|
|
வீட்டிற்குள் ஒரு வாரமாக மவுனம் உறைந்து கொண்டிருந்தது. யார் முகத்திலும் களிப்பு இல்லை. நஜீபுக்கு இறுதி ஆண்டு பரீட்சைக்கு பணம் கட்டுவது எப்படி என்று கேள்வி தொங்கிய முகங்கள். 725 ரூபாய் கட்ட வேண்டுமென்று நஜீப் கல்லூரி விட்டு வந்து சொன்ன மாலையிலே மனம் இடிந்து உள்ளே விழுந்தது.
எப்படி திரட்டுவேன் இந்த பெரும் துகையை?
பணம் திரட்டும் முயற்சியில் தோல்வி கண்டு, ஒரு வாரமாக இரவுத் தூக்கமில்லே. காலையில் இறங்கிப் போய் எங்கெல்லாமோ பணம் கேட்டு அலைந்துவிட்டு வந்து உட்கார்ந்ததுதானுண்டு. வந்தேறிய கால் களாறக்கூட அவகாசம் கிடைக்கவில்லை. மனைவியின் பஞ்சரிப்பு. பஞ்சரிப்பு தாங்காமல் வீட்டிலிருந்து இறங்கி எப்போதும் சென்று கொண்டிருந்தேன். தலைக்குள் இழந்தவற்றைப் பற்றியத் துயரச் சிந்தனைகள் எப்போதும் போல.
மனைவியின் தொல்லை தாங்கி சற்று உட்கார முடியவில்லையே என்ற கவலை வேறு. நச்சரித்துக் கொண்டேயிருந்தாள். மீன் வாங்கிவர, மீன் பட்டுச் சொரியுதாம். ரொம்பவும் மலிவாம். மீன் தொட்டு கூட்டி ரொம்ப நாளாச்சாம். ரூபாய்க்கு இருபது சாளை மீனாம்!
இளம் உச்சி நேரம். வழக்கம் போல் எடுத்துக் கொள்ளும் குடையை எடுக்க வில்லை. வேண்டுமென்றே எடுக்காதது அல்ல. நச்சரிப்புத் தாங்காமல் பலதும் மறந்த கூட்டத்தில் குடையும் மறந்துவிட்டது. தப்பினால் போதுமென்று இறங்கிச் செல்லல்.
கடற்கரைக்குச் செல்லும் முடுக்கு திரும்பு கையில் பொது பொதுவென்று வாசனை அங்கு பொங்கியது. நின்று முகராமல் நகர மனம் விடவில்லை. எங்கு திரும்பினாலும் வெளிநாட்டு நறுமணத்தால் மூச்சு திணறிப் போகும் போலிருக்கிறது. இப்போதெல்லாம் இந்த மூச்சுத்திணறல் இப்பம் கொஞ்ச காலமாகத்தான், ஊரில் வேலை வாய்ப்பில்லா தவர்கள் கடல் கடந்த பிறகு. மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு வெளிநாட்டு சோப்பாவது, செண்டாவது யாராவது தரமாட்டார்களா என்ற ஏக்கத் திற்குப் பின் விலை கொடுத்து வாங்க முடியாத வறுமைச் சிந்தனை அவர்களுக்கு இல்லாமலில்லை.
''ஒரு போசியா சோப்பு தேச்சு குளிக்க ஆசையா இரிக்கி.''
மனைவி வேண்டும்போதெல்லாம் மவுனம் பதில்.
நச்சரிப்பில் மவுனம் உடைந்து உதிரும் சொற்கள் அவளை ஆறுதல் படுத்துவதற்கு போதுமானதல்ல.
''பொறு நம்மொ சொந்தக்கார புள்ளைய ஊருக்கு வந்தா தருவாங்கொ''
''உங்கெ மருமோனுக்கு ஒரு காயிதம் போடுங்கோ. ஆறு கட்டி சோப்புக்கும் கால் டஜன் ஸ்ப்ரேக்கும்.''
''வேறே''
''எனக்கு ஒரு ஹேர் டையும்.''
''ஆருக்கும் எதுவும் கேட்டு கடிதம் எழுதும் பழக்கம் எனக்கு இல்லை; பொறு மருமொவன் வந்தா தருவான்.''
என்னிடம் இருக்கும் எதையோ கேட்டு, நான் கொடுக்காதது போல முகத்தை வெட்டித் திருப்பிவிட்டாள். எதற்கும் மசிய மாட்டேன் என்று புரிந்து இப்போது கடிதம் எழுதச் சொல்லிப் பின்னி எடுக்காதது எனக்கு ஆறுதலாகவேயிருந்தது.
எவளாவது கண் சிமிட்ட வைக்கும் சேலை அணிந்து கொண்டாலோ, அவளுடைய ஆடையிலிருந்து வாசனை புறப்படுவதை முகர்ந்தாலோ, உதட்டுச் சாயத்தையோ, அய்ஷாடோவையோ கண்டாலோ, அந்தக் கணம் அவளுடைய தொண்டை கரகரக்கும்.
