|
|
லச்சமும் பாலுவும் கோவிலுக்கு வந்தபோது கங்காதரன் அங்கு இல்லை. ஏமாற்றமாக இருந்தது. வெளிச்சுவரை ஒட்டியும் தெற்கு முகப்பின் நிழலிலும் தேவஸ்வம் ஆபீஸ் திண்ணையிலும் பல பையன்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். வெயில் ஏறத் தொடங்கிவிட்டது. வெளிச்சுவரோரம் பச்சை மடல் குவிந்து கிடந்தது.
'கங்காதரன் மீனச்சலுக்குப் போயிருக்கான்' என்றான் ஒரு சிறுவன். அவனை லச்சத்திற்குத் தெரியும். விடிந்ததும் அவன் வீட்டிலிருந்து வந்து கங்காதரனுக்காகக் காத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.
'ஆனக்காரன் யாரு?' என்று கேட்டான் லச்சம்.
சிறுவனுக்குப் பதில் தெரியவில்லை. 'அது...அது...' என்று இழுத்தான். சற்றுத் தள்ளி நின்ற பையன் கீழே போட்ட பீடியை வெறுங்காலால் மிதித்தபடி, 'ஏற்றுமானூர் குமாரன்' என்றான்.
'கூட?' என்று கேட்டான் லச்சம்.
'செல்லப்பன் உண்டு' என்றான் ஒல்லிப் பையன். 'நேற்று கங்காதரன் சங்கலியை அறுத்துகிட்டு கடைத்தெருவில் ஓடிட்டான்' என்றான் அவன்.
'அப்ப நீ இருந்தியா?' என்று கேட்டான் லச்சம். 'இருந்தேன்' என்றான்.
'பொய் சொன்னா நாக்கு அழுகிப் போகும். அப்ப நான் கங்காதரன் முதுகில உக்காந்திருந்தேன்' என்றான் லச்சம்.
'நேற்று ஆனை மேலே உன்னைப் பாத்தேன்' என்றான் சிறுவன் லச்சத்தைப் பார்த்துக் கையைக் காட்டியபடி. 'அம்சமா இருந்தது' என்றான்.
தன்மீது ஏற்பட்ட வியப்பை அடக்க முடியாமல் பாலு தத்தளிப்பதை லச்சம் உணர்ந்தான். அவன் பாலுவின் முகத்தையே பார்க்கவில்லை. 'என்னண்ணா இது?' என்று கேட்டுக்கொண்டே இருந்தான் பாலு.
ஒல்லிப்பையனுக்கு ஒரு தோல்வி ஏற்பட்டதுபோல் தோன்றிற்று என்றாலும் அது முழுத்தோல்வி என்று அவனுக்குத் தோன்றவில்லை. 'கங்காதரனைப் போல் ஒரு லட்சணமான ஆனையை இந்த ஜென்மத்தில் நான் பார்த்ததில்லை' என்றான் அவன்.
மிகுந்த கோபம் வந்ததுபோல் லச்சம் அவன் முகத்தைப் பார்த்தான்.
லச்சம் கேட்டான். 'பெரும்படவம் ஜானகியை நீ பாத்திருக்கியா?'
அந்தப் பையன் பதில் சொல்லவில்லை.
'வக்கம் புருஷோத்தமன், கொச்சு ராகவன், பிறவம் கார்த்தியாயினி யாரையாவது நீ பாத்திருக்கியா?'
அந்தப் பையன் பதில் சொல்லாமல் வேறு திசையைப் பார்த்தான். சுற்றிவர நின்றிருந்த சிறுவர்கள் சிரித்தார்கள்.
'வாய்க்கு வந்ததை உளறப்படாது. நான் இந்த ஆனை மேலெல்லாம் சீவேலிக்கு உக்காந்தவன் நான். இடம் பாத்துப் பேசு' என்றான்.
