Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
June 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | Events Calendar | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | அமெரிக்க அனுபவம் | சிறுகதை | கலி காலம் | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | சிரிக்க சிரிக்க | நேர்காணல்
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள்
சமயம்
பெருமானார் பார்வையில் பிற சமயங்கள்
கிருஷ்ணாபுரம் கலைக் கோயில்
- திருவுடையான்|ஜூன் 2001|
Share: 
Click Here Enlargeதமிழகத்தின் தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த இந்து கோயில்கள் அரிது. மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்றவைதான் சிற்ப சிறப்புக்கு உரியவை. இவை தவிர சிற்பக் கலைத் திறனுக்காகவே புகழடைந்த வைணவக் கோயில் உண்டு என்றால் அது கிருஷ்ணாபுரம் ஸ்ரீ வெங்கடாசலபதி ஆலயம்தான்.

திருநெல்வேலியில் இருந்து பாளை வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 9 கி.மீ. தொலைவில், சாலை மீதே கம்பீரமாக காட்சி அளிக்கிறது கிருஷ்ணாபுரம் கலைக் கோயில். சுற்றுலா பயணிகளே இங்கு அதிகம் வருகின்றனர்.

வெளிமண்டபம், உள்மண்டபம் இவற்றின் இருபுறமும் அமைந்துள்ள சிற்பங்கள் உளியின் காவியங்களைப் பேசுகின்றன.

பல நூறு ஆண்டுகளாக கவனிப்பாரற்று இருந்ததால், சில சிலைகள் சிதையத் தொடங்கியிருப்பது, அழகின் ரசிகர்களுக்கு இரத்தக் கண்ணீர் வடிக்கும் காட்சியாகும்.

நல்ல வேளையாக, காலம் கடந்தாவது அவற்றைப் பா¡துகாக்கும் முயற்சி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றைச் சுற்றி தற்போது வேலி போடப்பட்டு, உரிய ஊழியர்களால் பாதுகாக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, இக் கோயில் குட முழுக்கு நடத்தவும், இவற்றை பாதுகாக் கவும் 18.09.1975 அன்று திருப்பணி துவக்கப்பட்டது. ஆனால், சில மாதங்களில் ஆட்சி மாறியதால், அதன் பிறகு அரசியல் காரணங்களுக்காக திருப்பணி தொடரவில்லை என்று கூறப்படுகிறது.

முன்பு திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் நிர்வாகத்தோடு இணைந்து இருந்தது. நிர்வாகம் சரியில்லை என்பதால் இப்போது திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. இப்போது நிர்வாக வேலைகள் திருப்தி அளிப்பதாக கிருஷ்ணாபுர மக்கள் கூறுகின்றனர்.

மேலும், சில காலம் முன்பு, இந்த கோயிலின் தொன்மையான தன்மையை குலைக்கும் வகையில் நவீன வர்ணங்களில் பெயிண்ட் அடிக்கவும், சிற்பங்களுக்கு வர்ணம் பூசவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, பின் அது நிறுத்தப்பட்டதுடன், கோயிலின் தொன்மைப் பொலிவும் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இங்குள்ள 10 சிற்பங்கள் கண்கொள்ளாக் காட்சி என சுற்றுலாப் பயணிகள் வியக்கின்றனர். இவையாவும் பெரும் தூணைச் சுற்றி, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் ஆகும். உதாரணமாக, குறத்தி - இராஜகுமாரன் கதையைக் கூறும் மூன்று பெரும் சிற்பங்கள் ஒரே கல்லில் தூணைச் சுற்றி அமைந்துள்ளன.

இதில் குறத்தி இராஜகுமாரனை தலையில் வைத்து தூக்கிச் செல்கிறாள். அன்னத்தில் அமர்ந்துள்ள தாய், கிலுக்கு வைத்து ஆட்டி, மகனை அழைக்கிறாள். வர மறுத்து இராஜகுமாரன் போய்விட்டதால், தாய் குறி கேட்கிறாள். குறி சொல்பவள் தாயின் தலையில் கை வைத்து இராஜகுமாரன் வரமாட்டான் என்கிறாள். மந்திரி குறத்தியை பிடிக்க குதிரையில் செல்கிறான். குறத்தியின் ஆளான பயில்வான் குறுக்கிட்டு, குதிரையைத் தூக்குகிறான். குதிரையில் இருந்து சரியும் மந்திரி, காலால் பயில்வானை உதைத்து தள்ளுகிறான்.

இந்த நான்கு சிற்பங்கள் தூணைச் சுற்றி அமைந்துள்ளன, சுமார் 8 அடி உயரத்தில். இதன் சிறப்பு என்னவென்றால், இச் சிற்பங்கள் தூரிகை கொண்டு வரையப்பட்ட ஓவியம் போல துல்லியமாகவும். நுட்பமாகவும் சிறு அம்சங்கள் கூட விடுபடாமல் மிளிர்கின்றன.

அடுத்ததாக அர்ச்சுனன் சிற்பமும், காதல் சிற்பமும் இணைந்த தூண். இதில், காதலி காதலனின் தாடியைப் பிடித்து முறுக்க, காதலன் காதலியின் தலைமுடியை இழுப்பது போல இருந்தாலும் தலைமுடியின் ஒவ்வோர் இழையும் நுட்பமாக சிற்பியின் உளியால் கீறப்பட்டுள்ளது.