''எனக்கு ஒரு கூடப்பிறப்பு வெளிநாட்டிலெ இருந்தா...''
அவளுக்கு ஒரு உடன்பிறப்பு இல்லாத குறையை ஒவ்வொரு அசைவிலும் சொல்லிக் கேட்டு, கேட்டுக் காதே செவிடாகிவிட்டது.
இதையெல்லாம் செவியுறவும், செவியுறும் போதெல்லாம் மனசில் வியாபிக்கும் வேதனைகளை தாங்கி ஓர் ஊமைப் பிறவி யாக நடக்கவும் என்னை ஆட்கொள்ளச் செய்த பொருளாதார தகர்ச்சையை மறக்க முயன்றாலும் முடிவதில்லை. இந்த முடியாமை, வறுமையில் வாடுவோருக்கு ஓர் அதிகப் படியான தண்டனையல்லவா என்று தோன்றுவதுண்டு.
சென்று கொண்டிருந்த முடுக்கை ஒட்டிய வீடு, உறவினருடையது. அந்த வீட்டுக்காரர் குவைத்திலோ பஹ்ரைனிலோ? அந்த வீட்டுக்க பின்புறம் கிணறு. கிணற்று நீர் ஓடிச் செல்ல இடம் இல்லை. வீட்டு மதில் சுவரின் அடியில் கல் சூழன்று போன துளைவழியாக குளிக்கும் தண்ணீர் முடுக்கில் மலைப்பாம்பு போல் ஓடிக் கொண்டிருந்தது. அந்தத் தண்ணீரிலும் வாசமிருந்தது. அதை மிதித்துத் தான் நடக்க வேண்டும்.
தண்ணிரில் மிதிக்காமல் எப்படி போவது என்று யோசனையில் நிற்கும் போது, மதில் சுவரைத் தாண்டி தோளில் வந்து விழுந்தது, வெளிநாட்டு கெமி சோப்பின் பளபளப்பான மேலுறை ஒன்று. தண்ணீரில் விழவில்லை. எடுத்த உறையை ஆசை தாளாமல் முகரத் தோன்றியது.
மனைவி மக்கள் ஆசைப்பட்டதில் அர்த்த மில்லாமலில்லை. ஆசைகளையே நினைக்கக் கூட மறுக்கப்பட்டவன் என்ற உள்ளுணர் வுடன் நாளைய வயிற்றுக்கு வழி தேடும் தன்னையே இந்த வாசம் ஈர்க்குமென்றால்!
அந்தரங்க அறை இருட்டிலிருந்து ஒரு ஈர விரல் சுட்டித் தூண்டியதால் அந்த உறையை பெருங்காயப் பைக்குள் போட்டுக் கொண் டதும் அங்கு நிற்கவில்லை. மலைப்பாம்பின் மீது மிதித்து விடாமலிருக்க கால்விரல் ஊன்றி எப்படியோ நடந்து ஒரு வழியாக முடுக்கைக் கடக்க முடிந்தது. கடற்கரைக்கு செல்லும் வழியில் வைத்து உறையை மடியில் கட்டியதை நினைக்கும் போது, அது ஒரு தரக்குறைவான செயலாகியிருந்ததென்று இப்போது தோன்றுகிறது.
மனைவியின் கணிப்பு தவறவில்லை. எக்கச்சக்கமான மீன்கள் பட்டுச் சொரிந்தன. விசாரித்தவர்களிடமிருந்தெல்லாம் வந்த ஒரே பதில் - மலிவுதான், ரூவாக்கு இருவது சாளை.
இந்த மலிவு நேரத்திலாவது மீன் கூட்டி உண்பதற்கு நாக்கு குறுகுறுத்தது.
சுளகில் கூட்டி வைத்திருந்த மீன்களைப் பார்த்து விலை கேட்டேன்.
விலை சொல்லுமுன் மீன்காரி என்னை ஏறிட்டுப் பார்த்தாள். அவளுடைய மூக்குத் துவாரம் அகலப்படுவதைக் கவனித்தேன்.
விலை சொன்னாள்-'' ஒரு ரூவாவுக்கு ஒரு சாளை''
நடுங்கிவிட்டேன்.
மலிஞ்சு மண்ணேறிக் கிடப்பதாக எல்லோரும் சொன்னார்கள். இவளேன் இந்த கொள்ளை விலை சொல்கிறாள்?
''ஏன் ரோசிக்கீரம். பஞ்சம் குத்தாரெ வாங்கிட்டுப் போய் பொரிச்சு தின்னுமே..''
அவளுடைய மூக்குத் துவாரங்கள் அகலப்பட்டதின் பொருள் என்னவென்று யோசித்து நிற்கையில் அவள் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள்.