'இந்தக் குட்டிப் பட்டர் வரலைன்னு சொன்னா எல்லா ஆனையும் காத்துக்கிட்டு நிற்கும். சீவேலியே தொடங்காது' என்று சிறுவன் ஒல்லிப்பையனை அடக்கினான்.
சிறுவர்கள் யானை நின்றிருந்த இடத்தைப் பார்க்கப் போனார்கள். தென்னை மடல் சிறுநீரில் நனைந்து கிடந்தது. ஆங்காங்கே குளிர்ந்துபோன லத்திகள் சிதறிக் கிடந்தன. சேற்றில் யானையின் நகங்கள் பதிந்திருந்தன. ஒவ்வொருவரும் தாங்கள் கற்பனை செய்திருந்த யானைகளைப் பார்த்தபடி நின்றார்கள்.
லச்சம் பாலுவைப் பார்த்து, 'நான் முகப்புக்குப் போறேன்' என்றான். அவன் சொன்னது பெரிய தோரணையில் இருந்தது. சித்தி அவன் மேலே குதித்தபோது அவன் படக்கென்று கீழே விழுந்தது பாலுவின் நினைவுக்கு வந்தது. அவனைப் பிறாண்டுவதற்காகவே சித்தி கட்டை விரல் நகத்தை வளர்த்துக்கொண்டு வருகிறாள். 'அவன் கன்னத்தைக் கிழிக்க' என்பாள் அடிக்கடி. நகத்தின் கூர்மையை ஆட்காட்டி விரலால் இழுத்துப் பார்ப்பாள். இவனோ நகம் வளர்ந்து வரும் விஷயம்கூடத் தெரியாமல் நெளித்துக்கொண்டு இருக்கிறான். பாலுவுக்கு அவனுடன் போகப் பிடிக்கவில்லை. கங்காதரன் வருவது வரையிலும் அங்கேயே காத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றிற்று. எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை. இந்த இடத்தைவிட்டுப் போனால் அவன் இல்லாதபோது வேறு பல பையன்கள் கங்காதரனைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். மனதினுள் அந்தக் காட்சியை அவனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. 'கங்காதரனைப் பாத்துட்டு போலாம் அண்ணா' என்று கெஞ்சினான் பாலு. 'ப்ளீஸ் அண்ணா, ப்ளீஸ்' என்றான்.
லச்சம் கொடிமரம் தாண்டிப் போய்க்கொண்டிருந்தான். ரொம்பவும்தான் அலட்சியப்படுத்துகிறான். ஆனால் தனியாக அங்கு காத்துக்கொண்டிருக்க முடியும் என்று பாலுவுக்குத் தோன்றவில்லை. லச்சம் இல்லையென்றால் அந்தப் பையன்கள் அவனைக் கேலி செய்யத் தொடங்கிவிடுவார்கள். உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள். 'இப்படித்தான் இவன் சாம்பாரை நக்குவான்' என்ற தன் கையைத் தூக்கி முட்டிலிருந்து நக்கிக் காட்டத் தொடங்குவான் ஒரு பையன். 'பிராமணோ போஜனப் பிரியா' என்பான் இன்னொருவன். எலி பூனையிடம் மாட்டிக் கொண்டபடி ஆகிவிடும். அவன் தன்னைத் தேற்றிக் கொள்வதுபோல், 'அண்ணா அண்ணா' என்று கூப்பிட்டவாறு பின்னால் ஓடினான். பாலு ஓடி வருவதைக் கவனித்ததும் லச்சமும் ஓடத் தொடங்கினான். லச்சத்துக்கும் பாலுவுக்குமான இடைவெளி கூடிக்கொண்டே போயிற்று. கோவில் முன்னாலிருந்த பெரிய படிக்கட்டை மும்மூன்று படிகளாக லச்சம் தாண்டி இறங்கினான். அதுபோல் தாண்ட பாலுவின் கால்களுக்கு நீளம் சற்றுக் குறைவாக இருந்தது. மூன்றாவது படியின் விளிம்பில் கால் உரசிற்று. இரண்டிரண்டு படிகளாகக் குதித்தான் அவன். இரண்டாவது படிக்கு வந்தபின் அந்தப் படியிலேயே மீண்டும் ஒரு முறை குதிப்பான். தாண்டலில் இது ஒரு வித்தியாசமான வகை என்று நினைத்துக் கொண்டான்.
