Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புதிரா? புரியுமா? | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
சிறுகதை
காபூலிவாலா
குளிர்காலம்
- |ஆகஸ்டு 2004|
Share:
எனது மானேஜர் மார்க் என்னை அவரது அறைக்கு அழைத்தபோது ஏதாவது வழக்கமான வேலை தொடர்பாகத்தான் இருக்கும் என்று எண்ணியவாறு சென்று அமர்ந்தேன். அவர் முகம் மிகவும் இறுகியிருந்தது. அப்படி அவர் ஒருபோதும் இருந்ததில்லை. என்னிடம் ஒரு உறையைக் கொடுத்தார். உள்ளே ஒரே ஒரு தாள். அதில் ரத்தினச்சுருக்கமாக நான்கே வரிகள். கடந்த நான்கு வருடங்களாக எனது சேவையில் நிறுவனம் மிகவும் பயனுற்றபோதிலும் இப்போதுள்ள நிலைமை காரணமாக என்னை வேலையிலிருந்து நீக்க வேண்டிய கடினமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்களாம். அடுத்த வேலை விரைவில் கிடைக்க வாழ்த்துத் தெரிவித்து இன்னும் மூன்று வாரங்களில் எனது அனைத்துப் பொறுப்புகளையும் எனது மேலதிகாரியிடம் ஒப்படைக்கும்படிக் கேட்டுக் கொண்டனர்.

மூன்றே வாரங்கள்! அதற்குள் வேலை கிடைக்காவிட்டால், நாற்பது வயதில் இந்த அமெரிக்க தேசத்தில் நான் ஒரு வேலையில்லாப் பட்டதாரி!

கிரீன் கார்டு பச்சை வண்ணத்தில் இருக்காது என்பது தெரியும். 'பிங்க் ஸ்லிப்' ரோஜா வண்ணத்தில் இருக்காது என்பதையும் இப்போது தெரிந்து கொண்டாகிவிட்டது. அனலாய்ச் சில வரிகள் அடங்கிய ஒரு காகிதம்தான் பிங்க் ஸ்லிப்.

கடந்த சில காலமாகவே நிறுவனத்தில் வேலைநீக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அடிக்கடி வழியனுப்பும் விருந்துச் செலவு. மாதாந்திரச் செலவுகளில் ஒன்றாகிவிட்டது. இப்போது வேலை போனதில் ஒருநாள் ஓசி சாப்பாடு கிடைக்கப் போகிறது. இதைத்தான் 'நேர்மறைச் சிந்தனை' என்கிறார்களோ! 'இடுக்கண் வருங்கால் நகுக', 'எல்லாம் நன்மைக்கே' என்றவையெல்லாம் எவ்வளவு போலியான சொற்றொடர்கள் என்று ஆதங்கமாக இருந்தது.

அலுவலகத்திலிருந்து வெளியே வந்த போது கார் நிறுத்துமிடம் முழுதும் பனியில் மூழ்கியிருந்தது. எனது வண்டியை எங்கே நிறுத்தினேன் என்பதே நினைவில்லை. மிகுந்த முயற்சிக்குப் பின் காரைக் கண்டுபிடித்து, பனியைத் துடைத்து முடிப்பதற்குள் அந்தக் குளிரிலும் வேர்த்துவிட்டது. காரில் செல்லும் போது மனம் மென்மேலும் பாரமானது. மனைவியிடம் விஷயத்தை எப்படி உடைப்பது என்று யோசித்த வண்ணம் சென்றேன்.

வீட்டை அடைந்தபோது என் மனைவியும், மகனும் எதைப் பற்றியோ மிகவும் சந்தோஷமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களது மகிழ்ச்சியைக் கெடுக்க மனமின்றிச் சற்றுநேரம் பேசாமல் அமர்ந்திருந்தேன். எனது வித்தியாசமான நடத்தை அவர்களை ஈர்த்திருக்க வேண்டும். சோகச் செய்தியை எப்படிச் சொன்னேன் என்பதே நினைவில்லை. ஆனால் என் மனையின் வருத்தம் தோய்ந்த முகத்தை எப்போதும் என்னால் மறுக்க முடியாது.

என் மனைவி நகை, பட்டாடை போன்ற ஆடம்பரங்கள் எவற்றிலும் விருப்பம் இல்லாத ஓர் எளிய பிறவி. ஹைதராபாத்தில் பாதுகாப்புத் துறை ஆய்வகத்தில் நான் பணியாற்றிய போது நாங்கள் குடியிருந்த அரசு குடியிருப்பும் அதில் அவள் வளர்த்த ரோஜாத்தோட்டமும் அவளுக்குப் பூரண திருப்தி அளித்தன. எனது அமெரிக்கக் கனவைக் கெடுக்க வேண்டாம் என்பதற்காக நான் அரசாங்க வேலையை ராஜினாமா செய்தபோது அவள் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ராமனுடன் சீதை வனவாசம் வந்தது போல் என் பின்னே அமெரிக்க வாசம் வந்தாள். வந்த புதிதில் அமெரிக்க வாழ்க்கை பிடிக்காமல் மிகவும் கஷ்டப்பட்டாள். இப்போது ஒருவழியாக இங்குதான் வாழ்க்கை என்று ஏற்றுக் கொண்ட வேளையில் நான் இன்று அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டேன்.