''இப்போ பேச்சியாக்காரங்கொ மீனுக்கு வெல கேக்காட்டாங்கொ'' மடியிலிருந்து மணம் பரப்பிய உறை, என்னை அவள் கண்களுக்கு உயர்வாகக் காட்டியது. அவள் முன் நான் எனக்குள் குறுகி நின்றேன். அவள் சொல்லும் தீ விலை கொடுத்து வாங்கும் சக்தியல்லாத தவிப்பு எனக்கு என்றும் போல் இன்றும் ரசமும் துவையலும் தான். திரும்பி நடக்காமல் வேறு வழியில்லை. நேற்று வரை பார்த்தாலும் பாராமல் நடந்தவர்களெல்லாம், ஆசை குன்றிப் போய் திரும்பிப் சென்று கொண்டிருந்த என்னை கடந்து சென்ற கணம் அவர்களாகவே கைத்தட்டிக் கூப்பிட்டு, மகன் போசியாவிலா என்று நலம் விசாரித்தனர். அதன் அகப் பொருள் முதலில் எனக்குப் பிடிபட வில்லை. எதோ ஒரு புரியாமை எனக்குச் சுற்றும் வலை பின்னி சிக்க வைத்தது. வெறும் பையும் வீசிய கையுமாக படி ஏறிய போது மனைவி சேலை முனையை இடுப்பில் சொருவினாள். அது படைவாளை உருவி எடுப்பதாகும். அவளுடைய அடிப் பாவாடை விளிம்பு அவள் கால் மூட்டை தொட்டிருந்தது.
''என்ன வெறும் கையோடெ வாறியோ?'' கேள்வியே அதட்டலாகவும் எட்டி மிதிப்ப தாகவும் இருந்தது. சீறி வந்த அவளுடைய முகத்திலிருந்து சீற்றம் விலகியதும் உடன் அவள் புன்னகைத்ததும் ஒரு நொடி இடையில் அவளிடத்தில் கண்ட இந்த அற்புத மாற்றம் புதிராகவே இருந்தது முதலில்.
''கொண்டாருங்கோ'' கை நீட்டினாள்.
''மீன் வாண்டல்ல. கொள்ள வெல.''
''பரவாயில்லெ. பேர்சியா சோப்பை கொண்டாருங்கொ''
''சோப்பா?''
மடியிலிருந்த உறை நினைவுக்கு வந்தது. என்ன சொல்வதென்று தெரியாத குழப்பமாக வேயிருந்தது. வெற்று உறையை எடுத்த போது அவள் முகத்தில் கரடி ஓடித் திரிந்தது.
வெறித்துப் பார்த்தாள் என்னை.
அந்தப் பார்வை அனலில் தோல் கொப் புளங்களை உண்டாக்கின.
பெண் முகத்திற்கு இவ்வளவு கவர்ச்சி அழகையும், இவ்வளவு நடுங்கச் செய்யும் சீற்றத்தையும் கொடுத்த படைப்பாளியின் படைப்புத் திறனைப் பாராட்டமாலிருக்க முடியவில்லை.
''இண்ணைய்க்கும் வெறும் சோறு தின்னு வாங்கொ.''
சொருகியிருந்த சேலை முனையை எடுத்து விட்டுக் கொண்டு போன போக்கு! உலகையே வெறுத்துவிட்டுப் போவதாக வேயிருந்தது. ஏதேனும் கிணற்றிலோ ஆற்றிலோ குதிக்கப் போவதாயிருந்தது. இப்படியான எதிர்வினைகளையெல்லாம் கண்டபோதும் உறையை வெளியே வீச மனம் ஒப்பவில்லை. கூட்டிலுள்ள நெளிவு சுளிவு களை எடுத்து சோப்பு வடிவத்தில் கூட்டை சரி செய்து காட்சிப் பொருள்கள் இல்லாத, கண்ணாடி உடைந்து போன ஷோக்கேசில் பத்திரப்படுத்தினேன். வெளிநாட்டு சோப்பின் உடலில் ஒட்டியிருந்த உறையையாவது முகர்ந்து கொண்டிருக்கலாம் என்ற சின்ன ஆசை. சகோதரி பையன் பஹ்ரைனுக்கு செல்ல யாத்திரை கேட்க வருகையில் நிறைய விதவிதமான நாற்காலிகளும் கண்ணாடி டீப்பாய்களும் அலங்காரமாய்க் கிடந்தன. முந்தைய பெரிய வீட்டு முகப்பில். இப்போது இந்த சின்னஞ்சிறிய வாடகை வீட்டில் பழைய ஒரு நார் கட்டில் மட்டும் வருவோருக்கு உட்கார. அதில் உட்காரும் போதெல்லாம் இழந்து விட்ட செழுமைகளையும் அவை வீட்டை விட்டு வெளியேறிய சால்களையும் தற்போதைய வறுமையில் ஒரு நாளை நகர்த்திவிடுவதையும், நஜீபை படிக்க வைக்கப்படும் சிரமங்களையும் பற்றிய நினைப்பு பகலை இரவிலும், இரவை பகலிலும் கொண்டு விடுகிறது. நார் கட்டிலில் முட்டுகட்டி உட்கார்ந்து கொண்டிருந்த போது, ஜன்னல் கம்பி வழியாக வீட்டின் முன்பக்கமுள்ள தென்னம் தோப்பு பார்வையில் பட்டது. தன்னிடமிருந்து அன்னியப்பட்டுப் போன அந்த தென்னம் தோப்பில் குலைத்து நிற்கும் தெங்கின் மண்டையில் பார்வை ஊன்றிக் கொண்டிருக் கும் போது நஜீப் முன்வந்து நின்றான்.