லச்சம் மைதானம் தாண்டி ரோடுக்குள் போய்விட்டால் ஜனக்கூட்டத்தில் கரைந்து கண்பார்வைக்குத் தெரியாமல் போய்விடலாம். மைதானம் முடியும் வரையிலுமான இடம்தான் பாலுவின் மனப்பிரதேசமாக இருந்தது. அவனுடைய எல்லை லச்சத்துக்குத் தெரியும் என்பது பாலுவுக்குத் தெரியும். தன் மனதின் மூலைகளின் ரகசியங்களைக் கூடக் கண்டு பிடித்து வைத்திருக்கும் லச்சத்தை நிச்சயம் ஒரு நாள் சித்தி பிறாண்டுவாள். கன்னத்தில் வழியும் ரத்தத்தை நாக்கை எவ்வளவு நீட்டி முயன்றாலும் லச்சத்தால் நக்க முடியாது.
மைதானத்தில் ஆலமரத்தைச் சுற்றிப் பிச்சைக்காரர்கள் கூட்டம். உச்சிக்காலப் பூஜை முடிந்ததும் அவர்களுக்குச் சம்பாச் சோறு கிடைக்கும். பப்புப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை என்பவர் பெரிய செல்வராக இருந்து பிச்சைக்காரனாக இறந்து போனார். அவரு டைய மகன் அனந்தபப்பு பெரிய பணக்காரனா கிவிட்டான். அவன் தன் தகப்பனாரின் ஞாப கார்த்தமாக உச்சிக்காலப் பூஜை முடிந்ததும் ஐம்பது பிச்சைக்காரர் களுக்குச் சோறுபோட மானியம் எழுதி வைத்திருந்தான். உடல் ஊனமில்லாதவர் களுக்கு அளிக்கலாம் என்றும் விரிவாக எழுதி வைத்திருந்தான். அதில் சப்பாணியின் பெயரைச் சேர்க்க அவனுக்கு விட்டுப்போய்விட்டது. அதனால் சப்பாணி களுக்குச் சோறு போட மாட்டார்கள். சப்பா ணிகள் வந்தால் மற்ற பிச்சைக்காரர்கள் அவர்களை விரட்டுவார்கள். 'பப்பு முதலாளியின் உயிலைப் படிச்சுக்கிட்டு வா' என்று கத்து வார்கள். இது தவிர பிச்சைக் காரர்களைப் பற்றி வேறு பல விஷயங்களையும் சொன்னான் லச்சம். ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்ல அவனிடம் ஒரு கதை இருந்தது. பிச்சைக்காரர்கள் எப்போதும் அழுது கொண்டிருப்பார்கள் என்று பாலு கற்பனை செய்து வைத்திருந்தான். ஆனால் அவர்கள் சிரித்துக் கும்மாளம் அடித்துக் கொண்டிருந் தார்கள். செல்லமாக ஒருவரை யொருவர் திட்டிக்கொண்டார்கள். தன் வீட்டுக்கு வருபவர்கள் அந்தக் கூட்டத்தில் யார் யார் என்று பாலு ஆராய்ந்தான். தன் வீட்டுக்கு வரும் முகங்களைப் பார்க்கக் கிடைத்தபோது மிதமிஞ்சிய சந்தோஷம் வந்தது. வீட்டுக்கு வரும்போது முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டிருக்கும் பிச்சைக்காரர்க ளெல்லாம் இங்கு வாய்விட்டுச் சிரிக்கிறார்கள்.