என் மகனுக்கு நிலைமையின் தீவிரம் அவ்வளவாக புரியவில்லை. அவனைக் குழப்ப வேண்டாம் என்று அவனிடம் முடிந்தவரை இயல்பாக இருக்க முயற்சி செய்தோம். இருந்தாலும் அவனுடைய குறும்புகளுக்கு எங்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. நாங்கள் இருவரும் சோகமாக இருப்பது கண்டு அவனும் சோகமாகி விட்டான்.

யோசிக்க யோசிக்க பல்வேறு குழப்பங்கள் தோன்றின. எவ்வளவு நாள் வேலை தேடி முடியும்? வெகு நாட்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் சேமிப்பெல்லாம் கரைந்து வெறுங்கையுடன் இந்தியா திரும்ப வேண்டியிருக்கும். இப்போது மூட்டை கட்டிவிட்டால் சேமிப்பாவது மிஞ்சும். அதை வைத்து ஊரில் நிறையக் காலம் ஓட்ட முடியும். வேலையிழந்தவுடன் இந்தியா சென்ற நண்பர்கள் பெரும்பாலானோருக்கு இந்தியாவில் விரைவில் வேலை கிடைத்தது நினைவுக்கு வந்தது. இப்போதும் அவர்கள் அமெரிக்க வாழ்வை எண்ணி ஏங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அமெரிக்காவில் வாழும்போது எப்போதும் அமெரிக்காவின் கலாச்சாரச் சீரழிவைத் திட்டிக் கொண்டும் தங்கள் பிள்ளைகளை அதன் பாதிப்பிலிருந்து எப்படிக் காப்பாற்றப் போகிறோமோ என்று அங்கலாய்த்துக் கொண்டும் இருந்தார்கள் என்பதை நினைத்தால் விநோதமாக இருக்கிறது.

சென்ற விடுமுறைக்கு இந்தியா சென்றபோதே அமெரிக்காவில் வேலை போய்விட்டதா என்று பலர் விசாரித்தனர். இப்போது அவர்களது கேள்விகளுக்கெல்லாம் பதில் கூற வேண்டியதை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. மிகுந்த சிந்தனைக்குப் பிறகு மூன்று மாதங்கள் வேலை தேடியும் கிடைக்கவில்லை என்றால் இந்தியா திரும்ப முடிவு செய்தேன்.

வேலை தேடும் படலம் தொடங்கியது 'ஹிந்து'விலும் BBC-யிலும் தொடங்கிய எனது காலைப்பொழுதுகள் Monster-இலும் Dice-இலும் புலர்ந்தன. ஒரு பட்டனைத் தட்டினால் விண்ணப்பம் அனுப்ப முடியும் என்று இணையம் வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ள போதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் அனுப்பியும் கங்கை-காவிரி இணைப்புத் திட்டம் போல் எனது வேலைதேடும் படலத்தில் முன்னேற்றம் ஏதுமில்லை. இவ்வளவு முயன்றும் எந்தப் பலனும் இல்லாதது கண்டு என்னை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றச் சர்வதேச சதி நடக்கிறதோ என்ற சந்தேகம் கூட எழுந்தது.
இனி இணையத்தை நம்பிப் பயனில்லை என முடிவு செய்து வேலை தேடும் அணுகுமுறையை மாற்றி நண்பர்கள் மற்றம் தெரிந்தவர்கள் அனைவருக்கும் எனது விண்ணப்பத்தை அனுப்பினேன். சிலர் மட்டும் பதில் அனுப்பினர். அவர்களும் வேலை தேடி கொண்டிருக்கிறார்களாம். அவர்களது விண்ணப்பங்களை அனுப்பியிருந்தனர்!

ஒரு மாதம் கழிந்துவிட்டது. என் மனைவியின் தினசரி நிகழ்ச்சி நிரல் எனக்கு அத்துப்படியாகி விட்டது. மகனைப் பள்ளிப் பேருந்தில் ஏற்றிவிடுதல், சமையல், மதியத் தொலைக்காட்சித் தொடர், 'All My Children' (கன்னித் தீவு கதையை விட நீளமான மெகா சீரியல்... குமரியாக வந்த எரிக்கா பாட்டியாகியும் நடித்துக் கொண்டிருக்கிறாள்). பின்பு பள்ளிப் பேருந்துக்காகக் காத்திருப்பதில் பொழுது கழிந்துவிடும். குழந்தைகள் பேருந்திலிருந்து இறங்கி ஓடிவரும் அழகைக் காணக் கண்கோடி வேண்டும்.