''நாளை கடைசி நாள். பணம் கட்டல் லேண்ணா பரீட்சை எழுத முடியாது.''
நஜிபுடைய பார்வையில் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் முயங்கியிருந்தன.
தென்னம் மண்டையிலிருந்து பார்வையை பிடுங்கித் திரும்பியதும் என் ஏமாந்த பார்வை அவனை தளர்த்திவிட்டது போலிருந்தது எனக்கு. அப்படி ரொம்ப நேரம் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாதபடி அவன் முகம் வாடி வெளிறிப் போயிருந்தது.
'கெடக்கல்லியா?''
இல்லலெயன்று சொல்ல நா எழவில்லை. தலை அசைப்பில் தோல்வியை சாடை சொன்ன போது அவன்அப்படியே சிலையாய் நின்று கொண்டிருந்தது என் ஈரக் குலையை பிழிந்துவிட்டது.
''கேக்காத இடமில்லை. இனி ஆருட்டெப் போய் கேட்டுப் பாக்க...?''
பார்வையை அவன் முகத்திலிருந்து விலக்கி, பழையபடி தென்னம் மண்டையிலேயே ஊன்றிக் கொண்டிருந்தேன்.
அங்கு நிலவிய நிசப்தத்தை அவனே உடைத்தான்.
''ரஷீத் மச்சான் வெளிநாட்டிலிருந்து வந்து ஒரு வாரமாச்சாம்..''
''வந்திருக்கானா?''
சந்தோஷமாகவேயிருந்தது. நாயாய் அலைந் தற்கு ஆண்டவானாகவே ஒரு வழியைக் காட்டிவிட்டான் போல் தெரிகிறது.
''மச்சானுட்டெ கேட்டுப் பாருங்கொ, நாளை கடைசி நாள்.''
நஜீப் துடிப்பதைக் கண்ட போது அப்படியே இருந்துவிட மனம் வரவில்லை.''
''அவளிட்டையும் கேட்டுப் பாக்கல்லேன்னு வேண்டாம்ப்பா. போய் கேட்டுக் பாக்கேன்.''
புறப்படும்போது மனைவி கஞ்சி குடிக்கச் சொன்னாள். சீக்கிரம் புறப்பட்டுப் போனால் இரவு எட்டரைக்குள்ள பஸ்ஸிற்கு திரும்பி விடலாமென்ற நினைப்பு இருந்ததால் கஞ்சியை நாடி சுணங்கவில்லை.
குடை எடுத்துக் கொண்டு இறங்கும்போது மனைவி நினைவூட்டினாள்.
''சோப்பும், சாரியும், ஸ்ப்ரேயும் கேட்டு வாங்குங்கோ.. நம்மொ புள்ளதானே.''
அவள் சொன்னதைக கேட்டது பாதி, கேட்காதது பாதி என்று என்று குடையை விரித்துக் கொண்டு ஒண்ணே காலுக்குள் பஸ்ஸை எட்டிப் பிடிக்க நடையை துரிதப்படுத்தனேன். எப்பாடுபட்டாவது இந்த ஆண்டு பரிட்சை எழுதிவிட்டால் நஜீபுக்கு எங்காவது ஒரு வேலையை வாங்கிவிடலாம். அவனுடைய வருவாய் ஒரு சிறு தாங்கலாயிருக்கும். சாலையோர மரங்களும் விடுகளும் என்னுடைய எதிர்திசையில் ஓடும்போது மருமகனுக்கு கல்லூரி படிப்புக்கு அவ்வப் போது பணம் கொடுத்தது, ஒவ்வொரு பெருநாளுக்கும் புத்தாடை வாங்கி கொடுத்தது. வேலையில்லாமல் அலைந்த போது உதவி புரிந்தது. பஹரைன் செல்ல அவனுக்கு என்.ஜி.ஓ. ஏற்பாடு செய்து கொடுத்தது எல்லாம் நினைவில் குழுமின. வெளிநாடு சென்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் தடவையோக ஊர் வந்திருக்கிறார்கள். அவனிடத்தில் இப்போது பல மாற்றம் காணலாம். திருமணத்திற்கான ஆதத்தோடு வந்திருக்கக்கூடும். விமானம் ஏறிய பின் பல தபால்கள் மாமனாருக்கு மாட்டுவதற்கும், ஒரு ஏர்கண்டிஷன் மேஷின் அனுப்புவதாக, மாமிக்கு ·பிரிட்ஜும், வாஷிங்மெஷினும் அனுப்புவதாக எழுதிய கடைசித் தபாலில் வரும் போதெல்லாம் கையில் கொண்டு வருவதாகயிருந்தது. என்னுடைய பொருளாதார உன்னத நிலைக்கு ஏற்றவாறு பல ஆடம்பர நாகரிகப் பொருட்கள் அனுப்புவதாக எழுதும் ஒவ்வொரு கடிதமும் மேலும் பல வாக்குறுதிகளால நிரம்பியிருந்தன.