சனிக்கிழமைதான் அவர்கள் பாலு வீட்டுக்கு வருவார்கள். காசு போடுவது அவன்தான். ஆனால் ரமணி கண்களால் சமிக்ஞை தந்தால் தான் அவன் காசு போடவேண்டும் என்று அப்பா சொல்லியிருந்தார். ஒரு ஆள் வந்து நின்றதும் பாலு ரமணியின் முகத்தைப் பார்ப்பான். ரமணி சில விநாடிகள் மெளனமாக இருப்பான். சில சமயம் அவன் காசு போட விரும்பும் ஆளுக்கு ரமணி சமிக்ஞை காட்டமாட்டாள். 'இந்த ஆளுக்குப் போடலைன்னா நீ அடுத்த ஜென்மத் துல தேளாத்தான் பொறப்பாய்' என்பான் பாலு. 'அப்படிப் பொறந்தா மொதக் கொட்டு உனக்கு' என்பாள் ரமணி. 'இந்த ஒரு ஆளுக்கு மட்டும் ரமணி' என்று கெஞ்சுவான் பாலு. சண்டை வந்து ரமணி அப்பாவிடம் சொன்னால், கண்ணை மூடிக்கொண்டு ரமணி சொன்னதுதான் சரி என்பார். 'அவ சொன்னபடி நீ கேட்கலைன்னா உன் கையிலிருந்து டப்பாவைப் பிடுங்கிடுவேன்' என்பார். டப்பா இல்லாமல் இந்த இடத்தில் ரமணி காசுப் போடுவதைப் பார்த்துக்கொண்டு இருப்பதைவிடச் செத்துப் போகலாம்.
பிச்சைக்காரர்களைப் பற்றி சொல்ல லச்சத் திற்கு இருந்து கொண்டே இருக்கிறது. கண் பார்வை இல்லாதவனைக் கண்பார்வை உள்ள வன் என்கிறான் அவன். இன்னொருவன் எப்படி முடமானான் என்ற கதையும் அவனுக்குத் தெரிந் திருந்தது. ஒரு மிஷின் அவன் காலை வெட்ட மற்றொரு மிஷின் அவன் காலைத் தூக்கி வீச துண்டுத் தடிகளுடன் முறிந்த காலும் தூளாகி விட்டதாம். ரொம்பவும் வயதான பிச்சைக் காரரைக் காட்டி, 'பிச்சைக்காரரே அல்ல, பெரிய பணக்காரர்' என்றான் லச்சம். 'உனக்கு ஆயிரம் பணம் வேணுமா? மூணு வட்டிக்கு இந்த நிமிஷத்துல அவன்கிட்டயிருந்து கடன் வாங்கித் தர்றேன்'' என்றான். என்னென்ன விஷயங்களெல் லாம் தெரிகின்றன லச்சத்துக்கு!
பக்கத்தில் நின்று அவர்களைப் பார்க்க வேண்டும் என்று பாலுவுக்குத் தோன்றிற்று. அவர்கள் பேசுவதைக் கேட்க வேண்டும். லச்சத்தின் கையைப் பற்றி அவன் உணராதபடி சிறுகசிறுக பிச்சைக்காரர்களைப் பார்க்க
நகர்த்திக்கொண்டு போனான் அவன். கொஞ்சம் பக்கவாட்டில் போய்ப் பராக்குக் காட்டிவிட்டு அவர்கள் இருந்த இடம் பார்க்க அதிகமாக நகர்ந்து வருவான். லச்சம் ஒரு நூதன விளையாட்டு என்று நினைத்துக் கொண்டிருக் கும்போதே அவர்கள் இருவரும் பிச்சைக்காரர் களுக்கு மிக நெருக்கமாக வந்துவிட்டார்கள்.