அமெரிக்கா எனக்கு அளித்திருக்கும் கட்டாய ஓய்வினால் இதுவரை ரசிக்காத சில காட்சிகளை ரசிக்க நேரம் கிடைத்தது. ஜன்னல் வழியாகத் தெரியும் மரங்கள் அனைத்தும் பணியில் மூழ்கி எந்தவிதச் சலனமும் இன்றி இருந்தன. வசந்தத்தின் போது பச்சைப் பசேல் என்று காற்றில் ஆடி என்னமாய் ஆரவாரம் செய்தன! இப்போது பனியில் மூழ்கிக் கிடக்கின்றன. நாங்கள் சோகத்தில் மூழ்கியிருப்பதைப் போல! ஆனால் மீண்டும் வசந்தம் வரும் என்ற நம்பிக்கை எங்கள் இருவருக்குமே இருந்தது.

இரண்டு மாதங்களுக்கு மேல் விடாமல் முயன்றபின் எனது தொலைபேசி ஒலிக்கத் தொடங்கியது. பெரும்பாலும் ஒப்பந்த நிறுவனங்களே அழைத்தன. வேலை தொடர்பாகப் பேசும் இந்தியர்களுக்கும், அமெரிக்கர்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் காண விந்தையாக இருந்தது. பெரும்பாலான இந்தியர்கள் அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கிலம் பேச முயன்று தங்கள் சொந்த உச்சரிப்பையும் மறந்து விநோதமாகப் பேசுவார்கள். அது போன்ற ஆட்களிடம் பேசும்போதே அந்த வேலை நமக்குத் தேறாது என்பது தெரிந்து விடும். ஆனால் அதைக் கேட்கும் ஜாலிக்காகவே தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பேன்.

அமெரிக்கர்கள் பேசும்போது நான் என்ன சொன்னாலும் 'excellent', 'perfect', 'wonderful' என்று கூறிக் கொண்டே இருப்பார்கள். பேசி முடிக்கும் போது திறமைக்கேற்ற வேலை இருந்தால் மீண்டும் தொடர்பு கொள்வதாகக் கூறி முடிப்பார்கள். இந்தியர்களின் அணுகுமுறையே நேர் எதிராக இருக்கும். "இந்த வேலை ஏறக்குறைய உனக்கு ஒத்துவரும். ஆனால் உனது விண்ணப்பத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும்" என்று தொடங்குவார்கள். ஒவ்வொரு முறை நான் விண்ணப்பத்தை மாற்றி அனுப்பும்போதும் புதிதாக ஏதாவது சேர்க்கச் சொல்வார்கள். சிலர் இன்னும் ஒருபடி மேலே போய் அவர்களே என் விண்ணப்பத்தை மாற்றி வாடிக்கையாளருக்கு அனுப்பி விடுவார்கள்!

இப்படி விண்ணப்பத்தை மாற்றி மாற்றி ஒரு சமயத்தில் எனது நிஜ விண்ணப்பம் எப்படி இருக்கும் என்பதே மறந்துபோகும் நிலை ஏற்பட்டது. எந்தெந்தக் கம்பெனிக்கு எந்த விண்ணப்பம் அனுப்பினேன் என்பதும் குழம்பியது. நான் குழப்பத்தின் உச்சத்தில் இருக்கும்போது தொலைபேசி ஒலித்தது. எனது விண்ணப்பத்தை Monster-இல் கண்டதாகவும், ஓர் ஆண்டுக்கான வேலை இருப்பதாகவும் கூறி எனது விருப்பம் கேட்டாள். நான் அதிக நம்பிக்கை ஏதுமின்றி சரி என்றேன். இது போல் எத்தனையோ பேர் கேட்டுவிட்டுப் பின்பு காணாமல் போய்விட்டனர்.

ஆனால் அன்று மதியமே நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. மறுநாளே வேலைக்கு வரச்சொல்லிவிட்டனர். சில நேரங்களில் நாம் வெகுகாலமாய் எதிர்நோக்கும் விஷயங்கள் எதிர்பாராத வேகத்தில் நடந்து விடுகின்றன!

புது அலுவலகத்திலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும்போது மரங்களில் இருந்த பனியெல்லாம் உருகி வசந்தத்தின் அறிகுறியாய்த் துளிர்கள் தோன்றியிருந்தன. அடுத்த குளிர்காலம் இவ்வளவு கடினமாக இருக்காது என்ற நம்பிக்கையுடன் காரைச் செலுத்திக் கொண்டிருந்தேன்.

அருள்
More

காபூலிவாலா
Share: 




© Copyright 2020 Tamilonline