ஒவ்வொரு கடிதம் வரும் போதும் பதில் போடாமல் இருப்பதில்லை. சரிந்து கொண்டிருந்த பொருளாதார நிலையை பதிலில் குறிப்பிடாதது, தன் வறுமை தன்னிடமே இருக்கட்டும் என்றுதான். வாடகை வீட்டில் கோழிக்கூட்டில் மாமனாரும் மாமியாரும் பிள்ளைகளும் கால் நீட்ட இடமில்லாமல் சுருண்டு கொண்டிருக் கையில் ·பிரிட்ஜும், வாஷிங்மெஷினும் வைக்க இடம்? மருமகன் விமானத்தில் பறந்த பிறகு, பிறந்த சின்னஞ்சிறு கிராமத்தை விட்டுத் தாய் தந்தையரை பரபரபப்பாக நகர மத்தியில் ஈரடுக்கு மாடிக் கட்டிடத்தில் பெயர்த்துக் குடி இருத்திய அவனுடைய செழுமையில் பொறாமை கொள்ளவே இல்லை. அவனுக்கு அள்ளிக் கொடு ஆண்டவனே என்று வேண்டத்தான் கைகள் உயர்ந்தன. ஆறு ஆண்டுகளுக்குப் பின் முதல் தடவை யாக ஊருக்கு வந்திருக்கிறானாம். வந்து ஒரு வாரமாகி விட்டதாம். பஸ் இறங்கிய இடத்திலிருந்து வீடு தொலைவில் பெருநகர் பேருந்துகள் நுழையாத நெடுநீளமான ஒரு சந்தின் கடைசியில் ஆட்டோ பிடித்தால் திரும்பி வர எதுவும் மிஞ்சாத ஜேப்பு இருப்பு. சூரியனின் திமிர்ப்பு தணிந்திருந்தாலும், வீசிக் கொண்டிருந்த காற்றில் குளுமை இருந்தாலும் நடக்க இதமாகத்தானிருந்தது. செழுமை நாளில் அடிக்கடி சென்று வந்த நகரமான தால் ரோடுகளும் சந்துகளும் பரிச்சயமானவை யாக இருந்தன. முகவரி காட்டி வழிகேட்டுத் தடுமாற வேண்டிய நிலை ஏற்படவில்லை.
புன்னகையுடன் வரவேற்ற தங்கையின் உபசரிப்பில், மனம் குளிர்ந்தது என்று சொல்வதற் கில்லை. அந்த நேரம் அந்த சாக்கடைத் தண்ணி - சாயாவும் ஒரு துண்டுக் கேக்கும், காய்ந்திருந்த கும்பியை சற்று ஈரப்படுத்தித் தேற்றியது ஆசுவாசமாகவே இருந்தது. வீட்டிலிருந்த துபாய் அலங்காரங்களில் பார்வை திரும்பிவிடாத அளவிற்கு சிந்தனை யில் சூடேறியிருந்தது. குஷன் நாற்காலிகளும் கண்ணாடி டீப்பாய் களும் வரவேற்பறையை அடைத்துக் கொண்டிருந்தன. அதில் உட்கார்ந்து கொள்ளும் தகுதியை நான் இழந்துவிட்டதை உணர்ந்து, தங்கை ஒரு மர ஸ்டூலின் மீது சாயாவும் கேக்கும் வைத்துவிட்டு எனக்கு உட்கார இன்னொரு மர ஸ்டூலை வீட்டுக் குள்ளிருந்து எடுத்து வந்து போட்ட போது தான் என்கண் முன் நஜீப் நின்று கொண்டிருந்தான். குடும்பத்தின் எதிர்காலம் அவனேதான். அவனை எப்பாடுபட்டாவது கரையேற்றியாக வேண்டும். முள் படுக்கை யிலானாலும் படுக்க தயக்கமில்லாத இக்கட்டு. தன் தகுதியின்மையை உணராமல் குஷன் நாற்காலியில் தவறுதலாக இருந்துவிட்ட குற்ற உணர்வோடு, எழும்பி மர ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டேன். அதில் இருந்த ஆணி ஒன்று பிட்டத்தில் குத்தியபோது வேட்டி கிழிந்து விடாமல் மெல்ல எடுத்து விட்டேன். கால்மூட்டும் கையும் ஊன்றி நடக்கும் குதிரையாயிருந்தேன் ஒரு நேரம். அந்த குதிரை மேல் குசாலாக சவாரி செய்து அன்று விளையாடிய சகோதரியின் பார்வையில் அந்நியப்பட்டுப் போன உணர்வின் நிழலாட்டம் இருப்பதாக உணர்ந்தேன். என் உணர்வு பொய்ப்பித்துப் போக நெஞ்சார ஆண்டவனோடு நெருங்கினேன். |
|
நஜீபுக்கு ஓர் ஆண்டு வீணாகி விடுமே! என்ற பதற்றம் நெஞ்சிற்குள்.