முட்டு வரையிலும் துண்டு கட்டியிருந்த குள்ளமான ஒரு பிச்சைக்காரன் ஒரு கல்லின்மீது கால்மேல் கால்போட்டபடி உட்கார்ந்திருந் தான். சர்க்கஸ் கோமாளி போல் இருந்தான். வெள்ளை வெளேரென்று கெளபீனம் கட்டிக் கொண்டிருந்தான். இரு கைகளாலும் துணி இல்லாத தொடையைத் தடவிக்கொண்டே இருந்தான். அவனுக்கு என்ன கோபம் என்றே தெரியவில்லை. பாலுவையும் லச்சத்தையும் வெறுப்புடனும் கோபத்துடனும் பார்த்தான்.
திடீரென்று அவன் வலது கையை நீட்டியபடி, 'என்ன எளவுக்கடா இப்படி ஊர் சுத்தறீங்க. பொஸ்தகத்தை எடுத்து நாளு எளுத்துப் படிக்கக் கூடாதா? பிள்ளைகளுக்கும் கூறில்லை; பெத்த தாய் தகப்பன்களுக்கும் கூறில்லாமப் போச்சே ஆண்டவனே' என்றான்.
லச்சம் வெடுக்கென்று, 'நீ யார் சொல்ல? நாங்க எப்படியும் நாசமாப் போறோம். உனக் கென்ன?' என்றான்.
அதற்கு அவன், 'எப்படியும் செத்தொளிஞ்சு போங்க. எனக்கென்ன? புத்தியா பொளச்சா லோகத்துக்கு §க்ஷமம்' என்றான்.
லச்சம் பாலுவைப் பார்த்து, 'இவன் வந்தா நீ காசு போடுவியா இனிமே?' என்று கேட்டான்.
'கொன்னாலும் போடமாட்டேன்' என்றான் பாலு.
'ரமணி சொன்னா?'
'போட மாட்டேன்'
'அவ சொன்னா நீ கேட்டுத்தானே ஆகணும்'
'கேக்கமாட்டேன்'
'பெரியப்பா சொன்னா?'
'கேக்கமாட்டேன்.' |
|
லச்சம் பெரிதாகச் சிரித்தான். 'பெரியப்பா சொன்னாக் கேக்க மாட்டாயா?' என்று குளறிய படியே சிரிப்பு தீர்ந்துபோன பின்பும் தொண்டை யிலிருந்து தோண்டியெடுத்துச் சிரிக்கப் பார்த்தான்.
'கேக்கமாட்டேன்' என்றான் பாலு உறுதியாக.
யானையின் சங்கிலிச் சத்தம் கேட்பதுபோல் தோன்றிற்று.
ஒரே பாய்ச்சலாக லச்சம் ஓடத்தொடங் கினான். 'அண்ணா, அண்ணா' என்று கத்தியவாறு பின்னால் ஓடினான் பாலு.
'கங்காதரன், கங்காதரன்' என்று சிறுவர்களின் சத்தம் கேட்டது.
....பேசிக்கொண்டே போனான் பாலு. உள்ளூரக் குமையும் எண்ணங்களின் பாதிப்பால் தப்புத் தப்பாக உளறுவது போல் அவனுக்குத் தோன்றிற்று. 'இந்தப் படிக்கட்டு, கிணறு எல்லாம் நாளைக்குப் பாக்க முடியாது' என்றான். அவனுடைய ஆற்றாமை சுகன்யாவின் மனதைத் தொட்டது.
அவன் கிணற்றை எட்டிப் பார்த்தான். 'வந்து பாரக்கா' என்றான்.
சுகன்யாவும் எட்டிப் பார்த்தாள். 'ஏ அப்பா! எவ்வளவு பாம்பு' என்றாள்.
'ஐயோ கம்மி. சில சமயம் இதைவிட ஜாஸ்தியா இருக்கும்'.
பாலு சித்தியின் வீட்டைப் பார்த்தான். கதவு சாத்தியிருந்தது.
