடைய கருத்துகள் என்ன என்பதையும் நமக்கு உணர்த்தும். ஆகையால் மற்றவற்றையும் துணைக்குச் சேர்த்துக் கொள்வது நமக்கு ஏற்புடைய ஒன்றுதானே? சொல்லப் போனால் சங்க இலக்கியம் முதல் பாரதி இலக்கியம் வரையில் நம்முடைய பார்வை பரந்துபட்டிருந்தால், வள்ளுவத்தை நாம் அணுகுவதும் புரிந்துகொள்வதும் எளிது என்றும் பேசியிருக்கிறோமில்லையா?' என்றார். 'நான் விளையாட்டுக்குச் சொன்னேன். மேலே சொல்' என்று தூண்டினேன்.
'சினம் என்பது நெருப்பு என்பது நம்முடைய எல்லா இலக்கியங்களும் எடுத்துச் சொல்லும் ஓர் உருவகம்தான். ஆனால் மறுபடியும் ஒன்றைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம் இல்லையா?' என்று நிறுத்தினார். 'அதையும் நீயே சொல்லப்பனே' என்று சொன்னேன்.
'நெருப்பு அபாயகரமானதுதான். நெருப் போடு விளையாடக் கூடாதுதான். ஆனால், நெருப்பில்லாமல் வாழ முடியுமா?' என்று கேட்டார். இப்போது எனக்கு விடை தெரியும். 'முடியாது. சொல்லப் போனால் வாழ்க்கையே நடக்காது' என்றேன். 'அன்றாடம் சமைக்கவும், இரவில் ஒளி பெறவும் நெருப்பு அவசியம் வேண்டும் நமக்கு. நெருப்பில்லாமல் சமைப்பது எப்படி, விளக்கு எரிவது எப்படி' என்றேன்.
'ம். அது' என்று புன்னகைத்தார். 'நெருப்பு விலக்கப்பட வேண்டிய ஒன்றன்று; கவனமாகப் பயன்படுத்த வேண்டிய ஒன்று' என்பதே இந்த உருவகம் நமக்கு உணர்த்துவது, இல்லையா? முதலில் இனிமையாகப் பேசிப் பார்; பயன் கிடைக்காவிட்டால் கொஞ்சம் கடுமையாகப் பேசிப் பார்; அப்படியும் பலிக்காவிட்டால், நெருப்பில் வாட்டு. ஆனால் நீ வாட்டுவது உணவைப் பக்குவப்படுத்துவதைப் போல அந்த நபரைப் பக்குவப்படுத்த வேண்டுமே அல்லாது, அவரையோ அல்லது பயன்படுத்துகிற கையையோ சுடவோ எரிக்கவோ செய்யக் கூடாது. அடுப்பில் வாட்டும் சுக்கா ரொட்டியைப் பக்குவப்படுத்துவது போல் கவனமாகச் சுட வேண்டும். கொஞ்சம் கவனம் தப்பினாலும் கருகிப் போகும்' என்றார் நண்பர். 'கையையும் சுடும்' என்றேன் நான்.
'அதனாலதான் பாரதி 'ரெளத்திரம் பழகு' அப்படின்னான். நெருப்பைக் கையாள்வதற்கு எப்படித் தனிப் பழக்கமும் திறமையும் பக்குவமும் பொறுமையும் வேண்டுமோ அப்படித்தான் சினத்தைக் கையாள்வதற்கும் வேண்டும். Using anger as a tool என்பது இக்கால நிர்வாக இயலில் மிகவும் விவாதிக்கப்படும் ஒன்று இல்லையா? சினத்தோடும் நெருப்போடும் ஆட்டம் ஆட வேண்டியிருந்தால் அதற்குப் பழக்கமும் பயிற்சியும் வேண்டும். That is a job for the specialist. ஒப்புக் கொள்கிறாயா?' என்றார் நண்பர்.
'ஆமாம். தன்னைச் சுட்டுக் கொள்ளாமலும் எதிராளியைச் சுட்டெரிக்காமலும் பக்குவ மாகக் கையாள வேண்டிய கருவி நெருப்பு. உண்மைதான்' என்றேன்.
'மரக்காலின் மீது இட்ட விளக்கு அதிக வெளிச்சம் தரும்' அப்படின்னார் ஏசுநாதர். எவ்வளவு உயரத்தில் வைக்கிறோமோ அவ்வளவு அதிகமான பரப்பளவுக்கு விளக்கு வெளிச்சத்தைத் தரும் என்பது உண்மைதான். அதற்காக, எரியும் தீபத்தை எடுத்துச் சென்று, வீட்டில் இருப்பதிலேயே மிக உயரமான இடத்தில் வைக்கிறேன் என்று கூரையிலா சொருக முடியும்? எங்கே வைப்பது என்பது தெரியாத கை அந்த நெருப்பைத் தொடாமலே இருப்பது உத்தமமில்லையா?' என்றார். 'பழகிய கை நெருப்பைக் கையாள்வதற்கும் பழகாத கை கையாள்வதற்கும் உள்ள வேறுபாட்டை எப்படித் தெரிந்து கொள்வது' என்று கேட்டேன்.
சிரித்தார். 'நானே அதைச் சொல்லலாமா? உன்னிடமே என்றாலும் நான் தற்பெருமை பேசுவதா' என்றார்.
'புரியுது சார் புரியுது. நெருப்பைக் கையாளத் தெரிந்தவன் போல் சினத்தைக் கையாண் டால், ஒரு பக்கம் ஒருவரைத் திட்டிக் கொண்டே இன்னொரு பக்கம் வாடிக்கை யாளருடன் மிகப் பணிவாகப் பேசுவது மட்டுமில்லாமல், எதிரில் வந்திருக்கும் நண்பனை மிக அன்பாகவும் ஒரே நேரத்தில் வரவேற்கவும் முடியும். சினத்தை விட்ட இடத்திலிருந்து தொடரவும் முடியும். ஒன்றோடு ஒன்று கலந்துவிடாமல் எச்சரிக்கை யாக இருக்கவும் முடியும். நான் உள்ளே வரும் நேரத்தில் சார் இருந்தீங்களே அந்த மாதிரி' என்றேன்.
'ஆமாம். நெருப்பு கையில் இருக்கிறது. அதனால் 'குத்துவிளக்கை ஏற்றுவதா, கூரையை எரிப்பதா' என்று தீர்மானிப்பது நம் கையில்தான் இருக்கிறது. நம்முடைய மனம் அடைந்திருக்கும் பக்குவத்தையும் முதிர்ச்சியையும் சார்ந்திருக்கிறது அது' என்று முடித்தார் நண்பர்.
'வா. போகிற வழியில் கொஞ்சம் காய் வாங்கிக் கொண்டு போவோம். கனியிருப்பக் காய் கவர்ந்து போகும் வேலை பாக்கியிருக்கிறது' என்றவாறு எழுந்தேன்.
(வளரும்)
ஹரி கிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|