நகரத்தில் கூடு கட்டிய பிறகு முதல் முறையாக சென்றதால் தங்கை சுக விபரங்கள் கேட்டாள். நஜீபுடைய, மற்ற பிள்ளைகளுடைய படிப்பையும் பற்றிக் கேட்டாள். பருவமடைந் திருக்கும் மகளுக்கு மாப்பிளைத்தரம் பார்ப்பதைப் பற்றிக் கேட்டாள். வியாபாரத் தைப் பற்றி கேட்டாள்.
பரவாயில்லை என்றிருந்தது பதில்.
பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது, மருமகன் ஜகஜோதியாக காரில் வந்திறங்கியது ஏதோ அமைச்சர் வந்திறங்கின தோரணையில். முதலில் ஆள் அடையாளம் தெரியவில்லை. நடையில், உடையில், உடலில், பாவனையில் அவ்வளவு மாற்றங்கள். நெடிய ஆறு வருடங்களின் கலைக்கைகள் பின்னி உண்டு பண்ணிய நவ மாற்றங்கள்.
''மாமா.. எப்பொ வந்தியோ?''
முகமலர்ச்சியுடன் வரவேற்றான்.
அதே குரல்! நாதக் கம்பியைக் காலம் கழற்றி முறுக்கவில்லை. சிரிக்கும் போது விழும் அதே கன்னக் குழிகள்!
''நல்லா இருக்கியாப்பா?''
''நல்லா இருக்கேன். மாமாயெ பார்க்க வரணுமெண்ணு தான் இருக்கேன்.''
'நீ வந்ததை கேள்விப்பட்டதும் நானே வந்துட்டேனில்லியா' ' ''மாமியும் மச்சினன்மாரும் கொளுந்தியும் நல்லா இருக்காங்களா?''
''இருக்காங்கோ''
''நஜீப் இப்பம் மெடிக்கலா, என்சினியரிங்கா?''
''இல்லப்பா பி.ஏ. கடைசி ஆண்டு.''
''எட்டோ பத்தோ லட்சம் குடுத்து அவனெ மெடிக்கலிலே சேக்கப்படாதா?''
என்னுடைய புன்னகைப்பிற்கு பிறகுள்ள மவுனத்தின் அர்த்தம் அவனுக்கு புரிய வில்லை போலிருந்தது.
''இதெல்லாம் ஒரு பெரிய முதல் முடக்குத் தானே, மாமா? திடீரெணு பணம் புரட்ட முடியல்லேண்ணா எனக்கு எழுதியிருந்தா உடனே அனுப்பித் தருவேன்.''
''அனுப்பியிருப்பா..''
தொழில்நுட்ப கல்லூரிகளில் பேமெண்ட் சீட் கிடைத்ததையும் பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயன்ஸ¤க்கு அய்ந்து ஆயிரம் நன்கொடை கேட்டதையும் நினைக்காமலிருக்க முடிய வில்லை. பார்த்தாலே ஏதாவ கேட்டு விடுவானோ என்று பயந்து விலகும் மக்கள் மத்தியில் வாழ்க்கையை ஓட்டும் போது யாரை அணுகுவது என்று புரியாத திணறலில் தவித்த நாட்கள் மனசுக்குள் பாதயோசை எழுப்பி ஓடிக் கொண்டிருந்தது. ''ஒங்களுக்கு ஒரு ஏசியும், ·பிரிட்ஜும் கொண்டு வந்தேன் மாமா. களியல் எஸ்டேட் ஓனர் பீருக்கண்ணு சாகியை சவேரா ஹோட்டல்லே வச்சு பாத்தேன். அவரு ஒரு புதிய ஊடு கட்டி பாலு காச்சூதாட்டு சொன்னாரு.''
''அவரை பழக்கமுண்டா?''