இதே போல கர்ணன் சிற்பத்தில் கெண்டைக்கால் முட்டியும், நரம்புகளும் தெளிவாகப் புலப்படுகின்றன. இதே தூணில் குரங்காட்டும் குறவன் சிற்பமும் எழிலுற அமைந்துள்ளது.
Click Here Enlargeஐந்தாவதாக ஒரு குறவன் இராஜகுமாரியை தலையில் வைத்துத் தூக்கிச் செல்வது போலவும், மந்திரி குதிரையில் வந்து விரட்டி, ஈட்டியால் குத்துவது போலவும், இரத்தம் குறவனின் மார்பில் இருந்து கொட்டுவது போலவும், அந்த தடம் கல்லிலேயே சிறிது செந்நிறமாகவும் முப்பரிணாம ஓவியமாக அந்த சிற்பங்கள் பிரமிப்பு ஏற்படுத்துகின்றன. இதில், தலையில் இராஜகுமாரியை தாங்கியுள்ளதால் குறவனின் தோள் புஜங்கள் புடைத்தும், விலா எலும்புகள் வெளியே தெரியும் வகையில் புடைத்தும் துல்லியமாக காட்டுகின்றன. இதன் இடது புறத்தில் அரச படை குறவனை சூழ்ந்து தாக்குவது போல அமைந்துள்ளன.

ஆறாவதாக பூலோக ரம்பை சிற்பம். இம் மங்கை ஒரு கையில் மகிழம்பூ ஏந்தியும், மற்றொரு கையில் பூச்செண்டு கொண்டும் நாட்டியமாடுகிறாள். அவளது விரல் நகங்கள் துல்லியமாக ஓவியம் போலப் புலப்படுகிறது. சிற்பியின் நுட்பத் திறனால் பூலோக ரம்பை உயிர் பெற்றது போல் தோன்றுகிறாள். இந்த ஆறு சிற்பங்களும் வெளி மண்டபத்தில் இடம் பெற்றுள்ளன.

உள் மண்டபத்தில் இடம் பெற்றுள்ள வீரபத்திரன் சிற்பமும் ரதி சிற்பமும் சிற்பக் கலையின் எல்லைகளாக உள்ளன. ஒரே கல்லில் அமைந்த ஆஜானுபாகுவா¡ன வீரபத்திரன் ஒற்றைக் காலில் நாட்டியமாடுகிறான். இவனை எந்த இடத்தில் சுண்டினாலும் சப்த ஸ்வரங்களும் ஒலிக்கின்றன. இந்த இசைச் சிற்பம் எந்த ஓர் இசைப் பிரியனுக்கும் தீராத விருந்தாகும்.

மற்றொரு தூணில் அமைந்துள்ள ரதி ஒரு கையில் முகம் பார்க்கும் கண்ணாடி கொண்டு தலை வாருகிறாள். இவள் முகத்தில், மூக்கில் மூக்குத்தி மாட்ட ஒரு மெல்லிய துவாரம் உள்ளது. இதில் மிகச் சிறிய குச்சியை செருகினால் முகம் மேலும் பொலிவுறுகிறது. இடது பக்கம் பணிக்கம் ஏந்திய தோழியும், வலது பக்கம் வெற்றிலை மடித்துத் தரும் தோழியும் சிற்பமாக அமைந்துள்ளனர்.

மற்றொரு தூணில் காதலியிடம் இருந்து தப்பிக்க துறவி போல மாறுவேடம் போட்ட காதலனும், அவனை அடையாளம் கண்டு கொண்ட காதலியும் இடம் பெறுகின்றனர். இந்த காதலியின் சிற்பம் துல்லியமாக உள்ளது. தலைமுடி ஒவ்வொன்றும் தெளிவாகத் தெரிகிறது. காதில் ஓலை என்ற ஆபரணம் அணிந்துள்ளார். கன்னம் பாலீஷ் செய்யப்பட்டது போல பள பளக்கிறது. ஒரு கன்னிப் பெண்ணின் கன்னம் போன்றே ஜொலிக்கிறது. கழுத்தில் நுட்பமான வேலைகள் அமைந்த மெல்லிய நெக்லஸ் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

இதே போல ஒவ்வொரு சிற்பமும் கால் நரம்புகள், நகம், விலா எலும்புகள், தெளிவாகத் தெரியும் வகையில் உள்ளன. பொதுவாக இதுபோன்ற சிற்பங்கள் கண்ணுக்குப் புலப்படாத உயரத்தில் கோபுரத்தில்தான் இடம் பெறும். ஆனால், கண்ணுக்குள் அருகில் இருந்தால்தான் ரசிக்க முடியும் என்பதை உணர்ந்து செதுக்கியதைப் போல இவை உள்ளன.

புராணத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, இக்கிராமத்தின் அழகினை கண்டுணர்ந்து உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் மதுரையை ஆண்ட கிருஷ்ணப்ப நாயக்கரின் அவையில் அங்கம் வகித்த, 'மயிலேறும் பெருமாள்' என்பவராவர். இங்குள்ள கோயில் 18 -ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

*****


திருநெல்வேலியில் இருந்து 12 கி.மீ தூரத்தில் பாளையங்கோட்டை - திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள அமைதியான அழகிய கிராமம் கிருஷ்ணாபுரம்.

தங்கும் வசதி: ஓட்டல் தமிழ்நாடு, திருநெல்வேலி. தொலைபேசி எண்:582200

மேலும் தகவல் பெற: தமிழ்நாடு சுற்றுலா தகவல் மையம், ரயில்வே நிலையம், திருநெல்வேலி, தொலைபேசி எண்:334235

திருவுடையான்
More

பெருமானார் பார்வையில் பிற சமயங்கள்
Share: