அஷ்ட போக பாக்கியங்களை வரமாகப் பெற...
|
|
அன்பும் அமைதியும் தவழும் அதிசயக் கோயில் |
|
- |ஜூலை 2001| |
|
|
|
கண்ணெதிரே உயர்ந்து நிற்கும் அந்தப் பளிங்குக் கோயிலைப் பார்க்கும் போது, நாம் இருப்பது லண்டனின் மையப் பகுதியில் என்பதை நம்ப முடியவில்லை. நீஸ்டென் பகுதியில் அமைந்திருக்கும் 'லார்ட் ஸ்வாமி நாராயண் இந்து மந்திரின்' உள்ளே நுழைந்தால், நமது வியப்பு மேலும் பன்மடங்காக அதிகரிக் கவே செய்கிறது.
இந்தியாவுக்கு வெளியே அமைந்திருக்கும் மிகப் பெரிய ஆசியக் கோயிலாகவும் இது விளங்குகின்றது. தாஜ்மஹாலுக்கு அடுத்த படியாக பளிங்குக் கல்லால் ஆன அற்புதமாகவும் இதனைப் போற்றுகிறார்கள்.
இந்தியர்கள் மட்டுமல்லாது லண்டன் வாசிகள் அனைவரிடமுமே பிரபலமான கோயில். அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், இந்தியப் பிரதமர் வாஜ்பாய், மறைந்த இளவரசி டயானா என்று இந்தக் கோயிலுக்கு விஜயம் செய்த பிரபலங்களின் பட்டியல் மிக நீளமானது.
வெம்ப்ளிக்கு அருகே நீஸ்டெனில் மிகப் பெரிய நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோயில், லண்டன் மாநகரின் முக்கிய இடங்களில்/ அடையாளங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் இக் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
'போச்ச சன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா' என்ற சமூக-ஆன்மீக அமைப்பு இக்கோயிலை நிர்வகித்து வருகிறது. தெற்காசியக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் ஒரு சின்னமாகவும் இக்கோயிலைச் சொல்ல லாம்.
கோயில் 70 அடி உயரமும், 75 அடி அகலமும், 195 அடி நீளமும் கொண்டதாக உள்ளது. சுமார் 5000 டன் இத்தாலியப் பளிங்குக் கற்கள் மற்றும் பல்கேரிய சுண்ணாம்புக் கற்கள் கொண்டு அமைக்கப் பட்டுள்ள இக்கோயிலை 1500 இந்தியக் கலைஞர்கள் கண்ணும் கருத்துமாக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் வடிவமைத் திருக்கின்றனர். இந்தியக் கலைத்திறனுக்கு அற்புதமான ஒரு எடுத்துக்காட்டாக இக் கோயில் விளங்குவதில், இந்தியர்கள் அனை வரும் நிச்சயம் பெருமிதமடையலாம்.
தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, சர்வ சமயத்தினரும் எந்தப் பாகுபாடுமின்றி இக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். உள்ளேயிருக்கும் சன்னதிகள் மதியம் முதல் மாலை 4 மணி வரை மூடப்படுகின்றன.
இக்கோயிலின் வரலாறு சற்று வித்தியாச மானது. 'லார்ட் ஸ்வாமிநாராயண்' என்பது கிருஷ்ணபெருமானைக் குறிக்கும் என நீங்கள் நினைத்தால் ஏமாற்றமடைவீர்கள். ''18ம் நூற்றாண்டில் உத்தரப்பிரதேசத்தில் பிறந்த ஞானி ஒருவரின் நினைவாகத்தான் இக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது. பதினோரு வயதில் வீட்டை விட்டு வெளியேறிய அவர், சுமார் ஏழாண்டு காலம் நாடு முழுவதும் சுற்றியலைந்த பின்னர் குஜராத்தில் வசிக்கத் தொடங்கினார். |
|
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக அவர் தோற்றுவித்த 'ஸ்வாமிநாராயண் சம்ப்ரதாயா' என்ற அமைப்பு (இந்து மத வைஷ்ணவப் பிரிவு அடிப்படையிலானது), மூடநம்பிக்கைகள், போதைக்கு அடிமையாதல், கொடூரமான நேர்த்திக் கடன்கள், உடன்கட்டை ஏறுதல் மற்றும் இது போன்ற சமூக இழிவுகளை சட்டத்துக்குப் புறம்பானது என அறிவித்துக் கடுமையாக எதிர்த்துப் போராடியது. அன்பு, சகோதரத்துவம், நெறிமுறைகளுக்குட்பட்ட வாழ்க்கை, அனைவருக்கும் சம மரியாதை போன்ற கருத்துகளை வலியுறுத்தி அவர் உபதேசம் செய்தார். ஆத்மஞானம் பெறுவதும், கடவுளுக்குத் தொண்டு செய்வதுமே வாழ்க்கை யின் உயரிய நோக்கமாக அமைய வேண்டும் என்பதே அவரது போதனையின் சாராம்சம்'' என ஒளி/ஒலி காட்சி மூலமாக விளக்கப்படுகிறது.
சிவபெருமான், பார்வதி, பிள்ளையார், கிருஷ்ணர், ராதா மற்றும் அனுமன் சன்னதிகள் இக்கோயில் வளாகத்தினுள் அமைந்துள்ளன. பளிங்கினால் ஆன சிலைகளின் அழகிய வடிவமும், ஆடை அலங்காரமும் மனதை மயக்குவதாக உள்ளது. 'ஸ்வாமிநாராயண்' சிலையும் உள்ளது. கோயிலின் பிற சிறப்புகளில் கண்காட்சியும், ஒளி/ஒலி காட்சியும் குறிப்பிடத் தக்கவை. இந்து மதம், பாரம்பரிய மிக்க இந்திய நாகரீகம், அதன் சாதனைகள் குறித்த அத்தனை தகவல்களையும் விரிவாக அறிந்து கொள்ள இக்கோயில் அற்புதமான வாய்ப்பளிக்கின்றது.
பெரிய பலகைகளில் இந்து மதத்தின் தோற்றம், நம்பிக்கைகள் குறித்த விவரங்கள் பதிக்கப்பட்டுளதும், புராணக் கதைகளின் அடிப் படையிலான காட்சிகளின் மாதிரிகளும் கண்காட்சியை சிறப்பிப்பதுடன் அவசியம் பார்க்க வேண்டியதாகவும் ஆக்கிவிடுகின்றன.
மந்திர் எழுப்பப்பட்டதற்கான காரணத்தை விளக்கும் 12 நிமிட வீடியோ காட்சியும் பக்தர்களை வெகுவாக ஈர்க்கிறது.
உயரமான மரத் தூண்கள் கொண்ட பிரம்மாண்டமான தங்கும் அறையும்; அழகாக அலங்கரிக்கப்பட்ட பிரார்த்தனைக் கூடமும் உள்ளன. பிரார்த்தனைக் கூடத்தின் அழகும், அமைதியும் மனதுக்கு இதமாக அமைகின்றது. நீங்கள் லண்டன் வருவதாக இருந்தால், ஸ்ரீ ஸ்வாமிநாராயண் மந்திருக்கு அவசியம் விஜயம் செய்யுங்கள்.
Shree Swaminarayan Mandir, 105-119, Brentfield Road, Neasden, London NW10 8JP. Ph: (0044) (208) 965 2651 Email: shm@swaminarayan-baps.org.uk
லாவண்யா |
|
|
More
அஷ்ட போக பாக்கியங்களை வரமாகப் பெற...
|
|
|
|
|
|
|