''இல்லை, உங்க மருமோனா என்னு கேட்டாரு. என்ன செய்தாண்ணு கேட்டப்போ பஹ்ரைனிலே நிக்கூதாட்டு சொன்னேன். பாலு காச்சுக்கு கூப்பிட்டாரு. சும்மா போவ முடியுமா மாமா? வலிய எஸ்டேட் ஓனரில் லையா? அவருக்கெ நிலைக்கு தகுந்தபடி ஏதாவது இருக்க வேண்டாமா? அந்த ஏசியையும், ·பிட்ஜையும் அவர் ஊட்டு பாலு காச்சுக்கு அன்பளிப்பா குடுத்துட்டு, இந்தா இப்பம்தான் வாறென்.''
''செய்ய வேண்டியதுதான்''
''போன உடனே மாமாவுக்கு அனுப்பித் தாறேன். நஜீப்புக்கு ஒரு வாச்சு அனுப்புறேன்.''
பல ஆயிரங்கள் பெறுமதியுள்ள பொருட்களை அனுப்பி வைப்பதாக சொல்லுபவனிடம் சிறு உதவி நாடி வந்ததை எப்படிச் சொல்வது என்று மனக்குழப்பம் எனக்குள் என் மவுனத்தைக் கண்டதும் அவன் அங்கலாய்த்தான்.
''ஏன் மாமா மவுனமா இருக்கிதியோ. ஒங்களெ பாக்க வராத கோபமா?''
''இல்லப்பா. கோபமானா நான் உன்னைப் பார்க்க வருவேனா?''
''வியாபாரம் எப்படியிருக்கு? எக்ஸ்போர்ட் ஏதாவது செய்யீளா?''
அவன் முகத்தைப் பார்த்ததும் சொல்ல பதில் கிடைக்காததால் பார்வையை திருப்பிவிட்டேன்.
''ஏன் ஒண்ணும் பேசல்லெ?''
''இப்பம் வியாபாரம் இல்லப்பா. பெரும் நஷ்டமாப் போச்சு. கடன் அடைக்க வீட்டையும் கடையையும் விற்றுப் போட்டேன். ஒரு வருமானமும் இல்லாமல் சும்மா தான் இருக்கேன்.''
''அவ்வளவு நஷ்டமா?''
''நிமிர முடியாத நஷ்டம்''
மருமகனுடைய முகத்திலிருந்த களிப் பெல்லாம் மறைவதை கவனிக்காதபடி பார்வையை தரைக்கு திருப்பினேன்.
''திவாலாயிப் போனீளா?''
கேள்வி ஏளனப்படுத்துவது போலிருந்தாலும், பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
''நொடிஞ்சே போனேன்.''
நடையில் தங்கை நின்று கொண்டிருந்தாள். யாரும் எதுவும் பேசவில்லை. அவரவர் களுடைய உள்ளங்களில் எவையெல்லாமோ நுரைத்து பதைத்துக் கொண்டிருப்பது போலிருந்தன அந்த சூழல்.
''மாமா வந்தது?'' குரலில் முன்னிருந்த நளினம் வரண்டு போய்விட்டதாகத் தோன்றியது.
வருகையின் நிஜ நோக்கத்தை மறைத்து சும்மா வந்தாகச் சொல்லத்தான் நாக்கு யர்ந்தது. மனசில் தேங்கி நின்றிருந்த வார்த்தை நாக்கில் சறுக்கி விழுந்துவிட்டது.
''ஒரு சிறு உதவி நாடி''
''என்ன உதவி...? '' இப்போது குரலில் சொர சொரப்பிருந்தது அப்பட்டாகத் தெரிய முடிந்தது.
''நஜீபுக்கு நாளை பணம் கட்டினாத்தான் பரிட்சை எழுத முடியும். கடைசி ஆண்டு பணம் கட்ல்லேண்ணா அவன் படிப்பு பாழாய் போவும். அவன் படிச்சு ஏதாவது ஒரு வேலைக்கு சேர்ந்தா தான்''
''படிச்சு என்ன செய்ய? அவனை ஏதாவது கடையிலெ வேலைக்கு உடலாமே?''
என்ன சொல்வதென்றறியாத திகைப்பில் அப்படியே தலைகுனிந்துவிட்டது. அவனை படிக்க வைத்த குற்றத்திற்காக கூண்டில் விசாரணை கைதியாக தலை குனிந்து நின்று கொண்டிருந்தேன்.
''என்ன உதவி செய்யணும்?'' ஒரு போலீஸ் அதிகாரியின் அதட்டல் குரலாகவேயிருந்தது.
''ஒரு 725 ரூபா கெடச்சா...''