'கோமுவைப் பாக்கணுமா?' என்று கேட்டான்.
'இன்னொரு நாள் பாக்கறேன்' என்றாள் சுகன்யா.
இருவரும் நடந்து போய்க்கொண்டு இருந் தார்கள். 'ஒரு விஷயம் கேக்கத்தான் உங்ககூட வந்தேன்' என்றான் பாலு.
'சொல்லு' என்றாள்.
'செத்துப் போனவா திரும்பி வருவாளா அக்கா?' என்று கேட்டான் பாலு.
சுகன்யா நின்றாள். திடீரென்று அந்தக் கேள்வி எப்படி அவன் மனதில் வந்தது என்று யோசித் தாள்.
'ஏன்?'
'தெரியணும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சொல்றா அக்கா' என்றான்.
'ஏன்னு சொல்லு?'
'எனக்கு லச்சம் அண்ணாவைப் பாக்க முடியுமா அக்கா?'
சுகன்யா பேசாமல் நடக்கத் தொடங்கினாள். பாலு அவள் முகத்தையே பார்த்தபடி நடந்தான்.
'சொல்லு அக்கா. பாக்க முடியுமா?'
'பாக்க முடியாதுடா, பாலு. லச்சம் செத்துப் போயாச்சு. அத நீ ஏத்துக்கணும்.'
'ஏன்?'
'அதுதான் இயற்கை. யார் என்ன சொன்னாலும் அவனுடைய மரணம்தான் உண்மை. அதை மாற்ற முடியாது' என்றாள் சுகன்யா.
பேசாமல் அவளையொட்டி வந்து கொண்டேயி ருந்தான் பாலு. கோவில் முகப்பு வந்துவிட்டது. சுகன்யா நின்றாள். அவன் கரங்களைத் தன் கைகளால் பற்றிக்கொண்டாள்.
'எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு அக்கா' என்றான் பாலு.
'என்ன குழப்பம்?'
'எனக்கு ஒண்ணும் தெரியலை. யாரைக் கேட்டாலும் மாத்தி மாத்திச் சொல்றா. எது உண்மை, எது பொய்ன்னு எனக்குத் தெரியணும்' என்றான் பாலு.
சுகன்யா பாலுவை அணைத்துக்கொண்டாள்.
'இதுதாண்டா பெரிய ஆசை பாலு. இதைவிடப் பெரிய ஆசை எதுவுமே இல்லை' என்றாள் அவள்.
சுகன்யாவிற்கு விடைபெற்றுக் கொள்வது கஷ்டமாக இருந்தது.
'எங்க வீடு வரையிலும் போகலாமா? கொஞ்சம் கழிச்சு நான் கொண்டு வந்து விட்டுடறேன்' என்றாள் சுகன்யா.
'நான் உங்களோடயே இருக்கட்டுமா அக்கா, தளியலுக்குப் போகாம' என்று கேட்டான் பாலு.
சுகன்யா அவன் முகத்தை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
'எனக்கு இந்த ஊரைவிட்டு டக்குன்னு போக முடியலை அக்கா. இந்த எடமெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்' தன் இடது கையை அசைத் துக் காட்டினான் பாலு.
'இன்னொரு தடவை நீ இங்கே வரலாண்டா பாலு' என்றாள் சுகன்யா.
பாலுவின் முகம் வாடிற்று.
'நான் போறேன் அக்கா' என்றான் பாலு.
சுகன்யா அவனை மீண்டும் அணைத்துக் கொண்டாள். அவளுடைய அணைப்பில் தங்க அவனுக்குப் பொறுமை இல்லை.
'நான் போறேன் அக்கா' என்றான் மீண்டும்.
தன் வீட்டை ஒரு நொடியில் அடைந்துவிட வேண்டும் என்ற ஆத்திரத்தில் வேகமாக ஓடத் தொடங்கினான்.
சுந்தர ராமசாமி |
|
|
|
|
|
|
|