மருமகன் மறுமொழி பேசாமல் பேச முடியாமலோ என்னவோ குஷன் சோபாவில் உட்கார்ந்த படி பூட்ஸ் காலைத் தூக்கி கண்ணாடி டீப்பாய் மேல் வைத்துக் கொண்டு, நகம் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தான். தாய் மாமனாருடைய எதிர்பாராத வீழ்ச்சியை செவியுற்ற அதிர்ச்சியில் மனம் நொந்து போய் உட்கார்ந்திருப்பதாகத் தோன்றியது. ''வருத்தப்படாதப்பா. வாழ்வு தாழ்வு கொடுப்பது ஆண்டவன். தந்தவன் எடுத்துட் டான் வருத்தப்பட என்ன இருக்கு...?'' அவனை ஆறுதல் படுத்த முயன்றேன்.
''மாமா...''
''என்னப்பா..?'' தலையை நிமிர்த்தினேன்.
அவனுயைட தாயாரின் கண்கள் அவனோடு பேசியதை கவனிக்காதது போல் இருந்து விட்டேன். இன்று அந்த கண்கள் இப்படி யெல்லாம் பேசுவதற்காகத்தான் முன்பு அவள் கண்களில் விழுந்த தூசிகளையு மணல் களையும் ஊதி எடுத்துக் கொடுத்தேன். ''பழைய மாதிரியல்ல இப்பம் அரபு நாடு. வெயில்லெ கெடந்து நாயா ஒளச்சாத்தான் ஊட்டுக்கு சாப்பாட்டுக்கு ஏதாவது அனுப்ப முடியும். முன்ன மாதிரி சம்பளமுமில்லை. சம்பளங்களை வெட்டி கொறச்சுப் போட்டான் அரபி.'' மகன் அவனுடைய உழைப்புத் துயரத்தைச் சொல்லி முடித்ததும், தங்கை வாசல் திரையை இழுத்து விட்டுக் கொண்டே வீட்டுக்குள்ளே போய்விட்டாள். என் மனசிற்குள் பரந்திருந்த இருட்டு, வெளியேயும் பரந்துவிட்டதை பிறகுதான் தெரிந்து கொண்டேன்.
''ஏதாவது சாப்பிட்டீளா?''
''ஒனக்கெ உம்மா சாயாவும் கேக்கும் தந்தா. அதிலெ அடங்கிப் போச்சு.''
''8.30க்கு கடைசி பஸ்''
''வரும் பஸ் நேரம் கேட்டுத் தெரிஞ்சுட்டு தான் வந்தேனப்பா.''
பஸ் இறங்கி இருட்டைக் கீறினேன். வீட்டு ஜன்னல் கம்பி வழியாக, முனகி எரிந்து கொண்டிருந்த ராந்தல் ஒளி, முற்றத்தில் விழுந்து புற்காடுகள் மூடிக் கொண்டிருந்த நரம்பு தடத்தைக் காட்டியது.
கால் சொடக்கு சத்தம் கேட்டதும் நஜீபே வந்து கதவைத் திறந்தான். அவன் பின்னால் மனைவி ஆவலோடு வந்து கேட்டாள் - ''புள்ள என்னவெல்லாம் தந்தான்?''
''மச்சான் ரூபா தந்துதா?''
கேள்விகள் சரங்களாக இதயத்தை தாக்கிக் கொண்டிருந்தன. கையில் எடுத்துச் சென்ற குடை மட்டுமே இருப்பதைக் கண்டு மனைவி சோர்ந்து நின்றாள்.
''வாப்பா!'' அதல பாதாளத்தில் கிடந்து கைநீட்டி காப்பாற்றக் கூப்பிடும் அவலக் குரலாக இருந்தது நஜீபின் கூப்பிடல்.
''முன்னெ கடைசி பரிட்சைக்கு கட்ட 60 ரூபா தருவாரில்லாமெ உன் வாப்பாவின் கல்லூரி படிப்பு நிண்ணு போனது ஒனக்குத் தெரியாது. எனக்கெ அதே அனுபவம் இப்ப உனக்கும். நாளை உன் மகனுக்கெ படிப்பும் இதுபோல நிப்பாட்ட வேண்டிய சந்தர்ப்பம் வந்தாலும் நீ சோர்ந்து போகாதப்பா. இதெல்லாம் காலத்துக்கெ ஆவர்த்தனம்.'' மகனும் மனைவியும் உறங்கினார்களா, அல்லது ஏமாற்றங்களின் பாறை அழுத்தத்தால் உறங்காமல் கிடக்கின்றனவா என்று கவனிக்க ஒவ்வாத மனநிலை. எப்படியும் அவர்களுடைய காலை விடியட்டும். உறங்காத என் கண்கள் கண்ணாடி உடைந்த ஷோகேஷில் சென்றன. அங்கு என் எதிரியின் கையிலிருந்து கொண்டிருந்த கூரிய வாள் பளபளத்துக் கொண்டிருந்தது.
தோப்பில் முகமது மீரான் |
|
|
|
|
|
|
|
|